சாதாரண வயிற்றுப் போக்கு சிறுவர்களின் இறப்புக்காரணிகள் பட்டியலில் இரண்டாவதாக இருந்து வருகிறது. ஐந்து வருடங்களுக்கு குறைந்த வயது குழந்தைகளில் சாதாரண வயிற்றுப் போக்கு, இலகுவாக இறப்பை ஏற்படுத்தி விடுவது ஏன் என உங்களுக்கு தெரியுமா?
எளிதாக கண்டு கொள்ளக் கூடியதும் குணப்படுத்தக்கூடியதுமான வயிற்றோட்ட நோய்க்கு இளம் உயிர்கள் காவுபோவதற்கான காரணம் உடலின் நீர், கணியுப்புகள் சடுதியாக குறைவதாகும். உயிர் வாழ்வதற்கு தேவையான, செல்களின் அனுசேபத்திற்கு இன்றியமையாத நீரின் அளவு வயிற்றோட்டத்தின் போது வழமையிலும் அண்ணளவாக 20 மடங்கு அதிகமாக இழக்கப்படுகிறது. இதனால் குருதியில் நீரின் அளவு, அதனால் ஏற்படுத்தப்படும் குருதி அமுக்கம் மற்றும் கணியுப்புகளின் செறிவு போன்றவை சாதாரணமாக பேணப்படும் அளவைவிட மாற்றம் அடைவதால் உடலில் நடைபெறும் செயன்முறைகளின் வேகம் குறைந்து உடல் சீரற்ற நிலையை அடையும். நீரிழப்பின் அளவைப் பொறுத்து, குழந்தை நினைவற்று போகும் அளவு கூட கடுமையானதாக மாற வாய்ப்புகள் உண்டு. உடலில் நீரின் அளவை கணிப்பது எப்படி என அறிந்திருப்பது அவசியம். ஒரு dehydrated குழந்தையில் கண்கள் குழிந்தும் உதடுகள் வெடித்து, வறண்டும் காணப்படும். கைகளில் தோல்பகுதியை கிள்ளி விடும்போது அது மீள்வதற்கு, வழமையை விட அதிக நேரமாகும். குழந்தைகள் அதிக தாகமாக உணர்வார்கள். எனினும் நீர் இழப்பினால் Shock நிலையில் இருப்பின் மிகச் சோர்வாக அசைவற்று நெடுநேரம் தூங்குபவர்கள் ஆக இருப்பார்கள். உணவு பான வகைகள் எதையும் உட்கொள்ள மறுப்பார்கள்.
பொதுவாக சிறுவர்களில் வயிற்றோட்டத்திற்கு வைரசுகள் காரணியாக அமைகின்றன எனினும் பற்றீரியாக்கள், இதர நுண்ணங்கிகளாலும் ஏற்படாமல் இல்லை. இவ்வாறு வைரஸால் ஏற்படும் வயிற்றுப்போக்கின் மலம், நீர்த்தன்மை அதிகம் உடையதாகவும் சலியத்தன்மை கொண்டதாகவும் மூன்று நாட்களுக்கு நீடித்தும் இருக்கும். அதேவேளை பாக்டீரியாக்களால் ஏற்படும் வயிற்றோட்டம் சிவப்பாக (சிலவேளை சலியத் தன்மை கொண்டதாக) காணப்படும் இதற்கு காரணம் பற்றீரியாக்களின் நச்சுப்பதார்த்தங்கள் வைரஸ்களை விட ஆழமாக சிதைத்து இரத்தக் கசிவு ஏற்படுவதாகும்.
எனவே உமது குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்படும் போது மலத்தின் தன்மை மற்றும் அளவு பற்றி நன்கு அவதானியுங்கள். நாளொன்றுக்கு மூன்று தடவைகளுக்கு மேல் வயிற்றோட்டம் ஏற்படுமிடத்தில் நீரிழப்பை சமன் செய்யக் கூடியவாறு நீரிய உணவுகள் மற்றும் சத்துள்ள பானங்களை (நீர் உட்பட) உட்கொள்ளச் செய்யுங்கள். நிறம் ஊட்டப்பட்ட குளிர்பானங்கள், சோடா வகைகள், அதிக இனிப்பு கலந்த பானங்கள் என்பவற்றை தவிருங்கள். தாய்ப்பால் அருந்தும் குழந்தையாயின் அதை நிறுத்த வேண்டாம். பெரிய குழந்தையாயின் முடியுமென்றால் ஜீவனி (Oral Rehydration Salts) பைக்கற்றுகளை உரிய முறையில் தயாரித்து அளந்து வழங்குங்கள். இரு நாட்களை விட அதிகமாக வயிற்றோட்டம் கடுமையாக நீடிக்கும் ஆயின் அல்லது இரத்தக் கசிவு ஏற்படுமாயின் அல்லது குழந்தையின் alertness குறைந்து செல்வதை அவதானித்தால் உடனே குழந்தை நல மருத்துவரை நாடுங்கள்.
மருத்துவன்