முள்ளிவாய்க்கால் முடிவின் பின்னரான தமிழ்த் தேசிய அரசியலை வழிநடத்தி வந்த பெருந்தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் அவர்களின் மறைவு, ஈழத்தமிழர் அரசியலில் தலைமைத்துவ வெளியை அதிகமாக்கியிருக்கின்றது. தந்தை செல்வாவில் இன விடுதலை அரசியலினால் ஈர்க்கப்பட்டு தமிழரசுக் கட்சியூடாக அரசியல் களம் கண்ட சம்பந்தன், தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் அங்கீகாரத்தோடு நிலைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒரே தலைவராகவும் செயற்பட்டிருக்கிறார்.
இறுதி வரை அஹிம்சை அரசியலில் நம்பிக்கை கொண்டிருந்த அவர், ஜனநாயக அரசியலில் பங்கெடுக்கும் ஒருவர் எந்தத் தருணத்திலும் யாரும் அணுகக் கூடியவராக இருக்க வேண்டும் என்பதை செல்நெறியாக கொண்டிருந்தார். அதற்காக உரையாடலுக்கான வெளியை நட்பு சக்திகளுக்கு மாத்திரமல்லாமல், எதிரிகளுக்கும் தனக்கும் தமிழினத்துக்கும் துரோகம் இழைக்கிறார்கள் என்று அவர் கருதியவர்களுக்காகவும் திறந்து வைத்திருந்தவர். அவர், எந்தத் தருணத்திலும் துருவ நிலை அரசியலை பின்பற்றியவர் அல்ல. அதனால்தான், இலங்கை வரலாற்றில் தென் இலங்கை எதிர்கொண்ட நெகிழ்வுத்தன்மை கொண்ட தமிழ்த் தலைவர்களில் ஒருவராகவும் பார்க்கப்படுகின்றார்.
தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஆயுத போராட்டம் அதியுச்ச வெற்றிகளைப் பெற்ற 2000ஆம் ஆண்டுகளின் ஆரம்ப காலத்தில், தேர்தல் அரசியல் ஊடாகவும் தமிழீழ விடுதலைப் புலிகளை அங்கீகரிக்கின்ற தரப்பு பலம்பெற வேண்டும் என்ற எண்ணப்பாடு கிழக்கில் இருந்து எழுந்தது. வன்னியில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் வழங்கிய ஆசியோடு மறைந்த தராகி சிவராம் உள்ளிட்டவர்களின் தொடர் உரையாடல்களினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கம் சாத்தியப்பட்டது. ஈழத்தமிழர்களின் தலைமையாக புலிகள் மாறிய பின்னராக காலத்தில், அதுவரை தமிழர் அரசியலை வழிநடத்தி வந்த தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் மக்களினால் திண்டப்படாத தரப்பாக மாறியிருந்தது. கூட்டணியின் தலைவர் அமிர்தலிங்கத்தின் படுகொலையோடு, தமிழர் அரசியல் களம் புலிகளைச் சுற்றி சுழல ஆரம்பித்தது. மிலேனியம் பிறக்கும் வரையில் விடுதலைப் புலிகள், அரசோடு சேர்ந்து இயங்கிய ஆயுத இயக்கங்களை மாத்திரமல்ல, கூட்டணியின் தலைவர்களையும் துரோகிகளாகவே கருதியிருந்தார்கள். ஆனால், அரசியல் இராஜதந்திர களத்தில், ஆயுதப் போராட்ட வெற்றிகள் மாத்திரம் இனவிடுதலையைப் பெற்றுத்தராது என்பதை புலிகள், உணரத் தொடங்கியதன் விளைவாகவே கூட்டமைப்பு உருவாக்கத்திற்கு அங்கீகாரம் அளித்தார்கள். அதுவரை காலமும் துரோகிகளாக கருதிய தரப்பினரை, ஒரே அணிக்குள் இணைத்து, அவர்களை தங்களின் ஆசிபெற்ற தரப்பினராக புலிகள் அறிவித்தனர். அதனால், கூட்டமைப்புக்குள் அணி சேர்ந்த கட்சிகளும் இயக்கங்களும் அவர்களின் கடந்த கால கறுப்புப் பக்கங்களின் மீது பாவ மன்னிப்பு நீர் தெளிக்கப்பட்டு புனிதப்படுத்தப்பட்டார்கள். அத்தோடு, அவர்களையெல்லாம் ஒவ்வொரு ஈழத்தமிழனின் வீட்டுக்குள்ளும் கொண்டு சென்று தேர்தல் அரசியலில் வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்தார்கள். அதுவும், 2004 பொதுத் தேர்தலில் கூட்டமைப்பு, தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் பெற்ற வெற்றி, தமிழர் அரசியலில் மிகப்பெரியது. அந்தத் தருணத்தில்தான், கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழுத் தலைவராக சம்பந்தன், புலிகளின் ஆசியோடு தெரிவானார். அது, அவரை அடுத்த இரண்டு தசாப்த காலத்துக்கு அவரை கூட்டமைப்பின் தலைவராக்கியது.
அஹிம்மை அரசியல் மீது இறுதி வரை நம்பிக்கை கொண்டிருந்த சம்பந்தன், விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்திற்கான அர்ப்பணிப்பையும், அவர்கள்தான் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்பதையும் ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இருந்தமையினால்தான், கூட்டமைப்பின் தலைவராக மாறும் நிலை ஏற்பட்டது. தமிழர் பிரதிநிதிகளாக தாங்கள் தேர்தல்கள் ஊடாக தேர்தெடுக்கப்பட்டாலும் அது, புலிகளின் அனுசரணையோடு நிகழ்ந்தது என்பதையும், புலிகளே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்பதையும் அவர் பாராளுமன்றத்துக்குள் கூட அறிவித்திருக்கிறார். தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பிலான பேச்சுவார்த்தைகளில் தமிழ் மக்களின் சார்பில் புலிகள் மாத்திரம் பங்களித்தால் போதுமானது என்பதையும் அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். புலிகள் தங்களின் முடிவினை முற்கூட்டியே உணர்ந்து கொண்டமையினால்தான், ஜனநாயக தேர்தல் அரசியலுக்காக தமிழ்த் தரப்புக்கள் அனைத்தையும் ஒன்றாக்கி கூட்டமைப்பை உருவாக்கினார்களோ என்ற சந்தேகம் அடிக்கடி எழுப்பப்படுவதுண்டு. அதனால்தான், முள்ளிவாய்க்கால் முடிவின் பின்னாலும் தமிழ் மக்கள் ஓரணியில் நின்றார்கள். முள்ளிவாய்க்கால் முடிவு என்பது தமிழ் மக்கள் வரலாறு பூராவும் சந்தித்து வந்த பின்னடைவுகளில் ஆகப்பெரியதும் ஆகப்பிந்தியதுமாகும். அதிலிருந்து மீள்வதென்பது இலகுவான காரியமாக இப்போதும் இல்லை. அப்படியான தருணத்தில், புலிகள் கையளித்த கூட்டமைப்பை கட்டுக்குலையாது காப்பதில் சம்பந்தன் கவனமாக இருந்தார். வயது மூப்பினால் முடங்கும் காலம் வரையில் அதனைக் காப்பாற்றவும் செய்தார். அத்தோடு, முள்ளிவாய்க்கால் முடிவின் பின்னரான காலம் என்பது தமிழ் மக்களைப் பொறுத்தளவில் சூன்யமானது. அந்த வெளியை எப்படிக் கையாள்வது என்று யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. அப்படியான சூழலில் கூட்டமைப்பு வழியாக மீண்டும் அஹிம்சை அரசியலை பலம்பெற வைக்க வேண்டும் என்பதில் சம்பந்தன் அழுத்தமாக பங்கினை வகித்தார்.
முள்ளிவாய்கால் முடிவு நிகழ்ந்து சில மாதங்களுக்குள்ளேயே ராஜபக்ஷக்கள் வெற்றி மமதையோடு நடத்திய ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் உணர்வுகளை பிரதிபலித்து, சரத் பொன்சேகாவை ஆதரிக்கும் அரசியல் துணிவுள்ள முடிவை சம்பந்தன் எடுத்தார். இந்த முடிவுக்காக கால காலத்துக்கும் தான் விமர்சிக்கப்படுவேன் என்பது அவருக்குத் தெரியும். ஏனெனில், ராஜபக்ஷக்களின் ஏவலாளராக நின்று இறுதி யுத்தத்தை வழிநடத்திய தளபதி பொன்சேகா. அப்படிப்பட்ட நிலையில், ராஜபக்ஷக்களை தோற்கடிப்பதற்கான அணுகுமுறையின் போக்கில் சம்பந்தன் அந்த முடிவை எடுத்தார். பொன்சேகாவுக்கான பிரச்சாரக் கூட்டமொன்றில் ரணில் விக்ரமசிங்க சம்பந்தனின் கையில் சிங்கக் கொடியை திணித்து, அவர் ஏந்தியமை அவரின் அரசியல் வாழ்வின் பெரும் விமர்சனமாக தொடர்கின்றது. ராஜபக்ஷக்களை தோற்கடித்தல் என்பது அரசியல் - இராஜதந்திர ரீதியில் வெற்றியளிக்கும் என்பது மாத்திரமல்ல, அது தமிழ் மக்களின் கூட்டுணர்வின் வெளிப்பாடாகும் என்பதையும் சம்பந்தன் நம்பினார். அந்த நம்பிக்கையில் இருந்து அவர் ஒருபோதும் மாறவில்லை. அதனால்தான், ராஜபக்ஷக்களை 2015ஆம் ஆண்டு தோற்கடிக்க முடிந்தது. பௌத்த சிங்கள மேலாதிக்க வரலாற்றில் முள்ளிவாய்க்கால் வெற்றி என்பது மிகப்பெரியது. ஆனால், அந்த வெற்றியைத் தேடித் தந்தவர்களை ஆறு ஆண்டுகளுக்குள்ளேயே தோற்கடிக்க முடியும் என்ற நம்பிக்கையைக் கொள்தல் என்பது யாரும் எதிர்பார்க்காதது. அது, ஒரே ஜனாதிபதித் தேர்தலில் நிகழ்ந்தது அல்ல. அது, 2010இல் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் ஓரணியில் நிற்கிறார்கள் என்பதை கூட்டமைப்பு சர்வதேசத்துக்கும் தென் இலங்கைக்கும் உணர்த்தியதன் விளைவாக நிகழ்ந்தது. அதுபோல, ராஜபக்ஷக்களுக்கு எதிராக ரணிலை முன்னிறுத்தினால், ராஜபக்ஷக்கள் இலகுவாக வெற்றிபெறுவார்கள் என்பதை தென் இலங்கைக்கும் இராஜதந்திர தரப்புக்களுக்கும் உணர்த்தியதில் சம்பந்தனின் பங்கு கணிசமானது. அதனால்தான், இறுதி வரையில் ராஜபக்ஷக்களோடு அமர்ந்து அப்பம் சாப்பிட்டுக் கொண்டிருந்த மைத்திரிபால சிறிசேன, 2015 ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரானார். அந்த வெற்றியில் தமிழ் மக்களின் வாக்குகள் செலுத்திய பங்கு அளப்பரியது. சம்பந்தனைப் பொறுத்தளவில் தமிழ் மக்களின் உணர்வுகளைப் பிரதிபலித்தல் அதனை வழிநடத்தும் அரசியல் தலைமையின் பொறுப்பு என்பதை தொடர்ந்தும் வெளிப்படுத்தி வந்தவர். அதனால்தான், சில தரப்புக்கள் தேர்தல் புறக்கணிப்பு மற்றும் பொது வேட்பாளர் வெற்றுக் கோசத்தை எழுப்பிய போதெல்லாம் அதற்கு எதிராக நின்றிருக்கிறார். எந்தவித ஆக்கபூர்வமான ஏற்பாடுகளுக்கும் உதவாத எந்த அரசியல் நகர்வும் அபத்தமானது என்பதை அவர் நம்பினார். அவர் மறைவதற்கு சில நாட்களுக்கு முன்னர், ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலும், தற்போது தமிழ்த் தேசிய அரசியலில் அரசியல் பத்தியாளர்களினால் முன்னெடுக்கப்படும் தமிழ்ப் பொது வேட்பாளர்கள் என்ற விடயத்தை நாசகாரமான செயல் என்று விமர்சித்திருக்கிறார்.
தமிழ்த் தேசிய அரசியலில் தலைமையாக சுமார் இரண்டு தசாப்த காலம் செயற்பட்ட சம்பந்தன், தன்னை இலங்கையின் மகனாக கருதுவதில் இருந்து பிற்நிற்கவில்லை. "...நான் இலங்கையன், ஆனால் பெருமைக்குரிய தமிழன். அதற்குரிய அடையாளம், அதிகாரத்தினை பெறுவதற்கு தகுதிக்குரியவன்..." என்பதுதான், அவரின் அரசியல் நிலைப்பாடாக இருந்தது. அத்தோடு, இலங்கையில் இன முரண்பாடுகளுக்கான தீர்வு என்பது, நாட்டின் அனைத்துத் தரப்புக்களும் இணக்கத்தோடு காணப்பட வேண்டியது என்பதையும் செல்நெறியாக கொண்டவர். அதனாலேயே, அவர் அதிகம் விமர்சிக்கப்பட்டார். நல்லாட்சிக் காலத்தில், எப்படியாவது அரசியல் தீர்வொன்றை தமிழ் மக்களுக்கு பெற்றுக் கொடுத்துவிட வேண்டும் என்பதில் அவர் தன்னுடைய அதிகார - அற எல்லையைத் தாண்டி விட்டுக்கொடுப்புக்களைச் செய்து செயற்பட்டிருக்கிறார். புதிய அரசியலமைப்பு ஒன்றை வரைவதற்காக அவர், பௌத்தத்துக்கு முதலிடம், ஏக்கிய ராச்சிய - ஒருங்கிணைந்த நாடு குழப்ப விடயங்களுக்கு எல்லாமும் உடன்பட்டு தன்னுடைய அரசியல் வரலாற்றில் மறுதலிக்க முடியாத விமர்சனங்களை எதிர்கொண்டார்.
ஓர் இனத்தை வழிநடத்தும் தலைவனுக்குரிய தகுதி என்பது களத்தில் எதிரிகளோடு பொருதுவது மாத்திரமல்ல, சமய சந்தர்ப்பங்களைப் பார்த்து இலக்குகளை அடைவதற்குரிய நகர்வுகளை மேற்கொள்வதுமாகும். அதில், பின்னடைவுகள் ஏற்படலாம். காலத்துக்கும் விமர்சிக்கப்படலாம். ஆனால், இலக்கை அடைவதற்கான துணிவுள்ள முடிவுகளை எடுத்தாக வேண்டும். சம்பந்தன் அந்த நிலைப்பாட்டைப் பின்பற்றிய ஒருவர். தென் இலங்கையுடனான தன்னுடைய அணுகுமுறை சார்ந்து தான் காலத்துக்கும் விமர்சிக்கப்படலாம், சிலர் தன்னை துரோகி என்றுகூட விளிக்கலாம் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். அவற்றுக்கு பயந்து முடிவுகளை எடுக்காது ஒதுங்குதல் என்பது தலைவனுக்குரிய பண்பல்ல என்பதை அவர் நம்பினார். அதனால்தான், அவர் கூட்டமைப்பின் அனைத்து முடிவுகளுக்குமான பொறுப்பினை ஏற்றார். அதுபோல, தன்னுடைய காலத்துக்குள் தமிழ் மக்களுக்கான தீர்வைக் காண்பதில் அவர் அளவற்ற அவா கொண்டிருந்தார். அதில், தன்னால் தீர்வைக் பெற்றுக் கொடுக்க முடிந்தது என்ற பெயரைப் பெற வேண்டும் என்ற பேரவாவாகும் அடங்கியிருந்தது. ஆனால், அதற்கான சூழலை தென் இலங்கையின் பேரினவாத சக்திகள் அனுமதிக்கவில்லை. மீண்டும் ராஜபக்ஷக்களை ஆட்சியில் அமர்த்தி, அவரின் ஆசையில் மண்ணை அள்ளிப்போட்டன.
சம்பந்தனின் மறைவுக்குப் பிறகு, அவர் மீது தென் இலங்கையினால் தமிழ்த் தேசிய அரசியலுக்குள் இருந்து எழுந்து வந்த மிதவாதத் தலைவர் என்ற பெயர் சூட்டப்படுகின்றது. அஞ்சலிக் குறிப்புக்கள் எழுதப்படுகின்றன. ஆனால், அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக நேரடி அரசியலில் இருந்து மறைந்திருக்கின்ற தலைவரான சம்பந்தனின் இன முரண்பாடுகளைக களைவதற்கான அர்ப்பணிப்பை, தென் இலங்கையின் தலைவர்கள் யாரும் அவர் இருக்கும் காலத்தில் அங்கீகரித்ததில்லை. அதற்காக செயற்பட்டதுமில்லை. எதிர்க்கட்சித் தலைவராக சம்பந்தன் இருந்த காலத்தில், அவர் கலந்து கொண்ட சுதந்திர தின நிகழ்வின் இறுதியில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது, அவரின் கண்ணில் இருந்து வழிந்த கண்ணீர், பேரினவாத ஆக்கிரமிப்பு அரசியல் தமிழ் மக்கள் மீது எவ்வாறான அடக்குமுறையைச் செய்திருக்கின்றது என்பதை உணர்த்தப் போதுமானது. இரு மொழிகளைக் கொண்டிருக்கின்ற நாட்டில், ஒற்றை மொழி ஆதிக்கத்தை விதைத்து, தமிழ் பேசும் மக்களை அலைக்கழித்த அரசியலில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படுவது என்பது சம்பந்தனின் வாழ்நாளில் முக்கிய நிகழ்வாக இருந்திருக்கலாம்.
இந்தப் பத்தி வெளியாகும் இன்றைய நாளில், 'ஐயா' என்று அனைவரினாலும் அழைக்கப்பட்ட தமிழர் விடுதலை மீது தீராப்பற்றுக் கொண்டிருந்த மூத்த மகன் ஒருவர், தமிழர் தலைநகரில் தீயுடன் சங்கமமாகப் போகிறார். அந்தத் தீ அவரின் உயிரற்ற உடலை தின்று தீர்க்கப்படும். ஆனால் அவரும் ஆயிரமாயிரம் ஆன்மாக்களும் ஏந்தியிருந்த விடுதலைத் தீயை அணையாது காத்திருக்கப்படும். சென்று வாருங்கள் ஐயா!