சினிமா என்பது கதைகளைச் சொல்லும் ஒரு கலைவடிவம் மட்டுமல்ல; காலத்தையும், கற்பனையையும், மனித உணர்வுகளையும் ஒரே திரையில் உயிர்ப்பிக்கும் மாய உலகம். அந்த மாய உலகின் தலைசிறந்த சிற்பிகளில் ஒருவரான கிறிஸ்டோபர் நோலன், இந்த முறை தனது படைப்புப் பயணத்தை கிரேக்கப் புராணக் காவியங்களின் ஆழத்திற்குள் செலுத்தியிருக்கிறார். ஹோமரின் அழியாப் புகழ்பெற்ற தி ஒடிஸி காவியத்தை, நவீனத் திரைப்பட மொழியின் உச்சத்தில் நின்று மறுபிறவி எடுக்கச் செய்திருக்கிறார்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக உலக இலக்கியத்தின் பொக்கிஷமாகப் போற்றப்படும் இந்தக் காவியம், வெறும் போர்வீரனின் பயணக் கதையல்ல. அது மொழிகள், கலாச்சாரங்கள், மதங்கள், என்பவற்றையெல்லாம் கடந்து, மனிதனின் உளப் போராட்டங்களைப் பேசும் ஓர் அகப்பயணம். வெற்றிகளைத் தாண்டி வீடு திரும்ப விழையும் ஒரு மனிதனின் ஏக்கத்தைப் பதிவு செய்யும் வாழ்வியல் தத்துவம். அந்த உணர்வை நோலன் தனது தனித்துவமான கதை சொல்லல் முறையில் திரையில் செதுக்கியிருப்பது, திரைப்படத்தை ஒரு புதிய அனுபவமாக மாற்றியுள்ளது.
டிராய் (Trojan War)போரின் முடிவில் தனது தாய்நாடான இதாக்காவை நோக்கிப் புறப்படும் ஒடிசியஸின் பயணம், கடல்களையும், காலத்தையும், கடவுள்களின் கோபத்தையும், மனித பலவீனங்களையும் கடந்து செல்கிறது. ஒவ்வொரு சவாலும், அவனது வீரத்திற்கான சோதனை மட்டுமல்ல; அவனது மனிதத்தன்மைக்கான கேள்வியாகவும் மாறுகிறது. "வீடு" என்பது ஒரு இடமா அல்லது ஒரு உணர்வா என்ற கேள்வியைத் திரைப்படம் பார்வையாளர்களின் மனதில் ஆழமாக விதைக்கிறது. இந்துக்களின் "வீடு பேறடைதல்" எனும் நம்பிக்கையையும் தொட்டுச் செல்கிறது.
கிறிஸ்டோபர் நோலனின் திரைப்படங்கள் எப்போதும் காலத்தை ஒரு கதாபாத்திரமாகக் கையாளும். மெமென்டோ, இன்செப்ஷன், இன்டர்ஸ்டெல்லார், ஓப்பன்ஹைமர் ஆகிய படைப்புகளின் தொடர்ச்சியாக, தி ஒடிஸியிலும் காலம் ஒரு கண்ணுக்குப் புலப்படாத சக்தியாக இயங்குகிறது. போர் முடிந்த பிறகும் முடிவடையாத மனித மனத்தின் காயங்களையும், ஆண்டுகள் கடந்தும் அழியாத நினைவுகளையும், திரும்பிச் செல்ல வேண்டும் என்ற மனித இயல்பின் நிரந்தரத் தேடலையும் நோலன் தனது காட்சிமொழியால் உணர்த்துகிறார்.
திரைப்படத்தின் தொழில்நுட்ப அம்சங்கள் தனியே ஒரு காவியமாகப் பேசப்பட வேண்டியவை. பெரும் திரைக்கான பிரம்மாண்டக் காட்சியமைப்புகள், கடலின் சீற்றத்தை உணர்த்தும் ஒளிப்பதிவு, புராண உலகின் வியப்பை உயிர்ப்பிக்கும் காட்சித் தொழில்நுட்பம் என ஒவ்வொரு காட்சியும் பார்வையாளர்களைத் திகைக்க வைக்கின்றன. மொராக்கோ, கிரீஸ், இத்தாலி, ஸ்காட்லாந்து, ஐஸ்லாந்து, மேற்கு சஹாரா மற்றும் மால்டா ஆகிய இடங்களிலும், லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள யுனிவர்சல் ஸ்டுடியோஸ் வளாகத்திலும் என உலகின் பல்வேறு இடங்களிலும், மேற்கொள்ளப்பட்ட படப்பிடிப்புகள், திரையில் ஒரு ஓவியத்தைப் போன்ற அனுபவத்தை உருவாக்குகின்றன.
இத் திரைப்படத்தின் பின்னணி இசையும் குறிப்பிடத்தக்க அம்சமாகும். வழக்கமான ஆர்கெஸ்ட்ரா இசையைத் தவிர்த்து, பண்டைய கிரேக்க இசைக்கருவிகளின் ஒலிகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இசை, படத்தின் காலப்பின்னணியை உணரச் செய்கிறது. இதனால் பார்வையாளர்கள் ஒரு திரைப்படத்தைப் பார்க்கிறோம் என்ற உணர்வைக் கடந்து, காவிய உலகிற்குள் நுழைந்த அனுபவத்தைப் பெறுகின்றனர்
ஒடிசியஸாக மேட் டேமன் வெளிப்படுத்தியுள்ள நடிப்பு, அவரது திரைப்பயணத்தின் குறிப்பிடத்தக்க சாதனைகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. வெற்றிகளின் உச்சியில் நின்ற போர்வீரனின் கர்வத்தையும், குடும்பத்தை நாடித் தவிக்கும் கணவனின் மென்மையையும், தோல்விகளால் சோர்ந்த மனிதனின் வேதனையையும் அவர் மிக இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.முக்கிய பாத்திரங்களான ஒடிஸியின் மனைவியாக Anne Hathaway, மகனாக Tom Holland, அதீனா தெய்வமாக Zendaya, கலிப்ஸோ தேவகன்னி Charlize Theron ஏனைய நடிகர்களின் பங்களிப்பும் கதையின் உணர்ச்சிப் பரப்பை மேலும் செழுமைப்படுத்துகின்றது.
தி ஒடிஸி திரைப்படத்தின் மிகப் பெரிய சிறப்பு என்னவென்றால், அது ஒரு புராணக் கதையை நவீன பார்வையாளர்களுக்காக எளிமைப்படுத்த முயற்சிக்கவில்லை என்பதே. மாறாக, அந்தக் காவியத்தின் ஆன்மாவை முழுமையாகக் காத்து, அதற்கேற்ற திரைமொழியை உருவாக்கியுள்ளது. இதனால் திரைப்படம் பொழுதுபோக்கைத் தாண்டி, மனித வாழ்வின் அர்த்தத்தைப் பற்றிய ஓர் அழகிய தத்துவ உரையாடலாக மாறுகிறது.
இன்றைய வேகமான உலகில், "வீடு திரும்புதல்" என்ற எண்ணம் வெறும் புவியியல் பயணமாக இல்லை. நம்மை நாமே மீண்டும் கண்டடையும் ஆன்மிகப் பயணமாகவும் இருக்கிறது என்பதை தி ஒடிஸி நினைவூட்டுகிறது. அந்த உண்மையை பிரம்மாண்டமான திரை அனுபவமாக மாற்றியிருப்பதே கிறிஸ்டோபர் நோலனின் மிகப்பெரிய வெற்றி.
விமர்சன ரீதியாகவும் இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. உலகளாவிய விமர்சகர்களின் பாராட்டைப் பெற்று, பழங்காலக் கதையை நவீன திரைமொழியுடன் இணைத்த விதம் சிறப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. திரைப்படத்தின் தொழில்நுட்பத் தரம் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான கதை சொல்லல் ஆகியவை அதன் மிகப்பெரிய பலங்களாகக் கருதப்படுகின்றன.
எனினும், சில விமர்சகர்கள் நோலனின் வழக்கமான சிக்கலான கதை சொல்லும் அணுகுமுறை காரணமாக, திரைப்படத்தின் உணர்ச்சி அடுக்குகளை முழுமையாக ரசிக்க ஒன்றுக்கு மேற்பட்ட முறை பார்க்க வேண்டிய அவசியம் இருக்கலாம் எனக் குறிப்பிடுகின்றனர். அதுவும் நோலனது திரைப்படங்களின் தனிச்சிறப்புக்களில் ஒன்றேனவே சொல்லாம். 3 மணிநேரத்துக்கு சற்றுக் குறைவாக திரையில் விரியும் இந்தக் காட்சி ஓவியத்தை நேரம் போவது தெரியாமலே நகர்த்தியிருக்கிறார் நோலன்.
சில திரைப்படங்கள் வசூலை வெல்லும். சில திரைப்படங்கள் விருதுகளை வெல்லும். மிகச் சில திரைப்படங்களே காலத்தை வெல்லும். நோலனின் 'தி ஒடிஸி - The Odyssey ' அத்தகைய அரிய படைப்புகளின் வரிசையில் தன்னுடைய இடத்தை உறுதியாகப் பதிவு செய்திருக்கிறது. இது ஒரு திரைப்படம் மட்டுமல்ல; ஒவ்வொரு மனிதனும் தனது வேர்களை நோக்கி மேற்கொள்ளும் நித்தியப் பயணத்தின் திரைக் காவியம் என்பதில் மாற்றில்லை.
- 4தமிழ்மீடியாவிற்காக : மலைநாடான்
