நாம் வாழும் பூமியும், அது அமைந்திருக்கும் சூரிய குடும்பமும் பிரபஞ்சத்தின் மையத்தில் அமைந்திருக்கவில்லை என்பது நவீன விஞ்ஞான யுகம் ஏற்பட்ட காலத்துக்கு முன்பே அறியப் பட்ட ஒன்றாகும்.
அதாவது எமது பூமியும், சூரியன் மற்றும் அதை சுற்றி வரும் ஏனைய 8 கிரகங்களும் பால்வெளி அண்டத்தின் ஒரு கரையில் மையத்தில் இருந்து 25 000 ஒளி வருடங்கள் தொலைவில் உள்ளன.
அதாவது பால்வெளி அண்டத்தின் மையத்தில் இருந்து அதன் விளிம்புக்கான தூரத்தின் சரிபாதி தூரத்தில் சூரிய குடும்பம் அமைந்துள்ளது. பெரும்பாலான அண்டங்களைப் போல் எமது பால்வெளி அண்டத்தின் மையத்திலும் ஒரு அதி நிறை கருந்துளை (Super Massive Black Hole) அமைந்துள்ளது.
Sagittarius A* என்று அழைக்கப் படும் இந்த கருந்துளையின் நிறை சூரியனின் நிறையைப் போன்று 4.3 மில்லியன் மடங்காகும். ஒரு கருந்துளையின் அபார ஈர்ப்பு விசையில் இருந்து ஒளி கூடத் தப்பிக்க முடியாது எனும் நிலையில் ஒரு கால கட்டத்தில் எமது பூமியும், சூரிய குடும்பமும் இந்த கருந்துளைக்குள் ஈர்க்கப் பட்டு அழிவைச் சந்திக்குமா என்ற கேள்வி எழாமல் இருக்க முடியாது. இது குறித்த சாத்தியக்கூறுகள் மற்றும் புள்ளி விபரங்கள் குறித்து What If என்ற விஞ்ஞான சேனல் ஒன்றில் வெளியான குறுகிய ஆவணப் படம் யூ டியூப்பிலும் வெளியானது.
இதில் தெரிவிக்கப் பட்ட விபரங்களின் சுருக்கத்தைப் பார்ப்போம், முதலில் கருந்துளை என்பது நிச்சயம் ஒரு ஓட்டை கிடையாது. மிகப் பெருமளவிலான சடமானது மிகக் குறுகிய வெளி ஒன்றுக்குள் அடங்கி மிகவும் அபாரமான அடர்த்தியையும், ஈர்ப்பையும் வெளிப்படுத்துவதே கருந்துளையாகும். இந்நிலையில் ஒரு தனித்த கருந்துளையானது சூரிய குடும்பத்தை சிதைப்பதற்கான சாத்தியம் அந்த கருந்துளை எவ்வளவு பெரிது என்பதைப் பொறுத்ததாகும்.
ஆனால் நாம் அதிநிறை கருந்துளை என்ற ஒன்றைப் பற்றிப் பேசினால் எமது பூமியும் நாமும் தப்பிப்பதற்கான சாத்தியக் கூறு மிகவும் குறைவு ஆகும். ஆனால் இதற்காக நாம் வருந்தத் தேவையில்லை. ஏனெனில் இது நமது காலத்திலோ அல்லது இன்னும் நூறு தலைமுறைகளுக்கோ நிகழப் போவதில்லை. ஏனெனில் இதற்கு இன்னும் பில்லியன் கணக்கான வருடங்கள் எடுக்கக் கூடும் என்று கணிக்கப் பட்டுள்ளது. மேலும் இன்னும் 4.5 பில்லியன் வருடங்களில் எமது பால்வெளி அண்டம் அருகே உள்ள அண்ட்ரோமிடா அண்டத்துடன் மோதி புதிதாக ஒரு அண்டம் உருவாகும் என்றும் கணிக்கப் பட்டுள்ளது.
பொதுவாக அண்டத்தின் மையத்தில் உள்ள அதிநிறை கருந்துளையின் அபார ஈர்ப்புக்கு உள்ளாகும் வால் வெள்ளிகளும், விண்கற்களும் இதன் தாக்கத்தால் பூமியின் ஒழுக்கை நோக்கித் திசை திருப்பப் பட்டு பூமிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது என்றும் இந்த ஆவணத்தில் விளக்கப் பட்டுள்ளது.
பூமிக்கு மிக அருகே இருக்கும் கருந்துளை V616Mon என அழைக்கப் படுகின்றது. பூமியில் இருந்து 3000 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் இந்த கருந்துளை சூரியனை விட 9 தொடக்கம் 13 வரை அதிக நிறை கொண்டதாகும்.