free website hit counter

ஒரு சக்திவாய்ந்த ஆவணத் திரைப்படம் TaxiBol

திரைப்படவிழாக்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இந்த வருட Vision du Reel சர்வதேச ஆவணத் திரைப்படவிழாவில், என்னை மிகவும் ஆச்சரியத்துக்கு உள்ளாக்கிய இன்னும் சில ஆவண குறுந்திரைப்படங்கள் மற்றும் மைய நீளத் திரைப்படங்களை பற்றி தொடர்ந்து எழுதவிருக்கிறேன். சினிமா ஒன்றை இப்படித்தான் செய்ய வேண்டும் எனக் காலம் காலமாக எழுதப்பட்டு வந்த பல விதிமுறைகளை உடைத்தெறிந்து புதிய வடிவங்களை தேடி நகரும் படங்கள் இவை.

இதில் முதலாவது Tommaso Santambrogio இயக்கத்தில் வெளிவந்த Taxibol. 49 நிமிடம் கொண்ட இந்த திரைப்படம் புனைவையும், ஆவணத்தன்மையையும் இணைத்து உருவாக்கப்பட்டது. ஆனால் அந்த வித்தியாசத்தை உணர முடியாவிடின், உங்களை இன்னமும் அதிர்ச்சியின் விளிம்பில் கொண்டு செல்லும் ஆபத்துச் சக்தி இந்த படத்துக்கு இருக்கிறது.

Lav Diaz ஐ தெரியுமா? புகழ்பெற்ற பிலிப்பைன்ஸ் இயக்குனர் அவர். அவர் இந்த படத்தின் இயக்குனர் அல்ல. ஆனால் அவர் தான் இந்த படத்தின் கதாநாயகன். கதை இது தான். அவர் கியூபா செல்கிறார். அங்கு ஒரு டாக்ஸி ஓட்டுனருடன் உரையாடுகிறார்.

பிலிப்பைன்ஸில் ஒரு காலத்தில் சர்வாதிகார அரசு நடத்திய Marcos இன் முக்கிய படைத் தளபதி ஒருவர் முதுமையடைந்த நிலையில் நீண்டகாலமாக கியூபாவில் அகதி அந்தஸ்து கேட்டு ஆனால் தலைமறைவின்றி, வெளிபப்டையாகவே அங்கு வாழ்ந்து வருவதாகவும், அவரை தேடிக் கண்டுபிடித்து அவர் தலையிலேயே சுடுமளவு தனக்கு கோபம் இருப்பதாகவும் அந்த டேக்ஸி ஓட்டுனரிடம் சொல்கிறார் Lav. இப்போது அவரைத் தேடி, அவரிருக்கும் ஊருக்குத் தான் இந்த டேக்ஸியில் செல்வதாகவும் சொல்கிறார். அவரை கண்டுபிடிப்பிதற்கு உதவி செய்யமுடியுமா என அந்த டேக்ஸி ஓட்டுனரிடமே கேட்கிறார். அவரும் கண்டுபிடிப்பதற்கு ஒத்துக் கொள்கிறார்.

இவ்வளவு நேர கதை நகர்விலும் எந்த சந்தேகமும் ஏற்படாது. நிஜமாகவே தற்செயலாக ஒரு டேக்ஸி ஒட்டுனரை சந்தித்து இப்படி கேட்டால் எப்படி இருக்குமோ அந்த உணர்வு தான் ஏற்படும்.

ஆனால் அடுத்து வரும் 30 நிமிடங்கள் தான் ஆச்சரியமானது. அந்த புகழ்பெற்ற படைத் தளபதி எப்படி முதுமை நிலையில் தனது வாழ்க்கையை நடத்துகிறார் என்பதை காண்பீர்கள்.

அவருக்கு அவ்வளவு வயது சென்றும் அவரது கொடூரத் தன்மைக்கும், அவரின் பண்ணை வீட்டில் அவர் மற்றவர்களை நடத்தும் விதத்திற்கும் மாத்திரம் எந்தவொரு குறையும் இல்லை என்பதனை உணர்ந்துகொள்வீர்கள்.

ஒரு கட்டத்தில் அவர் நிஜமாகவே இப்படித்தான் இருக்கிறாரா எனும் சந்தேகம் ஏற்படும் அளவுக்கு நிஜ உணர்தல்களை தூண்டும் கதாபாத்திர தேர்வை அந்த வயோதிபரிடம் காணலாம்.

கற்பனை செய்து பாருங்கள். இலங்கையின் இறுதியுத்தத்தில் நடந்த இன அழிவுக்கும், அதனை நிகழ்த்திய முக்கிய தலைவர்களையும் ஒரு 30 வருடங்களுக்கு பிறகு, அவர்கள் இன்னுமொரு நாட்டில் ஆடம்பர வாழ்க்கையை வாழும் நிலையில், அவர்களை ஒரு இலங்கை திரைப்பட இயக்குனராக நீங்கள் தேடிச் செல்கிறீர்கள், அதற்கு ஒரு டேக்ஸி ஓட்டுனரிடம் உதவி கேட்கிறீர்கள். ஒரு கட்டத்தில் அவர்களின் பண்ணைவீட்டை கண்டுபிடித்து அவர்களது அன்றாட வாழ்க்கையை படம்பிடிக்கிறீர்கள் என்றால் எப்படி அந்த கதையின் தன்மை இருக்கும்.

ஒரு கொடூர அரசியல்வாதியின் இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் எப்படியெல்லாம் இருக்கலாம், அதனை மிக கவர்ச்சிகூடிய வெளை நிற காட்சிப்பதிவில் அழகிய Mise en Scene Composition இல் ஒரு படத்தில் பார்க்க கிடைத்தால் எப்படி இருக்கும் என்பதற்கு இந்த படம் ஒரு எடுத்துக்காட்டு.

நிச்சயம் ஒரு திரைக்கதைப் பாணியின் புதிய முகங்களை திறந்துவிடும் சக்தி இந்த படத்திற்கு இருக்கிறது. ஏனெனில் படம் முடிவடையும் போது, தனது இளமைக் காலத்தில் கொடூரங்களைப் புரிந்த ஒருவனுக்கு, அவன் எவ்வளவு ஆடம்பர வாழ்க்கையை தனது கடைசி நாள் வரை வாழ்ந்தாலும், தனித்துவிடப்பட்டவனாக, நித்திரை இல்லாதவனாக, அன்பின் ஒரு சிறுதுளிகூட இல்லாது வற்றிப் போன முகத்தோடு கடைசி வாழ் நாட்களை எண்ணுகிறான் எனும் உணர்வு உங்களுக்கு ஏற்படும்.


- 4தமிழ்மீடியாவுக்காக: ஸாரா

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction