free website hit counter

சம்பந்தன் இனியும் கூட்டமைப்பின் தலைவரா?! (புருஜோத்தமன் தங்கமயில்)

பதிவுகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தொடர்ந்தும் ‘கூட்டமைப்பின் தலைவர்’ என்கிற தகுதியோடு இருக்கிறாரா? என்கிற கேள்வி எழுந்திருக்கின்றது. கூட்டமைப்பில் தற்போது அங்கம் வகிக்கும் மூன்று பங்காளிக் கட்சிகளில் தமிழரசுக் கட்சி தவிர்ந்த தமிழ் ஈழ விடுதலை இயக்கமும் (ரெலோ), புளொட்டும் சம்பந்தனை நிராகரித்துக் கொண்டு சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான கூட்டணியொன்றுக்கான பூர்வாங்க வேலைகளில் ஈடுபட்டிருக்கின்றன. 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48வது கூட்டத் தொடரை முன்வைத்து ஆணையாளர் அலுவலகத்துக்கு கூட்டமைப்பு அடையாளத்தைத் தவிர்த்துக் கொண்டு ரெலோவும் புளொட்டும் இன்னும் சில கட்சிகளுடனும் உதிரிகளுடன் இணைந்து அனுப்பியுள்ள கடிதத்தின் மூலம் அது அப்பட்டமாக வெளிப்பட்டிருக்கின்றது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கூட்டத் தொடரை தமிழ்த் தேசியக் கட்சிகளும், தரப்புக்களும் தமிழ் மக்களுக்கான நீதிக் கோரிக்கைகளை அடைவதற்கான வாய்ப்புக்களாக பயன்படுத்துவதைக் காட்டிலும் தங்களது தனிப்பட்ட மற்றும் கட்சி சார் அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காகவே பயன்படுத்தி வந்திருக்கின்றன. இம்முறையும் அவ்வாறான காட்சிகளே அரங்கேறி வருகின்றன. தமிழ்த் தேசியக் கட்சிகளிடம் இருந்து இம்முறை மூன்று கடிதங்கள் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. கூட்டமைப்பின் தலைவர் எனும் அடையாளத்தோடு சம்பந்தனால் ஒரு கடிதமும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் இன்னொரு கடிதமும், ரெலோவின் அழைப்பின் பேரில் புளொட், விக்னேஸ்வரன் உள்ளிட்ட கூட்டினால் மற்றொரு கடிதமும் அனுப்பப்பட்டிருக்கின்றன. இலங்கை தொடர்பில் இந்தக் கூட்டத்தொடரில் வாய்மூல அறிக்கையே சமர்ப்பிக்கப்படவுள்ள சூழலில், அது தொடர்பிலான அறிக்கையை மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் ஏற்கனவே தயாரித்து முடித்துவிட்டது. ஆனாலும், தங்களது தனிப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்காக தமிழ்த் தேசியக் கட்சிகள் கடிதங்களை அனுப்பி நாடகம் ஆடுகின்றன.

கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பத்துப் பேரும், பங்காளிக் கட்சிகளின் தலைவர்களும் கையெழுத்திட்ட கடிதமொன்றை அனுப்புவது தொடர்பில் இரா.சம்பந்தன், கூட்டமைப்பின் இன்னொரு பாராளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரனிடம் அறிவித்து அந்தக் கடிதத்தை தயாரிக்கும் பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருந்தன. அந்த விடயம், ரெலோவின் அழைப்பில் கூடிய கட்சிகளிடமும் உதிரிகளிடமும் இணைய வழி கலந்துரையாடலொன்றின் போது அறிவிக்கப்பட்டதாக சுமந்திரன் கூறுகிறார். சம்பந்தனின் கடிதத்தின் பிரதிகள் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டு கருத்துக்கள் கேட்கப்பட்டு, அதன் பின்னர் கையெழுத்துக்கள் பெறப்படுவதற்கு முன்னராகவே அவசர அவசரமாக ரெலோவின் அழைப்பில் கூடிய குழுவினர் இன்னொரு கடிதத்தை அனுப்பியிருக்கிறார்கள். ரெலோவின் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் புளொட்டின் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தவிர்ந்தால் கூட்டப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அடையாளத்தோடு ஆறு பாராளுமன்ற உறுப்பினர்களும், தமிழரசுக் கட்சியின் தலைவரும் மாத்திரம் கடிதத்தில் கையெழுத்திட முடியும். அப்படி நடந்தால், அது ஒட்டுமொத்தமாக தமிழரசுக் கட்சியின் கடிதம் எனும் அடையாளத்தைப் பெறும். அதனால் மனித உரிமைகள் ஆணையாளருக்கான கூட்டமைப்பின் கடிதத்தில் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும், மாவை சேனாதிராஜாவும் கையெழுத்திடுவது தவிர்க்கப்பட்டிருக்கின்றது. அதனாலேயே சம்பந்தனின் கூட்டமைப்பின் தலைவர் எனும் அடையாளத்தோடு குறித்த கடிதம் அனுப்பப்பட்டிருக்கின்றது.

மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் தொடர்பில் தமிழ்த் தேசியக் கட்சிகளை இணைத்துக் கொண்டு கடிதமொன்றை வரைவது தொடர்பில் ரெலோ கூட்டமைப்பின் தலைவர் என்ற ரீதியில் சம்பந்தனுக்கு எந்தவொரு தருணத்திலும் அறிவிக்கவில்லை. தமிழரசுக் கட்சித் தலைவரான மாவை சேனாதிராஜாவுக்கு அழைப்பு விடுத்து அவரும் அந்த சந்திப்புக்களில் கலந்து கொண்டிருக்கின்றார். இரு தசாப்த காலமாக தாங்கள் அங்கம் வகிக்கும் கூட்டமைப்பின் தலைமைக்கு அறிவிப்பு விடுக்காமல், இன்னொரு அணியொன்றை அமைக்கும் முயற்சிகளை ரெலோ முன்னெடுக்கின்றது என்றால், அது செல்வம் அடைக்கலநாதனதோ, குருசாமி சுரேந்திரன் உள்ளிட்டவர்களின் துணிச்சலான நடவடிக்கை என்று மாத்திரம் கொள்ள முடியாது. ஏனெனில், கூட்டமைப்பு சார்ந்து தமிழரசுக் கட்சி ஏக நிலையில் முடிவுகளை எடுத்த அனைத்துத் தருணங்களிலும் ரெலோ அதற்கு இணங்கியே சென்றிருக்கின்றது. அவ்வாறான இணக்கம் தவறு என்று சுட்டிக்காட்டப்பட்ட போதெல்லாம், தேர்தல் வெற்றி தோல்விகளைக் கருத்தில் கொண்டு செல்வம் அடைக்கலநாதன் அமைதியாகவே இருந்திருக்கிறார். அப்படிப்பட்ட தற்துணிவற்ற சுபாவத்தைக் கொண்டிருப்பவரின் எண்ணங்களில் கூட்டமைப்பினைத் தாண்டிய சிந்தனையொன்று ஏற்பட்டு அது செயலுருவம் பெறுகின்றது என்றால், அந்தப் பின்னணியை ஆய்ந்து ஆராய வேண்டியது முக்கியமானது.

சம்பந்தன் காலத்துக்குப் பின்னராக கூட்டமைப்பின் (செயற்பாட்டு) தலைமைத்துவம் என்பது தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் அல்லது சிவஞானம் சிறிதரன் உள்ளிட்டவர்களிடம் பகிரப்படும் சூழலே காணப்படுகின்றது. சிறிதரனின் இலக்கு தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவம் என்கிற அடிப்படையில், கூட்டமைப்பின் தலைமைத்துவம் சுமந்திரனிடம் செல்லும் வாய்ப்புக்களே உண்டு. கடந்த பொதுத் தேர்தலுக்குப் பின்னரான நாட்களில் பிராந்திய வல்லரசின் தூதுவராலய அரசியல் பிரிவு அதிகாரிகள், கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நடத்திய பேச்சுக்களின் போது இந்த விடயம் அதிகமாக விவாதிக்கப்பட்டது. பிராந்திய வல்லரசுக்கு சுமந்திரன் மீது குறிப்பிட்டளவான அதிருப்தி உண்டு. ஏனெனில், தங்களது எல்லா இழுப்புக்களுக்கும் அவர் வளைந்து கொடுக்கமாட்டார் என்பது அதற்கான காரணம். அப்படியான சூழலில் கூட்டமைப்புக்கு மாற்றாக பலமான கூட்டணியொன்றை தமிழ்ச் சூழலில் உருவாக்கி தங்களது அனைத்து ஆணைக்கும் ஆடும் ஒரு பொம்மையை தலைவராக்க வேண்டும் என்பது பிராந்திய வல்லரசின் அவா. அந்த எண்ணப்பாடுகளின் போக்கில்தான் ரெலோவையும் புளொட்டையும் கூட்டமைப்பில் இருந்து வெளியேற வைத்து விக்னேஸ்வரன் தலைமையில் புதிய கூட்டணிக்கான அத்திவாரத்தைப் போடுகின்றது. விக்னேஸ்வரனின் பிராந்திய வல்லரசுக்கான விசுவாசம் என்பது, அவர் பிரேமானந்தாவில் கொண்டிருக்கும் விசுவாசத்துக்கு ஒப்பானது. இந்தப் பின்னணியில்தான், தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் வெற்றிக்காக தங்கியிருக்கும் சூழலில் இருந்து வெளியேறும் துணிவு ரெலோவுக்கு வருவதற்கு காரணமாகும்.

கூட்டமைப்பின் நிலைப்பாடுகளுக்கு மாறாக, தலைமைக்கு அறிவிக்காமல் ரெலோவும் புளொட்டும் நடந்து கொண்ட விதம் தார்மீகத்துக்கு புறப்பானது என்று தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் சுமந்திரன் குறைபட்டார். அவர், ‘துரோகிகள்’ என்கிற வார்த்தையை பயன்படுத்தவில்லையே அன்றி, அவர்களை நோக்கி கடந்த கால ‘அரச ஒத்தோடிகள்’ என்கிற அடையாளத்தையும் பதிவு செய்தார். இவ்வாறான பிரளங்களுக்குப் பின்னரும் சம்பந்தனோ, கூட்டமைப்பை யாராலும் பிளவுபடுத்த முடியாது, கூட்டமைப்பு தொடர்ந்தும் ஒற்றுமையாகப் பணிக்கும் என்று கூறியிருக்கின்றார்.

கூட்டமைப்பு தோற்றம் பெற்றது முதல் அதன் தலைவராக சம்பந்தன் இருந்து வந்தாலும், உத்தியோகபூர்வ கடிதங்களில் கையெழுத்திடும் போது, அவர் தன்னை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவர் என்றே குறிப்பிட்டு வந்திருக்கின்றார். 2015க்குப் பின்னரே அவர் தன்னை கூட்டமைப்பின் தலைவர் என்றும் குறிப்பிட்டு கடிதங்களில் கையெழுத்திட்டார். ஆனால், இன்றைக்கு மீண்டும் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவர் எனும் அடையாளத்துக்கே சம்பந்தன் செல்ல வேண்டியிருக்கின்றது. ஏனெனில், கூட்டமைப்பில் தமிழரசுக் கட்சியைத் தவிர இருந்தவர்கள் எல்லோரும் வெளியேறிச் சென்றுவிட்டதான சூழலே இன்றிருக்கின்றது.

2015 பொதுத் தேர்தலில் கூட்டமைப்பு பெற்ற ஏக நிலை வெற்றியோடு, அதன் வீழ்ச்சி ஆரம்பித்திருந்தது. இந்தப் பத்தியாளர் அதனை அடிக்கடி சுட்டிக்காட்டியும் வந்திருக்கின்றார். கடந்த பொதுத் தேர்தல் காலத்தில் அது அப்பட்டமாக வெளிப்பட்டது. மக்களுக்கான நலன், நீதிக் கோரிக்கைகள் என்கிற நிலைகள் தாண்டி தனிப்பட்ட நலன், பதவி, பகட்டு அதற்கான குழிபறிப்புக்கள் என்பதே அரசியல் என்ற நிலைப்பாட்டுக்குள் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளும் தலைவர்களும் எப்போதோ வந்துவிட்டார்கள். அந்த நிலைதான் இந்தச் சீரழிவுக்கு முக்கிய காரணம். அதற்கான பொறுப்பை சம்பந்தன் உள்ளிட்ட அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். தமிழ் மக்களின் விடுதலைக்காக பல பேரின் இரவு பகல் பாராத உழைப்பினால் உருவாகிய கூட்டமைப்பு என்கிற ஓர் உன்னத அடையாளம் கண் முன்னலேயே, அழிந்து போவதைக் காணுவது வேதனையானது. இப்போது அதுதான் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula