தமிழ் சினிமாவில் நன்கு அறியப்பட்ட நாயக நடிகர் விஷாலும், நடிகை சாய் தன்ஷிகாவும் திருமணம் செய்யவுள்ள செய்தி வெளியாகியுள்ளது.
செல்லமே" திரைப்படத்தில் அறிமுகமாகி, சண்டக்கோழி, திமிரு, சத்யம், அவன் இவன், பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன் என பல்வேறு ஆக்ஷன் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் விஷால்.
சினிமாவில் நடிப்பது மட்டுமன்றி, விஷால் ஃபிலிம் ஃபேக்டரி எனும் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி, அதன் மூலம் பல திரைப்படங்களைத் தயாரித்துமுள்ளார்.தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும், பின்னர் தலைவராகவும் பதவி வகித்துமுள்ளார். நடிகர் சங்க கட்டிட நிதிக்காக அவர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதுடன், சங்க கட்டிடம் கட்டிய பிறகு தான் திருமணம் செய்வேன் என அறிவித்திருந்தார்.
வரும் ஆகஸ்ட்டில் நடிகர் சங்க கட்டிடம் திறக்கப்பட உள்ள நிலையில், இன்று நடைபெற்ற ‘யோகிடா’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விழாவில் இப்படத்தின் நாயகி சாய் தன்ஷிகா பேசுகையில், "தானும் விஷாலும்,காதலித்து வருவதாகவும், ஆகஸ்ட் 29 ஆம் தேதி திருமணம் செய்துகொள்ளப் போகிறோம்” எனவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
நடிகை சாய் தன்ஷிகா "நிலா நீ வானம் காற்று" என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, பின்னர் "பரட்டை என்கிற அழகுசுந்தரம்", "மாப்பிள்ளை", "யாரடி நீ மோகினி" போன்ற படங்களில் சிறிய வேடங்களில் நடித்தார். பாலா இயக்கிய "பரதேசி", "கபாலி", "மேற்குத் தொடர்ச்சி மலை" போன்ற பல படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.