கமல்ஹாசன் ஒரு இயக்குநராகவும் நடிகராகவும் திரைக்கதை எழுத்தாளராகவும் முத்திரை பதித்த படங்களில் முதலிடம் பிடிப்பது ‘மகாநதி’.
அதற்கு அடுத்த இடத்தில் அவருடைய ‘ஹே ராம்’. 2000-ல் வெளியான இப்படத்தில், கமல்ஹாசனோடு அவரது வங்காளக் காதல் மனைவியாக ராணி முகர்ஜி, வசுந்தரா தாஸ், அதுல் குல்கர்னி, நாசர் உள்பட பலர் நடிக்க, பாலிவுட் பாட்ஷா ஷாரூக் கான் கமலின் நண்பனாக முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அதோடு இந்த படத்தில் நடிப்பதற்கு ஷாரூக் கான் சம்பளமே பெற்றுக் கொள்ளவில்லை என கமல்ஹாசன் தெரிவித்திருந்தார்.
படம் வெளியானபோது கலவையான விமர்சனங்களை எதிர்கொண்ட படம் ஹேராம். படைப்பு ரீதியாக உலகத்தரமான படம் என்று விமர்சகர்களால் பாராட்டப்பட்டாலும் வணிக ரீதியாக தோல்வியடைந்தது. இந்த நிலையில் ஹேராம் படம் வெளியாகி 22 வருடங்களுக்கு பிறகு அப்படத்தை இந்தியில் மறு ஆக்கம் செய்து, ஷாரூக் கான் நடிக்கப் போகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. அதற்காக இப்படத்தின் இந்தி மறு ஆக்க உரிமையை அவர் வாங்கி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என்கிறார்கள். ஏற்கனவே ஹேராம் திரைப்படம் இந்தியிலும் டப் செய்யப்பட்டு வெளியானநிலையில், ஷாரூக் இந்தப் படத்தை ரீமேக் செய்ய நினைப்பது பல அரசியல் விவதாங்களை உருவாக்கும் என நெட்டிசன்கள் சிலர் பதிவிட்டு வருகின்றனர்.