எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!
தஞ்சையில், முதல்வர் விஜய் மற்றும் பெண்கள் குறித்து கடுமையாக விமர்சனம் செய்ததாகத் தொடரப்பட்ட புகாரில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியை தஞ்சை காவல்துறை கைது செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக, உதயநிதியை கைது செய்ய தடை கோரி திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனு மீது பிற்பகலில் விசாரணை நடைபெறவிருக்கும் நிலையில், 11 மணியளவில், விசாரணைக்காக உதயநிதியை தஞ்சை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள்.
காவிரி உரிமையை நிலைநாட்டுவதில் தவெக அரசின் மெத்தனப் போக்கை கண்டிப்பதாக கூறி, தஞ்சாவூரில் திமுக சாா்பில் பனகல் கட்டடம் அருகே திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது தமிழக முதல்வர் விஜய் குறித்து கடுமையாக விமரிசித்து எதிர்க்கட்சித் தலைவர் பேசியிருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்திருந்த நிலையில், இன்று காலை அவரது வீட்டைச் சுற்றிலும் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பிறகு, உதயநிதி வீட்டுக்குள் சென்ற காவல்துறையினர் அவர் மீது பதிவு செய்யப்பட்டிருக்கும் பிரிவுகள் குறித்து விளக்கம் அளித்தனர். உடனடியாக உதயநிதி தன்னுடைய வழக்குரைஞர்களுடன் இது குறித்து விரிவான ஆலோசனை நடத்தி, கைது நடவடிக்கையில் இருந்து தற்காத்துக் கொள்ள நீதிமன்றத்தை நாடினர்.
எனினும், அவரை தஞ்சை காவல்துறை கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில், உதயநிதியின் வழக்கை பிற்பகலில் விசாரிப்பதாகவும் பகல் 12 மணி வரை அவரை கைது செய்யக் கூடாது என்றும் உத்தரவிட்டிருந்தது. ஆனாலும், தஞ்சை காவல்துறை, உதயநிதியை கைது செய்திருக்கிறார்கள். காவல் வாகனத்திலேயே அவர் தஞ்சை அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.