free website hit counter

மங்கள: இனவாத அரசியலின் லிபரல் முகம்! (புருஜோத்தமன் தங்கமயில்)

பதிவுகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இலங்கையின் பௌத்த சிங்கள இனவாத அரசியல் களத்தில் ஒரு லிபரல் (தாராளவாத) முகமாக வலம் வந்த மங்கள சமரவீர மறைந்திருக்கின்றார். கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த அவர், சிகிச்சை பலனளிக்காத நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். 

தெற்காசியாவில் அதிகம் நிகழ்வது போலவே மங்களவும் ஓர் அரசியல் வாரிசாக மறைந்த பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவினால் அரசியலுக்கு அழைத்துவரப்பட்டார். அவரின் மூன்று தசாப்தங்களைத் தாண்டிய அரசியல் வாழ்வில் மூன்று ஜனாதிபதிகளை உருவாக்குவதில் மூளையாக செயற்பட்டிருக்கின்றார். அதுபோல மூன்று அரசாங்கங்களைத் தோற்கடிப்பதிலும் பங்களித்திருக்கின்றார். அதாவது சுருங்கச் சொன்னால், அவரை ஒரு கிங் மேக்கராக இலங்கை மக்கள் பார்த்திருக்கிறார்கள்.

ஜே.ஆர்.ஜெயவர்த்தனவோடு மீண்டும் ஆரம்பித்த ஐக்கிய தேசியக் கட்சியின் யுகத்தை தோற்கடிப்பதில் மங்களவின் பங்கு கணிசமானது. ரணசிங்க பிரேமதாச ஆட்சிக் காலத்தில் தென் இலங்கையில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகளுக்கு எதிராக அன்னையர் முன்னணி ஊடாக மஹிந்த ராஜபக்ஷவும் மங்களவும் முன்னெடுத்த போராட்டங்கள் சுதந்திரக் கட்சியை மீண்டும் ஆட்சிக் கட்டிலில் ஏற்றுவதற்கு துணை புரிந்தன. குறிப்பாக சந்திரிக்கா குமாரதுங்கவை சமாதானத்தின் முகமாக நாடு பூராகவும் சேர்ப்பித்ததிலும், அவரின் பங்களிப்பிருந்தது. அதுதான் சந்திரிக்காவின் ஆட்சியிலும் கட்சியிலும் அவரை முக்கிய நபராக்கியது. தன்னையொரு லிபரல்வாதியாக மங்கள முன்னிறுத்திக் கொண்டாலும் ஆட்சியை பிடிப்பதற்கும், அதனைத் தக்கவைப்பதற்கும் எந்தத் தரப்போடும் எவ்வகையான உறவையும் பேணலாம் என்கிற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். 2002 பொதுத் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க ஆட்சியைப் பிடித்த போது, அதனை தோற்கடிப்பதற்கான வேலைத் திட்டங்களை சந்திரிக்காவுக்காக அவர் முன்னெடுத்தார். ரணிலின் ஆட்சியைக் கலைத்து 2004 பொதுத் தேர்தலுக்கு சந்திரிக்கா சென்ற போது சுதந்திரக் கட்சியோடு ஜே.வி.பியை கூட்டுக்குள் கொண்டு வந்ததிலும் மங்கள மூளையாக செயற்பட்டார்.

அதுபோல, சந்திரிக்கா ஆட்சியின் இறுதிக் காலங்களில் மஹிந்தவுக்காக அவரோடு மோதிக் கொண்டதிலும் மஹிந்தவை ஜனாதிபதி வேட்பாளராக்கியதிலும் மங்கள பிரதானமாக இருந்தார். 2005 ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்ஷக்களை தென் இலங்கையின் புதிய காவலர்களாக நம்பிக்கைகளாக முன்னிறுத்தி பிரச்சாரங்களை ஒழுங்கமைத்தவரும் மங்களவே. அதற்காகத்தான் மஹிந்த அமைச்சரவையில் அவர் வெளிநாட்டு அமைச்சராக்கப்பட்டார். ஆனால், அவரின் அரசியல் நிலைப்பாடுகளுக்கும் ராஜபக்ஷக்களின் நடவடிக்கைகளும் முரண்பட ஆரம்பித்த 2007களில் அவர் அரசாங்கத்திலிருந்து வெளியேறினார். அப்போது, ராஜபக்ஷக்களின் வீழ்ச்சி மங்களவினாலேயே நிகழ்த்தப்படும் என்றவாறாக தென் இலங்கை ஊடகப் பரப்பு பேசியது. அது உடனடியாக நிகழாவிட்டாலும் எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர், அதுவே நிதர்சனமும் ஆகியது.

2004இல் ரணில் ஆட்சியை தோற்கடிப்பதற்காக எப்படி ஜே.வி.பி உள்ளிட்ட தென் இலங்கையின் அனைத்துச் சக்திகளோடும் பேச்சுக்களை நடத்தி ஓரணியில் திரட்டினாரோ, அதே மாதிரியே 2015இல் ராஜபக்ஷக்களைத் தோற்கடிப்பதற்காகவும் ஜே.வி.பி உள்ளிட்ட தென் இலங்கைத் தரப்புக்கள், புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்று அனைத்துத் தரப்புக்களோடு நீண்ட காலப் பேச்சுக்களை முன்னெடுத்து மைத்திரிபால சிறிசேனவுக்கான பாதையை அவர் அமைத்தார். மைத்திரியை பொது வேட்பாளராக முன்னிறுத்துவதற்காக சந்திரிக்காவையும் இரா.சம்பந்தனையும் பாவித்து ரணிலை போட்டியிலிருந்து விலகவைத்ததும் மங்களவே.

மங்கள அரசாங்கத்தில் இருந்தாலும் எதிரணியில் இருந்தாலும் அவர் முக்கியமான ஒருவராகவே இருந்தார். அவர் யாரோடு முரண்படுகிறாரோ அவர் ஆட்சியை இழக்கப்போகிறார் அல்லது ஆட்சிக்கே வர முடியாது போகும் சூழல் உருவாகிவிடும் என்கிற அச்சம் இயல்பாக எழுந்திருந்தது. மீண்டும் ராஜபக்ஷக்கள் ஆட்சியில் ஏறியதும் சிறிதுகாலம் அமைதியாக இருந்த மங்கள, கடந்த சில மாதங்களாக இளைஞர்களை இணைத்துக் கொண்டு ஜனநாயகத்துக்கான புதிய நம்பிக்கைகளை ஏற்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்தார். அதற்கான ஊடக சந்திப்பொன்றையும் அண்மையில் நடத்தியிருந்தார். அத்தோடு, ராஜபக்ஷக்களுக்கு எதிராக மீண்டும் பொது வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்தும் நடவடிக்கைகளில் அவர் ஈடுபட ஆரம்பித்திருந்தார். தென் இலங்கையின் முற்போக்கு சக்திகளும், தமிழ்க் கட்சிகளும் கூட மங்களவை ஒரு நம்பிக்கையாகவே பார்த்தன. அதாவது, எதிர்க்கட்சியாக இருக்கு ஐக்கிய மக்கள் சக்தியையோ, எதிர்க்கட்சித் தலைவரான சஜித்தையோ கூட நம்பாது, பாராளுமன்றத் தேர்தலில் இருந்து விலகி சிறிது காலம் ரிக்-டாக் இணைய செயலியில் பொழுது போக்காக காலம் கடத்திக்கொண்டிருந்த மங்களவை நம்பின. அதுதான், அவரை அவர் ஒதுங்க நினைத்தாலும் அரசியலுக்குள் மீண்டும் இயங்கும் ஒருவராக மாற்றியது.

தன்னுடைய அரசியல் வாழ்வில் நிகழ்ந்த தவறுகளுக்காக அவர் வெளிப்படையாக மன்னிப்புக் கோரவும், கடந்த காலத் தவறுகளை திருத்துவதற்கான வாய்ப்புக்கள் கிடைத்த தருணங்களில் அதனை பயன்படுத்தவும் செய்தார். சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்ட தருணத்தில், களுபோவில வைத்தியசாலை வளாகத்தில் இருந்துகொண்டு, “….கொலைகார ராஜபக்ஷக்களை ஆட்சிக்குக் கொண்டு வந்ததற்காக நான் அனைவரிடத்திலும் மன்னிப்புக் கேட்கிறேன்...” என்றிருக்கிறார். அதுபோல, மைத்திரி மஹிந்தவோடு இணைந்து சதிப்புரட்சி செய்த போது, மைத்திரியை ஒட்டுண்ணி என்றும் விமர்சித்திருக்கின்றார். மங்கள என்றைக்குமே பதவியில் இருக்கிறார்கள் என்பதற்காக அவர்களிடத்தில் பயத்தை வெளிப்படுத்தியதில்லை. இனவாத அரசாங்கங்களை உருவாக்குவதில் குறிப்பிட்ட காலம் வரையில் பங்காளியாக இருந்த அவர், நல்லாட்சி அரசாங்கத்தை தன்னுடைய லிபரல்வாத நம்பிக்கைகளின் போக்கிலேயே அமைக்க முயன்றார். நாட்டின் இனமுரண்பாடுகளுக்கு புதிய அரசியலமைப்பின் ஊடாக தீர்வு காணப்பட வேண்டும் என்பதும் அவரின் இறுதிக்கால விருப்பங்களில் ஒன்று. அதற்காக அவர் யாரோடும் பேசவும் யாரை வேண்டுமானாலும் எதிர்க்கவும் தயாராக இருந்தார். அவர் ஓர் அரசியல் பட்டாம்பூச்சியாக இருந்தார். கட்சிகள், சிவில் அமைப்புக்கள் என்கிற பூக்களுக்கு இடையில் மகரந்த சேர்க்கைக்கு உதவினார். அதில் பிறந்ததுதான் நல்லாட்சி என்கிற கனி. அந்தக் கனியை சரியாக பயன்படுத்துவதில் ரணிலும் மைத்திரியும் கோட்டை விட்டிருந்தார்களே அன்றி, நல்லாட்சியின் தோல்விக்கு மங்கள ஒருபோதும் காரணமாக இருக்கவில்லை.

மங்களவை நோக்கி பட்டாம்பூச்சி என்கிற பால்புதுமையினரை (LGBT) நோக்கிய பாலியல் வசையொன்றை தென் இலங்கை தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்தது. மைத்திரி ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்திலேயே மங்களவை நோக்கி அவ்வாறு நையாண்டி செய்திருந்தார். ஆனால், மங்கள தன்னை ஒரு தன்பாலீர்ப்பாளராக வெளிப்படையாக அறிவித்துக் கொண்ட ஒருவர். பௌத்த சிங்களவாதம் கோலொச்சும் அரசியலில் அடிப்படை –மதவாத கோட்பாடுகளை கேள்விக்குள்ளாக்கும் வகையில் தன்னுடைய பாலியல் தெரிவை வெளிப்படையாக அறிவித்துக் கொண்டவர் அவர். இலங்கையில் பால்புதுமையினருக்கான அங்கீகாரத்துக்காகவும் உழைத்தவர்.

தமிழ் மக்களைப் பொறுத்தளவில் மங்கள இனவாத அரசாங்கங்களின் மூளையே. கடந்த சில ஆண்டுகளாக அந்த மூளை இனவாத அரசாங்கங்களின் தேவைகளுக்கு அப்பாலும் நின்று இயங்கியிருக்கின்றது. அதுதான், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பிலான தீர்மானத்திற்கு இலங்கை அனுசரணை வழங்கியதற்கும் காரணமாகும். அத்தோடு, காணாமற்போனவர்களுக்கான அலுவலகம் அமைப்பு உள்ளிட்ட விடயங்களிலும் அவர் அக்கறையோடு இருந்தார். அதுதவிர தென் இலங்கையோடு ஊடாடுவதற்காக ஒரு கருவியாக மங்களவை தமிழ்த் தரப்புக்கள் நம்பவும் தொடங்கியிருந்தன. அந்தத் தருணத்தில்தான் அவர் மறைந்திருக்கின்றார். அது தமிழ்த் தரப்புக்களைப் பொறுத்தளவில் பின்னடைவே. இனவாத அரசியலின் லிபரல் முகம் மறைந்திருக்கின்றது... தன்னுடைய அடையாளங்களைப் பதிந்துவிட்டு.

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction