free website hit counter

தமிழரசுக் கட்சி செய்ய வேண்டியது என்ன? (புருஜோத்தமன் தங்கமயில்) 

பதிவுகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

அரசியல்வாதிகளின் பரவணிக்குணம் என்பது எப்போதுமே தங்களின் தவறுகளையும் குற்றங்களையும் மறைத்து மற்றவர்கள் மீது குற்றஞ்சாட்டுவது மட்டுமே. அதுதான் அரசியலில் வெற்றி தேடித்தரும் என்று நம்புகிறார்கள். இப்போது நீதிமன்றங்களில் வழக்குகளை எதிர்கொண்டு நிற்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர்களும் தொண்டர்களும்கூட அரசியல்வாதிகளுக்கே உரிய பரவணிக்குணத்தை வெளிப்படுத்துவதிலேயே குறியாக இருக்கிறார்கள். மாறாக, விடயங்களை சுமூகமாக கையாள்வது தொடர்பிலான எந்தவித சிந்தனையையும் வெளிப்படுத்துகிறார்கள் இல்லை. 

தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவு தொடர்பிலான அறிவிப்பு வெளியான தருணம் முதல், அந்தக் கட்சி தனக்குள்ளேயே சேறுபூசுதல்களையும் பொய்புரட்டையும் செய்யத் தொடங்கி விட்டது. அது, கட்சியின் தமிழ்த் தேசிய அடையாளத்தை மிக மோசமாக சிதைத்திருக்கின்றது. அத்தோடு, சொந்தக் கட்சிக்குள்ளேயே ஒழுங்கோடும் ஒற்றுமையோடும் ஜனநாயக மனப்பான்மையோடும் இயங்கத் தெரியாதவர்கள் எப்படி, தமிழ் மக்களின் தலைமைக் கட்சியாக நின்று வழிநடத்த முடியும் என்ற கேள்வியையும் எழுப்ப வைத்திருக்கின்றார்கள். இந்தக் கேள்விக்கு தமிழரசுக் கட்சியின் எந்தத் தலைவரிடத்திலாவது பதிலை எதிர்பார்த்தால், அந்தப் பதில் மற்றவர்கள் மீது குற்றஞ்சாட்டுவதாக மட்டுமே இருக்கும். ஒருபோதும், தவறுகளில் அல்லது கட்சியின் சீரழிவில் தங்களின் பங்கு குறித்து பேசத் தலைப்பட மாட்டார்கள். 

அதற்கான அண்மைய உதாரணம், கிளிநொச்சியில் கடந்த வெள்ளிக்கிழமை தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் நடத்திய சந்திப்பிலும் அரங்கேறியது. முல்லைத்தீவைச் சேர்ந்த வைத்தியர் சிவமோகன், மட்டக்களைப்பைச் சேர்ந்த முன்னாள் மாநகர சபைத் தலைவர் சரவணபவன் ஆகியோர், தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவு, மத்திய செயற்குழுத் தெரிவு, பொதுக்குழு அங்கீகாரம் உள்ளிட்ட விடயங்களை முறையாக நடைமுறைப்படுத்தியிருந்தால், கட்சி இன்று நீதிமன்றங்களில் வழக்குகளைச் சந்தித்திருக்காது என்று கூறினார்கள். அப்போது, குறித்த சந்திப்பிற்கு தலைமை வகித்த மாவை சேனாதிராஜா, சிவஞானம் சிறீதரன் ஆகியோர், ஏற்கனவே நடந்த விடயங்களைப் பற்றி பேசுவதற்காக, இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்படவில்லை என்று கூறி, மடை மாற்றியிருக்கிறார்கள். 

தமிழரசுக் கட்சியின் தலைவராக நீண்ட பத்து ஆண்டுகளாக செயற்பட்ட மாவை, கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் நியமனத்தில் கட்சியின் யாப்பு ஒழுங்குக்கு மாறாக தொடர் குற்றங்களைப் புரிந்திருக்கிறார் என்பது தொடரும் குற்றச்சாட்டு. அதுபோல, தலைவருக்கான தெரிவின் போது, வாக்களித்தவர்களில் பலரின் நியமனம் யாப்பை மீறியது என்று அந்தத் தேர்தல் வாக்களிப்பின் போதே சுட்டிக்காட்டப்பட்டது. தேர்தல் சமயத்திலேயே கட்சி யாப்பினை மீறும் செயலை மாவை புரியும் போது, வேட்பாளர்களான சிறீதரனும், எம்.ஏ.சுமந்திரனும், சீ.யோகேஸ்வரனும் அதனைக் கண்டுகொள்ளவில்லை. மாறாக அங்கீகரித்து செயற்பட்டிருக்கிறார்கள். இந்த நிலை என்பது, யாருமே கட்சியின் யாப்புக்கோ ஒழுங்கு முறைக்கோ மதிப்புக் கொடுத்தவர்கள் இல்லை என்பதை வெளிப்படையாகக் காட்டுகின்றது. இவ்வாறான தவறு நிகழும் போதே, அது நீதிமன்றங்களில் கட்சியை முன்னிறுத்தும் என்று இவர்களுக்கு நன்றாகவே தெரியும். 

கிடைக்கும் வரை ஆதாயம் பார்க்கும் மனநிலையில் நின்றுதான், மாவை தொடங்கி தமிழரசுக் கட்சியின் தலைவர்கள் அனைவரும் செயற்பட்டிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் எதிர்பார்த்தது நிறைவேறாத போது, மற்றவர்களின் குற்றம் குறைகளை கூறிக்கொண்டு தங்கள் மீது உத்தம  வேடம் தரித்து உலாவ முயல்கிறார்கள். கட்சியின் யாப்பு ஒழுங்குக்கு அமைவாக அனைத்துச் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று இன்று நீதிமன்றங்களை நாடியிருக்கின்றவர்கள் மீது கட்சிக்கு துரோகம் இழைத்துவிட்டார்கள் என்று கூறும் தரப்பினரால், ஒருபோதுமே  கட்சி நடவடிக்கைகள் யாப்புக்கு அமைவாக நடைபெற்றன என்று வாதிட முடியாது. தங்களுக்கு கிடைக்கவிருந்த பதவி பகட்டுக்களை நீதிமன்ற வழக்குகள் தடுத்துவிட்டன என்பதுதான் அவர்களின் ஒரே கோபம். அந்தக் கோபத்தினை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாமல் பிரதான ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் வாய்ச் சவடால்களையும் சேறுபூசுதல்களையும் செய்து கொண்டிருக்கிறார்கள். 

தமிழரசுக் கட்சித் தலைவருக்கான தெரிவின் போது, பிரதேசவாதம், சாதியவாதம், மதவாதம், தென் இலங்கைத் தலையீடுகள், புலம்பெயர் பணமுதலைகளில் தலையீடுகள் என்று பல விடயங்கள் தாக்கம் செலுத்தியிருக்கின்றன. அதனை முழுவதுமாக திறந்து பேசுவதற்கு தமிழரசுக் கட்சியின் தலைவர்கள் யாரும் தயாராக இல்லை. அப்படிப் பேசுவதற்கு தயாராக இருந்தால், பல பசுந்தோல் போர்த்திய நரிகள் வெளிப்படுவார்கள். கட்சித் தலைவர் தேர்வில் போட்டியிட்டவர்களிலேயே மற்றவரை நோக்கி தமிழ்த் தேசியத் துரோகி என்று அடையாளப்படுத்தியவரில் இருந்து, மதவாதம் பேசி வாக்குச் சேகரித்தவர், பிரதேச வாதம் பேசி வன்மம் கக்கியவர்கள் வரையில் உண்டு. தமிழ்த் தேசிய அடையாளத்துக்குள் இருந்து கொண்டு பிரதேசவாதமும், சாதியவாதமும், மதவாதமும் பேசிக் கொண்டு, தமிழரசுக் கட்சியை வழிநடத்துவதற்காக தயாராக இருக்கிறோம் என்று அறிவித்தமை எல்லாம் என்ன வகையிலான அறத்தின் வழி வருவது என்று தெரியவில்லை. 

தமிழ்த் தேசியம் ஒன்றும் அற்பத்தனங்களில் கட்டியெழுப்பப்படவில்லை. மாறாக, பெருந்தியாகங்களினாலும் அர்ப்பணிப்புக்களினாலும் எழுந்து நிற்பது. அதனை தமிழ்த் தேசிய செல்நெறிக்குள் இயங்கத் தயாராக இருப்பவர்கள் முதலில் புரிந்து நடக்க வேண்டும். தமிழரசுக் கட்சி தன்னை தமிழ் மக்களுக்கான கட்சியாக கருதாமல் வெளித்தரப்புக்களின் நிகழ்ச்சி நிரலுக்காக இயங்க ஆரம்பித்தால், அது தொடர் வீழ்ச்சியைச் சந்தித்து நிற்கும். அது, தமிழ் மக்களின் நம்பிக்கையையும் பெருமளவு குலைக்கும். 

தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள், கிளிநொச்சியில் நடத்திய சந்திப்பில் வழக்குகளை நிபந்தனையின்றி மீளப்பெறுமாறு வழக்கு தொடுநர்களிடம் கேட்பதற்காக குழு அமைத்திருக்கிறார்கள். திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கு, கட்சியின் யாப்பினை  மீறி தலைவர் தேர்வு நடைபெற்றிருக்கின்றது. அதில், நிறையவே முறைகேடுகள் இடம்பெற்றிருக்கின்றன என்று கூறியே தொடுக்கப்பட்டிருக்கின்றது. அந்த வழக்கைத் தொடுத்தவருக்கு வழக்கை மீளப்பெறுமாறு, திருகோணமலையின் பிரதான ஆலய பிரதம குழு, சமயப் பெரியவர்கள், புலமையாளர்கள் குழு தொடர்ச்சியாக அழுத்தம் பிரயோகித்து வருகின்றது. அந்த அழுத்தங்கள் யார் தலையீட்டோடு நடைபெறுகின்றன என்பதை, கிளிநொச்சி தமிழரசுக் கட்சி முக்கியஸ்தர்கள் கூட்டம் வெளிப்படுத்தியது. யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றத்தில் வழங்கு தொடுத்தவரான பீற்றர் இளஞ்செழியன் கிளிநொச்சிக் கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார். அவரிடம் யாரும் நேரடியாக வழக்கினை மீளப்பெறுமாறு கோரவில்லை. வழக்குகளை நிபந்தனையின்றி மீளப்பெறுமாறு கோருதல் என்பது என்ன அடிப்படையிலானது என்று மாவை சேனாதிராஜா, சிறீதரன் தொடங்கி தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் வெளிப்படுத்துவது நல்லது. ஏனெனில், அந்த வழக்குகள் கட்சியின் யாப்பினை பின்பற்றி கட்சி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துவன. சிலவேளை அந்த வழக்குகள் மீளப்பெறப்பட்டாலும், கட்சியின் எந்தவொரு உறுப்பினரும் நாளை வழக்குத் தொடுக்க மாட்டார்கள் என்பதற்கான எந்த உத்தரவாதமும் இல்லை. ஏனெனில், கட்சியின் யாப்புக்கு மீறிய தொடர் நடவடிக்கைகளை கட்சி இழைத்திருக்கின்றது. அப்படியான நிலையில், இன்றைக்கு நிபந்தனையின்றி வழக்கை மீளப்பெறுதல் பற்றியோ, நீதிமன்றத்தில் வழக்குகளை முறியடிப்போம் என்று முழங்குவதினால் எந்தப் பயனும் இல்லை. அது, கட்சியை முடக்கும் நிலைக்கு கொண்டு சேர்க்கும். 

இன்றைக்கு, தமிழரசுக் கட்சியின் தலைவர்களிடம் இருக்கும் ஒரே தெரிவு, கடந்த கால தவறுகளை கழைவது தொடர்பிலான உறுதி மொழியை நீதிமன்றத்திலும் கட்சிக்காரர்களிடமும் வழங்குவதில் இருந்து ஆரம்பிக்க வேண்டியிருக்கின்றது. தொகுதிக் கிளை தொடங்கி, கட்சித் தலைவர் தெரிவு வரை கட்சியின் யாப்பின் பிரகாரம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை விரைவாக செய்ய வேண்டும். அதனை விரைவாக நடத்தியாக வேண்டும். இல்லையென்றால், பொதுத் தேர்தலும் ஜனாதிபதித் தேர்தலும் இந்த ஆண்டு நடைபெறவிருக்கின்ற நிலையில், கட்சியை நீதிமன்றங்களில் முடக்கிவிடும் செயற்பாடுகள் இடம்பெறுவதற்கான வாய்ப்புக்கள் உண்டு. எதிர்வரும் நாட்களில் இன்னும் சில வழக்குகள் கட்சித் தெரிவுகள், கடந்த தவறுகளுக்கு எதிராக தொடுக்கப்படும் என்று தெரிகின்றது. அப்படியான நிலையில், ஏற்கனவே நிகழ்ந்த தவறுகள் குறித்து நீதிமன்றங்களில் ஏற்று, நீதிமன்றங்கள் வழக்கும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி விரைவாக கட்சித் தெரிவுகளை தொகுதிக் கிளையில் ஆரம்பித்து நடத்தி முடிக்க வேண்டும். அதன் பிரகாரம், சிறீதரன் தன்னுடைய தலைவர் பொறுப்பை ஏற்பதே இப்போது இருக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வழி. அதனை விடுத்து, நீதிமன்றங்களில் வழக்கை முறியடிப்போம் என்று அறிக்கை அரசியல் நடத்துவது தமிழரசுக் கட்சிக்கும் தமிழ் மக்களுக்கும் நல்லதல்ல. அதனால், ஆதாயம் அடையப்போகிறவர்கள் தென் இலங்கைக் கட்சிகளின் துணைக்குழுக்களும், உதிரிகளும் மட்டுமே.

நீதிமன்றங்களில் தவறுகளை ஏற்று விரைவாக கட்சியை மறுசீரமைத்து வழிப்படுத்த வேண்டும். மாறாக, மாவையின் செல்நெறியான "...பார்க்கலாம் தம்பி, செய்யலாம் தம்பி..." என்பதற்குள் சென்றால், கட்சி எதிர்கொண்டுள்ள தற்போதைய சிக்கலை ஒருபோதும் தீர்க்க முடியாது. தற்போது, கட்சி சந்தித்துள்ள நெருக்கடியை தங்களின் தனிப்பட்ட ஆதாயம், பகை - பழியுணர்ச்சிகளை தீர்ப்பதற்காவோ, அடைவதற்காகவோ யாரும் முயலக்கூடாது. 

இந்த ஆண்டு நடைபெற இருக்கின்ற ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகள் தீர்மானம் மிக்க வாக்குகளாக இருக்கும். ஏனெனில், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்ஷக்கள் எழுச்சி பெற்றது மாதிரியாக தனித்த சிங்கள வாக்குகளினால் யாரும் வெற்றிபெறும் வாய்ப்புக்கள் இல்லை. அப்படியான நிலையில், தமிழ் மக்களின் வாக்குகளை அரங்கில் இருந்து அகற்றுவதற்கான செயற்திட்டங்களை ரணில் - ராஜபக்ஷக்கள் முன்னெடுத்திருக்கிறார்கள். அதில், பிரதானமானது ஜனாதிபதித் தேர்தல் புறப்பணிப்பு மற்றும் தமிழ்ப் பொது வேட்பாளர் விடயங்களாகும். தமிழரசுக் கட்சி கடந்த காலங்களில் ஜனாதிபதித் தேர்தல் புறக்கணிப்பு மற்றும் தமிழ்ப் பொது வேட்பாளர் விடயங்களுக்கு ஒத்துழைத்து செயற்பட்டிருக்கவில்லை. 2010 ஜனாதிபதித் தேர்தலிலேயே, ராஜபக்ஷக்களுக்கு எதிராக சரத் பொன்சேகாவை ஆதரித்திருந்தது. அப்படியான நிலையில், அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும் பிரதான வேட்பாளர்களில் ஒருவரை ஆதரிக்கும் நிலைப்பாட்டையே எடுக்கும் என்பது எதிர்பார்ப்பு. அப்படியான நிலையில், அது ஒருபோதும் ரணில்- ராஜபக்ஷக்கள் கூட்டுக்கு ஆதரவான நிலைப்பாடாக இருக்க வாய்ப்பில்லை. அதுபோல, வெற்றிவாய்ப்புள்ள சஜித் பிரேமதாசவைக் கைவிட்டு அநுரகுமாரவின் பக்கத்திற்கு திரும்புவதற்கான வாய்ப்புக்களும் இல்லை. அப்படியான நிலையில், சஜித்துக்கான தமிழ் வாக்குகளைக் குறைப்பதற்கான திட்டத்தின் போக்கில், தமிழரசுக் கட்சிக்குள் தங்களின் செயற்திட்டங்களுக்கு இணங்கக்கூடியவர்களை ரணில் - ராஜபக்ஷக்கள் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அதன்போக்கில், தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவு தொடங்கி அனைத்து விடயங்களிலும் கவனம் செலுத்துகிறார்கள். அந்த நிகழ்ச்சி நிரலின் போக்கில் யாராவது நீதிமன்றத்துக்குள் கட்சியை முடக்க முனைந்தால், அது மீள முடியாத பிரச்சினைகளை தோற்றுவிக்கும்.

தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களுக்கு அப்பால், தமிழ் மக்களின் நலனை முன்னிறுத்தி தமிழ்த் தேசிய அரசியலுக்கு தமிழரசுக் கட்சி தன்னை மீளத் தயார்ப்படுத்த வேண்டும். அதுவும் ஒரு சில மாதங்களுக்குள் அதனைச் செய்து முடிக்க வேண்டும். இல்லையென்றால், வரலாற்றுத் தவறிழைத்த கறுப்புப் பக்கத்துடன் அந்தக் கட்சி தன்னுடைய முடிவுரையை விரைவில் எழுதிக் கொள்ள வேண்டி ஏற்படலாம். அதற்கான பொறுப்பை தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் இரா.சம்பந்தன், மாவை தொடங்கி சிறீதரன், சுமந்திரன் என்று அனைவரும் ஏற்க வேண்டி வரும். 

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction