அழகான அந்தப் பனைமரம் அடிக்கடி நினைவில் வரும் எனப் பாடிய தேனிசையின் நினைவும், குரலும், பனைமரங்கள் வாழும்வரை, அதை நாம் காணும் வரை, நம் நினைவில் வருவார் தேனிசை செல்லப்பா.
தமிழகத்தின் தென்காசி மாவட்டத்திலுள்ள ஒரு சிற்றூரில் பிறந்து, தமிழீழ மண்ணை தன் வாழ்நாள் முழுவதும் நேசித்த பாசறைப்பாவணர், தனது 85வது வயதில் இயற்கையுடன் கலந்து விட்டிருக்கின்றார்.
எம்.ஜி.ஆரின் திரைப்படப்பாடல்களும், வேறுசில உணர்சிகரமான சினிமாப்பாடல்களும், மட்டுமே ஒலித்துக் கொண்டிருந்த, தமிழீழ விடுதலைப் போராட்ட ஆரம்பகாலக் களத்தில், உணர்வெழுச்சி ஊட்டும் குரலாக ஒலிகத்ததொடங்கியது தேனிசை செல்லப்பாவின் பாடல்கள்.
நாம் தமிழர் இயக்கத் தலைவரான சி.பா.ஆதித்தனார் விரும்பிச்சேர்த்துக் கொண்டதால், நாம் தமிழர் இயக்க மேடைகளில், தன்மானப் பாடல்களை பாடிவந்த, தேனிசை செல்லப்பா, தமிழீழப் போராட்ட ஆதரவாளரான பேபி சுப்பிரமணியம் அவர்களினால், விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு அறிமுகம் செய்து வைக்க, அவரது அன்புக்குப் பாத்திரமானார். அப்பொழுது முதல் தமிழீழ விடுதலைக்காக தன் எழுச்சிக் குரலால் எண்ணற்ற பாடல்களைப் பாடினார்.
வடக்கில் விடுதலைப்புலிகள், நிலைகொண்டிருந்த 1990 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் கோட்டை மைதானத்தில் தேனிசை செல்லப்பா பாடிய விடுதலைப் பாடல்கள் புத்தெழுச்சியை ஊட்டியது. ஈழ விடுதலைக்காக தொடர்ந்து பாடல்கள் பாடியவரை, தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் பாசறை பாணர் என்று பாராட்டி மகிழ்ந்தார்.
ஒரு இனத்தின் குரலாய் ஒலித்த அந்தக் குரல் இயற்கையுடன் கலந்துவிட்டது. அது இனி எப்போதும் காற்றாய், கடலாய், காணும் பனைமரங்களின் சலசலப்பாய், தமிழ் நிலம் எங்கிலும் கேட்ட வண்ணமிருக்கும். அ
தேசத்தின் இசைக்குயிலுக்கு அஞ்சலிகள் !
