free website hit counter

அன்பு வணிகமல்ல...! காதலர் தினம்...?

Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இன்றைய உலகில் பிப்ரவரி 14 என்ற திகதியைச் சொன்னவுடன் நினைவிற்கு வருவது “காதலர் தினம்” ஆகும். இளைஞர்கள், மலர், அட்டை, பரிசு, சமூக வலைதள பதிவுகள் என காதலை வெளிப்படுத்தும் நாளாக இதனை கொண்டாடுகின்றனர். ஆனால் இந்த நாள் எதற்காக உருவானது? அதன் உண்மையான நோக்கம் என்ன? மேலும், மேற்கத்திய கலாச்சாரத்தில் தோன்றிய இந்நாளை தமிழர் வாழ்வியலோடு எவ்வாறு தொடர்புபடுத்திப் பார்க்கலாம்? என்பன ஆய்வு செய்யத் தகுந்த கேள்விகளாகும்.

காதலர் தினத்தின் தோற்றம்

காதலர் தினத்தின் வரலாறு Saint Valentine எனப்படும் கிறித்தவ மதத் துறவியுடன் தொடர்புடையதாகக் கூறப்படுகிறது. கி.பி. 3ஆம் நூற்றாண்டில் ரோமப் பேரரசர் திருமணங்களைத் தடை செய்தபோது, காதலர்களுக்கு ரகசியமாக திருமணம் செய்து வைத்ததால் அவர் கொல்லப்பட்டார் என்று புராணக் கதை கூறுகிறது. பின்னர் அவரின் நினைவாக பிப்ரவரி 14 காதலின் நாளாகக் கொண்டாடப்பட்டது.

அதாவது, முதலில் இது “காதலுக்கான தியாகம்” அல்லது “உண்மையான உறவுகளுக்கான மதிப்பு” என்ற நெறி அடிப்படையில் தோன்றியது. ஆனால் காலப்போக்கில் இது வணிகமயமாகி, பரிசுப் பொருட்கள், மலர்கள், விளம்பரங்கள் ஆகியவற்றால் நிரம்பிய சந்தை விழாவாக மாறிவிட்டது.

இன்றைய காதலர் தினம் 

இன்றைய சூழலில் காதலர் தினம் பலருக்கு,உணர்வுகளை வெளிப்படுத்தும் நாள். இளைஞர்களின் உறவுகளுக்கான அங்கீகாரம். மகிழ்ச்சி பகிரும் தருணம் ஆக இருக்கலாம். ஆனால் இதன் மறுபுறம், வணிக நிறுவனங்களின் லாப நோக்கம் . ஒருநாள் காதலை மட்டுமே பெரிதுபடுத்தும் செயற்கை கலாச்சாரம். உறவுகளை வெளிப்புற அலங்காரத்திற்குள் மட்டுமே கட்டுப்படுத்தும் போக்கு என்பனவும் காணப்படுகின்றன. உண்மையான காதல் தினந்தோறும் வாழப்பட வேண்டியது; ஒரு நாளில் மட்டும் நினைவுகூரப்பட வேண்டியது அல்ல.

தமிழர் வாழ்வியலோடு தொடர்பு

காதல் என்பது தமிழருக்கு புதிதான கருத்தல்ல. மாறாக, தமிழ்ச் சமூகத்தில் காதல் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே வாழ்வியலின் ஓர் அங்கமாக இருந்துள்ளது. சங்க இலக்கியங்களில் “அகம்” பாடல்கள் முழுவதும் காதலை மையமாகக் கொண்டவை. குறிஞ்சி நிலம் காதலர்களின் கூடுகையாக சித்தரிக்கப்படுகிறது. காதல் , திருமணம் , குடும்பம், என்பவை இயற்கையோடு இணைந்த வாழ்வியலாக இருந்தன

தமிழரின் காதல் , செயற்கை வெளிப்பாடல்ல. அது இயல்பான உணர்ச்சி மற்றும் சமூக ஒழுக்கத்துடன் இணைந்தது. அது பரிசு கலாச்சாரம் அல்ல, பரிவு கலாச்சாரம். இதனால், “காதலர் தினம்” என்ற மேற்கத்திய நாளை ஏற்றுக்கொள்வதற்கு முன், தமிழர் பாரம்பரியத்தில் காதல் ஏற்கனவே உயர்ந்த மதிப்பில் இருந்ததை நினைவில் கொள்ள வேண்டும்.

தொடர்புபடுத்திப் பார்க்கும் வழி

காதலர் தினத்தை முழுமையாக மறுப்பதோ அல்லது கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்வதோ சரியல்ல. மாறாக, பரிசு செலவழிப்பு நாளாக அல்லாமல், உறவுகளைப் புரிந்துகொள்ளும் நாளாக பெற்றோர், நண்பர்கள், துணைவர் என எல்லா அன்பு உறவுகளையும் நினைவுகூரும் நாளாக, தமிழர் பண்பாட்டு மதிப்புகளோடு இணைத்து கொண்டாடும் நாளாக, மாற்றிக் கொள்ளலாம்.

காதல் மனித வாழ்க்கையின் அடிப்படை உணர்ச்சி. அதனை ஒரு குறிப்பிட்ட நாளில் மட்டும் கொண்டாடுவதற்குப் பதிலாக, அன்றாட வாழ்வில் மதிப்புடன் பேணுவது முக்கியம். காதலர் தினம் நம் கலாச்சாரத்தை மறக்கச் செய்யாமல், மாறாக நம் பாரம்பரியத்தை நினைவூட்டும் வகையில் இருந்தால் மட்டுமே அதற்கு உண்மையான அர்த்தம் உண்டு. அன்பு வணிகமல்ல; அது வாழ்வியல். அந்த உண்மையை உணர்த்தும் நாளாக காதலர் தினம் மாற வேண்டும்.

- 4தமிழ்மீடியாவிற்காக: யாத்ரா

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula