free website hit counter

சூரிய குடும்பத்தைத் தாண்டிச் சென்று கொண்டிருக்கும் வொயேஜர் ஓடம் எமது அண்டத்தைத் தாண்டுமா?

அறிவியல்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

வொயேஜர் 1 (Voyager 1) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 செப்டம்பர் 5 இல் சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்ணுளவி ஆகும்.

722 கிலோகிராம் எடையுள்ள இந்த விண்கலம் ஆகஸ்ட் 2 ஆம் திகதி 2020 வரை 42 ஆண்டுகள், 10 மாதங்கள், 28 நாட்கள் காலத்தை விண்வெளியில் நிறைவு செய்துள்ளது.

ஆகஸ்ட் 2013 ஆமாண்டு தொடக்கம் சூரியனில் இருந்து 125 வானியல் அலகு (1 வானியல் அலகு - பூமிக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட தூரம்) தூரத்தில் சென்று கொண்டிருக்கும் இவ்விண்கலம் பூமியில் இருந்து மிக அதிக தூரத்திற்குச் சென்ற மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு பொருள் ஆகும். இந்த விண்கலம் 2012 ஆகஸ்ட் 25 ஆம் திகதி விண்மீனிடப் பகுதி என்ற முன்னர் அறியப் படாத வெளியை அடைந்ததாக நாசா அறிவித்திருந்தது. இதன் மூலம் சூரிய குடும்பத்தை விட்டு வெளியே சென்ற முதலாவது விண்கலம் என்ற பெருமையை இது பெற்றது.

சரி இனி விடயத்துக்கு வருவோம்.. இந்த வொயேஜர் விண்கலம் என்றாவது ஒரு நாள் எமது சூரியனும் ஏனைய கிரகங்களும் உட்பட பல மில்லியன் கணக்கான விண்மீண்களை உள்ளடக்கிய எமது பால்வெளி அண்டத்தை (Milky Way Galaxy) இனைத் தாண்டிச் செல்லுமா? என்ற கேள்வி உங்களுக்கு எழுந்தால் அதற்கான விடை இல்லை என்பதாகத் தான் இருக்கும். ஏனென்று பார்ப்போம். 2013 ஆமாண்டு நிலவரப்படி இந்த வொயேஜர் விண்கலம் சூரியன் சார்பாக செக்கனுக்கு 17 கிலோ மீட்டர் என்ற வேகத்தில் தான் சென்று கொண்டிருந்தது.விண்கலத்துக்குத் தேவையான ஆற்றல் குறைந்து வருவதால் 2025 ஆமாண்டின் பின்னர் இவ்விண்கலத்தில் பொருத்தப் பட்டுள்ள எந்தவொரு உபகரணமும் இயங்க முடியாது போகலாம். ஆனாலும் நியூட்டனின் இயக்க விதிப் படி இது நகர்ந்து கொண்டிருக்கும் உந்தத்தைக் கொண்டிருப்பதால் தொடர்ந்து சென்று கொண்டு தான் இருக்கும். ஆயினும் பால்வெளி அண்டத்தின் விளிம்பில் இருந்து அதனைத் தாண்ட வேண்டும் என்றால் அதற்கான தப்பு வேகம் (Escape velocity) 550 Km/s ஆகவிருக்க வேண்டும். ஆனால் இந்த வேகத்தின் வெறும் 3% வீதத்தைத் தான் வொயேஜர் விண்கலம் கொண்டிருக்கின்றது.

எனவே இயக்கவியல் விதிகளின் படி வொயேஜார் ஓடம் எமது பால்வெளி அண்டத்தைத் தாண்ட முடியாது. ஆனால் இன்னும் பல பில்லியன் வருடங்களின் பின் எமது பால்வெளி அண்டமும், அதன் அருகே இருக்கும் அண்டிரோமிடா என்ற அண்டமும் ஒன்றுடன் இன்னொன்று மோதும் என வானியலாளர்கள் கணித்துள்ளனர்.

இவ்வாறு மோதி உருவாகக் கூடிய புதிய அண்டத்தில் விண்ணில் செலுத்தப் பட்டுள்ள இரு வொயேஜர் ஓடங்களுமே தள்ளப் படக் கூடும் என்பது கற்பனையாக இருந்தாலும் சாத்தியமல்லாத ஒன்று அல்ல என அண்டவியலாளர்கள் கூறுகின்றனர்.

 

நன்றி, தகவல் : Quora, தமிழ் விக்கிபீடியா

- 4தமிழ்மீடியாவுக்காக நவன்

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction