கற்பனைக் கதாபாத்திரமல்ல விவேகானந்தர். சில நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்து மறைந்த மகான். கம்பீரமான தோற்றமும், கருணைபொழியும் கண்களும், ஆழமான ஆன்மீகமும் கொண்டு, இயல்பான வாழ்வியலோடான கருத்துக்களைத் தந்த தத்துவார்த்த வீரத்துறவி விவேகானந்தர்.
"கடவுளும் உண்மையும் தான் இந்த உலகிலுள்ள ஒரே அரசியல். அது தான் எனக்கு மிகவும் பிடிக்கும். கோழைகளுடனோ அல்லது அர்த்தமற்ற அரசியலுடனோ எனக்கு எந்த விதத்தொடர்பும் இல்லை. மற்றவை எல்லாம் வெறும் குப்பை,” என்று கம்பீரமாகக் கர்ச்சித்தவர். அதனாற்தான் அவரை வீரத் துறவி விவேகானந்தர் என்கிறோம். சிகாகோவிலுள்ள “கோஸ்லித்தோ கிராபிக் கம்பெனி’ போஸ்டராக அச்சடித்து நகர் முழுக்க தொங்க விட்ட படத்தில், கைகட்டியபடி கம்பீரமாக தோன்றினார் விவேகானந்தர். கூட்ட அரங்கின் முன் அவர் நின்றபோது, ஒரு படப்பிடிப்பாளரால் தற்செயலாக எடுக்கப்பட்ட அந்தப்படம்தான் இன்றுவரை விவேகானந்தரின் கம்பீர தோற்றத்தை நம் மனக்கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது. ஆனால் அவரது ஆழ்மனதிலிருந்த தெளிவான ஞானமும், அதனாலான துணிவும், இறைநம்பிக்கையுமே, அந்தக் கம்பீரத்தின் உள்ளார்ந்த உண்மை எனலாம். அந்த உள்ளார்ந்த ஞானம் உயிர்களை அழிக்கும் வீரமாக அல்லாமல், உயிர்களைக் காக்கும் நேசமுறு வீரமாக உருவெடுத்திருந்தது.
"அன்பிலும், இதயத்தின் தூய்மையான பக்தியிலும்தான் மதம் வாழ்கிறதே தவிர, சடங்குகளில் மதம் வாழவில்லை. ஒருவன் உடலும் மனமும் தூய்மையாக இல்லாமல், கோயிலுக்குச் செல்வதும் சிவபெருமானை வழிபடுவதும் பயனற்றவை. உடலும் மனமும் தூய்மையாக இருப்பவர்களின் பிரார்த்தனைகளை சிவபெருமான் நிறைவேற்றுகிறார். ஆனால், தாங்களே தூய்மையற்றவர்களாக இருந்துகொண்டு, பிறருக்கு மதபோதனை செய்பவர்கள் இறுதியில் தோல்வியே அடைகிறார்கள். புற வழிபாடு என்பது, அக வழிபாட்டின் அடையாளம் மட்டுமே ஆகும். அக வழிபாடும் தூய்மையும்தாம் உண்மையான விஷயங்கள். இவையின்றிச் செய்யப்படும் புற வழிபாடு பயனற்றது. இதை நீங்கள் மனத்தில் பதிய வைத்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள். நாம் எதை வேண்டுமானாலும் செய்யலாம்; பிறகு ஒரு திருத்தலத்திற்குச் சென்றால், அந்தப் பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்பட்டுவிடும் என்று நினைக்கும் அளவிற்குக் கீழான நிலைக்கு, இந்தக் கலியுகத்தில் மக்கள் வந்துவிட்டார்கள். தூய்மையற்ற உள்ளத்துடன் கோயிலுக்குச் செல்லும் ஒருவன், ஏற்கெனவே தன்னிடம் இருக்கும் தன் பாவங்களுடன் மேலும் ஒன்றை அதிகப்படுத்துகிறான்; கோயிலுக்குப் புறப்பட்டபோது இருந்ததைவிட, இன்னும் மோசமானவனாக அவன் வீடு திரும்புகிறான்" என உண்மையை உரக்கப்பேசியவர்.
நமது நன்மையை மட்டுமே நினைக்கும் சுயநலம், பாவங்கள் எல்லாவற்றிலும் முதல் பாவமாகும். எல்லாம் எனக்கே வேண்டும்; மற்றவர்களுக்கு முன்னால் நான் சொர்க்கம் போக வேண்டும்; எல்லோருக்கும் முன்னால் நான் முக்தி பெற வேண்டும் என்றெல்லாம் நினைப்பவன் சுயநலவாதி. சுயநலம் இல்லாதவனோ, நான் கடைசியில் இருக்கிறேன். சொர்க்கம் செல்வதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. நான் நரகத்திற்குச் செல்வதால் என் சகோதரர்களுக்கு உதவ முடியுமானால் – நான் நரகத்திற்குச் செல்லவும் தயாராக இருக்கிறேன் என்று சொல்கிறான். இத்தகைய சுயநலமற்ற தன்மைதான் ஆன்மிகம். சுயநலம் இல்லாதவனே மேலான ஆன்மிகவாதி; அவனே சிவபெருமானுக்கு அருகில் இருக்கிறான் எனச் சொன்னவர் சுவாமி விவேகானந்தர்.
இந்தியாவின் கல்கத்தாவில்,விஸ்வநாத தத்தர் புவனேஸ்வரி அம்மை தம்பதியினருக்கு, 1863, ஜனவரி 12ல் அவதரித்த நரேந்திரன் தன் தாயிடம் சிறு வயதில் கேட்ட, ராமாயண, மகாபாரத கதைகளும், கதாபாத்திரங்களும் ஏற்படுத்திய தாக்கமே பின்நாளில் விவேகானந்தர் எனும் வீரத்துறவியை இந்த உலகிற்குத் தந்தது.
"நீங்கள் உள்ளே இருந்து வெளியே வளர வேண்டும். யாரும் உங்களுக்கு கற்பிக்க முடியாது, யாராலும் உங்களை ஆன்மீகமாக்க முடியாது. உங்கள் சொந்த ஆன்மாவைத் தவிர வேறு ஆசிரியர் இல்லை" - சுவாமி விவேகானந்தர்.
தொகுப்பு:மலைநாடான்