free website hit counter

தமிழ்த் தேசியப் பேரவை மற்றொரு மூத்தோர் குழாமா?

பதிவுகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளரை முன்னிறுத்தும் கோதாவில் இறங்கியிருக்கின்ற அரசியல் பத்தியாளர்கள் தலைமையிலான தமிழ்த் தேசியப் பேரவையினரின் செயற்பாடுகள் சற்றுத் தேக்க நிலையை அடைந்திருப்பதாக தெரிகின்றது. யாழ்ப்பாணத்தில் 'மக்கள் மனு' என்ற பெயரில் தமிழ்ப் பொது வேட்பாளரை முன்னிறுத்தும் யோசனையோடு இறங்கிய குழுவினர், நாளும் பொழுதும் ஊடகங்களுக்கு பரபரப்பாக செய்திகளை வழங்கிக் கொண்டிருந்தார்கள்.

புதிதாக செய்திகளை வழங்க முடியாதபோது, தமிழ் சிவில் கட்டமைப்பு, தமிழ் மக்கள் பொதுச் சபை, தமிழ்த் தேசியப் பேரவை என்று வாரத்துக்கு ஒருதடவையேனும் தங்களின் பெயரைப் புதுப்பித்து ஊடகங்களுக்கு அறிவித்தார்கள். ஆனால், கடந்த சில வாரங்களாக எந்தச் சலனத்தையும் காணவில்லை. 

குறிப்பாக, இந்த மாதத்தின் முதல் வாரத்தில், பொது வேட்பாளர் விடயத்தில் இணங்கியிருக்கின்ற அரசியல் பத்தியாளர்களுக்கும் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கும் இடையில் ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அப்படியான எவையும் நடைபெறவில்லை. மாறாக, அந்தக் குழுவில் இருக்கின்ற பத்தியாளர்களும் கட்சியினரும், 'இரா.சம்பந்தன் ஒரு தோற்றுப்போன தலைவர்' என்ற விடயத்தை முன்வைத்து உரையாடுவதில் காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த உரையாடல்களின் நீட்சியைப் பார்த்த மூத்த ஊடகவியலாளரான வீ.தனபாலசிங்கம், 'தமிழ்த் தேசிய அரசியலில் வெற்றி பெற்ற தலைவர் யார்?' என்ற தொனிப்பட கேள்வி எழுப்பியிருந்தார். தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் தந்தை செல்வா மறைந்த போதும், தலைவர் பிரபாகரன் களத்தில் போராடி வீழ்ந்த போதும், சம்பந்தன் இன்று விமர்சிக்கப்படும் அளவைத் தாண்டிய விமர்சனத்தை எதிர்கொண்டிருக்கிறார்கள். அதுவும், தமிழ்ப் பரப்பில் சாம்பல் அரசியலை செயற்பாட்டு நெறியாக கைக்கொள்ள வேண்டும் என்று போதிக்கும் மூத்த பத்தியாளர்களில் சிலர், தலைவர் பிரபாகரனை தோற்றுப்போன தலைவர் என்று மாத்திரமல்ல, அவரை மரணத்தின் தூதுவன், பாசிசவாதி என்ற அடையாளங்களைக் கொண்டு விமர்சித்திருக்கிறார்கள். முள்ளிவாய்க்கால் முடிவின் பின்னரான காலத்தில் வெளியான அந்த விமர்சனங்கள், ராஜபக்ஷக்களினதும் அவர்களின் துணைக்குழுக்களினதும் அழுத்தங்கள் காரணமாக முன்வைக்கப்பட்டிருக்கலாம் என்ற உணர்நிலை இந்தப் பத்தியாளரிடம் உண்டு. இன்னமும் அந்த விமர்சனங்கள் இணையம் பூராவும் கொட்டிக் கிடக்கின்றன. நிர்ப்பந்தங்களினால், முன்வைக்கப்படும் விமர்சனங்களை அவ்வளவுக்கு கருத்தில் கொள்ளத் தேவையில்லை என்ற அளவில் அவற்றைக் கடந்துவிடலாம். ஆனால், அந்த விமர்சனங்களை, அதன் நீள அகலங்களை அறியாத சில புலம்பெயர் தரப்புக்கள், சம்பந்தனின் தோல்வி தொடர்பில் இந்தப் பத்தியாளர்களின் உரையாடல்களைத் தூக்கிச் சுமக்கும் போதுதான், தனபாலசிங்கம் எழுப்பிய கேள்வியின் நியாயம் மேலேழுகின்றது. 

களத்தில் நேரடியாக இறங்கி செயற்பாட்டு அரசியலை முன்னெடுப்பதற்கும் விமர்சனங்களைச் செய்வதற்கும் இடையில் பாரிய இடைவெளி உண்டு. அதனை உணராது கடந்த காலங்களில் மூர்க்கமான விமர்சனங்களை அரசியல் தலைமைகள், கட்சிகள் மீது முன்வைத்து வந்த பத்தியாளர்களில் ஒரு தரப்பினர்தான், இப்போது தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்தை தூக்கிச் சுமக்கிறார்கள். அரசியல் தீர்மானங்களும், அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கும் இடையில் எதிர்கொள்ள வேண்டிய நடைமுறைச் சிக்கல்கள் என்னென்ன என்பதை இப்போதுதான், அவர்கள் உணரத் தொடங்கியிருக்கிறார்கள். யாழ்ப்பாணத்திலோ, வவுனியாவிலோ கூடிப் பேசுவது மட்டுமல்ல, அங்கு பேசப்பட்ட விடயங்களை அடுத்த கட்டங்களுக்கு நகர்த்துவது என்பது தலையால் நடக்க வேண்டிய அர்ப்பணிப்பைக் கோருவதாகும். அதிலும், தற்போதுள்ள அரசியல் கட்சிகளையும் அதன் தலைமைகளையும் ஓர் அணிக்குள் இணைத்து விடயங்களை முன்னெடுப்பது என்பது அவ்வளவு இலகுவானது அல்ல. தேர்தல் - வாக்கு அரசியல் வெற்றி தோல்விகள் குறித்தெல்லாம், கட்சிகளும் அதன் தலைமைகளும் ஆலோசித்துத்தான் முடிவெடுக்கும். அதிலும், அந்தக் கட்சிகளின் மீதான அக - புறச் சக்திகளின் அழுத்தங்கள், நாளுக்கு நாள் தீர்மானங்களை மாற்றும் வல்லமையுள்ளவை. தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்தை முதன்முதலில் அரங்குக்கு கொண்டு வந்த ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியிலுள்ள கட்சியினரே, கடந்த சில மாதங்களில் மாறி மாறி முடிவெடுத்திருக்கிறார்கள். அவர்களிடம் நிலையான தீர்மானம் என்ற ஒன்று இல்லை. கடந்த சில வாரங்களுக்கு முன்னர், இந்தியத் தூதரைச் சந்தித்துவிட்டு வந்த, கட்சியினரிடம் தடுமாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. அதனால்தான், தமிழ்த் தேசியப் பேரவையினரிடம் ஒப்பந்தம் கைச்சாத்திடுவது தள்ளிப்போயிருப்பதாக கூறப்படுகின்றது. அதுபோக, தற்போது ஆடி மாசம் பிறந்துள்ளதால், இப்போது புதிய விடயங்களை ஆரம்பிப்பது நல்லதல்ல என்பது, இன்னொரு அரசியல் தலைவரின் நிலைப்பாடு. அதுவும்கூட  ஒப்பந்தம் கைச்சாத்திடுவதை தாமதமாக்கின்றதா என்று தெரியவில்லை.

ஜனாதிபதித் தேர்தலுக்கான காலம் நெருங்கிவிட்டது. ரணில் விக்ரமசிங்க குழப்பங்களை ஏற்படுத்தி தேர்தலை ஒத்திவைக்கும் நாடகத்தை அரங்கேற்றாமல் விட்டால், தேர்தலுக்கு இருப்பது குறைந்த நாட்களே. ஏனெனில், ஜனாதிபதித் தேர்தலை அறிவிப்பதற்கான காலம் ஏற்கனவே வந்துவிட்டது. தேர்தல் ஆணைக்குழு நினைத்தால், அதனைச் செய்யலாம். சோதிடம் பார்த்து அதன் பிரகாரம், நல்ல நாள் - நேரத்தின் படிதான், அறிவிப்புச் செய்யப்பட வேண்டும் என்ற அழுத்தத்தினால் தேர்தலுக்கான அறிவிப்பு தள்ளிப் போய்கொண்டிருக்கலாம். எதுவாக இருந்தாலும், தேர்தல் மிக நெருக்கத்தில் வரப்போகின்றது. அதற்குள்  தமிழ்ப் பொது வேட்பாளரை முன்னிறுத்தும் தரப்பினர், தங்களுக்கு இடையில் உடன்பாட்டு ஒப்பந்தத்தைச் செய்து, வேட்பாளரை தேடிக் கண்டுபிடித்து அறிவித்தாக வேண்டும். ஆனால், அப்படியான நடவடிக்கைகள் இடம்பெறுவதாக தெரியவில்லை. மாறாக, அவர்களும் அடுத்த கட்டம் தொடர்பில் நிச்சயமற்ற தன்மையினால் அல்லாடுகிறார்கள். 

தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்தை முன்னெடுக்கும் பத்தியாளர்கள் உள்ளிட்ட தரப்பினர் தொடர்பில் சமூக செயற்பாட்டாளர் ஒருவர், கீழ்க் கண்டவாறு கருத்து வெளியிட்டார். "...பொது வேட்பாளர் விடயத்தை இப்போது முன்னெடுக்கும் தரப்பினர் யார் என்று பார்த்தால், அவர்களும் மற்றோர் தமிழ் மூத்தோர் ஆடவர் குழாம் (Tamil uncle club) தான். அங்கும் பெண்களுக்கும் அவர்களின் கருத்துக்களுக்கும் இடமில்லை. இப்போது அவர்கள், பொது வேட்பாளர் காவடியைத் தூக்கிவிட்டார்கள், அதனை எப்படி இறக்கி வைப்பது என்ற மனச் சங்கடத்தில் இருக்கிறார்கள். அவர்கள் தற்போது போட்டி போடுவது மற்றவர்களோடு அல்ல. மாறாக, தங்களின் தன்முனைப்பு மனநிலையுடன்..." என்று. 

தமிழ்த் தேசிய அரசியலை ஓய்வூதியர்களும், மூத்தோரும் ஆக்கிரமித்துக் கொள்வது வழமையானது. எழுபதுகளின் இறுதியில், தமிழ் அரசியலை இளைஞர்கள் கையில் எடுக்க ஆரம்பித்த போது, அப்போதிருந்த மூத்தோர், 'இந்தப் பெடியள் எல்லாவற்றையும் குழப்பப் போகிறார்கள்' என்று பேசினார்கள். ஆனால், வெற்றி தோல்விகளுக்கு அப்பால், அந்த இளைஞர்களிடம்தான், முப்பது ஆண்டுகால தமிழ்த் தேசியப் போராட்டம் இருந்தது. அப்போது இளைஞர்களாக இருந்தவர்களில் இன்று மூத்தோர் ஆகிவிட்ட சிலர், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் தங்களின் இளம் வயதில், இருந்த துணிவோடும் அர்ப்பணிப்போடும் இல்ல. அவர்களில் அநேகர் வாக்கு அரசியலுக்கான மனிதர்களாக தங்களைச் சுருக்கிக் கொண்டு, மூத்தோர் அரசியலின் பங்காளிகள் ஆகிவிட்டார்கள். அவர்களைப் போலவே, தமிழ்த் தேசியப் பேரவையில் இருக்கின்ற பத்தியாளர்களும் இயங்க நினைக்கிறார்கள். தங்களின் எண்ணங்களைத் தாண்டி கருத்துக்கள், உரையாடல்களில் வலுப்பெறுவதை அவர்கள் விரும்பவில்லை. பெண்களின் கருத்துக்களை அவர்கள் கண்டு கொள்வதில்லை. பெண்களை, தாங்கள் முன்வைக்கும் தீர்மானங்களை அங்கீகரித்து கைச்சாத்திடும் தரப்பினராகவே கைக்கொள்ள நினைக்கிறார்கள். அதனால்தான், தமிழ்த் தேசியக் கட்சிகள் போல, தமிழ் சிவில் அமைப்புக்கள் தொடங்கி இன்று புதிதாக நாமம் பெற்றுள்ள தமிழ்த் தேசியப் பேரவைக்குள் இருந்தும் பெண்களின் குரல்களைக் கேட்க முடியவில்லை.

பொது வேட்பாளராக பெண்கள் யாரையாவது முன்னிறுத்தலாம் என்ற உரையாடல் தமிழ்த் தேசியப் பேரவைக்குள் நிகழ்ந்திருக்கின்றத. அந்தப் பெண்ணின் அடையாளம் என்பது, முன்னாள் போராளியின் மனைவி, மகள், அரசியல்வாதிகளின் வாரிசு என்ற அளவைத் தாண்டி அடுத்த கட்டத்துக்கு நகரவில்லை. யாரோ ஒரு ஆணின் அடையாளத்தினால் முன்னிறுத்தப்படும் வாரிசுப் பெண்களைக் குறித்துத்தான் சிந்திக்கிறார்கள். சுயாதீன சிந்தனையுள்ள பெண்களை முன்னிறுத்துவது தொடர்பிலான உரையாடல்கள் பத்தியாளர்கள் மத்தியிலும் இல்லை. தெற்காசிய அரசியலில் பெண்களின் அரசியல் வகிபாகம் என்பது, வாக்களிப்பவர்கள் என்ற அளவைத் தாண்டி பெரிதாக உயரவில்லை.நேரடி அரசியலில் இருக்கும் பெண்களில் தொண்ணூறு வீதத்தினர் வாரிசு அரசியலினால் அடையாளம் பெற்றவர்கள். பெண்களுக்கான இடஒதுக்கீடு என்ற நிர்ப்பந்தத்தினால், பெண் வாரிசுகளை கட்சிகள் உள்வாங்குவது வழக்கம். அதனைத்தான், தமிழ்த் தேசிய அரசியலுக்குள் இருக்கின்ற கட்சிகளும் செய்து வந்திருக்கின்றன. இலங்கை அரசியலில் சிறீமாவோ பண்டாரநாயக்க தொடங்கி சந்திரிக்கா குமாரதுங்க, அனந்தி சசிதரன், விஜயகலா மகேஸ்வரன் வரையில்  வாரிசு அரசியலின் அடையாளங்கள்தான். தொடர்ச்சியாக கருத்துருவாக்கத்தைச் செய்து வருகின்ற தமிழ்த் தேசியப் பேரவையின் பத்தியாளர்களும், பெண் அரசியல் வாரிசுகளை தங்களின் வேட்பாளராக முன்னிறுத்தும் உரையாடல்களை முன்னெடுப்பதும் ஆணாதிக்க மனநிலையினால்தான். ஏனெனில், அவர்களுக்கு தாங்கள் சொல்வதை கேட்டு செயற்படும் ஒருவர்தான் தேவைப்படுகிறார். அதற்கு, அரசியல் பெண் வாரிசுகள் என்றால், இலகுவானது என்பது அவர்களின் நிலைப்பாடு. தமிழ்த் தேசியப் பேரவையின் தீர்மானிக்கும் குழுவாக அறிவிக்கப்பட்ட குழுவில், பெண்கள் என்று யாரையும் காண முடியில்லை. அதன் பிரகாரமும், அவர்கள் ஒரு தமிழ் மூத்தோர் ஆடவர் குழாம் (Tamil uncle club) என்பதை அவர்கள் நிரூபிக்கிறார்கள்.

தன்முனைப்பு மனநிலையை தூர வைத்துவிட்டு செயற்பாட்டு அரசியலுக்கு வராத எந்த நபரினாலும், அரசியலில் நல்ல மாற்றங்கள் சாத்தியமில்லை. அது, தமிழ்த் தேசிய அரசியலில் இருக்கும் அனைவருக்கும் பொருந்தும். தனிப்பட்ட கோபதாபங்கள் - இலாப நட்டக் கணக்குகளுக்கு அப்பாலான மனநிலையுள்ள  அனைவரையும் சமமாக நோக்கும் அரசியல் தமிழ்த் தேசிய அரங்கில் பிறக்க வேண்டும். இல்லையென்றால், தொடர்ந்தும் மேலிருந்து தீர்மானங்களை எடுத்துவிட்டு, மக்களிடம் இறக்கி வைக்கும் 'திணிக்கும் அரசியல்' கோலொச்சும். முள்ளிவாய்க்காலுக்குப் பின்னரான அரசியலில் சம்பந்தனும் எம்.ஏ.சுமந்திரனும் தீர்மானங்களை எடுத்துவிட்டு மக்களின் தலையில் இறக்கி வைக்கும் வேலைகளை மாத்திரமே செய்து வந்திருப்பதாக தமிழ்த் தேசியப் பேரவைக்குள் இருக்கும் அரசியல் பத்தியாளர்களும், கட்சியினரும் தொடர் விமர்சனங்களை முன்வைத்து வந்திருக்கிறார்கள். அப்படியான நிலையில், இவர்கள் யாரோடு உரையாடி என்ன வகையிலான கருத்துக்களை உள்வாங்கி பொது வேட்பாளர் கோசத்தோடு வந்தார்கள் என்ற கேள்வி எழுகின்றது. யாழ்ப்பாணத்திலும் வவுனியாவிலும் தாங்கள் கூடிப் பேசிவிட்டு தீர்மானங்களை அறிவித்துவிட்டு, அதனை மக்களின் முடிவு என்று அறிவிக்கும் அதிகாரத்தை இவர்களிடம் யார் வழங்கியது?

தமிழ்த் தேசிய அரசியலில் வட்டுக்கோட்டைத் தீர்மானமும், சுதுமலைப் பிரகடனமும் முக்கியமாவை. அவற்றின் வெற்றி தோல்விகள் தொடர்பிலான உரையாடல்கள் இருந்தாலும், அவை இரண்டுக்கும் குறித்தளவு அரசியல் முக்கியத்துவம் இன்றும் உண்டு. அந்தப் பெயர்கள் தமிழர் அரசியலில் ஆளுமை செலுத்தியவை. தமிழ்த் தேசியப் பேரவையாக நாமம் சூட்டுவதற்கு முன்னர், அரசியல் பத்தியாளர்கள் உள்ளடங்கிய தரப்பினர், 'வவுனியா தீர்மானம்' என்ற ஒன்றை அறிவித்தார்கள். அதனை, ஊடகங்கள் அவ்வளவுக்கு தூக்கிச் சுமக்கவில்லை என்ற போதிலும், இன்றைய பேரவையினர் அப்போது சூட்டிய நாமம், வவுனியா தீர்மானம் என்பதாகும். ஏற்கனவே, 'இமயமலைப் பிரகடனம்' என்ற பெயரில் அக - புற சக்திகள்,  ஒரு கோமாளிக் கூத்தை சில மாதங்களுக்கு முன்னர் ஆடின. வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்குப் பின்னரான தமிழ்த் தேசியப் போராட்டத்தை அர்ப்பணிப்போடு தூக்கிச் சுமந்தவர்களினால்தான், சுதுமலைப் பிரகடனம் முன்வைக்கப்பட்டது. அந்தப் பிரகடனத்துக்குப் பிறகான கால் நூற்றாண்டு காலம், அந்தப் பிரகடனத்தை நிலைநாட்டுவதற்காக அதனை முன்வைத்தவர்கள் களத்தில் போராடி விழும் வரையில் உழைத்தார்கள். ஆனால், இப்போது வவுனியா தீர்மானம் என்ற ஒன்றை அறிவித்தவர்கள், அடுத்த சில நாட்களிலேயே, அந்தத் தீர்மானத்திலுள்ள சரத்துக்களை மறந்தும் மாற்றியும் வந்திருக்கிறார்கள். அவை, அவசரக் குடுக்கைகளின் செயற்பாடுகளை ஞாபகப்படுத்தின.

மக்களுக்கான அரசியலை முன்னெடுப்பவர்கள், மக்களின் மனங்களைப் புரிந்து கொண்டு, அவர்களைப் பிரதிபலித்து மேலேழ வேண்டும். மாறாக, மக்களின் மண்டைகளில் தீர்மானங்களைத் திணிக்கும் தரப்புக்களாக இருக்கக் கூடாது. அதனை, செய்யும் மற்றொரு தரப்பினராக அரசியல் பத்தியாளர்களும், அவர்கள் அடங்கிய தமிழ்த் தேசியப் பேரவையினரும் இருக்கக் கூடாது. இல்லையென்றால், அவர்களும் இன்னோர் தமிழ் முத்தோர் ஆடவர் குழாமாக வரலாற்றில் பதியப்படுவார்கள்.

*Tamil uncle club என்பதை மூத்த தமிழ் ஆண்கள் குழாம் என்று அர்த்தம் கொள்க.

 

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula