free website hit counter

‘அரந்தலாவ படுகொலை’ விசாரணைகள்: ராஜபக்‌ஷக்களின் புதிய திட்டம்? (புருஜோத்தமன் தங்கமயில்)

பதிவுகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

‘அரந்தலாவ படுகொலை’ தொடர்பிலான விசாரணைகளை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் முன்னெடுத்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம், உயர்நீதிமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்திருக்கின்றது. 1987ஆம் ஆண்டு, ஜூன் இரண்டாம் திகதி, அம்பாறை, அரந்தலாவ பகுதியில் வைத்து, இளம் பிக்குகள் அடங்கிய 33 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்தப் படுகொலையை, தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்டதாக, அரசாங்கம் குற்றஞ்சாட்டி வந்திருக்கின்றது. 

இந்த நிலையில், குறித்த படுகொலைச் சம்பவத்தில், மயிரிழையில் உயிர்தப்பிய ஒருவர் தொடர்ந்த வழக்கின் அடிப்படையிலேயே, 34 வருடங்களுக்குப் பிறகு, அரந்தலாவ படுகொலை தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சுதந்திரத்துக்கு முன்னும் பின்னும், இலங்கையில் திட்டமிட்ட இன வன்முறைகள், கலவரங்கள், படுகொலைகள் உள்ளிட்ட வன்முறைச் சம்பவங்கள் என்று தொடர்ச்சியாக இடம்பெற்று வந்திருக்கின்றன. 1915இல் கண்டியில் ஆரம்பித்து, தென் இலங்கை பூராவும் பரவிய சிங்கள - முஸ்லிம் கலவரம் தொடங்கி, 2018இல் கண்டி, திகனவில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான திட்டமிட்ட வன்முறைகள் வரையில், ‘கறுப்பு’ வரலாற்றை நாடு கொண்டிருக்கின்றது.

1958, 1977களில் தமிழ் மக்களுக்கு எதிராக, பௌத்த சிங்களப் பேரினவாதம், தனது அரசியலின் பிரதான அம்சமாக, அடக்குமுறையைப் பயன்படுத்திக் கொண்டது. நாட்டுக்காக உழைத்து, ஓடாய்த் தேய்ந்த மலையக மக்களை, அவர்களின் வாழ்விடங்களில் இருந்து துரத்தியடித்த சிங்களப் பேரினவாதம், அதே பாணியிலான அடக்குமுறையை கொழும்பில் ஆரம்பித்து நாடு பூராவும் தமிழ் மக்களுக்கு எதிராக, 1983ஆம் ஆண்டு திட்டமிட்ட கலவரமாக ‘கறுப்பு ஜுலை’யை அரங்கேற்றி, குருதி குடித்தது. அத்தோடு, வடக்கு - கிழக்கில் தன்னுடைய கொடுங்கரங்களை நீட்டத் தொடங்கியது. 2009இல் முள்ளிவாய்க்கால் பேரழிவு, அதன் உச்சமாக அமைந்தது.

நாட்டில் இனமுரண்பாடுகள் என்கிற பெயரில், திட்டமிட்ட இனவன்முறைகள் அரங்கேற்றப்பட ஆரம்பித்தது முதல், அனைத்துச் சமூகங்களுக்குள்ளும் இருந்தும், மனித மாண்புகளுக்கு எதிரான படுகொலைகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, புல்லுமலைப் படுகொலைகள், தங்கவேலாயுதபுரம் படுகொலைகள், அரந்தலாவ படுகொலைகள், சத்துருக்கொண்டான் படுகொலைகள், காத்தான்குடி படுகொலைகள், நவாலி தேவாலய படுகொலைகள், நாகர்கோவில் பாடசாலைப் படுகொலைகள், கெப்பட்டிக்கொல்லாவ படுகொலைகள், செஞ்சோலைப் படுகொலைகள் என்று படுகொலைச் சம்பவங்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காதவை.

இவ்வாறான படுகொலைகள் தொடர்பில், அது இடம்பெற்ற காலத்திலும் சரி, அதன் பின்னரும் சரி, நீதியான விசாரணைகள் ஏதும் இடம்பெற்றிருக்கவில்லை. அதிக தருணங்களில், அந்தப் படுகொலையைப் புரிந்த தரப்புகள், அந்தப் படுகொலைகளில் கொல்லப்பட்ட மக்களைப் பயங்கரவாதிகளாகவே சித்திரித்திருக்கின்றன. ஆனால், அங்கு இன- மத பேதமின்றி, அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கான நீதி என்பது, என்றைக்குமே கிடைக்காத ஒன்றாகவே இருந்திருக்கின்றது.

இந்தப் படுகொலைகளின் சாட்சிகள், இன்றைக்கும் நடைப்பிணங்களாக இருக்கிறார்கள். படுகொலைகளைப் புரிந்தவர்களும் அவர்களை ஏவியவர்களும் கூட, இன்றைக்கும் இருக்கிறார்கள்.

முள்ளிவாய்க்கால் இறுதி நாள்களில், தங்களது உறவுகளைப் பாதுகாப்புத் தரப்பிடம் கையளித்தவர்கள், 12 ஆண்டுகளுக்கும் மேலாக, அவர்களைத் தேடி அலைகிறார்கள்; வீதிகளில் காத்திருக்கிறார்கள்; நீதிமன்றங்களின் படிகளிலும் ஏறுகிறார்கள். ஆனால், அவர்களுக்கான பதில் சூனியமாகவே இருக்கின்றது. அப்படி அலைந்து திரிந்த பல தாய்மாரும் தந்தைமாரும், நோய்வாய்ப்பட்டு இறந்திருக்கிறார்கள். இவையெல்லாம் நாளாந்த கட்சிகளாக, வடக்கு - கிழக்கில் அரங்கேறி வருகின்றன.

இவ்வாறான கட்டத்தில்தான், அரந்தலாவ படுகொலைகள் தொடர்பிலான விசாரணைகள் மீள ஆரம்பிக்கப்பட்டு இருக்கின்றன. மனித குலத்துக்கு எதிரான எந்தவொரு நிகழ்வையும் அனுமதிக்க வேண்டியதில்லை. அவற்றுக்கு எதிரான நீதி என்பது, உறுதிப்படுத்தப்பட வேண்டும். அதுதான், அவ்வாறான குற்றங்கள் மீள நிகழாது இருப்பதை உறுதி செய்யும்.

ஆனால், தற்போது அரந்தலாவ படுகொலைகள் தொடர்பிலான விசாரணைகள் மீள ஆரம்பிக்கப்பட்டு இருப்பதை, நீதிக்கான தேடலாக மட்டும் கொள்ள முடியவில்லை என்பதுதான் இங்குள்ள முக்கிய விடயம்.

ராஜபக்‌ஷக்கள் எனும் பெரும் கப்பல், தென் இலங்கையின் எதிர்பார்ப்புகளை எல்லாமும் பொய்ப்பித்துக் கொண்டு முழ்கிக் கொண்டிருக்கின்றது. அப்படியான நிலையில், ராஜபக்‌ஷக்கள் வழக்கமாகக் கையாளும் இன, மத அடிப்படைவாதத்தை முன்னிறுத்திக் கொண்டு, தப்பித்துக் கொள்ளலாம் என்ற நோக்கில் முயற்சிப்பதாகக் கொள்ளலாம்.

நல்லாட்சிக் காலத்தில், அரசாங்கத்துக்கு எதிராக வீதியில் இறங்கிய ராஜபக்‌ஷ ஆதரவு தொழிற்சங்க‍ங்களில் அநேகமானவை, இன்றைக்கு ராஜபக்‌ஷக்களுக்கு எதிராகவே வீதியில் இறங்கி இருக்கின்றன. கொவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில், அனைத்துத் தரப்பினரும் பெரும் நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்ற நிலையில், ராஜபக்‌ஷக்களுக்கு ஆதரவாகக் கடந்த காலத்தில் வீதிகளில் இறங்கிய தரப்பினரும், இன்றைக்கு அவர்களுக்கு எதிராகவே வீதியில் இறங்கியிருப்பது, தென் இலங்கையின் ஒட்டுமொத்த மனநிலையையும் வெளிப்படுத்துகின்றது.

குறிப்பாக, ராஜபக்‌ஷக்களுக்காக பௌத்த விகாரைகளுக்கு ஊடாக, பெரும் பிரசாரங்களை முன்னெடுத்த பௌத்த மகாசங்கங்களும் தலைமைப் பிக்குகளும், ராஜபக்‌ஷக்களுக்கு எதிராகவே இன்றைக்குத் திரும்பியிருக்கின்றனர்.

அவ்வாறான நிலையில்தான், 34 வருடங்களுக்கு முன்னரான பௌத்த பிக்குகள் படுகொலை செய்யப்பட்ட அரந்தலாவ படுகொலை விசாரணைகள், மேலெழுந்திருப்பதைக் கொள்ள வேண்டியிருக்கின்றது. அதன்மூலம், பௌத்த மகாசங்கங்களை ஒரு வகையில் கையாளலாம் என்பது, ராஜபக்‌ஷக்களின் எதிர்பார்ப்பாக இருக்கலாம்.

ராஜபக்‌ஷக்கள் மீது மாத்திரமல்ல, அவர்களின் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையும் மக்கள் மத்தியில் மாத்திரமல்ல, அரச பங்காளிகளிடமும் இழக்கப்பட்டு விட்டது. அரச பங்காளிகள், புதிய அரசியல் தலைமையை நோக்கி நகர்வதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். 2015இல் மைத்திரிபால சிறிசேனவை முன்னிறுத்திக் கொண்டு எழுந்த அணி போன்றதொரு நிலையை, மீண்டும் உருவாக்கலாம் என்ற யோசனையோடு முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

மங்கள சமரவீர, குமார வெல்கம உள்ளிட்ட தரப்புகள், பண்டாரநாயக்க குடும்பத்திலிருந்து ஒருவரை, மீண்டும் அரசியலுக்கு அழைத்து வருவதன் மூலம், ராஜபக்‌ஷக்களை அரங்கிலிருந்து சிறிய காலத்துக்காவது அகற்றலாம் என்று சிந்திக்கிறார்கள்.

குறிப்பாக, சந்திரிகா குமாரதுங்கவின் மகனை, ‘கற்ற கனவான்’ மற்றும் ‘பரம்பரை அரசியல்வாதி’ என்கிற அடையாளங்களோடு தென் இலங்கையில் முன்னிறுத்தும் சூழல் உருவாகி இருக்கின்றது. அவ்வாறானதொரு சந்தர்ப்பம் எழுந்தால், பண்டாரநாயக்க குடும்பத்தை நோக்கி, மகா நாயக்க பீடங்கள் செல்லும் வாய்ப்புகள் உண்டு. குறிப்பாக, கண்டிச் சிங்கள பீடங்கள், தங்களது பிடியை மீண்டும் பண்டாரநாயக்க குடும்பத்தினூடாக நிறுவலாம் என்றும் யோசிக்கலாம்.

பௌத்த பீடங்கள் மீது, ராஜபக்‌ஷக்கள் போல வேறெந்தத் தரப்பும் எப்போதுமே ஆளுமை செலுத்தியதில்லை. தங்களது நிலைப்பாடுகளை விமர்சிக்கின்ற தருணங்களில், பௌத்த பீடங்களுக்குள்ளேயே பிளவுகளை ஏற்படுத்தும் அளவுக்கான ஏற்பாடுகளை ராஜபக்‌ஷக்கள் அவர்களின் முதல் ஆட்சிக் காலத்தில் செய்திருக்கிறார்கள். ராஜபக்‌ஷக்களின் ஆட்சி, காலவரையறையின்றி தொடர்ந்தால், அவ்வாறானநிலை, மீண்டும் உருவாகலாம் எனும் நிலையில், பண்டாரநாயக்க குடும்பத்தை நோக்கி ஆதரவுக் கரத்தை, பௌத்த பீடங்கள் நீட்டுவது இயல்பானது.

அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யார் என்கிற கேள்வி, ராஜபக்‌ஷ குடும்பத்துக்குள் தலையெடுத்து விட்டது. கோட்டாபய ராஜபக்‌ஷ, “மீண்டும் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடுவேன்” என்று அண்மையில் அறிவித்திருக்கின்றார். அவரது இளைய சகோதரரான பசில் ராஜபக்‌ஷ, 2024ஐ தன்னுடைய ஜனாதிபதிக்கான பயணமாகக் கட்டமைக்கின்றார்.

இன்னொரு பக்கம், மஹிந்த ராஜபக்‌ஷவுக்குத் தன்னுடைய மூத்த மகனான நாமலின் எதிர்காலம் குறித்த பயம் தொற்றிக் கொண்டிருக்கின்றது. அப்படியான முரண்பாடுகள், ராஜபக்‌ஷக்களுக்கு இடையில் உருவாகியிருக்கும் நிலையில், பண்டாரநாயக்க குடும்ப வாரிசு பற்றிய அச்சம், அவர்களுக்கு எழுவது இயல்பானது. அந்த நிலைமையைக் கையாள்வதற்கான ஒரு கருவியாக, அரந்தலாவ படுகொலை விசாரணை விடயம், தென் இலங்கையில் மேலே கொண்டுவரப்பட்டு இருக்கின்றது என்றும் கொள்ளலாம். காலம் தன்னுடைய பதிலைச் சொல்லும்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction