free website hit counter

புனைவின் மெருகில் - O Jacaré

திரைப்படவிழாக்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், சர்வதேச முழுநீளத் திரைப்படங்களின் போட்டிப் பிரிவில்  சுவிற்சர்லாந்து - போர்த்துக்கல் இயக்குனர் பாசில் த குன்யாவின் O Jacaré திரைப்படத்தை பார்க்க கிடைத்தது.
அவரது முன்னைய திரைப்படங்களில் அவர் உருவாக்கியிருந்த தனது பாணியிலான உலகத்திற்கும், அதன் கதாபாத்திரங்களுக்கும் ஏற்கனவே நான் அடிமையாகியிருந்தேன்.

தான் வளர்ந்த லிஸ்போனை சூழவுள்ள ஒரு நலிந்த பிரதேசமான Reboleira இல் அவர் உருவாக்கிய மூன்றாவது திரைப்படம் இது.முதல் உருவாக்கிய இரு திரைப்படங்களும் இது போன்று புனைவுத் திரைப்படங்கள் தான்.

அங்கு நிஜமாகவே வாழும் பல உள்ளூர் மக்களை, அவர்களது இயல்பான குணாதிசயங்களுடனும், பேச்சு, உடை மொழியிலும் அப்படியே நடிக்க வைப்பதில் கை தேர்ந்தவர் பாஸில். படத்தில் வரும் சில கதாபாத்திரங்கள், ஒன்றுக்கு, இரண்டாக ஆடவர்களை கணவர்களாக, அல்லது தமது இரகசிய தோழர்களாக வைத்திருப்பவர்களாக காண்பிக்கப்பட்டிருப்பார்கள்.

அக்கதாபாத்திரங்களில் கூட அவ்வளவு இயல்பான கச்சிதமான திரைமொழி, அம்மாந்தர்களிடம் இருக்கும். எப்போதும் போலிஸ் வன்முறை, காபிடலிசம், வறுமை, போதைவஸ்து கடத்தல், நகரமயமாக்கல் எனும் பெயரில் எளிய மக்களின் வாழ்தார இருப்பிடக் காணிகளை சூரையாடுதல் என்பவற்றால் பெரிதும் பாதிக்கப்படும் பெண்கள், தங்களது அன்றாட தேவைகளையும், இச்சைகளையுமாவது பூர்த்தி செய்துகொள்ள தாமே தமது வாழ்கை தங்களது கரங்களில் எடுக்கின்றனர். 

போதைவஸ்து பணத்திற்காக அடிபடும் இரு கும்பல்களிடையே புதிதாக சேரும் ஒரு பதின்ம வயது இளைனனின் அப்பாவி எதிர்காலம் எப்படி சின்னாபின்னமாகிறது என்பதை படம் முதன்மையாக காண்பிக்கிறது. அதில் ஒரு போதை வைஸ்து கும்பலின் இரகசியத் தலைவன் வீட்டில் வளர்க்க ஒரு பிராணி தேவை என சுற்றியிருப்பவர்களிடம் கேட்க, அவர்கள் ஒரு பெரிய முதலையையே கொண்டுவந்து பணத்திற்காக கொடுத்துவிட்டு செல்கின்றனர். வேண்டா வெறுப்பாக அதை அவன் வீட்டுத் தோட்டத்தில் வைத்திருக்க, அம்முதலை எப்படி அந்த ஊரின் அனைத்து பஞ்சாயத்து வன்முறைகளையும் வேடிக்கை பார்க்கிறது. 

வன்முறையில் ஊரை மேய்த்து பணம் சம்பாதிக்கும் நபர்களுக்கு ஆபத்து விலங்காக நானே சுற்றிச் சுற்றி வருவேன் என அம்முதலையைச் சூழ வடிவமைக்கப்பட்டிருக்கும் மெடபோர், பாஸிலின் தனித்துவ திரைப்பாணி. குழந்தைகள் உட்பட, இதில் வரும் எந்த ஒரு கதாபாத்திரமும் அன்பான, தூய்மையான நல்ல எண்ணம் கொண்டவரக்ளாக இருக்க மாட்டார்கள். அரசுக் கட்டமைப்புக்களின் பாரபட்சம், கபிடாலிசத்தின் வணிக மோகம், கல்வியின்மை, வீட்டு வசதியின்மை என ஒரு முழு சமூக கட்டமைப்பும் மிக நலிவுற்றதாக இருக்கையில், பணத்தை குறியாக கொண்டு வாழ்வது மாத்திரமே அங்குள்ள அனைத்து மாந்தர்களினதும் தேவையாக இருக்கிறது.

யாரை அடித்து, யாரை காட்டிக் கொடுத்து அப்பணத்தை சூரையாடலாம் என்பதே அவர்கள் தேவையாக இருக்கும். அதற்கு அடுத்த தலைமுறை சிறார்களையும் பெரியவர்கள் பழக்கிவிடுவர். போதைவஸ்து பரிமாற்றத்தாலும், கடத்தலாலும், ஒரு சமூகம் வளர்க்கப்படும் போது, அதன் எதிர்காலம் எப்படி இருக்கலாம் என்பதற்கு இந்த திரைப்படம் ஒரு நல்ல எடுத்துக்காட்டு. ஆனாலும் இதில் வரும் எந்தவொரு கதாபாத்திரம் மீதும், வெறுப்புக்கு பதில் இரக்கமே வருகிறது. அவர்களது இயலாத் தன்மை, சோர்வு, ஏமாற்றம் என்பவையே அவர்கள் பணத்தின் மீதான மோகத்தினதும் தேடுதலிலும் விளைபொருளாக அவர்களுக்கு கிடைக்கும். 

படத்தின் பெரும்பாலான காட்சிகள் Steady Cam, Drone, Dolly என்பவற்றை கொண்டே உருவாக்கியிருப்பதால் எப்போதும் அனைத்து கதாபாத்திரங்களினதும், ஒரு நிரந்தரமற்ற, நிலத்தில் காலூன்றி நிற்க முடியாத ஒரு மிதப்புத் தன்மை, அவர்களது நிச்சயமற்ற எதிர்காலத் தன்மை மிக அழகாக படத்தில் வெளிப்படுகிறது. 

அவர்களது மிக இயல்பான உரையாடலும், உடல் மொழியும், அவர்கள் மிகச் சிறந்த பயிற்றுவிக்கப்பட்ட தேர்ச்சியான நடிகர்கள் போல் தோன்றினாலும், அங்கு வாழ்வந்தர்கள் அல்லாது இவ்வளவு யதார்த்தமாக எவராலும் பிரதிபலிக்க முடியாது. 

இதுவரை உங்களுக்கு Basil Da Cunha யார் எனத் தெரியாவிடின், அவருடைய முன்னைய Triliogie பாருங்கள். அவர், அவருக்கென தனிப்பாணியில் உருவாக்கும் உலகம் எப்படியானது என்பதை மெல்ல மெல்ல அடையாளம் கண்டு அதற்கு அடியமையாவீர்கள். 

- 4தமிழ்மீடியாவுக்காக : லொகார்னோவிலிருந்து ஸாரா

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula