கடந்த பெப்ரவரி முதல் மியான்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராகப் போராட்டம் செய்து வந்த பொது மக்களில் சுமார் 802 பேர் வரை இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளனர்.
இத்தகவலை அரசியல் கைதிகள் உதவி சங்கம் உறுதிப் படுத்தியுள்ளது. இது தவிர இந்த போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மற்றும் முன்னால் அரச தலைவர் ஆங் சான் சூகி உட்பட சுமார் 4120 அரசியல் கைதிகள் வரை சிறைப் படுத்தப் பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
இதில் 20 பேருக்கு மரண தண்டனையும் அறிவிக்கப் பட்டுள்ளது. மியான்மாரில் தொடர்ந்து அமைதியற்ற நிலை நீடிக்கிறது. இந்நிலையில் பெப்ரவரி முதற் கொண்டு இன்றுவரை மியான்மாரில் இருந்து இந்தியாவுக்கு சுமார் 4000 தொடக்கம் 6000 அகதிகள் அடைக்கலம் புகுந்திருப்பதாக ஐ.நா புள்ளி விபரம் தெரிவிக்கின்றது.
இது தவிர மியான்மாரில் கடந்த வாரம் மாத்திரம் கிட்டத்தட்ட 60 700 பெண்களும், சிறுவர்களும், ஆண்களும் உள்நாட்டில் இடம் பெயர்ந்திருப்பதாக ஐ.நா அகதிகள் பிரிவான UNHCR தெரிவித்துள்ளது. மேலும் மார்ச் மற்றும் ஏப்பிரல் காலப் பகுதியில் மாத்திரம் 1700 இற்கும் அதிகமான தாய்லாந்துக்கு இடம் பெயர்ந்திருப்பதாகவும் இவர்களில் பெரும்பாலானவர்கள் மீண்டும் மியான்மாருக்கே திருப்பப் பட்டிருப்பதாகவும் கூடத் தெரிய வருகின்றது.
இன்னுமொரு நடப்பு உலகச் செய்தி -
சீனாவின் பீஜிங் நகரில் 2022 ஆமாண்டு நடைபெறத் திட்டமிடப் பட்டிருக்கும் குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டிகளைப் புறக்கணிக்குமாறு உலக நாடுகளுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் சபை சபாநாயகர் நான்சி பெலோசி அழைப்பு விடுத்துள்ளார். சீனாவின் மனித உரிமை மீறல்கள் குறித்து விமரிசித்து இருக்கும் அவர் இப்போட்டிகளில் கலந்து கொள்ளும் நாடுகளின் தலைவர்கள் தமது சுயமரியாதையை இழக்க நேரிடும் என்றும் கூறியுள்ளார்.
அண்மைக் காலமாக ஒலிம்பிக் உட்பட சீனாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட அமெரிக்கா மேற்கொண்டு வரும் முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன என்று ராய்ட்டர்ஸ் ஊடகத்துக்கு சீனத் தூதரக செய்தித் தொடர்பாளர் லியு பெங்யூ தெரிவித்துள்ளார். மேலும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை சீனா மீது அமெரிக்கா தொடர்ந்து முன்வைப்பதாகவும் அவர் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.