free website hit counter

கொரோனா காட்டிக் கொடுத்த காமெடியன்கள் !

வினோதம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

அமெரிக்காவில் தொடங்கி உலகின் பல தலைவர்கள், மீம்ஸ் உருவாக்குபவர்களை எல்லாம் தூக்கிச் சாப்பிட்டுவிட்டார்கள். மூன்று நாட்களில் கொரானோ குறையும். பணக்கார வைரஸ் என்று தமிழகத்தில் மட்டும்தான் காமெடி பண்ணுகிறார்கள் என்றில்லை; உலக அளவிலும் பல அதிகார வர்க்க காமெடியன்களை அடையாளம் காட்டியுள்ளது.

மதுரைக்கு ஒரு செல்லூர் ராஜு என்றால் உலகத்துக்கு டிரம்ப் ! ஜனவரி மாதமே உலக சுகாதார நிறுவனம் அமெரிக்காவை எச்சரித்தது. அப்போது அமெரிக்காவில் ஒரு வைரஸ் நுழைவதா? என எக்காளம் பேசியவர். இன்று பதற்றமடைகிறார். தேர்தலை வேறு சமாளிக்க வேண்டும். இமேஜ் அமெரிக்காவில் மட்டுமல்ல உலக அளவில் சரிந்து விழுகிறது! மீம்ஸ்காரர்களுக்கு அல்வா ஆகிவிட்டார். அவரது பிரஸ் மீட்கள் காமெடி ஷோவாகின்றன. மியூட் பண்ணி அவர் பாடிலாங்குவேஜை பார்த்தால் கட்டதுரையெல்லாம் கைகட்டி நிற்க வேண்டும் போலும்.

கொரோனாவை கம்யூனிஸ்ட் நாடான சீனா வெற்றிகண்டது. ஆனால் ஒரு வல்லரசு உலகின் முன் டல்லரசாக தலைகவிழ வேண்டியிருக்கிறதே! பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தங்கள் செய்வாதாய் அட்ராசிட்டி செய்த நாடு! இன்று மருந்து ஏற்றிப்போகும் பிறநாட்டு விமானங்களை ஹைஜாக் பண்ணுமளவு ரௌடித்தனம் செய்கிறது. ஒரு காலத்தில் வியட்னாமை அழிக்க நினைத்தது. இன்று அந்த சின்னநாடு அமெரிக்காவுக்கு மாஸ்க் பிச்சை போடுகிறது.

 

இப்போதுதான் லட்சக்கணக்கில் ஆட்களை திரட்டி வரவேற்பெல்லாம் கொடுத்து 'நண்பேண்டா' போஸெல்லாம் கொடுத்தார் மோடியோடு. நாகரீகமே இல்லாமல் கழுத்தில் கத்தி வைத்து குளோரோகுயின் மாத்திரை கேட்டு மிரட்டினார்! எது செய்தும் சாவின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. சீனாவைத் திட்டுகிறார். ஒபாமாவை கை காட்டுகிறார். உலக சுகாதார நிறுவனத்துக்கான நிதியை நிறுத்துவேன் என்கிறார்! பாவம் டிரம்ப்... எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான்! என உலகம் சொல்கிற நிலைக்கு காமெடியன் ஆனார்.

அடுத்த காமெடியன் ஃபிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடெர்டோ! கொரோனாவை அற்ப வைரஸ் என்றார்! லாக்டவுன் பசியால் போராடிய மக்களை 'சுடுவேன்!' என மிரட்டினார். ஊரடங்கால்தானே பிரச்சனை. லாக்டவுனே வேண்டாம்! என்றார். ஆளுநர்கள் அலறினார்கள். எதிரி நாடேயானாலும் மக்கள் இறப்பதை ரசிக்க முடியாது. ஜிம்பாவே பாதுகாப்பு அமைச்சர் ஒப்பா முச்சின்குரி 'எங்கள் நாட்டின் மீது தடை விதித்தவர்களை வைரஸ் பழிவாங்குகிறது!' என்றார்.

பெலாரஸ் அதிபர் அலெக்ஸாண்டர் லூக்காஷென்கோ கொரோனா பயத்தை மனநோய் என்றார். நம் ஊரில் சளிப்பிடித்தால் ரம்மில் மிளகுபோட்டு குடிக்கச் சொல்வார்கள். இவர் கொரோனாவுக்கு ஓட்கா குடிக்கச் சொன்னார். பிரஸ் மீட்டிங்கில் இங்கே எங்காவது வைரஸ் பறப்பதை பார்க்கிறீர்களா? எனக் கேட்டு ரிப்போர்ட்டர்களை தெறிக்க விட்டார்!

மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரஸ் மானுவேல் டாக்டர்களை கேலி பேசினார். குழந்தைகளைத் தூக்கி எம்.ஜி.ஆர் போல முத்தம் கொடுத்து கிருமியை பரப்பினார்.இராக்கின் ஷியா பிரிவு மதகுரு முக்தாதா அல் சதர். தன் பங்குக்கு புதுகதைகளை அவிழ்த்தார். ஹோமோசெக்ஸ், லெஸ்பியன்களை அங்கீகரித்த நாடுகளை வைரஸ் வேட்டையாடுவதாகக் கூறினார்.

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கைகுலுக்குவதால் வைரஸ் தொற்றாது. நான் கொரோனா பாஸிட்டிவ் நோயாளிகளுடன் கைகுலுக்கினேன் என்றார். பிறகு க்வாரண்டைன் போய் செத்துப் பிழைத்து எழுந்ததை உலகறியும். நம் கவிஞன் கணியன் பூங்குன்றன் அன்றே பாடினான். ‘காட்சியில் தெளிந்தனம் ஆயின் மாட்சியில் பெரியோரை வியத்தலும் இலமே. சிறியோரை இகழ்தலும் இலமே’ என்றான்.

சின்ன நாடு வியட்நாம். வைரஸை திறம்பட கட்டுக்குள் கொண்டு வந்தது. தன்னை அழிக்க நினைத்த அமெரிக்கா, மற்றும் அண்டை நாடுகளான சீனா, கம்போடியா போன்றவற்றுக்கு மாஸ்க், கவச உடைகள், மருந்துகள் அனுப்புகிறது. சீனாவில் ரேபிட் கிட் ஆர்டார் பண்ணினால் கிடைக்க 30 நாட்களாகும். வியட்நாம் 8 நாட்களில் அனுப்புகிறது. விலையும் குறைவு. சீனாவையும் குறைத்து மதிப்பிட முடியாது. அமெரிக்காவுக்கு "நண்பேன்டா" சொன்ன இந்தியா, இன்று உயிர்காக்கும் கருவிகளுக்கு சீனாவையே நம்பி இருக்கிறது.

கொரோனா பயம்காட்டும் வைரஸ்தான். ஆனால் அதுதான் இன்று டாக்டர்களையும் செவிலியர்களையும் கடவுளாக்குகிறது. அதிபர்களை காமெடியன்களாக்குகிறது! தொழில், முதலீடு, உற்பத்தி என்ற பெயரால் இயற்கையை அழிப்பதை நிறுத்தும் வரை கொடிய நுண்ணுயிர்களின் படையெடுப்பை எதிர்கொண்டே ஆகவேண்டும்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula