free website hit counter

ஜனாதிபதித் தேர்தல்: மும்முனைப் போட்டிக்களமா? (புருஜோத்தமன் தங்கமயில்) 

பதிவுகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஜனாதிபதித் தேர்தல் இம்முறை வழக்கத்துக்கு மாறாக மும்முனைப் போட்டிக்களத்தினை திறந்திருப்பதாக தென் இலங்கையில் கருத்துருவாக்கம் செய்யப்படுகின்றது. அதனை, வடக்கு கிழக்கின் அரசியல், சிவில், ஊடக வெளியும் உள்வாங்கி பிரதிபலிக்க ஆரம்பித்திருக்கின்றது. தமிழ்ப் பொது வேட்பாளர் கோசத்தோடு அரங்கிற்கு வந்திருப்பவர்கள், அந்த அடிப்படையை வைத்துக் கொண்டுதான் தங்களின் அரசியல் கணக்கினை போடுகிறார்கள்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையிலான போட்டி என்பது, வழக்கமான ஜனாதிபதித் தேர்தலைக் காட்டிலும் நெருக்கமான நெருக்கடியான போட்டியாக இருக்கும் என்று நம்புகிறார்கள். குறிப்பாக, எந்தவொரு வேட்பாளரினாலும் ஜனாதிபதி பதவியை அடைவதற்கான 50 வீதத்துக்கு அதிகமான வாக்குகளைப் பெற முடியாது என்று வாதிடப்படுகின்றது. ஆனால், தேர்தல் களம் உண்மையில் அப்படித்தானா இருக்கின்றது?

ஒக்டோபர் முதல் வாரத்தில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என்று ரணிலுக்கு நெருக்கமான தரப்பினர் செய்திகளை கசிய விட ஆரம்பித்திருக்கிறார்கள். அப்படிப் பார்த்தால் இன்னும் மூன்றரை மாதங்கள் மாத்திரமே ஜனாதிபதித் தேர்தலுக்கு இருக்கின்றது. தென் இலங்கையில் சஜித்தும் அநுரவும் ரணிலை விட ஆதரவுத் தளத்தோடு இருக்கிறார்கள். இந்த உண்மை யாருக்குத் தெளிவாகத் தெரியுமோ இல்லையோ, ரணிலுக்கும் அவரைத் தாங்கி பிடித்துக் கொண்டிருக்கும் ராஜபக்ஷக்களுக்கும் நன்றாகவே தெரியும். ராஜபக்ஷக்கள் மக்களால் துரத்தியடிக்கப்பட்ட போது, தங்களுக்கு மாற்றாக ரணிலை அதிகாரத்தில்  இருத்தி தங்களின் எதிர்கால அரசியலுக்கான வழிகளைக் காத்துக் கொள்வதில் ராஜபக்ஷக்கள் கவனமான இருந்தார்கள். ஆனால், தொடர்ச்சியாக ரணிலை தாங்கிப் பிடிப்பது என்பது தசாப்த காலத்துக்கும் மேலாக தங்களை தென் இலங்கையின் அரசியல் களத்தில் இருந்து ஒதுக்கி வைத்துவிடும் என்பது இளைய ராஜபக்ஷவான நாமலுக்கு இருக்கின்ற பெரிய சந்தேகம். ரணிலை இனி எந்த இடத்திலும் ஆதரிக்க வேண்டியதில்லை என்று அவர் எண்ணிச் செயற்படுகிறார்.அவரின், இப்போதைய அவசரமான அரசியல் ஆசை என்பது அடுத்த பொதுத் தேர்தலில் எப்படியாவது பிரதான எதிர்க்கட்சியாக பொதுஜன பெரமுனவை அமர்த்திவிட வேண்டும் என்பதுதான். அதுதான், 2029இல் ஆட்சியைப் பிடிக்க உதவும் என்றும் நாமல் கருதுகிறார். அதனைக் கருத்தில் கொள்ளாமல், சிரேஷ்ட ராஜபக்ஷக்களில் ஒருவரான பஷில் ராஜபக்ஷ ரணிலோடு சேர்ந்து தென் இலங்கையை வளைத்துவிடலாம் என்று நம்புகிறார். அதனால்தான், தொடர்ச்சியாக கடந்த காலத்தில் ராஜபக்ஷக்களுக்காக வரிந்து கட்டிக் கொண்டு பிரச்சாரம் செய்த தென் இலங்கையின் பிரதான ஊடகங்கள் எல்லாமும் தற்போது ரணிலை, நாட்டினை வீழ்ச்சியிலிருந்து மீட்ட இரட்சகர் என்று கூறத் தலைப்படுகின்றன. 

ரணில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்துக்கு வந்ததில் இருந்து, அவரை தென் ஊடகங்கள் மேற்கு நாடுகளின் விசுவாசி என்றும், ஆட்சியைப் பிடிப்பதற்கு ஆளுமையற்ற மேட்டுக்குடி என்றுமே சித்தரித்து வந்திருக்கின்றன. தென் இலங்கைக் கிராமங்களில் பௌத்த சிங்களத்தைக் காப்பதற்கு மன்னர் போன்றவர் ஒருவரே ஜனாதிபதியாக வர வேண்டும். அவருக்கு வாரிசுகள் இருக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்யப்படுவதுண்டு. அதுதான், ராஜபக்ஷக்களை அரியணையில் மீண்டும் மீண்டும் ஏற்றியது. இப்போதும் அவர்களினால் மிக வேகமாக வீழ்ச்சியில் இருந்து மீள எழுவதற்கும் இவ்வாறான உணர்நிலையே முக்கிய காரணமாகும். வாரிசு அரசியல் என்பது ஊழல், அதிகார துஷ்பிரயோகத்தின் உறைவிடம் என்பது உலகம் தொடர்ச்சியாக நிரூபித்து வரும் விடயம். இலங்கையும் அதற்கு விதிவிலக்கானது அல்ல. அதன் பாதிப்புக்களை மக்கள் ஒவ்வொரு நாளும் எதிர்கொண்டாலும் அதனைச் சகித்துக் கொண்டு வாரிசுள்ள தலைவர்கள் தங்களை ஆள வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதாவது, ஆண்டான் அடிமை மனநிலையில் இருந்து மக்கள் மீளவில்லை. இதனை நாமல் உணர்ந்து வைத்திருக்கின்றார். ஆனால், பஷிலுக்கு இருந்த ஜனாதிபதிப் பெருங்கனவில் கடந்த முறை கோட்டாபய ராஜபக்ஷ குறுக்காக வந்தார். 2029ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் தன்னை ஜனாதிபதி வேட்பாளராக பெரமுனவின் பெரும்பான்மை உறுப்பினர்கள் முன்னிறுத்த மாட்டார்கள். அந்தத் தேர்தலுக்கு நாமல் தயாராகிவிடுவார். அதனால், இம்முறை ரணிலை ஜனாதிபதியாக்கினால், அவரைக் கொண்டு பிரதமர் பதவியையாவது அடைந்துவிடலாம் என்ற ஏக்கம் பஷிலுக்கு உண்டு. அதனால்தான், ரணிலும் பஷிலும் ஓர் இரகசிய இணக்கப்பாட்டின் அடிப்படையில் இணைந்து இப்போது வேலை செய்கிறார்கள். 

பஷிலுக்கும் நாமலுக்கும் இடையில் நின்று மஹிந்த ராஜபக்ஷ தற்போது தத்தளிக்கின்றார். அவருக்கு எப்படியாவது பெரமுனவை எந்தவித சேதாரமுமின்றி மகனிடம் கைளித்துச் செல்ல வேண்டும் என்பது அவா. ஆனால், அதற்கு குறுக்காக இளைய சகோதரர் நிற்பதை எப்படி கையாள்வது என்ற குழப்பம். ஏற்கனவே இன்னொரு இளைய சகோதரரான கோட்டா, ராஜபக்ஷக்களின் பெயரையே நடுவீதிக்கு இழுத்துவிட்டு நாசமாக்கிவிட்டார் என்பது மஹிந்தவின் பெரும் கவலை. தற்போது வயது மூப்பு, அதனால் வரும் தொல்லைகளினால் அவர் அல்லாடுகிறார். இந்த நெருக்கடிகளுக்குள்ளும், தன்னுடைய வாரிசின் எதிர்கால அரசியல் வாழ்க்கையைக் காப்பாற்றிக் கொடுக்க வேண்டும் என்ற பெரும் கவலை வேறு. மஹிந்தவுக்கும் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் அக்கறை காட்டாமல் பொதுத் தேர்தலை இலக்கு வைத்து செயற்பட்டு, பிரதான எதிர்க்கட்சியாகிவிட வேண்டும் என்பதுதான் எதிர்பார்ப்பு. ஆனால், பஷில் இடையில் நின்று குழப்பிக் கொள்வதுதான் அவரின் தற்போதைய தலையிடி. ஏனெனில், பஷில் நினைத்துவிட்டால் பெரமுனவை இரண்டாக உடைத்துவிடும் (பண) பலம் உள்ளவர் என்பது தமயனாருக்கு நன்றாகத் தெரியும். கடந்த காலங்களில் ராஜபக்ஷக்களின் வெற்றிகளில் பஷிலின் பங்கு கணிசமானது. 

தற்போதுள்ள நிலையில் சஜித் ஆட்சியைப் பிடிப்பதற்கான வாய்ப்புக்களே இருக்கின்றன. ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு கிழக்கில் குழப்பங்கள் இன்றி வாக்களிப்பு நிகழ்ந்தால், சஜித்தின் வெற்றியை தடுப்பதற்கு எந்தக் காரணிகளும் பெரிதான இல்லை. அவர் பொதுத் தேர்தலிலும் ஆட்சியமைப்பதற்கான உறுப்பினர்களை கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு பெற்றுவிடுவார். ஆனால், தென் இலங்கையில் தேசிய மக்கள் சக்தி தன்னை வளர்ந்துவரும் பிரதான சக்தியாக முன்னிறுத்திக் கொண்டிருக்கின்றது. மக்கள் விடுதலை முன்னணியின் கடந்த கால கறுப்புப் பக்கங்களை புலமையாளர்கள், கலைஞர்கள், முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகளைக் கொண்டு தேசிய மக்கள் சக்தியாக நின்று மறைத்துவிடலாம் என்று அநுர கருதுகிறார். வழக்கத்துக்கு மாறாக தென் இலங்கையின் சிறுநகரங்களிலும் பெரு நகரங்களிலும் தேசிய மக்கள் சக்தியை நோக்கிய திரட்சி இருக்கின்றது. அது, ஆளுங்கட்சியாக மாறுவதற்கான அளவுக்கு இல்லை. ஆனால், முயற்சித்தால் ராஜபக்ஷக்களை வீழ்த்தி பிரதான எதிர்க்கட்சியாகும் வாய்ப்புக்களைக் காட்டுகின்றது. இதில், தேசிய மக்கள் சக்தியின் பிரதான பின்னடைவு என்றால், அவர்களின் பின்னால் தமிழ் - முஸ்லிம் கட்சிகள் எவையும் அணி திரள்வதில்லை என்பது. இதனால், வடக்கு கிழக்கிலும் மலையகத்திலும் தேசிய மக்கள் சக்தியினால் வாக்குகளைப் பெற முடியாது. இந்தப் பின்னடைவுகளோடு இருக்கும் தேசிய மக்கள் சக்தியை ஊடகங்கள் ஊதிப்பெருப்பித்து பிரமாண்டமாவே காட்டிக் கொண்டிருக்கின்றன. அது, ரணிலுக்கான வாய்ப்புக்களை உருவாக்கும் நோக்கிலானது என்று கொள்ளப்பட வேண்டியது. 

கடந்த காலத்திலும் தேசிய மக்கள் சக்தி அளவுக்கு பொதுக் கூட்டங்களை எந்தவொரு கட்சியினாலும் பிரமாண்டமாக நடத்த முடிந்திருக்கவில்லை. ஆனால், அந்தப் பொதுக்கூட்டங்களின் கூடிய மக்களின் வாக்குகள், அந்தக் கட்சிக்கு கிடைத்திருக்கின்றனவா என்றால், அது எதிர்மறை பதில்களையே வழங்கும். அந்தக் கட்சியின் பிரமாண்டமான வெற்றி என்பது, 2004ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் கிடைத்தது. அந்தத் தேர்தலில், சுதந்திரக் கட்சியோடு இணைந்து மக்கள் விடுதலை முன்னணி தென் இலங்கை முழுவதும் இனவாத பிரச்சாரத்தை முன்னெடுத்தது.ராஜபக்ஷக்களின் ஆயுத மோதல் முன்னெடுப்புக்கு பக்க பலமாக நின்று வலுச்சேர்த்தது. போர் வெற்றிக்கான பங்கினை மக்கள் விடுதலை முன்னணியும் கோரி நின்றது. பின்னராக அந்தக் கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலர் மஹிந்தவோடு தங்கிவிட, அநுர தலைமையேற்றதும் மெல்ல மெல்ல தங்களின் மீதான கடந்த கால கறுப்பு வரலாற்றை மறைப்பதற்கான திட்டங்களோடு செயற்படத் தொடங்கினார்கள். இன்றைக்கு தேசிய மக்கள் சக்தியாக தங்களை முன்னிறுத்தி, ஜனநாயகத்தின் காவலர்களாக வலம் வருகிறார்கள். 

தேசிய மக்கள் சக்தியை பெருப்பித்து காண்பிப்பதன் மூலம், சஜித்தோடு இருப்பவர்களை கிலியுறச் செய்யலாம் என்பது ரணிலின் திட்டம். அதனைக் கொண்டு சஜித்தோடு இருப்பவர்களை எப்படியாவது தன்னோடு இணைத்துக் கொள்ளலாம் என்று ரணில் நினைக்கிறார். ஆனால், அவரின் எதிர்பார்ப்புக்கள் இதுவரை நிறைவேறவில்லை. சஜித்தின் கட்சிக்குள் அவரோடு சரத் பொன்சேகா உள்ளிட்ட சிலர் முரண்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள்கூட ரணில் பக்கம் சாய்வதற்கு தயாராக இல்லை. ஏனெனில், மூழ்கும் படகில் யாரும் ஏறத் துணிய மாட்டார்கள். (கடந்த பொதுத் தேர்தலில் ரணிலும், அதன் பின்னரான அரகலய காலத்தில் ராஜபக்ஷக்களும் மூழ்கிப்போனவர்கள்தான்.) அநுரவால் சஜித்தை தோற்கடிக்கும் வல்லமையுண்டு என்ற கற்பிதத்தைப் பேணி, சஜித்தோடு இருப்பவர்களை கலங்கடிக்கலாம் என்ற திட்டம் நினைத்த அளவுக்கு வேலை செய்யவில்லை. ஆனால், அந்த திட்டம் வடக்கு கிழக்கில் சற்று வேலை செய்திருக்கின்றது. தமிழ்ப் பொது வேட்பாளர் கோசத்தோடு வரும் சில தரப்பினர், தென் இலங்கையில் மும்முனைப் போட்டிக் களம் விரிந்திருப்பதாக இந்தக் கற்பிதங்களை உள்வாங்கிக் கொண்டுதான் பிரதிபலிக்கிறார்கள். 

ரணில் சுயாதீன வேட்பாளராக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போகிறார். அதன்மூலம், தன் பின்னால் ராஜபக்ஷக்கள் இருக்கிறார்கள் என்ற கட்டத்தைக் கடக்க முடியும் என்று நினைக்கிறார். தான் சுயாதீன வேட்பாளராக போட்டியிடுவேன், தனக்கு யார் ஆதரவளித்தாலும் அதனை ஏற்றுக்கொள்வேன் என்ற பிம்பத்தை அவர் கட்டமைக்கப் போகிறார். அதன்மூலம், ராஜபக்ஷக்கள் மீதான தென் இலங்கையின் வெறுப்புணர்வை மடை மாற்றலாம் என்பது அவரது நினைப்பு. அத்தோடு, வடக்கு கிழக்கில், தமிழ் மக்களிடையே பொது வேட்பாளர் என்ற விடயத்தை தன்னுடைய ஆதரவு சக்திகளைக் கொண்டு திணித்தால், சஜித்துக்கு கிடைக்கும் கணிசமான வாக்குகளை இல்லாமலாக்கிவிட முடியும். அதன்மூலம், தன்னையொரு முதன்மைப் போட்டியாளராக முன்னிறுத்திக் கொள்ள முடியும் என்பது அவரது எதிர்பார்ப்பு.  ஆனால், தமிழ்ப் பொது வேட்பாளர் விடயம் தமிழ் மக்களிடம் எடுபடாது. ரணில் அடுத்த தேர்தலில் போட்டியிட்டால் அவர், ராஜபக்ஷக்களின் முகமாகவே தமிழ் மக்களினால் பார்க்கப்படுவார். இருப்பதில் பாதிப்புக்குறைந்த வேட்பாளர் என்ற அடிப்படையில் சஜித்தை நோக்கி தமிழ் வாக்குகள் திரளும். முஸ்லிம் பிரதான கட்சிகள் எல்லாமும் இன்னமும் சஜித்தோடு இருப்பதால் முஸ்லிம் வாக்குகளும், மனோ கணேசன், திகாம்பரம் கூட்டணியின் வலுவோடு மலையக தமிழ் வாக்குகளும் சஜித்தின் பக்கத்தில் சேரும். இந்தக் கட்டமே, சஜித்தை முன்னிலையில் வைத்துக் கொள்ளப் போதுமானது. 

ஆனால், சஜித்துக்கு இருக்கும் பெரும் சிக்கலே சஜித்தான். நேரம் காலம் அறியாமல் ஏதும் அறியாக குழந்தை மாதிரி உளறிக் கொட்டி, அவருக்கு சாதகமாக இருக்கின்ற களத்தினை நாசமாக்காமல் இருக்க வேண்டும். அப்படி அவர் இருந்துவிட்டால், தென் இலங்கையில் பெரும்பான்மையான வாக்குகளும், தமிழ் - முஸ்லிம் வாக்குகளும் போதும் அவரை, வெற்றியாளராக்குவதற்கு. இதுதான் தற்போதைய நிலை. மாறாக மும்முனைப் போட்டிக்களம் என்பதெல்லாம் கற்பனை வாதம். 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula