காணாமல் ஆக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தலைவராகும் பேராசையோடு இன்றும் பலர் வலம் வருகிறார்கள். ஏற்கனவே கூட்டமைப்பை விட்டுச் சென்று புதிய தேர்தல் கூட்டணியை அமைத்தவர்களும், தனி வழி பயணத்தில் கருத்தாக இருந்தவர்களும் மீண்டும் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் பதவி என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழீழ விடுதலைப் புலிகளினால் ஒருங்கிணைக்கப்பட்டு தமிழ் மக்களின் ஒற்றுமையின் கோசமாக எழுந்த கூட்டமைப்பு, சுமார் ஒன்றரை தசாப்த காலம் நிலைபெற்றது. முள்ளிவாய்க்கால் முடிவின் பின்னரான பத்து ஆண்டுகள் கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஏக நிலை அங்கீகாரத்தோடு இருந்தது. ஆனால், குறுகிய வாக்கு அரசியல் நலன்களைக் கருதி கூட்டமைப்பினை அதன் பங்காளிக் கட்சிகளே வலிந்து காணாமல் ஆக்கின. இப்போது, மீண்டும் பதவிகளுக்காக கூட்டமைப்பு தொடர்பிலும் அதனைக் காக்கும் தார்மீகம் பற்றியும் பேசத் தலைப்படுகிறார்கள்.
மறைந்த பெருந்தலைவர் இரா.சம்பந்தன்தான் கூட்டமைப்பின் ஒரே தலைவர் என்பதுதான் வரலாறாக பதியப்படும். ஏனெனில், அவரின் இறுதிக் காலத்திலேயே கூட்டமைப்பு கலைந்து போய்விட்டது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இலாப நட்டக் கணக்கினைக் கருத்தில் கொண்டு கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் தனித்துத் தனித்து போட்டியிட வேண்டும் என்ற நிலைப்பாட்டை தமிழரசுக் கட்சி முன்வைத்தது. அதனை, அந்தக் கட்சி தன்னுடைய மத்திய குழுத் தீர்மானமாக முன்வைத்து அறிவிக்கவும் செய்தது. கூட்டமைப்பாக ஒன்றாக வீட்டுச் சின்னத்தில் தேர்தலில் போட்டியிட்டுவிட்டு பங்காளிக் கட்சிகள், பொது வெளியில் தமிழரசுக் கட்சியை விமர்சித்து அரசியல் செய்வதை, அந்தக் கட்சியின் உறுப்பினர்கள் இரசிக்கவில்லை. அதுவும் கடந்த பொதுத் தேர்தல் காலத்தில் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்களை பங்காளிக் கட்சிகளின் தலைவர்களும் வேட்பாளர்களும் பகிரங்கமாக விமர்சித்தமையும் கூட, தமிழரசுக் கட்சியின் பின்னடைவுக்கு காரணம் என்பது, அந்தக் கட்சியினரின் எண்ணம். இதனால், அடுத்த தேர்தல்களில் தனித்து தமிழரசுக் கட்சி போட்டியிட வேண்டும் என்ற எண்ணப்பாடு பலமாக எழுந்தது. அதனால்தான், அந்தக் கட்சியின் மத்திய குழுவிலும் தனித்து போட்டியிடுவது என்ற முடிவுக்கு தொண்ணூறு வீதத்துக்கும் அதிகமானவர்களின் ஆணை கிடைத்தது. இந்த ஆணையை உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் இலாபக் கணக்காக பங்காளிக் கட்சிகளிடம் தமிழரசுக் கட்சி முன்வைத்தது. இதனை ஏற்க மறுத்த பங்காளிக் கட்சிகள், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியை அமைத்தன. இன்று அந்தக் கூட்டணி, தமிழ்த் தேசியப் பேரவை என்ற புதிய நாமத்துடன் வலம் வரும், தமிழ்ப் பொது வேட்பாளர் அணியின் அங்கம்.
சம்பந்தன் கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிடும் எண்ணத்தில் இருக்கவில்லை. தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்றம் செல்லும் நோக்கோடு இருந்தார். ஆனால், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவும் இன்னும் சில மூத்தவர்களும்தான், சம்பந்தனை எப்படியாவது தேர்தலில் போட்டியிட வைத்துவிட வேண்டும் என்பதில் குறியாக இருந்தார்கள். இல்லாவிட்டால், சம்பந்தன் கூறும் வயது மூப்பு மற்றும் உடல் உபாதைகளைக் காரணம் காட்டி தங்களையும் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து ஒதுங்கச் சொல்லிக் கோரிவிடுவார்கள் என்ற பயம் அவர்களுக்கு. சம்பந்தன் இறுதித் தேர்தலிலும் நேரடியாக போட்டியிட்டார்; வெற்றியும் பெற்றார். ஆனால், அந்தத் தேர்தலில் அவர் வெற்றி பெற்றாலும் அவரினால், அதற்கு முன்னால் கூட்டமைப்பின் தலைவராக செலுத்திய ஆளுமையை செலுத்த முடியவில்லை. சம்பந்தரின் காலம் முடிகின்றது, அதற்குள் எப்படியாவது அவரின் இடத்தைப் பிடித்துவிட வேண்டும் என்று பலரும் ஆலாய் பறக்க ஆரம்பித்துவிட்டார்கள். ரெலோ, வெளிப்படையாக செல்வம் அடைக்கலநாதனை கூட்டமைப்பின் இணைத் தலைவர் என்று குறிப்பிட்டு அறிக்கைகளை வெளியிடத் தொடங்கியது. சம்பந்தன், தங்களிடம் கூட்டமைப்பின் தலைமையை கையளிக்க வேண்டும் என்று கோரியது. அந்தக் கோரிக்கையோடு, புளொட்டும் கூட நின்றது. அதனை அரசியல் அறம் என்றும் பேசியது.
கூட்டமைப்பு அமைக்கப்பட்ட போது, பழைய முரண்பாடுகளையெல்லாம் மறந்து புளொட்டையும் கூட்டமைப்புக்குள் இணைப்பதற்காக புலிகள் முன்வந்தார்கள். ஆனால், அந்த அழைப்பைப் புறந்தள்ளிவிட்டு அரசோடு இணைந்து புளொட் இயங்கியது. இறுதி மோதல்களில் அரங்கேறிய போர் குற்றங்களில் புளொட்டும் பங்கிருப்பதான குற்றச்சாட்டுக்களும் உண்டு. அந்த இயக்கம் புலிகளின் காலத்துக்குப் பின்னர்தான், கூட்டமைப்புக்குள் வந்தது. அது தேர்தல் வெற்றிகளை இலக்கு வைத்து நிகழ்ந்த இணைவு. ஏனெனில், புளொட்டும் அதன் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தனும் தொடர்ச்சியாக தேர்தல்களில் தோல்வியடைந்து வந்திருந்தனர். அதனைத் தவிர்ப்பதற்காக, மறைந்த தர்மலிங்கத்திற்கு இருக்கும் நற்பெயரை முன்னிறுத்தி சம்பந்தனிடமும் மாவையிடமும் சித்தார்த்தன் பேசி, கூட்டமைப்புக்குள் வந்தார். அதனால், அவர் தொடர்ந்து தேர்தல்களில் வெற்றிபெற முடிந்தது. ஆனால், புளொட் இணைவு தொடர்பில் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் மத்தியில் தொடர்ச்சியாக அதிருப்தி இருந்தது. அது, இறுதி மோதல் காலத்தில் ராஜபக்ஷக்களுடன் புளொட் இணக்கமாக இயங்கிமை தொடர்பிலானது. இன்றைக்கும் புளொட்டின் புதியவர்கள், தங்களின் மீது புதிய வர்ணங்களைப் பூசி பாவ மறைப்புச் செய்யலாம். ஆனால், புலிகளுக்கு எதிரான தங்களின் யுத்த வெற்றியில் புளொட்டின் பங்களிப்புத் தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷவே வெளிப்படையாக பாராட்டிய வரலாறுப் பதிவுகள் உண்டு. ராஜபக்ஷக்களில், அதிலும் கோட்டா யுத்த வெற்றியை எந்தக் காலத்திலும் ராஜபக்ஷக்களைத் தாண்டி யாரும் பங்கு போடுவதை ரசித்தவரில்லை. ஆனால், அவரே கூட புலிகள் அழிப்பின் பங்காளிகள் என்ற அங்கீகாரத்தை புளொட்டுக்கு வழங்கினார். கோட்டாவின் யுத்த வெற்றி தொடர்பிலான நூல் வெளியீட்டு விழாவில் முதல் வரிசையில், சித்தார்த்தன் அமர்ந்திருக்கும் படங்கள் இன்றைக்கும் இணையத்தில் வலம் வருகின்றன. அப்படியான வரலாற்றைக் கொண்டிருக்கிற புளொட் குறித்து எப்படி அபிமானம் கொள்ள முடியும் என்பது தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்களின் கேள்வி? கடந்த பொதுத் தேர்தலில் சித்தார்த்தன் வெற்றி பெற்றதும், தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவர் ஒருவர் இந்தப் பத்தியாளரிடம் சொன்னார். "மறைந்த தர்மலிங்கம் மக்களுக்கு தொடர்ச்சியாக செய்து வந்த நன்மைகளின் பலனை சித்தார்த்தன் அறுவடை செய்கிறார். சித்தார்த்தனை கட்சிக்குள் மாவை கொண்டு வந்ததே, தர்மலிங்கத்தாருக்கு இருக்கும் பெயரைப் பயன்படுத்தி சித்தார்த்தனுடன் சேர்ந்து தானும் வாக்குகளைப் பெறலாம் என்ற நோக்கில்தான். ஆனால், அதுவே, மாவையை தோற்கடித்துவிட்டது..." என்று. இன்றைக்கும் சித்தார்த்தனுக்குப் பின்னரான புளொட்டுக்கான எதிர்காலம் என்பது கேள்விக்குரியது. ஏனெனில், அந்தக் கட்சி அடுத்த கட்டத் தலைவர்களை வளர்க்கவே இல்லை. சித்தார்த்தனும் தன்னுடைய தந்தையாரின் நாமத்தில் தேர்தல்களில் வென்றுவிட்டு சென்றுவிடலாம் என்ற நோக்கத்தோடு தன்னுடைய அரசியல் இலக்கைக் சுருக்கிக் கொண்டுவிட்டார். அப்படியான நிலையில், எதிர்காலமே இல்லாத புளொட்டின் கருத்துக்களை தமிழரசுக் கட்சி உள்வாங்கி பிரதிபலிக்கும் என்பதெல்லாம் எதிர்பார்க்க முடியாது.
கூட்டமைப்பை மீட்டு அதன் தலைவர் பொறுப்பில் அமரும் நோக்கில் இருப்பவர்களின் மாவை முக்கியமானவர். அவர் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்து சில மாதங்களில் விலக வேண்டிய வரும். தமிழரசுக் கட்சியின் தலைவர் தேர்வில் மாவை உள்ளிட்டவர்கள் செய்த முறைகேடுகளினால்தான், அவர் இன்னமும் தலைவராக நீடிக்கிறார். தலைவர் தேர்வு, முறையாக கட்சி யாப்புக்கு அமைய நடைபெற்றிருந்தால், மாவை முன்னாள் தலைவராகியிருப்பார். ஆனால், தற்போது அவரின் குரல் கட்சிக்குள்ளும் வெளியிலும் கவனம் பெறுவதில்லை. ஏனெனில், அவர் தற்போது தீர்மானம் எடுக்கும் நிலையில் இல்லை. சம்பந்தனின் மறைவோடு, கூட்டமைப்பின் தலைவர் அடையாளத்துக்காக மாவை ஏங்குகிறார். அதன்மூலம், அடுத்த தேர்தல்களை அவர் குறிவைக்கலாம். அதனால்தான், கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழுத் தலைவர் பதவியை செல்வத்துக்கு வழங்க வேண்டும் என்று கட்சியினரிடம் எந்தவித ஆலோசனையையும் நடத்தாமல் எழுந்தமானமாக அறிவித்திருக்கிறார். ஆனால் அவரின் அறிவிப்பை சொந்தக் கட்சிக்காரர்கள் கூட ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழுத் தலைவர் பதவி தொடர்பில் மத்திய குழுவில் ஆலோசித்துவிட்டு வருகிறோம் என்று ரெலோவிடமும் புளொட்டிடமும் கூறிவிட்டார்கள். அத்தோடு, கூட்டமைப்பினை விட்ட வெளியே சென்று புதிய கூட்டணியை அமைத்துவிட்டு, கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழுத் தலைவர் பதவியைக் கோருவது என்ன நியாயம் என்று செல்வத்திடம் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.
அடிப்படையில், தற்போது கூட்டமைப்பில் பாராளுமன்றக் குழுத் தலைவர் பதவிக்கான அங்கலாய்ப்பு என்பது, அதனைக் கொண்டு தங்களை தமிழ் மக்களின் பெருந்தலைவராக நிறுவும் உத்தியாகும். அதாவது, கடந்த காலங்களில் சம்பந்தன் வகித்த பாகத்தை தாங்களும் எடுத்துக் கொள்ளலாம் என்ற நப்பாசை. ஆனால், அப்படியான சூழல் இப்போது இல்லை. அதுபோக, இப்போது இருப்பவர்களில் யாரும் சம்பந்தனும் இல்லை. கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் என்று வெளியில் சொல்லப்பட்டாலும், அது சட்ட ரீதியாக தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவர் பதவிதான். தங்களின் கட்சிக்கான அங்கீகாரத்தை, பாராளுமன்றத்துக்குள் இன்னொரு கட்சியிடம் தமிழரசுக் கட்சி விட்டுக்கொடுக்காது. அதற்கு ஒரு வாய்ப்பும் இல்லை. அதுபோக, புதிய கூட்டில் பொது வேட்பாளர் நிலைப்பாட்டில் இருக்கும் ரெலோவிடம் கையளித்துவிட்டால், அதனை கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் மன்னிக்க மாட்டார்கள். வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும் அந்தக் கட்சியின் மத்திய குழு, தமிழ்ப் பொது வேட்பாளர் நிலைப்பாட்டுக்கு எதிராகவே இருக்கின்றது. கட்சியின் தலைவரான மாவை, தலைவராக தேர்வாகி தற்போது அதை இழந்திருக்கும் சிவஞானம் சிறீதரன் ஆகியோர் தமிழ்ப் பொது வேட்பாளர் நிலைப்பாட்டுக்கு ஆதரவாக இருப்பவர்கள், அவர்களின் அந்த நிலைப்பாடே கட்சிக்குள் எடுபடாத போது, ரெலோவையும் புளொட்டையும் அங்கீகரிப்பார்கள் என்று எதிர்பார்ப்பது நகைப்புக்குரியது.
கட்சியின் அரசியல் குழு, மத்திய குழுக்களிடம் ஆலோசிக்காது,கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவராக செல்வத்தினை தெரிவு செய்வதற்கு தன்னுடைய ஆதரவு என்று மாவை அறிவித்த பின்னணி தொடர்பில் ஆராய்ந்தால், அதுவும் பதவி குறித்த கனவு சார்ந்ததாக முடியும். அவருக்கு வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் பதவி மீது தீராக்காதல் உண்டு. கடந்த முறை அதனை அவர் சி.வி.விக்னேஸ்வரனிடம் இழந்துவிட்டார். அதனால், அடுத்த முறை எப்படியாவது அந்தப் பதவியில் அமர்ந்துவிட வேண்டும் என்று அவர் நினைக்கிறார். அதற்கு ரெலோவும் புளொட்டும் ஆதரவளிக்கும் என்று அவர் நம்புகிறார். அதனால்தான், இப்படியான எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற அறிவிப்புக்களை பொது வெளியில் முன்வைக்கிறார். கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் பதவி தொடர்பில் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு இணைய வழியில் கூடிய ஆராய்ந்த கூட்டத்தில் மாவை கலந்து கொள்ளவில்லை. அது, தன்னுடைய நிலைப்பாடுகளுக்கு எதிராக கட்சி நிலைப்பாடுகளை எடுக்கும் என்ற எரிச்சலில் நிகழ்ந்தாக இருக்காலம். இல்லையென்றால், அன்று பிற்பகலில் ஊடகங்களை அழைத்து பேசும் மாவைக்கு, ஏன் அரசியல் குழுக் கூட்டத்தில், அதுவும் இணைய வழியில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை என்ற கேள்வி முக்கியமானது.
கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழுத் தலைவர் பதவி தொடர்பிலான நகர்வினை, தமிழரசுக் கட்சிக்குள் எழுந்த தலைமைத்துவப் போட்டி மற்றும் அதன் பின்னரான குழப்பங்களைக் கருத்தில் கொண்டுதான் ரெலோ முன்னெடுத்தது. எப்படியாவது, கூட்டமைப்பின் பெயரினால் தெரிவான பத்து பாரளுமன்ற உறுப்பினர்களில் பங்காளிக் கட்சியினர் நால்வர் ஒன்றாக இருக்கிறோம். தமிழரசுக் கட்சியின் இருவரை தம்பக்கம் இழுத்தால் போதும் பதவியை அடைவதற்கு என்று ரெலோ நினைத்தது. ஆனால், ரெலோவின் நிலைப்பாடுகளுக்கு இசைந்தால், கட்சியிடமும் அதன் மத்திய குழுவிடமும் முகம் கொடுக்க முடியாமல் போய்விடும் என்று தமிழரசுக் கட்சியினருக்கு நன்றகவே தெரியும். அதனால்தான், முந்திக் கொண்டு கட்சிக்குள் ஆராய்ந்து முடிவெடுப்பதாக அறிவித்துவிட்டார்கள். இதுவே, ஜனாதிபதித் தேர்வு போன்று இரகசிய வாக்கெடுப்பாக இருந்தால், செல்வத்துக்கு வாக்களிக்க சிலர் முயன்றிருக்கலாம். ஏனெனில், கூட்டமைப்பின் முடிவுகளை மீறி கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஐந்து ஆறுபேர் தனக்கு வாக்களித்தாக ரணில் விக்ரமசிங்க, கூட்டமைப்பின் உறுப்பினர்களிடத்திலேயே அறிவித்த காட்சிகள் எல்லாமும் ஏற்கனவே அரங்கேறியிருக்கின்றன. அந்த ஆதரவு நிலைப்பாட்டுக்காக ஆதாயங்களை சில பாராளுமன்ற உறுப்பினர்கள் பெற்றிருப்பதான குற்றச்சாட்டுக்களும் உண்டு.
தற்போதுள்ள நிலையில், கூட்டமைப்பின் (சட்ட ரீதியாக தமிழரசுக் கட்சியின் என்று கொள்க) பாராளுமன்றக் குழுத் தலைவர் பதவிக்கு யாரும் புதிதாக தேர்வாகும் வாய்ப்புக்கள் இல்லை. சம்பந்தனுக்குப் பதிலாக கடந்த காலங்களில் செயற்பட்ட எம்.ஏ.சுமந்திரனே எதிர்வரும் நாட்களிலும் அந்தப் பணிகளை முன்னெடுப்பார் என்று கருதலாம். ஏனெனில், தேர்தல்களுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கிற நிலையில், புதிய தலைவர் ஒருவரை தேர்வு செய்து இருக்கின்ற குழப்பத்தை மேலும் அதிகரிப்பதற்கு தமிழரசுக் கட்சி விருப்பாது. அதனை, அந்தக் கட்சியின் அரசியல் குழுவில் சிரேஷ்ட தலைவர் சி.வி.கே.சிவஞானம் வெளியிட்ட கருத்துக்கள் உணர்த்தின. அதனால், இனி கூட்டமைப்புப் பற்றி உரையாடல்கள் அர்த்தமற்றவை. அது, சம்பந்தன் என்ற தலைவரோடு மறைந்து போய்விட்டது.