free website hit counter

அனுரகுமாரவின் டில்லிப் பயணம் சொல்லும் செய்தி! (புருஜோத்தமன் தங்கமயில்)

பதிவுகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்கவின் இந்தியாவுக்கான பயணம் தென் இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்திய மத்திய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், அனுரகுமார உள்ளிட்ட தேசிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர்கள் இந்த வார ஆரம்பத்தில் புதுடில்லி சென்றனர். அங்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் உள்ளிட்டவர்களுடனான சந்திப்பிலும் ஈடுபட்டார்கள். இந்தியாவுக்கான ஐந்து நாள் பயணத்தை முடித்துக் கொண்டு வரும் வழியில் கேரளா சென்று அம்மாநில தொழிற்துறை அமைச்சர் ராஜியையும் சந்தித்து வந்திருக்கிறார்கள். 

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) சிவில் சமூக அமைப்புக்கள் சிலவற்றையும், கல்வியாளர்களையும் புதிதாக இணைத்துக் கொண்டு தேசிய மக்கள் சக்தியாக உருமாறி கடந்த ஜனாதிபதித் தேர்தலையும் பொதுத் தேர்தலையும் எதிர்கொண்டது. ஜே.வி.பி.யில் கடந்த கால ஆயுத வன்முறை அடையாளத்தில் இருந்து விலகிக் கொள்ளும் நோக்கிலேயே, அனுரகுமாரவும் அவருக்கு ஆலோசனைகளை வழங்கும் புலமையாளர்களும் தேசிய மக்கள் சக்தி என்ற நாமத்துக்குள் புகுந்து கொண்டார்கள். புதிய நாமமும், அடையாளமும் எதிர்பார்த்ததைவிட தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் மத்தியில் அபிமானத்தை பெற்றுக் கொடுத்திருக்கின்றது என்று தென் இலங்கை களநிலவரங்களைப் பிரதிபலிக்கும் இரகசிய ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. அதுவும், ராஜபக்ஷக்களை வீட்டுக்கு அனுப்பும் (அரகலய) போராட்டம் முழு நாட்டையும் உலுக்கிய போது, அந்தப் போராட்டத்தில் கணிசமான பங்கினை தேசிய மக்கள் சக்தியும் வகித்தது. அதுவும், தென் இலங்கையில் கிராமங்களில் மத்திரமல்ல நகரங்களிலும் தேசிய மக்கள் சக்தியின் ஒருங்கிணைப்பின் பின்னாலான போராட்டங்களில் மக்கள் கணிசமாக திரண்டார்கள். அந்தத் திரட்சியை குலையாமல் அனுரகுமார இன்றும் பேணுகிறார் என்பது கருத்துக்கணிப்புக்களில் வெளிவரும் தகவல். இதனால், எதிர்வரும் ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி மிகப்பெரிய தக்கத்தைச் செலுத்தும் என்பது எதிர்பார்ப்பு. 

இலங்கை சுதந்திரமடைந்தது முதல் ஆட்சி அதிகாரத்துக்கான அரசியல் என்பது,  'ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவு எதிர் எதிர்ப்பு' என்றவாறாக இருந்தது. கடந்த ஜனாதிபதித் தேர்தல் வரை அதுதான் நிலமை. ஆனால், அதன் பின்னரான பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் பிரதித் தலைவராக இருந்த சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான முறுகல்களை அடுத்து, ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பிரிந்த  சஜித் அணியினர் ஐக்கிய மக்கள் சக்தியை அமைத்தனர். பிரதான எதிர்க்கட்சியாகவும் மாறினர். சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் எழுந்த முறுகல்களை அடுத்து ராஜபக்ஷக்கள் தோற்றுவித்த பொதுஜன பெரமுனவும், ஐ.தே.க.வில் இருந்து சஜித் அணியினரால் தோற்றுவிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியும், கிட்டத்தட்ட புதிய நாமங்களைச் சூடிக்கொண்ட ஐ.தே.கவும், சுதந்திரக் கட்சியும் என்று கொள்ளலாம். அதன் போக்கில்தான், ஜே.வி.பி.யும் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிலரின் விலகலோடு தேசிய மக்கள் சக்தியாக மாறியது. ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல் என்பது இருமுனைப் போட்டியாகவே இருந்து வந்திருக்கின்றது. ஆனால், இம்முறை மும்முனைப் போட்டிக்கான களம் விரிந்திருக்கின்றது. 

காலியான கூடாரமாக இருக்கும் ஐ.தே.கவும், ராஜபக்ஷக்களும் ஓரணியில் நின்று ரணிலை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தும் சூழல் ஏற்பட்டிருக்கின்றது. ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் முன்னிறுத்தப்படுகிறார். அதேவேளை தேசிய மக்கள் சக்தி வழக்கத்தைவிட அதிக வலுவோடு இந்த ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்கின்றது. அந்தக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அனுரகுமார முன்னிறுத்தப்படுகிறார். இருமுனைப் போட்டியில் இருந்து பிரதான தேர்தலொன்று மும்முனைப் போட்டியாக மாறுவது என்பது பல நேரங்களில் ஆச்சரியங்களை நிகழ்த்தக்கூடியது.குறிப்பாக, 'ரணில் எதிர் சஜித்' என்ற நிலை மாறி, 'ரணில் எதிர் சஜித் எதிர் அனுர' எனும் நிலையில் வாக்குப் பிரிவு, மிதக்கும் வாக்குகளின் இறுதிக் கட்டத் திரட்சி ஆகியன சிலவேளை அனுரகுமாரவை முதன்மை இடத்துக்கு நகர்த்திவிடும் வாய்ப்புக்கள் இருப்பதான எதிர்பார்ப்புக்களும் தென் இலங்கையில் இருக்கவே செய்கின்றன. இந்த எதிர்பார்ப்புக்கள்தான், இந்தியாவை தேசிய மக்கள் சக்தியை நோக்கி தன்னுடைய கரங்களை நீட்ட வைத்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் ஆச்சரியங்கள் நிகழ்ந்து அனுரகுமார சிலவேளை ஜனாதிபதியாகிவிட்டால், அதன் பின்னர் இலங்கையின் புதிய ஆட்சியாளருடன் தொடர்புகளை ஆரம்பிப்பதைவிட, முன்னரே சந்திப்புக்களை நடத்தி வைத்துக் கொள்வது நல்லது என்பது இந்தியாவின் நிலைப்பாடு. அதற்காகத்தான் உத்தியோகபூர்வ அழைப்பை தேசிய மக்கள் சக்தியை நோக்கி இந்தியா விடுத்திருக்கின்றது. 

வழக்கமாக இடதுசாரிய சித்தாந்தத்தைப் பேணுவதாக கூறிக் கொள்ளும் தேசிய மக்கள் சக்தி, சீனா ஆதரவு நிலைப்பாடோடு இருந்து வந்திருக்கின்றது. இந்தியாவை கடுமையாக எதிர்த்தும் வந்திருக்கின்றது. இலங்கையில் ஆக்கிரமிப்பு முனைப்புக்களை இந்தியா முன்னெடுப்பதாக தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டியும் போராட்டங்களையும் தேசிய மக்கள் சக்தி நடத்தியிருக்கின்றது. அடிக்கடி சீனாவின் அழைப்பை ஏற்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் செல்வது வழக்கம். அவர்கள் இந்தியா செல்வது என்பது, இந்தியாவின் இடதுசாரி கட்சிகள் மற்றும் இயக்கங்களில் நிகழ்வுகளில் பங்குபற்றுதல் என்ற அளவிலேயே இருந்திருக்கின்றது. ஆனால், இம்முறை இந்திய வெளிவிவகார அமைச்சர், தேசிய மக்கள் சக்தியினரைச் சந்திக்கிறார். அத்தோடு, தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் சந்திப்புக்களை நடத்தியிருக்கிறார் என்பது, இந்தியா தேசிய மக்கள் சக்தியை பிரதான சக்தியாக உணர்ந்ததன் விளைவாக நடந்திருப்பது. அதுவும் இந்தியாவின் வெளிவிவகாரம், பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய முடிவுகளை எடுக்கும் நபர்களாகவும் பிரதமர் நரேந்திர மோடிக்கு நெருக்கமானவர்களாகவும் இருக்கும் எஸ்.ஜெய்சங்கரும், அஜித் தோவாலும் அனுரகுமாரவை சந்தித்தது என்பது கவனிக்கத்தது. 

அனுரகுமார இந்தியா சென்றமை, ஐக்கிய மக்கள் சக்தியை கலக்கமடைய வைத்திருக்கின்றது. ஏனெனில், இந்தியா போன்ற பிராந்திய வல்லரசு தேவையற்று எந்தவொரு அமைப்புக்கும் முக்கியத்துவம் வழங்காது. அப்படிப்பட்ட சூழலில், இந்தியா அனுரகுமாரவுக்கான முக்கியத்துவத்தை, நீண்ட ஆய்வுகள், புலனாய்வு அறிக்கைகளின் பின்னணியில்தான் வழங்கியிருக்கும் என்பது உணர்நிலை. அது, தென் இலங்கை மக்களிடம் தேசிய மக்கள் சக்தி மீதான ஆதரவை மறைமுகமாக அதிகரிப்பதற்கும் உதவலாம். இதனால், அனுரகுமாரவை 'ரணில் ராஜபக்ஷக்களின்' B அணியாக முன்னிறுத்தும் வேலைகளில்  ஐக்கிய மக்கள் சக்தி ஆரம்பித்திருக்கின்றது. மறுபுறம், ஐக்கிய மக்கள் சக்தியை சந்திப்புக்கு அழைக்க வேண்டும் என்று சஜித் இந்தியாவிடம் கோரியிருக்கிறார். அதுவும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிகின்றது. 

வழக்கமாக சீனா ஆதரவுடன் இயங்கும் ஜே.வி.பிக்கு தேசிய மக்கள் சக்தி என்ற அடையாள மாற்றம் தென் இலங்கை அரசியலிலும் பிராந்தியத்திலும் முக்கியத்துவும் வழங்கியிருக்கின்றது என்பது, அதன் மேலான இடதுசாரி அடையாளத்தை மெதுவாக இழக்க வைக்கத் தொடங்கியிருக்கின்றது. ஆயுத வன்முறை அடையாளத்தைத் தாண்டுவதற்காக புதிய நாமத்துக்குள் சென்ற தேசிய மக்கள் சக்திக்கு, இடதுசாரி அடையாள இழப்பும் சேர்ந்தே நடைபெற ஆரம்பித்திருக்கின்றது. அது, நவதாராளவாதிகள் என்ற நிலையை நோக்கிய நகர்வை வேகப்படுத்தியிருக்கின்றது. இது, தென் இலங்கையின் மத்தியதர வர்க்கத்தினரை தேசிய மக்கள் சக்தியை நோக்கி திரளச் செய்யலாம். ஆனால், தேசிய மக்கள் சக்தியின் கூட்டங்களில் சேரும் மக்கள் கூட்டம் வாக்குகளாக மாறுவதில்லை என்ற நிலை இருக்கின்றது. அதற்கு அந்தக் கட்சி மீது மக்கள் நம்பிக்கை கொள்ளவில்லை என்பது மாத்திரம் காரணமல்ல மாறாக, அந்தக் கட்சியை யார் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள், அந்தக் கட்சியின் பின்னணி என்பன எல்லாம் காரணமாக இருந்திருக்கின்றது. 

தமிழ்ச் சூழலில் எப்படி சாதியவாதம் அதிகாரம் செலுத்துகின்றதோ, அதே அளவுக்கு தென் இலங்கையிலும் கொவிகம - பௌத்த மேலாதிக்கம் என்பது, அரசியல் அதிகாரங்களை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கின்றது. அது, கொவிகம - பௌத்த அடையாளங்களுக்கு அப்பால் அதிகாரங்களையோ ஆட்சியையோ பெரும்பாலும் அனுமதிப்பதில்லை. அதனால்தான் தென் இலங்கை அரசியலில் கொவிகம - பௌத்த மேலாதிக்கத்தை பிரதிபலிக்கும் ஐ.தே.க.வும் சுதந்திரக் கட்சியும் ஆட்சியின் சக்திகளாக விளங்கியிருக்கின்றன. இந்த இரு கட்சிகளில் ஒன்று தவறினால் மற்றையதைத் தெரிவு செய்யுமாறுதான் தென் இலங்கையின் சிறுசிறு கிராமங்களில் இருக்கும் விகாரைகள் முதல், பௌத்த பீடங்கள் வரையில் பேணப்படும் அணுகுமுறை. தமிழ்ச் சமூகத்தின் ஆலயங்கள் செலுத்தும் தாக்கத்தினைவிட தென் இலங்கையில் விகாரைகள் செலுத்தும் ஆளுமை அதிகமானது. கிராமங்கள், பிரதேசங்களின் முடிவுகள் கூட விகாரைகளுக்குள் கூடி எடுக்கப்படுகின்றன. இதனால், இலங்கையின் பௌத்த மேலாதிக்க வரலாறு என்பது கொவிகம சாதியினரால் நிகழ்ந்தது. அதனால், வறிய பிற்படுத்தப்பட்ட மக்களின் விடுதலைக் குரலாக ஆரம்பத்தில் எழுந்த ஜே.வி.பி. தென் இலங்கையின் ஆதிக்க சக்திகளினால் தீண்டத்தகாத தரப்பாக பார்க்கப்பட்டது. ஜே.வி.பி.யின் கிளர்ச்சிகள் தென் இலங்கையின் ஆட்சியாளர்களினால் படுமோசமான படுகொலைகள் நிகழ்த்தப்பட்டே அடக்கப்பட்டது. அதன்போது, வர்க்க பேதமும் சாதிய மேலாதிக்கவாதமும் தென் இலங்கையில் தலைவிரித்தாடியது. அப்படியான சூழலில் ஜே.வி.பி. தேசிய மக்கள் சக்தியாக மாறிய நிலையிலும், கொவிகம - பெளத்த மேலாதிக்கத்தைத் தாண்டி தென் இலங்கை மக்கள் அனுரகுமாரவை ஜனாதிபதியாக மாற்றுவதற்கான வாய்ப்புக்கள் அவ்வளவுக்கு இல்லை என்றே இந்தப் பத்தியாளர் நம்புகிறார். ஆனால், பொதுத் தேர்தலில் சுமார் 30க்கு அண்மித்த ஆசனங்களை வென்று முக்கிய எதிர்க்கட்சியாக மாறுவதற்கான வாய்ப்புக்களை மறுப்பதற்கில்லை. 

இந்தியாவின் அழைப்பை தேசிய மக்கள் சக்தி பெரு மகிழ்வாக உள்ளூர கொண்டாடுகின்றது. அதனை வெளிக்காட்டவும் செய்கின்றது. ஆனால், தன்னுடைய இடதுசாரி அடையாளத்தையும் கைவிடவில்லை என்று காட்டுவதற்காக டில்லிப் பயணத்தை முடித்து திரும்பும் வழியில் கேரளா சென்று அனுரகுமார குழுவினர் வந்திருக்கிறார்கள். இந்தியாவின் தற்போது இடதுசாரிகள் ஆட்சி செலுத்தும் ஒரே மாநிலம் கேரளாதான். இடதுசாரிகள் கேரளாவைத் தவிர்த்து ஏனைய இடங்களில் ஒற்றை இலக்க ஆசனங்களைக் கைப்பற்றுவதே இன்றைக்கு பெரிய காரியமாகிவிட்டது. அப்படியான சூழலில் இந்தியாவில் இடதுசாரிகள் ஆட்சி செலுத்தும் மாநிலத்துக்கும் சென்று வந்திருக்கிறோம் என்று காட்ட அனுரகுமார முயன்றிருக்கிறார். ஆனால், அம்மாநில முதலமைச்சர் பிரணாஜி விஜயனை அவர்களினால் சந்திக்க முடியவில்லை. 

இந்தியாவின் அழைப்பும், டில்லியில் வழங்கப்பட்ட முக்கியத்துவமும் தேசிய மக்கள் சக்தியை உற்சாகப்படுத்தியிருக்கிறது. அந்த மனநிலையோடு தேர்தல்களை நோக்கிய நம்பிக்கை பயணத்தை தேசிய மக்கள் சக்தி தென் இலங்கையில் ஆரம்பிக்கலாம். ஆனால், ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி காண்பதற்கு சிறுபான்மையினரின் வாக்குகள் அவசியமானவை. அதுவும் மும்முனைப் போட்டிக் களத்தில் தமிழ் முஸ்லிம் மக்களின் வாக்குகள் அதிக தாக்கத்தைச் செலுத்தும் வல்லமை கொண்டவை. அப்படிப்பட்ட சூழலில், சிறுபான்மையினரின் வாக்குகளைப் பெறுவதற்கு தேசிய மக்கள் சக்தி என்ன திட்டங்களை முன்னெடுக்கப்போகின்றது என்ற கேள்வி முக்கியமானது. அதுவும், வடக்கு கிழக்கு இணைப்பைப் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து பிரித்தது ஜே.வி.வி. என்ற வெறுப்பு தமிழ் மக்கள் மத்தியில் உண்டு. அத்தோடு, தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்கான பயணத்தை ஜே.வி.பியோ, இன்றைய தேசிய மக்கள் சக்தியோ ஒருபோதும் அங்கீகரித்தது இல்லை. ஒற்றை இலங்கைக்குள் ஒரே அதிகார மையமாக திரள்வதையே, பௌத்த மேலாதிக்க சக்திகள் போன்று தேசிய மக்கள் சக்தியும் வலியுறுத்தி வந்திருக்கின்றது. இந்தப் பின்னணியினால், தமிழ் மக்கள் ஒருபோதும் தேசிய மக்கள் சக்தியின் பின்னால் செல்லும் வாய்ப்புக்கள் இல்லை. அதுபோல, ராஜபக்ஷக்களுக்கு எதிரான கட்டத்திலேயே முஸ்லிம் மக்களும் தங்களின் வாக்களிப்பை உறுதி செய்யும் சூழல் தற்போதுள்ளது. அப்படியான சூழலில் தேசிய மக்கள் சக்தியும் தென் இலங்கைக்குள் மாத்திரம் வாக்கு அறுவடை நடத்தி, ஜனாதிபதித் தேர்தலில் வெல்வது சாத்தியமான ஒன்றல்ல. 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction