free website hit counter

பொது விவாத அரங்கு திறக்குமா; பத்தியாளர்கள் நிலை என்ன?! (புருஜோத்தமன் தங்கமயில்)

பதிவுகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளரை முன்னிறுத்துவது தொடர்பிலான பொது விவாதமொன்று எதிர்வரும் 09ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அறிவித்திருக்கிறார். தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரிக்கும் அரசியல் பத்தியாளர்கள் சிலருக்கும் சுமந்திரனுக்கும் இடையில் யாழ்ப்பாணத்தில் அண்மையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போது, தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்தை, பொது விவாதமாக நடத்தி ஆராய்வோம் என்று இரு தரப்புக்கும் இடையில் இணக்கம் காணப்பட்டது.

அதன் பின்னணியில்தான், சுமந்திரன் பொது விவாதத்துக்கான திகதியை ஊடக சந்திப்பு நடத்தி அறிவித்தார். ஆனால், தற்போது அந்த விவாதத்தில் பங்கெடுப்பதில் இருந்து, சம்பந்தப்பட்ட அரசியல் பத்தியாளர்கள்  பின்வாங்கிவிட்டதாக தெரிகிறது. அத்தோடு, பொது வேட்பாளர் விடயத்தை ஆதரிக்கும் தமிழ்த் தேசியக் கட்சிகளும்கூட அந்த விவாதத்தில் பங்கெடுக்க மறுத்திருக்கின்றன. இதனால், சுமந்திரன் உள்ளிட்ட பொது வேட்பாளர் எதிர்ப்பு அணியினர் மாத்திரம் 'தனியாவர்த்தனம்' நடத்தும் கூட்டமாக, பொது விவாத அரங்கு நிறைவுறப்போகிறது.

பொது வேட்பாளர் விடயத்தில் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர், ஆராய்ந்து முடிவெடுப்போம் என்று தமிழரசுக் கட்சி அண்மையில் நடைபெற்ற மத்திய செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானித்திருக்கின்றது. அந்தக் கூட்டத்திலும் பொது வேட்பாளர் விடயத்தை ஆதரித்து சிவஞானம் சிறீதரனும், பா.அரியநேத்திரனும் மாத்திரமே பேசியிருக்கிறார்கள். ஆனால், பொது வேட்பாளர் விடயத்தை எதிர்த்து பெரும்பாலான உறுப்பினர்கள் பேசியிருக்கிறார்கள். பொது வேட்பாளர் விடயம் காலத்துக்கு பொருத்தமற்ற விடயம் என்ற உணர்நிலையே அங்கு நிலவியது. ஆனாலும், அதனை அவசரப்பட்டு அறிவிக்க வேண்டியதில்லை என்று மத்தியகுழு உறுப்பினர்கள் முடிவு செய்திருக்கிறார்கள். தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்தை கடந்த ஆண்டு ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியினரே அரங்குக்கு கொண்டு வந்தனர். ஆனால், அவர்கள் தற்போது அதிலிருந்து பின்வாங்கத் தொடங்கிவிட்டார்கள். அதற்கான காரணமாக, தமிழரசுக் கட்சியை முன்னிறுத்தும் திட்டத்தோடு இருக்கிறார்கள். அந்தத் திட்டத்தை தடுப்பதற்காகவே, தமிழரசுக் கட்சி பொது வேட்பாளர் விடயத்தை ஆறப்போட்டுவிட்டது. இதனால், பொது வேட்பாளர் விடயத்தில் தமிழரசுக் கட்சியின் முடிவிற்காக காத்திருந்த ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியினர் ஏமாற்றமடைந்திருக்கிறார்கள். குறிப்பாக, அவர்களின் நழுவல் போக்குக்கு இடையூறு ஏற்பட்டிருக்கின்றது. இந்த எரிச்சலை, தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நடைபெற்று முடிந்த சில நாட்களில் நடைபெற்ற அரசியல் பத்தியாளர்கள் உள்ளிட்ட சிவில் சமூகத் தரப்பினர் மற்றும் கட்சிகளுக்கு இடையிலான சந்திப்பில் காண முடிந்தது. தமிழரசுக் கட்சி பொது வேட்பாளர் விடயத்தை எதிர்த்தாலும், அதனைக் கண்டு கொள்ளாமல் தமிழ்ப் பொது வேட்பாளரை அறிவித்து ஆதரவு திரட்டுவோம் என்று அரசியல் பத்தியாளர்கள் முரண்டுபிடித்திருக்கிறார்கள். இது ரெலோ, புளொட் தலைமைகளை எரிச்சலூட்டியிருக்கின்றது. கள யதார்த்தம் தெரியாமல், வீம்புக்கு பொது வேட்பாளர் விடயத்தைக் கையாள முடியாது என்று அவர்கள் பதிலளித்திருக்கிறார்கள். இதனால், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணிக்குள் ஈபிஆர்எல்எப் மாத்திரமே பொது வேட்பாளர் விடயத்தில் உறுதியாக இருக்கின்றது. மற்றைய தரப்பினரான ஜனநாயகப் போராளிகளும் தமிழ்த் தேசியக் கட்சியினரும் முடிவெடுக்க முடியாமல் அல்லாடுகிறார்கள்.

இந்த நிலையில்தான், பொது வேட்பாளர் ஆதரவாளரான வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் ஒருவர், அரசியல் பத்தியாளர்களை சுமந்திரனை சந்திக்க வைத்திருக்கிறார். அரசியல் பத்தியாளர்களுக்கு சுமந்திரனைச் சந்திப்பதில் விரும்பமில்லை. ஆனால், அவரைச் சந்திக்காமல் விடயங்களை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த முடியாது என்பது, அந்த முன்னாள் அமைச்சரின் நிலைப்பாடு. அதனால்தான், அவரின் ஏற்பாட்டில் சந்திப்பு நடைபெற்றது. சுமந்திரன் எந்தத் தருணத்திலும் பொது வேட்பாளர் விடயத்தை ஆதரிக்க மாட்டார் என்பது முடிந்த முடிவு. அப்படிப்பட்ட நிலையில், அந்தச் சந்திப்பு அடிப்படையில் அர்த்தமற்றதுதான். ஆனாலும், இருதரப்பும் ஜனநாயக உரையாடலுக்காக சந்தித்துக் கொண்டதாக காட்டிக் கொண்டன. பொது வேட்பாளர்கள் ஆதரவு பத்தியாளர்களை பொது அரங்கிற்கு அழைத்து வந்து கேள்விகளால்  திக்குமுக்காடச் செய்யும் நோக்கம் சுமந்திரனிடம் இருந்திருக்கலாம். அதற்காக அவர், பொது விவாதம் என்ற விடயத்தை முன்வைத்து, இணக்கம் பெற்றிருக்கிறார். ஆனால், பொது விவாதம் என்று போனால், சிக்கல் வரும் என்று புரிந்து கொண்ட அரசியல் பத்தியாளர்கள் இப்போது அதில் பங்கெடுப்பதில் இருந்து தப்பித்துக் கொள்ள நினைக்கிறார்கள். பொது வேட்பாளர் ஆதரவு பத்தியாளர்களை பொது விவாத அரங்கில் கேள்விகளால் திக்குமுக்காடச் செய்தால், எதிர்காலத்தில் பொது வேட்பாளர் விடயத்தை தூக்கிச் சுமக்க முற்படுபவர்கள் அரங்கிற்கு வரத் தயங்குவார்கள். அதனால்தான், அவசர அவசரமாக பொது விவாதத்துக்கான திகதியை சுமந்திரன், ஊடக சந்திப்பை நடத்தி அறிவித்திருக்கிறார். 

தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் உள்ளவர்களின் பெரும்பாலானோர் விமர்சனங்களையும் கேள்விகளையும் எதிர்கொள்வதற்கு தயாராக இருப்பதில்லை. மற்றவர்களை நோக்கி துரோகி தொடங்கி அடையாள அரசியலைச் செய்வதற்கு தயாராக இருப்பார்கள். ஆனால், அவர்களை நோக்கி ஏதாவது விமர்சனத்தையோ கேள்வியையோ முன்வைத்தால், அதனை தனிப்பட்ட ரீதியாக எடுத்துக் கொள்வார்கள். அதனை, காலத்துக்கும் பெரும் வன்மமாக கொண்டு நடப்பார்கள். அது, அரசியல்வாதிகள் தொடங்கி சிவில் சமூகப் பிரதிநிதிகளாக தங்களை முன்னிறுத்தும் புலமையாளர்கள், அரசியல் பத்தியாளர்கள் உள்ளிட்ட பலரிடமும் உண்டு. இதனால், தமிழ்ச் சூழலில் எந்தவொரு விடயம் குறித்தும் பொது விவாத அரங்கைத் திறத்தல் என்பது அவ்வளவு சாத்தியமாவதில்லை. அப்படி நிகழ்ந்தாலும் அது ஒரு கட்டம் தாண்டி அவதூறுகளின் களமாகவே இருந்திருக்கின்றன. தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்தை முன்வைத்து ஆதரித்து வாதிடுவோரும், அதற்கு எதிராக கருத்துக்களை முன்வைக்கும் தரப்பினரும் இன்றைக்கு இரு முனைகளில் நிற்கிறார்கள்.  கிட்டத்தட்ட இருதரப்பினரும் ஒருவரையொருவர் எதிரிகளாக கருதுகிறார்கள். அப்படித்தான், இரு தரப்பினரதும் நடத்தைகள் உணர்த்துகின்றன. கருத்தியல் ரீதியாக மோதிக்கொள்வது என்பது அடிப்படையில் தனிமனித விரோதமோ குரோதமோ அல்ல என்ற சின்ன புரிதல் இல்லாமல் எந்தவொரு ஜனநாயக உரையாடல் களமும் ஆரோக்கியமானதாக இருக்காது. கருத்தியல் மோதலில் வெற்றி தோல்விகள் என்பது இரண்டாம் பட்சமானது. ஆனால், தமிழ்ச் சூழலில் விவாதத்தில் வெற்றி தோல்வி என்பது தவிர்க்க முடியாது என்பது மாதிரியான பட்டிமன்ற மனநிலை உண்டு. இதனால்தான் பொது விவாத அரங்குகளை நோக்கி பெரிதாக எந்தத் தரப்பும் நகர்வதில்லை. 

தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்தில் தமிழர் தேசம் முழுவதும் பொது விவாத அரங்குகள் திறக்கப்பட வேண்டும். அதன்மூலம், பல தரப்பினரின் எண்ணப்பாடுகளும் வெளிவரும். அதன்மூலம் புதிய செயற்திட்டங்களுக்கான வாய்ப்புக்கள் உருவாகலாம். ஆனால், வெற்றி - தோல்வி என்ற முடிவு அறிவிக்கப்பட்டுவிடும் என்ற நோக்கத்தைக் குறித்துச் சிந்திப்பவர்கள், தங்களுக்கு தோதான களமில்லை என்று உணர்ந்து கொண்டதும் அதில் பங்கெடுப்பதில் இருந்து பின்வாங்குகிறார்கள். அதுபோலத்தான்,  பொது விவாத அரங்கு என்ற பெயரில் ஒரு விடயத்தை  முன்வைக்கும் தரப்பினர், எதிர்த்தரப்பினரை செத்த பாம்பாக நினைத்து அடித்துத் தள்ளலாம் என்பதற்காக அதனை முன்னெடுக்கக் கூடாது. கடந்த பதினைந்து ஆண்டுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை நோக்கி, தற்போது பொது வேட்பாளர் விடயத்தை ஆதரிக்கும் அரசியல் பத்தியாளர்கள் பல அரங்குகளில் விமர்சித்திருக்கிறார்கள். சில கட்டங்களில் அந்த விமர்சனங்கள் கூட்டமைப்பை மக்கள் விரோத சக்திகளாக சித்தரிக்கும் அளவுக்கு இருந்தது. ஆனால், அவர்கள் இன்றைக்கு தாங்கள் முன்னெடுத்த பொது வேட்பாளர் விடயத்துக்கான ஆதரவு இல்லை என்ற நிலையில், விடயங்களை எதிர்கொள்வதில் இருந்து ஒதுங்கி ஓடத் தொடங்கிவிட்டார்கள். கருத்து மோதலில் தனிப்பட்ட வெற்றி தோல்வி, குரோதம் என்பன இல்லை என்பதை தமிழ் மக்களுக்கு அரசியல் வகுப்பு எடுக்க எத்தனிக்கும் தரப்பினர் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அந்தப் புரிதல் இல்லாமல், அரசியலைப் பேசுதல் என்பது அபத்தம். அது, எதிர்காலத்தில் இந்த அரசியல் பத்தியாளர்கள் உள்ளிட்டவர்களை மக்கள் ஒரு பொருட்டுக்குகூட மதிக்காத சூழலை உருவாகும். ஏற்கனவே, தமிழ்ச் சூழலில் சிவில் சமூக வெளி காவு கொடுக்கப்பட்டுவிட்டது. தனிநபர்களுக்காக கட்சி ஆரம்பித்துக் கொடுப்பதற்காகவும், பிரபலம் தேடுவதற்காகவும்தான், சிவில் சமூகப் பிரதிநிதிகள் என்று தங்களை முன்னிறுத்துபவர்கள் செயற்பட்டிருக்கிறார்கள் என்பதுதான் தற்போதைய உணர்நிலை.

அதேவேளை, பொது விவாத அரங்கில் தனியாவர்த்தனம் செய்யும் நோக்கமும் அவசியமற்ற ஒன்று. அது, எதிர்காலத்தில் பொது விவாத அரங்கிற்கான வாய்ப்புக்களை முழுவதுமாக இல்லாமல் செய்துவிடும். பொது வேட்பாளர் தொடர்பில் பொது விவாதத்தை நடத்த வேண்டுமாக இருந்திருந்தால், இரு தரப்பினருக்கும் பொதுவான கட்டமைப்பைக் கொண்டு நடத்தியிருக்க வேண்டும். அதுதான், ஆரோக்கியமானதாக இருக்கும். அப்படி நடத்தியிருந்தால், அனைத்துத் தமிழ்த் தேசியக் கட்சிகளின் நிலைப்பாடுகளையும் வெளிப்படையாக அறிந்து கொள்வதற்கான சூழல் ஏற்பட்டிருக்கும். அதுபோல, தமிழர் தேசத்தில் ஒவ்வொரு பகுதி மக்களும் என்ன உணர்நிலையில் இருக்கிறார்கள் என்பது பொது அரங்கில் ஆராயப்பட்டிருக்கும். ஏனெனில், அரசியல் முடிவுகள் என்பது எந்தவொரு தருணத்திலும் தனிப்பட்ட நபர்கள், தனித் தரப்புக்கள் மாத்திரம் ஆளுமை செலுத்தும் ஒன்றாக ஒருபோதும் இருக்கத் தேவையில்லை. அங்கு கூட்டு முடிவுக்கான வாய்ப்பு இருக்க வேண்டும். இப்போது, தமிழ்த் பொது வேட்பாளர் விடயத்துக்கு தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் ஆதரவு இல்லை என்பதுதான் களயதார்த்தம். ஆனால், அதுதொடர்பில் வெளிப்படையான உரையாடல்கள் நிகழ்வது வெளித்தரப்புக்களின் தேவைக்காக தமிழ்த் தேசிய அடையாளத்துக்குள் இருந்து கொண்டு இயங்கும் நபர்களை அடையாளம் காணவும் உதவும். அது எதிர்காலத்துக்கு நல்லது. 

அரசியல் நிலைப்பாடுகளை எடுத்தல் என்பது அடிப்படையில் மக்களுக்கான அறமும் அதுசார் தார்மீகமும் சார்ந்ததாக இருக்க வேண்டும். அங்கு தனிப்பட்ட நலன்கள், தன்முனைப்பு மனநிலை, குரோத உணர்வு, தாழ்வுச் சிக்கல்கள் இருக்கத் தேவையில்லை. அதனை தமிழ்த் தேசிய அரசியலில் ஈடுபடும் அரசியல் கட்சியினர், புலமையாளர்கள், அரசியல் பத்தியாளர்கள் தொடங்கி அனைத்துத் தரப்பினரும் உணர்ந்து கொள்ளவேண்டும். அந்தக் கட்டத்தை அடைவதற்கான மனநிலையும் துணிவும் இல்லையென்றால், தமிழ்த் தேசிய அரசியல் பரப்பின் பின்னடைவை ஒருபோதும் சரி செய்ய முடியாது. 

 

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction