free website hit counter

நீதிமன்றங்களுக்குள் முடங்கும் தமிழரசு?! (புருஜோத்தமன் தங்கமயில்)

பதிவுகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இலங்கைத் தமிழரசுக் கட்சியை தங்களின் தனிச் சொத்து என்று நினைத்து சிலர் கையாண்டதன் விளைவாக, அந்தக் கட்சி இன்று நீதிமன்றங்களுக்குள் முடங்கும் நிலை ஏற்பட்டிருக்கின்றது. தமிழரசுக் கட்சி எந்தக் குடும்பத்தினதும் முதுசம் அல்ல. அதுபோல, தனி நபர்கள் ஏகநிலையில் ஆளுகை செலுத்துவதற்கு அதுவொன்றும் ஆயுத இயக்கமும் அல்ல.

தந்தை செல்வா தமிழரசுக் கட்சியை ஆரம்பிக்கும் போதே, ஜனநாயக மரபுகளைப் பேணும் வகையிலான யாப்பையும் சேர்த்தே இயற்றினார். அந்த யாப்புக்கு அப்பாலான ஒழுங்குக்குள்ளோ, நெறிக்குள்ளோ கட்சி ஒருபோதும் சென்றுவிடக் கூடாது என்பது அவரது எதிர்பார்ப்பு. கட்சியின் தலைவராக இருந்தாலும் சாதாரண உறுப்பினராக இருந்தாலும் கட்சியின் யாப்புக்கு இணங்க வேண்டும் என்பது ஜனநாயகத்தின் உச்சபட்ச பேணுகை. அவ்வாறான ஒழுங்கோடு இருந்த கட்சி  யாப்புக்கு எதிரான தொடர் நடவடிக்கைகளின் விளைவினால் இன்று நீதிமன்றங்களுக்குள் முடங்கும் நிலை வந்திருக்கின்றது. அதுவும், நாட்டில் ஜனாதிபதித் தேர்தலும் பொதுத் தேர்தலும் வெகு சீக்கிரத்திலேயே நடைபெறவிருக்கின்ற நிலையில், தமிழ் மக்களின் முதன்மைக் கட்சி செயலற்ற நிலைக்கு செல்வது என்பது மிகப்பெரிய பின்னடைவாகும்.

தமிழரசுக் கட்சி புதிய தலைவரைத் தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியான சமயத்தில், இந்தப் பத்தியாளரிடம் பேசிய அந்தக் கட்சியின் முன்னாள் இளைஞர் அணித் தலைவரான மன்னாரைச் சேர்ந்த சிவகரன், தமிழரசுக் கட்சி நீதிமன்றங்களுக்குள் முடங்கப் போகின்றது என்று எச்சரிக்கை விடுத்தார். இதே விடயத்தை அவர், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் சிறீதரன் ஆகியோரிடமும் கூறியதாக அண்மையில் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் எழுதியிருந்தார். "...தமிழரசுக் கட்சியின் யாப்புத் தொடர்பில் அந்தக் கட்சியின் ஒரு சில தலைவர்களைத் தவிர, யாருக்கும் எந்தத் தெளிவும் இல்லை. தாங்கள் நினைத்ததையெல்லாம் செய்துகொண்டு செல்கிறார்கள். பொதுக்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை ஒருபோதும் 166 என்ற எண்ணிக்கையைத் தாண்ட முடியாது என்று  யாப்பு வரையறுக்கின்றது. ஆனால், இன்றைக்கு 345 பேர் பொதுக்குழு உறுப்பினர்கள் என்ற நிலையில் தேர்தலில் வாக்களிக்கப் போகிறார்கள். மேலதிகமாக 179 பேர் வாக்களிப்பது என்பது மோசடிகளுக்கு வழிவகுக்கும். அதுவும், யாப்புக்கு எதிராக இந்த எண்ணிக்கை என்பது கட்சி உறுப்பினர்களின் உரிமையை மீறும் செயல். அதற்கு எதிராக நீதிமன்றங்களை நாட முடியும். அதனை தமிழரசுக் கட்சியின் சில தலைவர்கள் உணர்ந்து கொண்டாலும் அதனைப் புறந்தள்ளி நடக்கிறார்கள். இது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்..." என்றும் சிவகரன் சுட்டிக்காட்டியிருந்தார்.

தமிழரசுக் கட்சியின் தலைவராக சிவஞானம் சிறீதரன் தேர்வு செய்யப்பட்டமை, அதன் பின்னராக புதிய மத்திய செயற்குழு தேர்வு செய்யப்பட்டமை மற்றும் தேசிய மாநாட்டினை நடத்துவது என்பவற்றிற்கு எதிராக திருகோணமலை நீதிமன்றத்தில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டு தடை உத்தரவு பெறப்பட்டிருக்கின்றது. இன்னொரு வழக்கு, இறுதியாக இடம்பெற்ற மத்திய குழு மற்றும் பொதுக்குழு முடிவுகளை முறையாக நடைமுறைப்படுத்துமாறு கோரி யாழ்ப்பாண நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு, தேசிய மாநாட்டுக்கான தடை உத்தரவு பெறப்பட்டிருக்கின்றது. இந்த இரண்டு வழக்குகளைத் தாண்டி மேலதிகமாக இன்னும் சில வழக்குகள் எதிர்வரும் நாட்களில் தொடரப்படலாம் என்று தெரிகின்றது. இந்த வழக்குகளின் பின்னணியில் இருப்பது எல்லாமும் யாப்பினை மீறிய கட்சியின் நடவடிக்கைகள் என்பனவே. அதனை சரி செய்யாது கட்சி முன்னோக்கி பயணிப்பது என்பது அவ்வளவு இலகுவானது அல்ல. 

தடை உத்தரவு பெறப்பட்டிருக்கின்ற தலைவர் தேர்தலில் வென்ற சிறீதரன், எந்தத் தடை வரினும் அதனை உடைத்தெறிவோம் என்ற தோரணையில் அண்மையில் கூறியிருக்கின்றார். தடைகளைத் உடைத்து எறிவது என்பது அரசியலில் முக்கியமானது. ஆனால், தடையின் தன்மைகள், அதன் பின்னணி தொடர்பாக எந்தத் தெளிவும் இல்லாமல், வாய்ச் சவடாலாக சொற்களை வீசுவது என்பது அறிவுபூர்வமானது அல்ல. தற்போது நீதிமன்றத்தில் தமிழரசுக் கட்சி தொடர்பில் தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளை வெற்றிகொள்வதற்கான வாய்ப்புக்கள் ஏதும் இல்லை என்று அந்தக் கட்சிக்குள் இருக்கின்ற ஜனாதிபதி சட்டத்தரணிகள் முதற்கொண்டு அனைத்துச் சட்டத்தரணிகளுக்கும் தெரியும். ஏனெனில், கட்சியின் பெருந்தலைவர் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா தொடங்கி பலரினாலும் கட்சியின் யாப்பு தொடர்ச்சியாக மீறப்பட்டு வந்திருக்கின்றது. அவை சிறுதவறுகள் அல்ல. தொடர்ச்சியாக படுமோசமான தவறுகள் இழைக்கப்பட்டிருக்கின்றன. அப்படியான நிலையில், நீதிமன்றங்களில் தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளுக்கு எதிராக வெற்றிபெறுவது சாத்தியமில்லை. மாறாக, நீதிமன்றங்களில் தலைகுனிந்து, யாப்பின் பிரகாரம் ஒழுகுகிறோம் என்று உறுதியளிக்க வேண்டும் என்ற நிலை இருக்கின்றது. 

இல்லையென்றால், வழக்குகளைத் தொடுத்த தரப்பினருடன் நீதிமன்றங்களுக்கு வெளியில் இணக்கப்பாடுகளை ஏற்படுத்தித்தான் பிரச்சினைகளை முடித்துக் கொள்ள முடியும். மாறாக, சவால் விடுப்பதோ, வாய்ச் சவடால் அடிப்பதோ எந்தவித நன்மையையும் கட்சிக்கு ஏற்படுத்தாது. அது கட்சியை வருடக் கணக்கில் நீதிமன்றங்களுக்குள் முடக்கி விடும்.அது, வீட்டுச் சின்னத்தில் மீது சவாரி செய்து பதவியைப் பிடிக்கலாம் என்று நம்பியிருக்கும் பலரின் எதிர்பார்ப்பை இல்லாமல் ஆக்கிவிடும். 

புதிய தலைவர் தெரிவு மற்றும் தேசிய மாநாட்டுக்கு எதிராக நீதிமன்றங்களில் பெறப்பட்டுள்ள தடை உத்தரவுகளினால், தன்னுடைய தலைமைப் பதவி காப்பாற்றப்பட்டிருப்பதாக மாவை சேனாதிராஜா மனதுக்குள் மகிழ்ந்து கொள்ளலாம். ஆனால், அதற்கான எந்த வாய்ப்புக்களும் இல்லை. ஏனெனில்,  கட்சியின் யாப்புக்கு எதிராக பொதுக்குழு உறுப்பினர்கள் அதிகளவானோர் நியமிக்கப்பட்டமை தொடர்பில் அவர் நீதிமன்றத்தில் பாரிய நெருக்கடியைச் சந்திக்க வேண்டியிருக்கும். கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் அல்லாத பலரையும் தலைவருக்கான தேர்தலில் வாக்களிப்பதற்காக அழைத்தமை மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களாக முன்னிறுத்தியமை என்று பாரிய தவறுகளை அவர் இழைத்திருக்கிறார். அதற்கான பொறுப்பை அவர் நீதிமன்றத்தில் ஏற்க வேண்டி வரலாம். 

இந்த வழக்குகளைத் தொடுத்தவர்களின் நிலைப்பாடுகளை நோக்கும் போது, கட்சித் தலைவருக்கான தேர்தலில் நிறைய குளறுபடிகள் உண்டு. ஆனபோதிலும் கட்சியை ஒருங்கிணைந்து நடத்துவதற்காக விட்டுக் கொடுப்புக்களைச் செய்து, முன்னகர முயலும் போது, ஒருசில தனிநபர்களின் பதவி வெறிக்காக கட்சியை மீண்டும் மீண்டும் மோசடியான நிலைக்கு நகர்த்தும் வேலைகள் இடம்பெறுகின்றன. அவற்றை சகித்துக் கொள்ள முடியாத நிலையில் இந்த வழக்குகள் தொடுக்கப்பட்டிருப்பதாக தெரிகின்றது. ஏற்கனவே, அறிவிக்கப்பட்ட மாதிரி தேசிய மாநாடு நடத்தப்பட்டிருந்தால், சிலவேளை இந்த வழக்குகள் தொடுக்கப்பட்டிருக்காது போயிருக்கலாம். சிறீதரன் தெரிவு, புதிய மத்திய செயற்குழு தெரிவு என்பன பொதுக்குழு அங்கீகரித்த பின்னரும் அதனை மாற்றியமைக்கும் செயற்பாடுகளை சிறீதரனும் அவரது அணியினரும் மேற்கொண்ட நிலையிலேயே, நீதிமன்றத்தினூடான நீதிக்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. இப்போது, பதவிக்காக கூச்சல் போட்டு கட்சியை முட்டுச் சந்தில் நிறுத்திவிட்டவர்கள், மற்றவர்கள் மீது அவதூறுகளைப் பரப்பும் வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதனைத் தவிர அவர்களிடம் எந்த மாற்றுத் திட்டமோ, செயலூக்கமோ இல்லை.

தலைவர் தேர்தலில் சுமந்திரன் வென்றிருந்தால், அடுத்த வாரமே தேர்தல் முடிவுகளுக்கு எதிராக வழக்குகள் தொடுக்கப்பட்டிருக்கும். அதற்கான ஏற்பாடுகளோடு தமிழரசுக் கட்சிக்குள் சிலர் தயாராகவே இருந்தார்கள். அவர்கள் அதனை வெளிப்படையாக அறிவிக்கவும் செய்தார்கள். அவர்கள்கூட எதிர்பார்க்காத வகையில் சிறீதரன் வென்றதனால், அவர்கள் அமைதியானர்கள். இப்போது, சுமந்திரன் வென்றிருந்தால் அதற்கு எதிராக வழக்குத் தொடர தயாராக இருந்த தரப்பினரும், கட்சியின் யாப்பில் ஏதாவது நெளிவு சுழிவுகள் இருக்கின்றனவா என்று யாப்பினை நன்றாக கரைத்துக் குடித்து வைத்திருப்பவர்களிடம் ஆலோசனை கேட்டு வருகிறார்கள். தான் வென்றிருந்தால் அந்த வெற்றிக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருக்கும் என்பதுவும், பொதுக்குழு உறுப்பினர்கள் நியமனத்தில் யாப்பு ஒழுங்கு முறை பேணப்படவில்லை என்பது தொடர்பிலும் சுமந்திரன் ஏற்கனவே வெளிப்படுத்தி இருக்கிறார். அப்படியான நிலையில், கட்சியின் யாப்பு ஒழுங்காக பேணப்படவில்லை என்பதை சுமந்திரன் ஏற்றுக் கொண்டிருக்கிறார். அதன்மூலம், அவரும் கட்சி யாப்புக்கு எதிரான செயற்பாடுகளுக்கு ஒத்துழைத்திருக்கிறார் என்பது தெளிவாகின்றது. அந்த நிலைப்பாடு, சம்பந்தனும், அவரின் பினாமி போல செயற்பட்ட மாவையும் கட்சி யாப்புக்கு எதிரான செயற்பாடுகளை தொடர்ச்சியாக செய்து வந்ததன் போக்கினை அங்கீகரிப்பதாகவே கொள்ள வேண்டும். கட்சிக்குள் எழும் கருத்து மோதல்களும் நிலைப்பாடு மாற்றங்களும் தமிழரசுக் கட்சியின் ஜனநாயகத் தன்மைக்கான எடுத்துக்காட்டு என்று ஊடகங்களிடம் பேசும் சுமந்திரன், கட்சியின் யாப்பு மீறப்படுகின்ற செயற்பாடுகளை கண்டும் காணாமல் விட்டமை என்பது அபத்தமானது. அத்தோடு, கட்சியின் யாப்புக்கு அமைவாக பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வு இடம்பெற்றதன் பின்னர், தலைவருக்குரிய தேர்தலை நடத்துவதற்காக ஒத்துழைத்திருக்க வேண்டும். மாறாக, அவரும் ஏனோதானோ என்னு கடந்திருக்கிறார் என்பதுதான் அவரையும் இன்றைக்கு முட்டுச் சந்தில் இழுத்து விட்டிருக்கின்றது. 

ஆயுதப் போராட்டம் முள்ளிவாய்க்காலுக்குள் முடங்கிப் போனதும், தமிழ் மக்களின் தலைவராக சம்பந்தன் உருவெடுத்தார். அவரை ஒரு சில கட்சிகளைத் தவிர, பிரதான தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தும் மூத்த தலைவராக ஏற்று அவரின் கீழ் ஒன்றிணைந்தார்கள். ஆனால், அவரோ, கிட்டத்தட்ட ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த தலைவர் போன்று, தன்னுடைய நிலைப்பாடுகளை எடுத்தார். அதாவது, தான் எடுக்கும் முடிவுக்கு எதிராக யாரும் எதிர்வினை ஆற்றக்கூடாது. அப்படியான நிலைப்பாடுகளை எடுத்தால், அவர்களை தேர்தல்களில் தோற்கடித்து வெளியே தள்ள வேண்டும். அதற்காக, பலரையும் தமிழரசுக் கட்சிக்குள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் சம்பந்தன் கொண்டு வந்தார். ஆனால், ஒரு கட்டம் வரையில் அவரின் செயற்பாடுகளை ஏற்றுக்கொண்ட கட்சியோ, கூட்டமைப்பினரோ இன்றைக்கு புறந்தள்ளும் நிலைக்கு வந்துவிட்டார்கள். அது, சம்பந்தனின் பதவி மோகம் மற்றும் தனிப்பட்ட குரோத மனநிலையின் விளைவால் ஏற்பட்டது. தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவிக்கு சுமந்திரன் வரக்கூடாது என்பது தொடர்பிலான எண்ணத்தினை சம்பந்தன், 2020களிலேயே வெளிப்படுத்திவிட்டார். அதுபோல, திருகோணமலை தமிழரசுக்குள் சண்முகம் குகதாசன் செலுத்தும் ஆளுமையை அவர் இரசிக்கவில்லை. அப்படியான நிலையில், குகதாசன் கட்சியின் செயலாளராக தெரிவு செய்யப்பட்டதை அவரினால் ஏற்க முடியவில்லை. அதனால், கட்சிக்குள் குழப்பங்களை ஏற்படுத்தும் செயற்பாடுகளுக்கு அவர் ஒத்துழைத்தார். குறிப்பாக, தலைவர் தேர்தலுக்கு வாக்களிப்பதற்காக தன்னுடைய அணியினர் ஆறு பேருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று சம்பந்தன் கோரியிருந்தார். அதற்கு, தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவும் இணங்கியது. இந்த ஆறு பேர் நியமனம் என்பது கட்சியின் யாப்புக்கு எதிரானது. 

நாட்டில் எவ்வளவு பொருளாதாரப் பிரச்சினை இருந்தாலும், தமிழ் மக்களை பிரித்தாளுவதிலும் அதிகாரங்களைப் பறிப்பதிலும் தென் இலங்கை ஒருபோதும் பின்நிற்பதில்லை. இப்போது, அரசியலமைப்பில் 22வது திருத்தம் என்ற பெயரில், மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரங்களை மீளப்பெறும் பிரேரணையை உதய கம்மன்பில கொண்டுவந்திருக்கிறார். அவர், தேர்தல் வெற்றியை நோக்கி இந்தத் திருத்தத்தை கொண்டு வந்திருக்கிறார். ஆனால், அந்தத் திருத்தம் நிறைவேற்றப்படுவதற்கான சாத்தியங்கள் காணப்படுகின்றன. ஏனெனில், அந்தத் திருத்தத்திற்கு எதிராக தென் இலங்கை இனவாதக் கட்சிகள் வாக்களிக்கும் வாய்ப்புக்கள் குறைவு. அப்படி வாக்களித்தால், அது அவர்களின் தேர்தல் வெற்றிகளைப் பாதிக்கும். இவ்வாறு சமய சந்தர்ப்பங்களைப் பாவித்து தென் இலங்கை இனவாத சக்திகள், தமிழர்களுக்கு எதிரான காய்களை நகரத்தும் போது பதவி வெறி, தனிப்பட்ட குரோதம் உள்ளிட்ட தீய எண்ணங்களினால் தமிழரசுக் கட்சி தன்னை கரைத்துக் கொண்டிருக்கின்றது. அது, தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் துரோகமாகவே பார்க்கப்படும். வாய்ச் சவடால், குழுமனநிலை, ஏதேச்சதிகார சிந்தனைகளை கைவிட்டு, ஆக்கபூர்வமான பக்கத்திற்கு தமிழரசுக் கட்சியினர் நகரவேண்டிய இறுதிக் கட்டம் இது. 

தமிழரசுக் கட்சி தற்போது விரைவாக செய்ய வேண்டியது, கட்சிக்கு எதிராக வழக்குகளை தொடுத்தவர்களுடன் நீதிமன்றத்துக்கு வெளியில் இணக்கப்பாடுகளை எட்டி, வழக்குகளை மீளப்பெற வைப்பது. அடுத்து, கட்சியின் யாப்பின் பிரகாரம் தெரிவுகளை மேற்கொண்டு ஒழுகுவது. இல்லையென்றால், தமிழரசுக் கட்சியை தமிழ் மக்கள் கைவிடும் சூழல் ஏற்படும். அப்போது, அந்தக் காட்சியைப் பார்த்து தென் இலங்கையின் இனவாதத் தரப்புக்கள் எக்காளமிட்டுச் சிரிக்கும். 

 

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction