சிவப்பரம்பொருளே அறுமுகசிவமாகி முருகனாக அவதரித்தார் என்பதே உண்மை. இந்த உண்மையை ஸ்ரீ கச்சியப்ப சிவாச்சார்ய ஸ்வாமிகள் கந்தபுராணத்தில் பல இடங்களில் பாடுகின்றார் அதில் ஒன்று சிங்கமுகன் வாயிலாக கந்தபுராணத்தில் உணர்த்தி பாடுவது .
சூரபத்மன் குமரனோடு போர்புரிய ஆயத்தமாகி மந்திராலோசனை செய்கிறான். அப்பொழுது சூரனின் தம்பி சிங்கமுகன், திருச்செந்தூரிலே வந்து தங்கியுள்ள குமரனை ஒரு சிறுவன் என்று நினையாதே. வந்துள்ள குமரன் சிவபரம்பொருளின் அம்சம் என்பதை உணர்வாயாக என எடுத்துரைக்கின்றான் .
அப்பாடல்கள் வருமாறு,
1) வாலி தாமதிச் சடிலமும் பவளமால் வரையே,
போலும் மேனியும் முக்கணும் நாற்பெரும் புயமும்,
நீலமாமணிக் கண்டமும் கொண்டு நின்றனனால்,
மூலகாரணம் இல்லதோர் பராபரமுதல்வன்.
வெண்மையான பிறைச்சந்திரனை சூடிய சடைமுடியும், பவளம் போல் சிவந்த திருமேனியும், முக்கண்ணும், நான்கு திருதோள்களும் நீலமணி போன்ற கண்டமும் கொண்டு தமக்கென மூலக்காரணம் இல்லாதவராக பராபரமுதல்வன் சிவபெருமான் விளங்குகின்றார் .
2)"தன்னை நேரிலாப் பரம்பொருள் தனிஉருக் கொண்ட,து,
என்ன காரணம் என்றியேல் ஐந்தொழில் இயற்றி,
முன்னை ஆருயிர்ப் பாசங்கள் முழுவதும் அகற்றிப்,
பின்னை வீடுபேறு அருளுவான் நினைந்த பேரருளே.
தனக்கு ஒப்பில்லாத முதற்பரம்பொருளாகிய சிவபொருமான், உருவம் கொண்டு நின்றதன் காரணம் என்னவென்றால், ஐந்தொழில் இயற்றவும், அனாதியே உள்ள உயிர்களின் பாசங்களை நீக்கிப் வீடுபேற்றை அளிக்க எண்ணியே ஆகும்..
அத்தகைய. சிவப்பரம்பொருளிடம் தவம் செய்து நீ வரம் பெற்று , அறத்தை கடைபிடியாது ஆணவத்தால் தேவர்களை துன்புறுத்தி வருகிறாய்.. எனவே ஈசன் உன்னை அழிக்க திருவுள்ளம் கொண்டுள்ளார். ஆனால், வரத்தை அளித்த நாமே சூரனை அழிப்பது முறையாகாது. என்பதாலும், சிவ வரத்தால் பலம் பெற்றுள்ள சூரனை மற்றவர் அழிப்பதும் முடியாது என்பதாலும், தம்வடிவமாக, #தம்சொரூபமாக ஒரு மகனை கொண்டு உன்னை அழிப்பது என பெருமான் எண்ணியருளியுள்ளார்.
இதனை,
3)வரமளித்த யாம் அழிப்பது முறையன்று வரத்தால்,
பெருமை பெற்றுள்ள சூரனை அடுவது பிறர்க்கும்,
அரிதெனப் பரன் உன்னியே தன்னுருவாகும்,
ஒரு மகற்கொடு முடித்துமென்று உன்னினான் உளத்தில், "
இவ்வாறு தம் திருவுள்ளத்தில் எண்ணிய சிவபரம்பொருள், செந்நிறத் திருமேனியும், அழகிய திரு முகங்கள் ஆறும், பன்னிரண்டு திருத் தோள்களும் கொண்ட ஒரு மைந்தனை , முன்னவர்க்கு முன்னவனான பராபரமுதல்வன் சிவபெருமான் தம் நெற்றிக்கண்ணிலிருந்து தந்தருளினார்
4)செந்நிறத் திருமேனியும் திருமுகமாறும்,
அன்னதற் கிரு தொகையுடைத் தோள்களுமாக,
முன்னவர்க்கு முன்னாகிய பராபர முதல்வன்,
தன்நுதற் கண்ணால் ஒரு தனிக் குமரனைத் தந்தான்.
எனவே, சிவபரம்பொருளின் அம்சமாக வந்துள்ள குமரனை சிறுவன் என்று நினைத்து இகழாதே .பகைக்காதே.
திருச்செந்தூரில் வந்து வீற்றிருக்கும், கந்தக்கடவுள் அருவமாகவும் உருவமாகவும் விளங்குவார், அருவமும் உருவமும் இல்லாத ஓர் தன்மையாகவும் விளங்குவார். ஊழின் காரியமாகவும் / அதன் காரணமாகவும் விளங்குவார். எனவே அக்குமரனின் திருவிளையாடலே எவரே சொல்ல வல்லார் - என்றான் சிங்கமுகாசூரன்.
இதனை,
5)அருவும் ஆகுவன் உருவமும் ஆகுவன் அருவும்,
உருவும் இல்லதோர் தன்மையும் ஆகுவன் ஊழின்,
கருமம் ஆகுவன் நிமித்தமும் ஆகுவன் கண்டாய்,
பரமன் ஆடலை யாவரோ பகர்ந்திடற் பாலார்,
இவ்வாறு சூரபத்மனுக்கு மந்திராலோசனையில் அறிவுறுத்தும்பொழுது, முருகப்பெருமானை சிவபரம்பொருள் அம்சமாகவே அறுமுகசிவமாகவே கூறப்பட்டுள்ளதை நினைந்து போற்றத்தக்கதாகும்க
- கந்தபுராணச் சிந்தையில் தில்லை கார்த்திகேய சிவம்
