free website hit counter

சிறீதரனின் குறளி வித்தை! (புருஜோத்தமன் தங்கமயில்)

பதிவுகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இன்றைய தமிழர் அரசியலில் தமிழரசுக் கட்சிக்குள் இருப்பவர்கள் குறளி வித்தை காட்டும் அளவுக்கு வேறு யாரும் காட்டுவதில்லை. கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தொடங்கி அந்தக் கட்சியின் பெரும்பாலான தலைவர்களும் நாளொரு வண்ணமும் பொழுதொரு நடிப்புமாக வித்தை காட்டிக் கொண்டிருப்பார்கள். கடந்த சில நாட்களாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நடிகர் திலகமாகவே மாறி நின்று அரங்காற்றிக் கொண்டிருந்தார். அவர் அரசியலுக்கு வந்த கடந்த ஒரு தசாப்த காலத்தில் தன்னையொரு தேர்ந்த நடிகரென்று பலமுறை நிரூபித்திருக்கிறார். ஆனால், கடந்த வாரம் அவர் வெளிப்படுத்திய நடிப்பு சிவாஜி கணேசனை மிஞ்சும் அளவுக்கானது. 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடர்களை அதன் கனதி, நோக்கம் அறிந்து அணுகும் தரப்புக்கள் தமிழ்த் தேசியப் பரப்பில் மிகவும் குறைவு. ஒவ்வொரு கூட்டத் தொடரின் போதும் தாயகத்திலிருந்தும் புலம்பெயர் தேசங்களிலிருந்தும் ஜெனீவாவை நோக்கி பலரும் படையெடுப்பார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள், மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளையோ, ஆளுமை செலுத்தும் மனித உரிமை அமைப்புக்களையோ சந்தித்ததில்லை; பேசியதுமில்லை. தமிழ் மக்களின் நீதிக் கோரிக்கைகளுக்கான ஏற்பாடுகளுக்காக முயன்றதும் இல்லை. மாறாக, பக்க அறைகளில் நடைபெறும் அமர்வுகளில் வெறும் பார்வையாளர்களாக இருந்துவிட்டு, அங்குள்ள உணவகங்களில் சாப்பிட்டுவிட்டு வருவார்கள். சிலவேளை தமிழ் இணைய ஊடகங்களுக்கு பேட்டிகளை வழங்குவார்கள். அந்தப் பேட்டிகள் ஏற்கனவே தெளிவாக கேள்வி பதில் தயாரிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது மாதிரியிருக்கும். அவர்களின் அதியுச்ச பங்களிப்பு அந்தப் பேட்டியாகத்தான் இருக்கும். அந்தப் பேட்டியின் பகுதிகளை தாயகத்திலுள்ள ஊடகங்களும் செய்தியாக வெளியிடும். அதன் மூலம், ஜெனீவாவில் தாங்கள்தான் பெரும் முயற்சிகளை இலங்கை அரசுக்கு எதிராக மேற்கொண்டது மாதிரியாக காட்டிக் கொள்ள முயல்வார்கள். அத்தோடு ஜெனீவா பயணத்துக்காக சுவிஸ் வழங்கிய விசா அனுமதியை வைத்துக் கொண்டு, அங்குள்ள உறவுகள், நண்பர்களை பார்த்துவிட்டு வருவதுதான் பலரின் பிரதான நோக்கமாக இருந்திருக்கின்றது. இவ்வாறானவர்களின் பயணத்துக்காக புலம்பெயர் தரப்புக்கள் மில்லியன் பெறுமதியில் பணத்தினை செலவிட்டிருக்கின்றன.

ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று நெருக்கடிகளினால் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர்கள் இணைய வெளியில் நடத்தப்படுவதனால், தாங்களும் ஜெனீவாவுக்கு செல்கிறோம் என்று கடந்த காலத்தில் படம் காட்டியவர்களினால் எதுவும் செய்ய முடியவில்லை. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரை முன்வைத்து ஊடகங்களில் செய்தியாக முடியவில்லை. குறிப்பாக மக்களின் மண்டையில் மசாலா அரைக்க முடியவில்லை. அதனால்தான், மனித உரிமைகள் பேரவைக்கு தாங்களும் கடிதங்களை அனுப்புகிறோம் என்கிற பெயரில் குறளி வித்தை காட்டியிருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் சார்பில் பிரதிநிதிகளாக தேர்தெடுக்கப்பட்டவர்களுக்கு குறைந்த பட்சம் ஜெனீவா அமர்வுகளின் கால அட்டவணை, அதன் முக்கியத்துவமாவது தெரிந்திருக்க வேண்டும். இலங்கை விவகாரத்துக்கு எந்தெந்தக் கூட்டத் தொடரில் அதிக கரிசனை வெளிப்படுத்தப்படுகின்றது, இலங்கை மீதான தீர்மானங்களின் படிமுறை என்ன என்றாவது தெரிந்திருக்க வேண்டும். ஆனால், இங்குள்ள தமிழ்க் கட்சிகளுக்கு அதிலுள்ள முக்கியஸ்தர்கள் பலருக்கும் அவ்வாறான எதுவுமே பெரும்பாலும் தெரிவதில்லை. குறிப்பாக அவர்கள் தெரிந்து கொள்ள முயல்வதில்லை. ஏனெனில், அவர்களின் நோக்கம் இங்குள்ள ஊடகங்களில் ஜெனீவா கூட்டத் தொடர்களை முன்வைத்து தாங்கள் செய்தியாக வேண்டும் என்பது மட்டுந்தான்.

அவ்வாறானதொரு குறளி வித்தையைத்தான் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் மனித உரிமைகள் பேரவை அமர்வுகளை முன்வைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் சிவஞானம் சிறீதரன், சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் முன்னெடுத்தனர். தமிழ்த் தேசிய பாராளுமன்ற உறுப்பினர்கள் எனும் கடிதத் தலைப்பில் மனித உரிமைகள் ஆணையாளருக்கான கடிதமொன்றை தயாரித்திருக்கின்றனர். அந்தக் கடிதம் அனுப்பப்பட்டதாக அந்தக் கடிதத்தில் கையெடுத்திட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் ஊடகம் செய்தி வெளியிட்டிருக்கின்றது. ஆனால், அந்தக் கடிதம் தயாரிக்கப்பட்டது உண்மை. ஆனால் அனுப்பப்படவில்லை என்று சிறீதரன் மறுத்திருக்கின்றார். குறித்த கடிதத்தின் பிரதியொன்று இணைய ஊடகமொன்றில் அண்மையில் வெளியானது. அதிலிருந்து கடிதம் தயாரிக்கப்பட்ட விதம், நோக்கம் என்பன சிரிப்புக்குள்ளாகியிருக்கின்றது. சிறீதரனும் அவரது பரிவாரமும் கடந்த காலம் இவ்வளவுக்கு நக்கல் செய்யப்பட்டது இல்லை எனும் அளவுக்கு அவ்வளவு நையாண்டிகளை சந்தித்து வருகின்றன.

கடிதமொன்று என்ன நோக்கத்துக்காக எழுதப்படுகின்றது என்பதை வைத்து அந்தக் கடிதம் எப்படி எழுத வேண்டும் என்ற வரையறை இருக்கின்றது. உறவுகளுக்கு எழுதப்படும் கடிதம் கொண்டிருக்கும் அம்சங்களை ஒத்த விடயங்களை உத்தியோகபூர்வமாக எழுதப்படும் கடிதங்கள் கொண்டிருக்க முடியாது. அதனால்தான், பாடசாலை மாணவப் பருவத்தில் கடிதம் எழுதுதல் என்பது ஒரு பிரதான பாடவிதானமாக அநேக நாடுகளில் பேணப்படுகின்றது. அதனை, நீண்ட காலமாக ஆசிரியராகவும் அதிபராகவும் இருந்த சிறீதரன் அறிந்திருக்கவில்லையா என்கிற கேள்வி, அவர் தயாரித்த கடிதத்தைப் பார்க்கும் போது எழுகின்றது. அத்தோடு, அந்தக் கடிதம் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட தயாரிக்கப்பட்டதாக காட்டப்பாட்டாலும், அது இங்குள்ள ஊடகங்களில் கவனத்தைப் பெறுவதற்காக எழுதப்பட்டதை காண முடியும். ‘தமிழ்த் தேசியப் பாராளுமன்ற உறுப்பினர்கள் – இலங்கை’ எனும் அர்த்தத்தில் கடிதத்துக்கான தலைப்பையிட சிறீதரன் முயற்சித்திருக்கிறார். ஆனால், அவரது அவசரமோ அல்லது மொழிப் பிரச்சினையோ, ‘தமிழ் தேசிய பராளுமன்ற உறுப்பினர்கள் – இலங்கை’ என்றவாறாக கடிதத்தலைப்பு அமைந்திருக்கின்றது. ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு பாராளுமன்ற உறுப்பினர் என்று எழுதுவதில் என்ன பிரச்சினையென்று தெரியவில்லை. அவர் ஏன் பராளுமன்ற உறுப்பினர் என்று எழுதினார் என்பது கேள்வி. அத்தோடு, அந்தக் கடிதத்தில் கையெழுத்திட்ட சாள்ஸ் நிர்மலநாதன், கலையரசன் ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்களும், ஏனைய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஆறு பேரும்கூட கடிதத்தின் தலைப்பை கவனிக்காமலா கையெழுத்திட்டிருக்கிறார்கள்? கடிதத்தில் தலைப்பையே சரியாக எழுத முடியாதவர்கள், எப்படி கடிதத்தின் உள்ளடக்கத்தில் என்ன இருக்கின்றது என்பதை வாசித்து அறிந்திருப்பார்கள்? இவர்களின் உண்மையாக நோக்கம் என்பது எவ்வளவு அபத்தமானது. புலம்பெயர் தேசங்களில் ஐக்கிய நாடுகளுக்கு கடிதம் எழுதுகிறோம் என்று முன் தயாரிக்கப்பட்ட வரைவுகளுடன் பலரும் இருக்கிறார்கள். அவர்களுக்கு தங்களின் ஏவலாளர்களாக இங்கு சிலர் தேவைப்படுகிறார்கள். அப்படியானவர்களின் ஒருதரப்பாக சிறீதரன் தரப்பு செயற்பட முனைந்திருக்கின்றது.

சிறீதரன் தயாரித்த கடிதத்தின் உள்ளடக்கம் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் இன்னொரு பாராளுமன்ற உறுப்பினரான இரா.சாணக்கியன், தொலைக்காட்சி பேட்டியொன்றில் நையாண்டி செய்திருந்தார். அதாவது, அந்தக் கடிதத்தை பத்தாம் தரத்தில் பயிலும் மாணவன் எழுதும் கடிதத்தோடு ஒப்பிட்டிருந்தார். எந்தவொரு தருணத்திலும் பொறுப்புள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் யாரும் இவ்வாறு சிறுபிள்ளைத்தனங்களைப் புரிய மாட்டார்கள் என்றும் சொன்னார்.

இவற்றையெல்லாம்விட சிறீதரன் குறித்த கடிதம் தொடர்பில் இரண்டு மூன்று நாட்களாக ஊடகங்களிடம் தொடர்ச்சியாக பொய்களையே கூறி வந்தார். தமிழரசுக் கட்சிக்குள் தலைமைக்கு தெரியாமல் ஒரு குழு மனித உரிமைகள் ஆணையாளருக்கு கடிதம் எழுதியிருக்கின்றது என்ற விபரம் ஊடகங்களில் வெளியானதும், அப்படியொரு கடிதத்தில் கையெழுத்திடவில்லை என்று பாய்ந்தடித்துக் கொண்டு சிறீதரன் அறிவித்தார். அத்தோடு, கடிதத்தில் இருந்த இலத்திரணியல் கையொப்பங்கள் திருடப்பட்டு இருக்கலாம் என்ற கருத்து பலராலும் பகிரப்பட்டது. பின்னர், தமிழரசுக் கட்சியின் தலைவரும் பேச்சாளரும் நடத்திய ஊடக சந்திப்பில், குறித்த கடிதத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பம் திருடப்பட்டு இடப்பட்டிருந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தார்கள். அதன் பின்னர்தான், இனியும் பொய் புரட்டு நாடகம் ஆடினால் மோசமாக மாட்டிக் கொள்ள வேண்டி வரும் என்று தெரிந்து சிறீதரன், அந்தக் கடிதம் தன்னுடைய ஏற்பாட்டில் தயாரிக்கப்பட்ட விபரத்தை வெளிப்படுத்தினார். அப்போது, சிங்கக் கொடியை ஏந்திய சம்பந்தன், பின்னர் தான் சிங்கக் கொடியை ஏந்தவில்லை, காளியின் கொடியையே ஏந்தியாத பொய் சொன்ன போது தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். அதுபோல, தன்னுடைய பொய் பித்தலாட்டங்களையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற தோரணையில் பேசிக் கொண்டிருந்தார்.

தமிழ் மக்களின் நீதிக் கோரிக்கை, அரசியல் உரிமைப் பிரச்சினைகளை மறந்துவிட்டு பதவி, பகட்டுக்காக பொய்களாலும் புரட்டுக்களாலும் அரசியல் செய்யும் இவ்வாறான அரசியல்வாதிகள், தமிழ்ச் சூழலின் பெரும் வியாதிகளே. தமிழ்த் தேசியப் பரப்பில் அரசியல் தலைவர்களைக் காட்டிலும் அரசியல் வியாதிகளே கோலொச்சிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் மிகப்பெரும் சோகம்.

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction