தமிழகத்தின் சகோதர மாநிலமாகிய கேரளத்தில் கரோனா கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது. இந்தியாவிலேயே முதலில் பாதித்த மாநிலங்களில் அதுவும் ஒன்று. தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமாகி வருகிறது. சென்னை உள்ளிட்ட 12 மாவட்டங்களைச் சிவப்பு மண்டலங்களாகவும் 24 மாவட்டங்களை ஆரஞ்சு மண்டலங்களாகவும் ஒரு கொரோனா நோயாளி கூட இல்லாத மாவட்டம் என்று பெருமையும் கிருஷ்ணகிரி மாவட்டத்தை பச்சை மண்டலமாகவும் நேற்று மத்திய, மாநில அரசு அறிவித்தன.
ஆனால் பச்சை மண்டலமாக இதுவரை இருந்து வந்த கிருஷ்ணகிரி மாவட்டம் தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக ஆரஞ்சு மண்டலமாக மாறி விட்டது. இதனால், கிருஷ்ணகிரி மக்கள் நடிகர் கஞ்சா கருப்பு ‘ராம்’ படத்தில் கேட்பதுபோல, மற்ற மாவட்ட மக்களைப் பார்த்து ‘இப்ப உங்களுக்கு சந்தோஷமா?’ என்று கேட்பதுபோல மீம்கள் சமூக வலைதளங்களில் கலைகட்டத் தொடங்கிவிட்டனர். இது சிரிப்பதற்கான நேரம் இல்லை என்றாலும் அந்த மாவட்டத்துக்கு முதல் தொற்றை கொண்டு சென்றதாக கூறப்படும் நபர், ஆந்திராவில் உள்ள புட்டபர்த்தி சாய்பாபா கோவிலுக்கு சென்று வந்ததாக மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.
நமது கேள்வியெல்லாம்.. புட்டபர்த்தி சாய்பாபா கோவில் மூடப்பட்டு சுமார் 40 நாட்களுக்கு மேல் ஆன நிலையில், சம்பந்தப்பட்ட நபருக்கு தற்போது கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக கூறுவது எதனடிப்படையில்? கரோனா அறிகுறி அவருக்கு 14 நாட்களைக் கடந்து 40-வது நாளிதான் வெளியே தெரிந்ததா? என்பதுதான். கடந்த 4 நாட்களுக்கு முன்புதான் அவர் ஊருக்குத் திரும்பியிருக்கிறார் எனில் அவர் இவ்வளவு நாட்கள் எங்கேயிருந்தார், எங்கெல்லாம் சுற்றிக்கொண்டிருந்தார் என்பதையும் அரசு அறிவிக்க வேண்டும்.
சமீபகாலமாக மருத்துவர்கள் கூறுவதுபோல பலர் எந்தவித அறிகுறியும் இல்லாமலே கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்களா; அல்லது கொரோனா அறிகுறி தெரிய 40 நாட்கள்வரை தேவைப்படுமா? இது போன்ற சந்தேகங்களை தமிழக அரசோ, இந்திய அரசோ தெளிவுபடுத்தாமல் தள்ளிப்போட்டு வருகின்றன. மருத்துவ நிபுணர்களாவது ஊடகங்களிடம் தெரிவித்தால்தான் தமிழகத்தில் விடிவு பிறக்கும்.