free website hit counter

 அண்ணன் கடனை என்னால் அடைக்க இயலாது: நீதிமன்றத்தில் நடிகர் பிரபு

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பிரபல தமிழ் திரைப்பட நடிகர் பிரபு, தனது அண்ணன் வாங்கிய கடனுக்கு நான் பொறுப்பல்ல; என்னால் அதை அடைக்க இயலாது என்று நீதிமன்றத்தில் உறுதிபட தெரிவித்துள்ளார்.

பிரபல திரைப்பட நடிகராக புகழோடு மறைந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இவரது மகன்கள் ராம் குமார் மற்றும் நடிகர் பிரபு. ராம்குமார் திரைப்பட தயாரிப்பாளராக, பல படங்களை தயாரித்துள்ளார்.  பிரபு தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக கோலோச்சியவர்.

இந்த நிலையில், சிவாஜியின் பேரனும் ராம்குமாரின் மகனுமான துஷ்யந்த், தனது ஈசன் புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் படம் ஒன்றை தயாரித்தார்.  'ஜகஜால கில்லாடி' என்ற இந்த படத்தில் விஷ்ணு விஷால், நிவேதா பெத்துராஜ் உள்ளிட்டோர் நடித்தனர். 

இந்த படத்தின் தயாரிப்புகாக, தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம், இந்திய மதிப்பில் ரூ. 3.74 கோடியை கடனாக வாங்கியிருந்தார். எனினும் குறித்த காலத்திற்குள் கடனை திருப்பி செலுத்தவில்லை. இதனால், கடன் கொடுத்த நிறுவனம் சார்பில் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், சிவாஜி கணேசனின் 'அன்னை இல்லம்' என்ற பெயரிலான வீட்டை ஜப்தி செய்ய நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது.

இதற்கிடையே,  நடிகர் பிரபு நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், 'அன்னை இல்லத்தின் முழு உரிமை எனக்கு மட்டுமே இருக்கிறது. ஆனால், வழக்கு எனது சகோதரர் ராம்குமார் தொடர்புடையது. அந்த வழக்கிற்காக எனக்கு சொந்தமான வீட்டை ஜப்தி செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதை உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' என்று கேட்டுக் கொண்டிருந்தார். 

நடிகர் பிரபுவின் மனு சென்னை உயர் நீதிமன்றத்தில், வியாழக்கிழமை அன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது நடிகர் பிரபு தரப்பில் ''ராம்குமார் பெற்ற ரூ.3 கோடி கடனுக்காக 3ம் நபரான எனக்கு சொந்தமான ரூ.150 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்க ஆணை தரப்பட்டுள்ளது. வாழ்நாளில் நான் இதுவரை ஒரு ரூபாய் கூட கடன் பெற்றது கிடையாது'' என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட உயர் நீதிமன்ற நீதிபதி அப்துல் குத்தூஸ், ''ராம்குமார் உங்கள் சகோதரர்தானே? ஒன்றாகத்தானே வசித்து வருகிறீர்கள்? அந்த கடனை நீங்கள் செலுத்திவிட்டு பின்னர் ராம்குமாரிடம் இருந்து பெற்றுக் கொள்ள வேண்டியதுதானே'' என்று கேட்டார். 

அதற்கு பதிலளித்த பிரபு தரப்பு, "ராம்குமாருக்கு உதவ இயலாது. அவர் நிறைய பேரிடம் இதுபோல் கடன் வாங்கியுள்ளார்'' என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கு விசாரணையை ஏப்.7ஆம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula