தமிழகத் தேர்தல்களம் இம்முறை வலுவான மும்முனைப் போட்டிக்களமாக மாறும் சாத்தியங்கள் உருவாகி வருகின்றனவா?. தமிழக தேர்தல் களத்தில், இந்தியப் பிரதமரின் தமிழக வருகையுடன், அதிமுக, பாஜகவும், அவற்றுடன் இணைந்த ஏனைய கட்சிகளுடனும் கூடிய பலமான தேர்தல் கூட்டணியும் உருவாகியுள்ளது.
இந்நிலையில் திமுக, கிரஸ் கூட்டணி இன்னமும் முற்றுப்பெறாத நிலையிலேயே உள்ளது. 2026ல் பரபரப்பாகப் பேசப்படும் விஜயின் தவெக, ஏற்கனவே தமக்கென ஒரு வாக்கு வங்கியை உருவாக்கியிருக்கும் சீமானின் நாம் தமிழர் கட்சி இன்னமும், தங்கள் தேர்தல் முன்னெடுப்புக்களை அறிவிக்கவில்லை.
தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைந்தால் ? அல்லது தேமுதிக இணைந்தாலும், ஏனைய கூட்டணிகளுக்கு ஒரு வலுவான போட்டியினைக் கொடுக்கும். இந்தக் கட்சிகளின் இணைவு சாத்தியமானதும், பலராலும், எதிர்பார்க்கப்படுவதும்தான். இவ்வாறான கூட்டணிகள் அமைந்தாலும், அது வலுவான போட்டியாக அமையலாம், ஆனால் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ப் போதுமானதாக இருக்குமா என்பது கேள்விக்குரியது.
கூட்டணி ஏதுமின்றி தனித்துப் போட்டியிடுவதை கொள்கையாக வைத்திருப்பவர் நாம் தமிழர் தலைவர் சீமான். ஆட்சியில் பங்கு என கூட்டணிக்கு அழைப்பு விடுப்பவர் தவெக தலைவர் விஜய். ஆயினும் இதுவரை தமிழக அரசியல் அதிகாரம் பெறாத இருவரும், ஏனைய கட்சிகளின் ஊழலைப் பேசுபவர்கள். நேரடியாகவே மத்திய அரசையும், தமிழக அரசியலையும் விமர்சிப்பவர்கள். இருவரும் சினிமா வழி நன்கு அறியப்பட்ட முகங்கள். பெருமளவு இளையவர்களிடம் செல்வாக்குக் கொண்டிருப்பவர்கள். புதிய அரசியல் வாய்ப்புக்காக காத்திருப்பவர்கள். சில கொள்கைகளில் வேறுபட்டாலும், பெரிதும் முரண்படாதவர்கள். தமிழகத்தில் அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம் தேவை என்பதை வெளிப்படையாகப் பேசுபவர்கள். இவை அனைத்துக்கும் மேலாக பாஜகவின் 'B' டீம் என, திமுகவால் விமர்சிக்கப்படுவர்கள். இந்த இருக்கட்சிகளும் இணைந்தால், 2026 தமிழகத் தேர்தல் களம் முற்றிலும் மாறிப்போகும் வாய்ப்பு உண்டு. இரு கட்சிகளும், இணையாமல் ஆதரவுக் கட்சிகளாகத் தனித்தனியாகப் போட்டியிட்டாலும், மற்றைய கூட்டணிகளின் வாக்குகளைச் சிதறடிக்க முடியும். ஆனால் அதிகாரத்துக்கு வருவதற்கான வாய்ப்புக்கள் குறைவாகும்.
இதுவரை கூட்டணிகள் குறித்தோ தேர்தல் போட்டிகள் குறித்தோ வெளிப்படையான கருத்துக்களைப் பேசாத இக்கட்சிகளின் தலைமைகள் எடுக்கின்ற இறுதி முடிவில், இம்முறை தமிழகத் தேர்தல்களம் மும்னைப் போட்டிக்களமாக நிச்சயம் அமையும். அது மட்டுமன்றி அட்சியதிகாரத்தில் அமர்வது மட்டுமன்றி, எதிர்க்கட்சி நிலையிலிருந்து கூட திமுக பின்னகர்த்தப்படுவதற்கான சாத்தியங்களும் காணப்படுகின்றன.
இக்கட்சித் தலைமைகளின் மௌனம் கலையும் போது, தெளிவாகத் தெரியும் தமிழகத் தேர்தலின் போட்டிக்களம் மும்முனைப் போட்டிக்களமா ?
