கொரோனா வைரஸ் தொடர்பில் நாளுக்கு நாள் தெரிவிக்கப்படும் விடயங்கள் அதிர்ச்சி தருபவையாகவே உள்ளன. இந்த வைரஸ் காற்றில் பரவாது என முதலில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது குறைந்தது 8 மீட்டர் தூரம் வரையிலும் கூட காற்றின் மூலம் பரவலாம் என நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
அதே போல் கொரோனா வைரஸ், விலங்குகளைப் பாதிக்காது எனத் தெரிவிக்கப்பட்டு வந்த கருத்தினை, பொய்யாக்கும் வகையில், அமெரிக்காவின் நியூயார்க்சிட்டியில் அமைந்துள்ள புரேன்ஸ் உயிரியல் பூங்காவில் பரமாரிக்கப்பட்டு வரும் பெண் புலி ஒன்றுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அங்கு பணியாற்றி வந்த பராமரிப்பாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அவரிலிருந்து புலிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்று எண்ணப்படுகிறது. இதேவேளை அங்குள்ள மேலும், சில புலிகளுக்கு வறட்டு இருமல் போன்ற அறிகுறிகள் தென்படுவதாகவும், உயிரியல் பூங்கா நிர்வாகம் தெரிவித்திரப்பதாகவும் அறிய வருகிறது.
இதையடுத்து, இந்தியாவில் நாடு முழுவதும் உள்ள உயிரியல் பூங்காக்களில் பராமரிக்கப்படும் விலங்குகளைக் கண்காணிக்க வேண்டும் என்று மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.