free website hit counter

சர்வதேச ஆவணத் திரைப்பட விழா Vision du Reel - 2023

திரைப்படவிழாக்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஆவணத்திரைப்படத்தின் கூறுகளில் புனைவின் இடமென்ன?. இம்முமுறை சர்வதேச ஆவணத் திரைப்படவிழாவான Visions du Reel ல் கலந்து கொண்ட போது என்னுள் எழுந்த கேள்வி இது.

Visions du Reel, ஆவணத்திரைப்படங்களுக்கான புகழ்பெற்ற ஐரோப்பிய திரைப்பட விழா கடந்த வாரத்திலிருந்து தொடங்கி நடைபெற்று வருகிறது. சுவிற்சர்லாந்தின் பிரெஞ்சு மாநிலங்களில் ஒன்றான Vaud இன் Nyon மாநரகத்தில் வருடந்தோரும் நடைபெறும் இத்திரைப்பட விழா, ஆவணத்தொணியிலான முழுநீள, மற்றும் குறுநிதிரைப்படங்களின் புதிய வருகைகளுக்கும், அதன் இயக்குனர்களுக்கும் சர்வதேச அளவிலான சந்தைகளை திறந்துவிடும் மிக முக்கிய மையவிழாவாக கருதப்படுகிறது.

ஆயிரத்திற்கும் மேலான திரைப்படவியலாளர்கள், மாணவர்கள், ஊடகவியலாளர்கள், தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் என அனைத்து துறையினரையும் இங்கு காண முடியும். புதிய இயக்குனர்கள் பலர் இங்கு தமது அடுத்த முழு நீளத் திரைப்படங்களுக்கான கதைக்கரு, அதன் முன்னோட்டம், அதனை முழுமையாக்குவதற்கான செலவு என அனைத்தையும் தயாரிப்பாளர்களின் தேடலில் முன்வைப்பார்கள்.

ஒவ்வொரு வருடமும் தவறாமல் இங்கு சென்று கலந்துவரும் எனக்குச் சென்ற வருடம் கிடைத்த வாய்ப்பில், எனது முழு நீளத் திரைப்படத்திற்கான கதைக்கருவை இங்கு தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் முன்னாள் பகிர்ந்து கொள்ள முடிந்தது.

ஒவ்வொரு முறையும் இங்கு பார்வையிடும் திரைப்படங்களில் சில ஆவணத் திரைப்படங்கள், அதன் உருவாக்கல் தன்மையில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தவிடக் கூடியன. குறிப்பாக, புனைவின் பாணியில் ஆவணத் தன்மையை சொல்லும் திரைப்படங்கள், புனைவுக்குள் (Fictional) அடங்காது, ஆவணத்திரைப்பட விழா ஒன்றில் (Documentary Film Festival ) பங்கு பெறும் போது புனைவுக்கும் நிஜத்துக்கும் இடையிலான அந்த மெல்லிய கோடுத் தோன்றி தோன்றி மறையும். எப்படி இந்த திரைப்படங்களால் ஆவணத் திரைப்படமாக தன்னை நிலை நிறுத்தக் கொள்ளக்கூடியதாக இருக்கிறதென யோசிப்பேன்.

உதாரணம் 1 :

இம்முறை, மைய நீள மற்றும் குறுந்திரைப்படங்களின் போட்டிப் பிரிவில் எனக்கு பிடித்த சுவிஸ்/போர்த்துக்கல் இயக்குனர் Basil da Cunha வின் புதிய குறுந்திரைப்படமான “2720” பார்க்க கிடைத்தது.

https://www.visionsdureel.ch/en/film/2023/2720/

போர்த்துக்கல் நாட்டின், லிஸ்பொன் அருகில் உள்ள Rebolaria எனும் ஊரில் நடைபெறும் வன்முறைகள், போதைப்பொருள் பாவணை, காவல்துறை கெடுபிடிகள், இளைஞர்கள், குழந்தைகளின் மெலிந்த, நலிவான ஆனால் ஆபத்தான அன்றாட வாழ்க்கைத் தரம் என்பவற்றின் மத்தியில் கமெரா நகர்கிறது. சிறையில் இருந்து அண்மையில் விடுதலையான ஒரு இளைஞன், IKEA தளபாடக் கடையில் புதிதாக வேலை கிடைத்து, முதல் நாள் வேலைக்கு செல்வதற்கு வீட்டிலிருந்து வெளியில் வருகிறான். சுற்றிவர இருக்கும் பலர் அவனை கேலி செய்கின்றனர். சிலர் அவனுக்கு ஒரு வாகனம் கொடுக்க மறுக்கின்றனர். ஒரு வகையில் ஒரு வாகனத்தை தேடிப்பிடித்து, வேலைக்கு புறப்படும் போது பொலிஸ் கெடுபிடியில், தான் செய்யாத தவறு ஒன்றுக்காக அகப்பட்டுக் கொள்வதுடன் படம் முடிவடைகிறது.

25 நிமிடங்கள் கொண்ட குறுந்திரைப்படம், அந்த இளைஞன் வீட்டிலிருந்து வெளியில் புறப்படுவதிலிருந்து பொலிஸில் அகப்பட்டுக் கொள்ளும் வரை முடிந்தளவு அவன் பின்னால் Steadycam கமெராவாக தொடர்கிறது. இன்னொரு சிறு பெண், அவனது தம்பியைத் தேடுகிறாள். அவனும் எதிர்கால வன்முறையாளனாக இப்போதே மாறிவிடுவதை இறுதியில் அறிந்துகொள்கிறார். இருவரையும் கமெரா ஆரம்பத்திலிருந்து தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அவர்கள் சுற்றி சந்திக்கும் நபர்கள் அனைவரும் அந்த கிரமாத்தில் வாழ்பவர்களாகவே எம்மால் உணர முடிகிறது. அது தான் இந்த திரைப்படத்தின் ஆவணக் கூறுகள்.  இத்திரைப்படத்திற்கான Casting உம் நடந்திருக்க வேண்டும். ஆனால் இது ஒரு முழுமையான புனைவாகத் தான் சித்தரிக்க முடியுமா அல்லது ஆவணத் திரைப்படமாகவும் பார்க்கலாமா எனும் கேள்வியை எங்கு எழுப்புகிறதெனில், Mise en Scene உருவாக்கப்பட்ட விதத்தில். கதைக்களத்திற்காக அனைவரையும் ஒன்று சேர்க்கும் இடம், ஆங்காங்கு நிறித்தி அவர்களுக்கு கொடுக்கும் உரையாடல்கள், இயக்குனரின் பார்வையிலிருந்தே வருவதை உணர முடிகிறது. அதில் Mise en Scene நன்றாகவே தெரிகிறது.  ஆனால் இத்திரைப்படத்தை திரைப்படவிழாவினர் ஆவணத்திரைப்படமாக கொண்டாட முடிகிறது. மொத்தத்தில் அந்த கேள்வி கேட்க வேண்டிய அவசியம் இல்லை போலும்.

உதாரணம் 2

இம்முறை திரைப்பட விழாவில் கௌரவ விருந்தினராக அழைக்கப்பட்டவர்களில் ஒருவர் புகழ்பெற்ற இத்தாலிய இயக்குநர் Alice Rohrwacher. இவருடைய ஆவண, புனைவுத் திரைப்படங்கள், Cannes, Venice, Berlinale என முக்கிய ஐரோப்பிய சர்வதேச திரைப்பட விழாக்களில் வரிசையாக காண்பிக்கப்பட்டு வருவன. இவர், 2020ம் ஆண்டில் Omelia contadina எனும் குறுந்திரைப்படம் ஒன்றை உருவாக்கினார்.


புகழ்பெற்ற பிரெஞ்சு புகைப்படக் கலைஞர் JR உடன் இணைந்து இந்தத் திரைப்படத்தை உருவாக்கினார். இது ஆன்லைனில் இலவசமாக நீங்கள் பார்க்க முடியும். இது ஆவணத் திரைப்படமா, புனைவுத் திரைப்படமாக எனும் கேள்வி உங்களுக்குள் எழுந்துகொண்டே இருக்கும். நிஜத்தில் இதனை இரண்டு பிரிவுக்குள்ளும் அடக்கலாம்.

Alice தங்கியிருக்கும் இத்தாலிய கிராமம் ஒன்றில் விவசாயிகளின் அழிவில் உலகின் பல்லுயிர் பன்முகத்தன்மைக்கு (Bio Diversity) க்கு எந்தளவு நாசம் விளைவுக்கிறது என்பதனை மையக்கருத்தாக கொண்டு இந்த குறுந்திரைப்படத்தை உருவாக்கியிருந்தார். அதோடு விவசாயிகளின் அழிவுக்கு யார் காரணம் என்பதையும் சுட்டிக் காட்டியிருப்பார்.

நீங்கள் படம் பார்க்கையில் புரிந்துகொள்வீர்கள். இறந்து போன அல்லது வாழ்வை செய்வதறியாது முடித்துக் கொண்ட ஒரு சில விவசாயிகளின் மாபெரும் புகைப்படங்களை ஒரு ஊர்வலத்தில் மற்றைய கிராம வாசிகள், விவசாயிகள் கொண்டுவந்து, மண் தோண்டி புதைத்து, தங்கள் கோபத்தினையும், கவலையையும், விவசாயிகளின் அழிவும், கார்பரட்டிவ் நிறுவனங்களின் மண் ஆழுகையின் ஆபத்தையும் விமர்சித்து தமது பேச்சுக்களை நிகழ்த்துவார்கள்.

அந்த கோபம் அனைத்தும் அவர்களிடமிருந்து நிஜமாகவே வருவதை உணரக் கூடியதாக இருக்கும். ஆனால் அந்த மாபெரும் புகைப்படங்களை ஊர்வலமாக கொண்டுவந்து புதைத்தல் என்பது ஒரு Mise en Scène என்பதும் உங்களால் உணர்ந்து கொள்ள முடியும். இதெல்லாம் கடந்து, இந்த திரைப்படத்தை ஆவணத்திரைப்படமாகவா, புனைவுத் திரைப்படமாகவா கருதுவீர்கள் என்பது உங்களை பொருத்தது. இதன் இயக்குனர்கள் இருவரும் சொல்வது இது ஒரு கலைப் படைப்பு என்பது.

மொத்தத்தில் அந்த கேள்வி கேட்க வேண்டிய அவசியம் இங்கும் இல்லை போலும்.

உதாரணம் 3

கடந்தவருடம் ஒரு சேவை நிறுவனம் ஒன்றுக்காக சிறிய ஒரு குறுந்திரைப்படம் ஒன்றை நான் உருவாக்கியிருந்தேன். “நேர்மாறெனில்” என்பது அதன் தலைப்பு.

மொழிபுரியாத, அல்லது இன்னமும் புதிதாக கற்றுக் கொண்டிருக்கும் நபராக நீங்கள் ஒரு புதிய நாட்டுக்கு இடம்பெயர்ந்திருந்தால், உங்கள் பிள்ளைகள அந்நாட்டுச் சட்டதிட்டங்களின் கீழ், கலாச்சாரப் பண்புகளின் கீழ் இயங்கும் ஆரம்பபள்ளியில் சேர்த்து படிக்கவைக்கையில், ஒரு ஆசிரியர்/பெற்றோர் கூட்டத்தில், ஒரு பெற்றோராக என்னவெல்லாம் நீங்கள் சந்திக்க கூடும் என்பதே கதையின் கரு.

இந்த வருடக் கோடையில் நடைபெறும் ஒரு ஆவணத் திரைப்படவிழாவுக்கு இந்த திரைப்படத்தை கேட்டிருந்தார்கள். என் முதல் கேள்வியே, இதனை ஆவணத் திரைப்படமாக அடையாளப்படுத்த முடியாது தானே என்பது.

ஆனால் அவர்களை பொருத்தவரை, ஆவணத்திரைப்படம் ஒன்றுக்கான அனைத்து கூறுகளும் இதில் உள்ளன. கதாபாத்திரங்கள் அனைத்தும் நிஜ பிரதிபலிப்பின் கீழீருந்து உருவாக்கப்பட்டதையும் உணர முடிகிறது. இதனை எமது திரைப்படவிழாவில் காண்பிக்க விரும்புகிறோம் என்றார்கள். அவர்களது பதில் என்னை ஆச்சரியப்படுத்தியது.

கீழுள்ள அந்தக் குறும்படம் உங்களுக்குத் தோற்றுவிக்கும் அனுபவம் என்ன ?

(இந்த குறுந்திரைப்படத்தின் Subtitles இல்லை. அதற்கு காரணம் இருக்கிறது. இதில் வரும் பிரெஞ்சு மொழி உங்களுக்கு புரியாவிடினும் கதையின் கருத்து புரியும் என நினைக்கிறேன்.

உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து பேசுவோம்.

 


Photos : ©Visions du Reel

- 4தமிழ்மீடியாவுக்காக: நியோனிலிருந்து ஸாரா

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction