free website hit counter

தமிழ் மக்கள் பொதுச்சபை இன்னொரு 'பேரவை' ஆகக்கூடாது! (புருஜோத்தமன் தங்கமயில்)

பதிவுகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

யாழ்ப்பாணத்தில் கடந்த புதன்கிழமை கூடிய தமிழ் சிவில் சமூகக் கட்டமைப்பினர், தங்களை 'தமிழ் மக்கள் பொதுச்சபை'யாக அடையாளப்படுத்தி அறிவித்துள்ளனர். ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவது தொடர்பிலான உரையாடல் களம், தமிழ் மக்கள் பொதுச்சபை என்ற சிவில் சமூக அமைப்பொன்றை ஆரம்பிப்பதற்கான காரணியாக இருந்திருக்கின்றது என்பதை ஆரம்பத்திலேயே வரவேற்கலாம்.

ஏனெனில், யாழ்ப்பாணத்தில் சிவில் சமூக இயக்கங்கள் - அமைப்புக்கள் என்ற பெயர்களில் ஆரம்பிக்கப்படும் அனைத்துக் கட்டமைப்புக்களிலும் புலமையாளர்கள், வைத்தியர்கள், அரசியல் பத்தியாளர்கள், சமயத்துறவிகள் உள்ளடங்கிய பிரமுகர்களே அதிகம் அங்கம் வகித்திருக்கிறார்கள். அவர்கள், காலத்துக்கு காலம் சிவில் சமூக அமைப்புக்களின் பெயர்களை மாத்திரம் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். மற்றப்படி, அவர்களின் செயற்பாடுகளில் எந்தவித மாற்றமும் இருப்பதில்லை. ஏனெனில், அவர்கள் பருவகாலப் பறவைகள் போன்றவர்கள். தேர்தல்கள், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகள் உள்ளிட்ட காலங்களில் மாத்திரம், தமிழர் தேசத்தில் பறப்பார்கள். அவை முடிந்ததும் தங்களின் கூடுகளுக்கு திரும்பிவிடுவார்கள். அத்தோடு, அவர்களிடம் எந்தவித செயற்திட்டங்களும், அதனை செயற்படுத்துவதற்கான அர்ப்பணிப்புக்களும் இதுவரை காலமும் இருந்ததில்லை. ஆனால், வழக்கத்துக்கு மாறாக இம்முறை தமிழ்ப் பொது வேட்பாளரை எப்படியாவது நிறுத்திவிட வேண்டும் என்கிற ஆவேசத்தை அவர்களிடத்தில் காண முடிகிறது. அதுவும், தமிழ் மக்கள் பொதுச்சபைக்குள் கிராமிய சங்கங்கள், கடற்றொழில் அமைப்புக்கள் தொடங்கி சாதாரண மக்களோடு நாளாந்தம் நகமும் சதையுமாக ஊடாடும் சமூகக் கட்டமைப்பின் ஆகச்சிறந்த குழுக்களையெல்லாம், இணைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால்தான், தமிழ் மக்கள் பொதுச்சபையை இந்தப் பத்தியாளர் ஆரம்பத்திலேயே வரவேற்றார்.

முள்ளிவாய்க்கால் முடிவுகளுக்குப் பின்னரான தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில், கட்சிகளைக் காட்டிலும் அதிகம் தோற்றுப்போன கட்டமைப்பாக தமிழ் சிவில் சமூகக் கட்டமைப்பைச் சொல்லிக் கொள்ளலாம். குறிப்பாக, தமிழ் மக்கள் பேரவை என்ற அரசியல்வாதிகளும் பிரமுகர்களும் அடங்கிய அமைப்பு, தமிழ் சிவில் சமூக வெளியை ஒட்டுமொத்தமாக கபளீகரம் செய்துவிட்டு, காணாமற்போனது. அந்த அமைப்பின் அதிகபட்ச அடைவாக சி.வி.விக்னேஸ்வரனுக்கு கட்சியை ஆரம்பித்துக் கொடுத்ததையும், உதிரி வாக்குகளைக் கொண்டு அவரை பாராளுமன்றத்துக்கு அனுப்பியதையும் சொல்ல முடியும். மற்றப்படி எழுக தமிழுக்குப் பின்னராக தமிழ் மக்களின் திரட்சியை கிட்டத்தட்ட காட்டிக் கொடுத்துவிட்டு காணாமற்போனார்கள். 2000ஆம் ஆண்டுக்குப் பின்னரான தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டக் களத்தில், 'பொங்கு தமிழின்' எழுச்சி மிக உச்சமானது. அது, ஆயுதப் போராட்ட வெற்றிகளின் தொடர் எழுச்சி. அதன்பின்னர், வடக்கு கிழக்கில் போராட்டக்களத்தில் மக்கள் திரட்சியைக் காட்ட முடியும் என்பதற்கு 'எழுக தமிழ்' குறிப்பிட்டளவு சான்றாக அமைந்தது. ஆனால், அதனை சரியான வழியில் அடுத்த கட்டத்திற்கு நகர்த்தாது, விக்னேஸ்வரனை முன்னிறுத்துதல் என்ற அளவில் சுருங்கிக் கொண்டதன் விளைவாக, தமிழ் மக்களின் போராட்டக்களம் வறண்டு போனது. அடுத்து குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய திரட்சி என்றால், 'பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி' வரையிலான பேரணியைச் சொல்ல முடியும். அதுவும் வேலன் சுவாமி என்று தன்னை முன்னிறுத்தும் நபர் உள்ளடக்கிய சில சுயநலவாதிகளினால் இடைநடுவில் அதன் இலக்குகள் மாற்றப்பட்டு, இறுதியில் குழப்பத்துடன் முடிந்தது. அத்தோடு, தங்களின் இருப்புக்காக வேலன் சுவாமியும் இன்னும் சிலரும் அந்தப் பேரணிக்கான பெயரை இறுதியில் அபகரித்துக் கொண்டோடியதும் நடந்தது. 

இப்போது ஆரம்பிக்கப்பட்டிருக்கின்ற தமிழ் மக்கள் பொதுச்சபைக்குள்ளும் தமிழ் மக்கள் பேரவையில் இருந்த முக்கிய பிரமுகர்களே பிரதான பாத்திரம் வகிக்கிறார்கள். கடந்த காலங்களில் சிவில் சமூக அமைப்புக்கள் என்ற பெயரில் ஆரம்பித்துவிட்டு இடைநடுவில் விட்டு ஓடியது போலல்லாது, எதிர்காலத்தில் தமிழ் மக்கள் பொதுச்சபையை ஒரு செயற்பாட்ட அமைப்பாக தொடர்ந்தும் வழிநடத்த வேண்டும். மாறாக, தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற ஒற்றை இலக்குக்காக மாத்திரம்,ஓர் அமைப்பை ஆரம்பிப்பதும், அதனைக் கைவிடுவதும் அர்த்தமற்றது. ஏனெனில், தமிழ்ச் சூழலில் தமிழ்ப் பொது வேட்பாளர் என்கிற முன்னெடுப்பு, அதன் இலக்குகள் சார்ந்து வெற்றியளிக்கக் கூடிய எந்தவித சாத்தியப்பாடுகளையும் காட்டவில்லை. அதற்கான களமும் சூழலும் கூட தற்போது இல்லை. தமிழ்த் தேசிய விடுதலை நோக்கிய பயணம் என்பது வெற்றிகளினால் பலம் பெற்றதல்ல. தொடர் தோல்விகளில் இருந்து கற்ற பாடங்களைக் கொண்டு பலம் பெற்றது. அப்படியான சூழலில், பொது வேட்பாளர் விடயம், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் கட்டத்திற்கு நகர்ந்தாலும் இல்லையென்றாலும், சிலவேளை போட்டியிட்டு வாக்குகளைப் பெறாது, இலக்குகளைத் தவற விட்டாலும், தமிழ் மக்கள் பொதுச்சபையினர் நம்பிக்கைகளை இழந்துவிடக்கூடாது. தொடர்ந்தும் தமிழ்த் தேசிய அரசியலில் செயற்பாட்டுத்தளத்தில் முன்னோக்கி நகர வேண்டும். இல்லையென்றால், ஏற்கனவே தோற்றுப்போன சிவில் சமூக வெளியை, புதைகுழிக்குள் இருந்து தேடி எடுக்க வேண்டி வரும். அப்படியான சூழல் ஏற்பட்டால் எதிர்கால சமூகத்திற்கு சிவில் சமூக வெளியை கடத்தாமல் போனமைக்காக, இன்று வரிந்து கட்டிக் கொண்டு பத்தி எழுதும் மூத்தவர்கள் எல்லாமும் பொறுப்பேற்க வேண்டி வரும். ஏனெனில், தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் கருத்துருவாக்கிகள் என்ற கட்டத்தில் தங்களை  முன்னிறுத்துபவர்களில் அநேகர் அரசியல் பத்திகளை எழுதுகிறார்கள். இவர்களின் கடந்த கால சாதனைகளாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் சி.வி.விக்னேஸ்வரனை முன்னிறுத்தியமையைச் சொல்லிக் கொள்ளலாம். ஆனால், அது கடந்த பதினைந்து ஆண்டுகால அபத்தம்.

கடந்த வாரம் வரையில், தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முடிவுக்காக ரெலோவும், புளொட்டும் காத்துக் கொண்டிருந்தன. ஆனால், எந்த அதிசயம் நிகழ்ந்ததோ, இரு கட்சிகளும் தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்துக்கு ஆதரவளிப்பதற்காக அறிக்கைகள் மூலமாக அறிவித்துவிட்டன. தமிழ் மக்கள் பொதுச்சபையைப் பொறுத்தளவில் இது வெற்றிதான். ஏனெனில், அதற்கு முதல் வாரங்களில், பொது வேட்பாளர் விடயத்தை பொறுப்பற்ற ரீதியில் தமிழ் மக்கள் பொதுச்சபையின் பிரமுகர்கள் முன்னெடுப்பதாக அவர்களிடத்திலேயே ரெலோவும், புளொட்டும் விசனப்பட்டன. அதிலும், குறிப்பாக, பொது வேட்பாளர் விடயத்துக்கான ஆதரவை, தமிழ் மக்களை உசுப்பேற்றுவதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என்று அரசியல் பத்தியாளர்கள் அடங்கிய பிரமுகர்கள் குழு கூறிய போது, ரெலோ, புளொட்டின் தலைமைகள் பொறுமையிழந்த சம்பவங்கள் எல்லாமும் நிகழ்ந்தன. அதுமட்டுமன்றி, தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்களிடம் கூட, தமிழ் மக்கள் பொதுச்சபையில் பத்தியாளர்களின் சிறுபிள்ளைத்தனங்கள் குறித்து ஆதங்கப்பட்டதெல்லாம் நிகழ்ந்தன. ஆனால், அதன்பின்னரான நாட்களில் எங்கிருந்து என்ன ஞானோதயம் ரெலோவுக்கும் புளொட்டுக்கும் கிடைத்தன என்று தெரியவில்லை. திடீரென்று பொது வேட்பாளருக்கு ஆதரவு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். சிலவேளை இன்னும் சில நாட்களில் அந்த ஞானோதயத்தின் உரித்தாளர்கள் யார் என்பது வெளிவரலாம். 

தோல்வி இறுதியானது என்று தெரிந்த பின்னர், அந்தக் களத்தைத் தவிர்ப்பது அரசியல் இராஜதந்திரத்தில் அடிப்படையானது. அதனை, அரசறிவியலாளர்கள் அறியாமல் இருப்பதை எப்படி எடுத்துக் கொள்வது என்று தெரியவில்லை. தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்தினை மக்களை உசுப்பேற்றுவதன் மூலம் சாதித்துக் கொள்ளலாம் என்ற அரசியல் புரிதலை கொண்டிருப்பவர்கள் தமிழ்ச் சமூகத்தின் பெரும் ஆபத்தை விளைவிக்கக் கூடியவர்கள். இதுவொன்றும் ஆயுதப் போராட்டக்களம் அல்ல. அதில்கூட உசுப்பேற்றுதல் எந்தவிதமான ஆரோக்கியமான பங்கினையும் வகிக்காது. தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தின் வெற்றிக் கணங்கள் அர்ப்பணிப்பு மற்றும் சமயோசித்ததினால் நிகழ்ந்தவை. இன்றைக்கு அந்தக் கணங்கள் எங்களிடத்தில் இல்லை. அப்படியான கட்டத்தில் உசுப்பேற்றுதல் என்ற நிலையை அரசியல் செல்நெறியாக வரிந்து கொள்ள முற்படுபவர்களை கவனமாக கையாள வேண்டும். ஏனெனில், கடந்த காலங்களில் உசுப்பேற்றும் அரசியலில் ஈடுபட்ட அரசியல்வாதிகளும் அவர்களுக்காக வரிந்து நின்று எழுதியவர்களும் பெரிதாக எந்தவித பாதிப்புக்களும் இன்றி தப்பித்துக் கொண்டுவிட்டார்கள். ஆனால், அவர்களின் உசுப்பேற்றுதல்களில் அடியுண்ட சாதாரண மக்கள்தான் வாழ்க்கையைத் தொலைத்தார்கள். இன்னும் சில தசாப்தங்களுக்கு மீண்டெழ முடியாத பின்னடைவுகளோடு அல்லாடுகிறார்கள். எந்தச் சூழலிலும் எவர் யாராகினும் உசுப்பேற்றும் அரசியலுக்கு இடமளிக்கக் கூடாது. இப்போது, உசுப்பேற்றி காரியங்களைச் சாதிக்கலாம் என்று களத்தை கையாள முற்படுபவர்கள், ஒருபோதும் களத்தில் நின்றவர்கள் இல்லை. அவர்கள், தாயக மக்களுக்காக நின்றதைக் காட்டிலும், வெளித்தரப்புக்களின் நிகழ்ச்சி நிரலுக்காக இயங்கியமையே அதிகமாகும். தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்தை தாயக மக்கள் கணக்கில் எடுக்கவில்லை. எடுக்கவும் போவதில்லை. ஆனால், புலம்பெயர் தேசங்களில் உள்ள சில அமைப்புக்களினதும், சில தனிநபர்களினதும் தேவை பொது வேட்பாளராக இருக்கின்றது. அது, தாயக மக்களின் வெற்றிகளைக் குறித்தானது அல்ல.

அரசியல் விடுதலைப் போராட்டத்தை நடத்தும் எந்த மக்கள் கூட்டமும் தன்னுடைய சிவில் சமூக வெளியை ஆரோக்கியமாக பேண வேண்டும். அது, அரசியல் கட்சிகளையும் இயக்கங்களையும் வழிப்படுத்தும் அளவுக்கு இருக்க வேண்டும். மக்கள் சார்ந்து தவறான முடிவுகள் எடுக்கப்படும் போது, அதனை சுட்டிக்காட்டி மக்களை விழிப்புணர்வூட்ட வேண்டும். ஆனால், தமிழ்ச் சிவில் சமூக வெளி பருவகாலப் பறவைகள் போன்றவர்களினால் நிரம்புவதும், அவர்கள் மக்களை வழிப்படுத்துவதைக் காட்டிலும் உசுப்பேற்றுதல் குறித்து சிந்திப்பதாலும் அவதானமாக இருக்க வேண்டியிருக்கின்றது. இந்த இடத்தில் தமிழ் மக்கள் மாத்திரமல்ல, அரசியல் கட்சிகளும் தலைவர்களும் கூட கவனமாக இருக்க வேண்டும். மாறாக, குறுகிய சுயநல இலக்குகளுக்காக அரசியல் தலைவர்கள் செயற்பட்டால், அதன் விளைவுகள் இன்னும் மோசமாக மாறும். அப்போது, தமிழ்த் தேசிய அரசியலின் சிதைவு என்பது இன்னும் மோசமாக இருக்கும். 

தமிழ்ப் பொது வேட்பாளரை முன்னிறுத்துவது தொடர்பிலான உரையாடல் தமிழ் மக்கள் பேரவைக்குள் கடந்த ஆண்டு இடம்பெற்றதாக தமிழ் மக்கள் பொதுச்சபையின் பேச்சாளர் கூறியிருக்கின்றார். தமிழ் மக்கள் பேரவை, விக்னேஸ்வரனுக்கு கட்சியை ஆரம்பித்துக் கொடுத்த நாளோடு காணாமற்போய்விட்டது. அது, எப்போது யாரோடு கலந்துரையாடி தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்தைத் தீர்மானித்தது என்று தெரியவில்லை. செயற்பாட்டுக்களத்திலேயே இல்லாத பேரவை, எப்போது எந்த உலகத்தில் பொது வேட்பாளர் தொடர்பிலான உரையாடல்களை நடத்தியது என்றும் தெரியவில்லை. சிலவேளை, பொதுமக்கள் சபையின் பேச்சாளர், எல்லா இடத்திலும் இருக்கும் பிரமுகர்கள் குழு ஒன்றுதான் என்ற நிலையில், அதனைத் தெரிவித்திருந்தால், அந்த விடயத்தைக் கண்டுகொள்ளாமல் விடலாம். ஏனெனில், தொடர்ந்து கேள்வி எழுப்பினாலோ, எதிர்க்கருத்துக்களை வைத்தாலே அவர்கள் எரிச்சலடைந்து, தனிப்பட்ட தாக்குதல்களுக்குச் சென்றுவிடுவார்கள். கடந்த நாட்களில் பொது வேட்பாளர் விடயம் தொடர்பில் கேள்வி எழுப்பியவர்களுக்கு எதிராக 'துரோகிகள், படிப்பறிவற்றவர்கள்' என்ற அடையாளப் படுத்தல்களையெல்லாம் செய்து வருகிறார்கள். தமிழ்ச் சூழலில் துரோகிகள் என்ற வார்த்தை அர்த்தம் இழந்து நீண்ட காலமாகிவிட்டது. கடந்த கால துரோகிகள் பின்னராக காலத்தில் மாமனிதர்கள் ஆனதெல்லாம் வரலாறு. 

தமிழ் மக்கள் பொதுச்சபை என்று கவர்ச்சிகரமான பெயரை மாத்திரம் சூட்டிக்கொண்டால் போதாது, அந்தச் சபை மக்களின் அரசியல் இருப்புக்காக தொடர்ந்தும் சமரசங்கள் இன்றி செயற்பட வேண்டும். அதுபோல, தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களுக்கு அப்பால் நின்று செயற்பட வேண்டும். மாறாக, தமிழ் மக்கள் பேரவையின் கடந்த கால அபத்தங்களை தொடர்ந்தும் அரங்கேற்றும் இன்னொரு அமைப்பாக தமிழ் மக்கள் பொதுச்சபை ஒருபோதும் இருக்கக்கூடாது. 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction