79வது லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவின் உயரிய தங்கச் சிறுத்தை விருதை (Leopard d’Or), இம்முறை ருமேனிய திரைப்படமான “Nu e locul tau aici” (நீ இங்கு உரித்தானவன் அல்ல), தட்டிச் சென்றது. ருமேனிய இயக்குனர் Florien Serban, 75,000 சுவிஸ் பிராங்குகள் மதிப்பான இவ்விருதை தட்டிச் சென்றார்.
மனைவியை இழந்த ஒரு தந்தைக்கும், அவரது பருவ வயது மகனுக்கும் இடையிலான புரிந்துணர்வு போராட்டத்தை மையகாக கொண்டது இத்திரைப்படம். பெல்ஜிய இயக்குனர் Fabrice Du Welz தலைமையிலான நடுவர் குழு இவ்விருதை Florien க்கு அறிவிக்கும் போது, அவருடைய திரைக்கதை பாணி, அவருடைய திரைப்பார்வை, காட்சி வடிவமைப்பில் அவருக்கு இருக்கும் விதிவிலக்கான பூரணமான திறமையை அடிப்படையாக கொண்டு இவ்விருதை அவருக்கு சமர்ப்பிக்கிறோம் என்றனர்.
இத்திரைப்படத்திற்கே சிறுவர் நடுவர் குழுவின் விருதும் கிடைத்தது.
சிறந்த நடுவர் விருதை, A Margem do Rio எனும் பிரேசிலிய திரைப்படத்திற்காக அதன் இயக்குனர்கள் பெற்றுக் கொண்டனர். ஓரினப்பாலினத்தவர்களின் கதையை மையமாக கொண்டது இத்திரைக்கதை. சிறந்த இயக்குனருக்கான விருதை, கொரிய இயக்குனர் Hong Sangsoo, அவரது திரைப்படத்திற்காக பெற்றுக் கொண்டார். அவருக்கு 2015 இல் சிறந்த திரைப்படத்திற்கான தங்கச் சிறுத்தை விருது கிடைத்திருந்தது. சிறந்த கதபாத்திரத்திற்கான விருதை இதே திரைப்படத்திற்காக அவரது ஆஸ்தான நடிகை Kim Minhee பெற்றுக் கொண்டார்.
சிறந்த அனுபவம் வாய்ந்த இயக்குனர்களின் திரைப்படங்களுக்கான பிரிவின் உயரிய விருதை, ஆர்ஜெண்டீனிய இயக்குனர் Alessandra Sanguinetti பெற்றுக் கொண்டார். இவருடைய “La ilusion de un verano sin fin” எனும் இத்திரைப்படம், ஒரு ஆவணத்திரைப்படம். இரு மைத்துனள்களை அவர்களுடைய சிறுபராயத்திலிருந்து அவர்களது நடுத்தரவயது வரை தொடர்ந்து படம்பிடித்து இத்திரைப்படத்தை உருவாக்கியிருந்தார். இவருடைய திரைப்படத்திற்கே சிறந்த முதலாவது முழுநீளத்திரைப்படம் எனும் விருதும் கிடைத்திருந்தது. விருதுகளை வென்ற அறதிகமானோர், பாலஸ்தீன மக்களுக்கும், ஒரே பாலினத்தவர்களுக்கும், சிறார்களுக்கும் விருதுகளை சமர்ப்பித்து உரையாற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.
விருதுகள் வென்ற திரைப்படங்கள் குறித்தும், நாம் பார்வையிட்ட மிகச்சிறந்த திரைப்படங்கள் குறித்தும் அடுத்தடுத்த பதிவுகளில் தொடர்ந்தும் வரும்.
- 4தமிழ்மீடியாவுக்காக : லொகார்னோவிலிருந்து ஸாரா
