லொகார்னோ திரைப்பட விழாவில், முழு நீளத்திரைப்பட பிரிவில் கானா நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தி வெளிவந்த Amartel Armar இன் Ego Reach We All (Our Time Will Come) எனும் திரைப்படத்தை காணக்கிடைத்தது. இதில் கதாநாயகனாக நடித்த Idrissu Tontie Jr. க்கு சிறந்த நடிகருக்கான லொகார்னோ விருது கிடைத்தது. அதோடு எதிர்கால மாற்றத்துக்கான நடுவர் குழு விருதும் இத்திரைப்படத்திற்கே கிடைத்தது.
இரண்டு பதின்ம வயது அநாதைச் சிறுவர்கள், இருவருக்கும் வேறு வேறு பெற்றோர். ஆனால் சகோதரப் பாசம். தாம் வளர்ந்து வந்த அனாதைச்சிறார்கள் முகாமிலிருந்து தப்பித்து, அவர்களில் இளையவளான ஒரு சிறுமியின் தாயை தேடும் முயற்சியில் இருவரும் இறங்குகின்றனர். தாய் எப்படி இருப்பார் என்பதற்கான ஒரே ஒரு அடையாளம், ஒரு புகைப்படம். அச்சிறுமி குழந்தையாக இருந்த போது அவளுடன், அத்தாய் நின்று எடுத்த புகைப்படம். அதை மாத்திரம் கையில் வைத்து கொண்டு, கானாவின் மிகப்பெரிய நகரான அக்ராவை நோக்கி, அங்கு தான் அவர் சென்றிருக்க கூடும் எனும் ஒரு உத்தேச எண்ணத்தில் அங்கு புறப்படுகின்றனர்.
கையில் பணம் இல்லை. உடுத்த உடையுடன், ஒரு பையுடன் இருவரும் புறப்பட்டு, வரும் வழியில் எதிர்ப்படும் வாகனத்தை எல்லாம் நிறுத்தி அக்ராவுக்கு வந்து சேர்ந்தால், அப்பெரும் சனத்தொகையிலும், மாறிவரும் நவீன காபிடாலிச மாசுக்களுக்கு இடையிலும் அவர்கள் அடுத்த வேளை உணவுக்கே என்ன செய்வதென்று தெரியாமல் விழிக்கின்றனர். அவர்களை போன்றே அனாதைகளாக அங்கு வந்து பிழைப்புக்காக திருடி, தெருவேலையெல்லாம் செய்து, சந்தைகளில் பொருட்களை விற்றுக் கொடுத்து, அன்றாடம் ஜீவியம் நடத்தும் இன்னுமொரு பதின்ம வயது குழுவுடன் சேர்ந்து அவர்களை போன்றே இவர்களும் பிழைக்க தொடங்குகின்றனர். மெல்ல மெல்ல தாயைத்தேடும் மும்முரம் குறைந்து, புதிதாய் ஒரு குடும்பத்தை தமெக்கன தம்மை அறியாது உருவாக்கத் தொடங்குகின்றனர். ஆனால் அக்குழுவுக்கு தங்குவதற்கு இருந்த ஒரே ஒரு Squad இடமும் பறிபோக மறுபடி மூட்டை கட்டி, வேறு இடம் தேடி அலைகின்றனர்.
அவர்களுடைய எதிர்காலம் எப்படி சென்று முடிவடைய போகிறது. தேடும் தாய்க்கு என்னதான் நடந்திருக்கும் எனும் கேள்விகளுக்கு விடைகாணும் முயற்சியில் மிகுதி திரைப்படம் நகர்கிறது. இதன் இயக்குனர் அமர்தெய் அமெரிக்காவிலும் திரைக்கலை படித்தவர். மத்திய ஆபிரிக்க சினிமாவை பிரதிநிதித்துவப்படுத்தும் புதிய அலை சினிமா இயக்குனர்களில் முக்கியமானவர்.
கானா போன்று மிக வேகமாக அபிவிருத்தியை நோக்கி வளரும் நாட்டில், போதை பழக்கம், பணத்துஷ்பிரயோகம், சூழல் மாசு, நவீன தொழில்நுட்ப பொருட்களின் மீதான மோகம் என அனைத்தும் இந்த இரு கதாபாத்திரங்களினதும் பின் சூழலில் தொடர்ந்த வண்ணமே இருக்கும்.
படத்தின் ஒரு கட்டத்தில் சோர்வடைந்து மூத்தவன், இளையவளை பார்த்துக் கேட்பான். உனக்கு இன்னும் உன் தாயை கண்டுபிடித்துவிடுவோம் எனும் நம்பிக்கை இருக்கிறதா?, அதற்கு இளையவள் பதில் சொல்வாள். எனக்கு எப்போதுமே இருந்ததில்லை. எனக்கு இருக்கும் ஒரே ஏக்கம், நாம் இப்போது இருந்து கதைத்துக் கொண்டிருக்கும் கடலை அவள் கண்டிருப்பாளா, இந்த சூரிய மறைவை அவள் கண்டிருப்பாளா என்பதே.
உடனே மூத்தவன், அதுவரை தான் பொக்கிஷமாக வைத்திருந்த அவளது, தாயின் புகைப்படத்தை கடல் பக்கம் திருப்பிக் காட்டி, இப்போது அவள் கடலை காண்கிறாள் என்பான்.
ஒரு திரைக் கலைஞனின் தேர்ந்த திரை ஆளுமையும், கவிதைத் தன்மையும், திரைமொழி, உரையாடலும் அங்கு மெய்சிலிர்க்க வைக்கும்.
இத்திரைப்படம் முழுவதும், அந்த பதின்மவயது அனாதைச் சிறுவர்களின், கேங் எண்ணங்களும், வன்முறைப் பேச்சும், வயதுக்கு மீறிய வாழ்க்கை பற்றிய புரிதலும், ஏக்கமும் படம் முழுக்க வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும். எப்படி ஒரு அடுத்த தலைமுறை வளர்க்கப்படுவதற்கு பெற்றோரோ, ஆசிரியர்களோ இல்லாத போது, தானாகவே வளரமுடியும், அவர்கள் பாதை எதை நோக்கி செல்லலாம் என யதார்த்தமாக காண்பிக்கிறது இத்திரைப்படம்.
ஒரு கட்டத்தில் அக்குழுவின் பதின்ம வயது ஆடவர்கள் அனைவரும் அன்று உழைத்த பணத்தின் ஒரு பகுதியை மகிழ்வாக செலவழிப்போம் என முடிவெடுத்து, ஒரு பாலியல் விடுதியை நோக்கிச் செல்கின்றனர். அப்பாலியல் விடுதியை நடத்தும் பெண்மணி ஒவ்வொரு இளம்பெண்ணாக அறிமுகப்படுத்தி, ஒவ்வொருவருக்கும் ஒரு விலை சொல்வாள்.
கடைசியில் ஒரு மாடிப் படி ஏறி, கடைசி அறைக்குச் செல்வாள், அங்கு ஒரு பெண்ணை காட்டி இவளின் விலை தான் இருப்பதில் மிக அதிகம். இவள் மிக மிக சாமர்த்தியமானவள் என்பாள். அந்த அநாதைச் சிறுவர்களில், மூத்த சகோதரனான, படத்தின் கதாநாயகன் அப்பெண்ணை கண்டதும் அப்படியே அதிர்ச்சியில் உரைந்துவிடுவான். அவனை போன்றே அவன் வளர்ந்த அநாதைச் சிறுவர்கள் இல்லத்திலிருந்து தப்பியோடி வந்தவள் அவள்.
உன் தங்கையும், ஒரு கட்டத்தில் இப்படி என்னை போன்று வந்துவிடப்போகிறாள். ஏன் அவளையும் கூட்டி வந்தாய், அநாதைச் சிறுவர்கள் இல்லத்திலிருந்து நீ அவளை கடத்தி வந்துவிட்டதாக எல்லோரும் பேசிக் கொள்கின்றனர் என்பாள் அவள். நான் கடத்திக் கூட்டிவரவில்லை. நான் அங்கிருந்து தப்பிச் செல்ல முடிவெடுத்து புறப்படுகையில், அவளாகத் தான் என்னுடன் வரமுடிவெடுத்தாள் என்பான் கதாநாயகன். அதோடு கடைசிவரை அவளை உன் மாதிரி உருவாக விட மாட்டேன். அன்பாக பார்த்துக் கொள்வேன் என்பான்.
அதற்கு அப்பாலியல் தொழிலாளிப் பெண் சிரித்துக் கொண்டே சொல்வாள். அக்ராவில் வேறு என்ன செய்ய முடியும் என நினைக்கிறாள். என்னை உன்னிடம் வந்து அறிமுகப்படுத்தினாளே. அவள் என் அக்கா என்பாள். ஒரு சமூகத்தின் மிக ஆழமான இடியப்பச் சிக்கல் முடிச்சை ஆணி அறைந்தது போல் சொல்லும் இந்த காட்சி.
இப்படி படம் முழுக்க திருப்பங்களும், அதையும் தாண்டி நேர்மறையாக ஒரு தக்கணப்பிழைத்தல் முயற்சியுடன் ஓடிக்கொண்டிருக்கும் இப்பதின்ம வயது சிறார்களும், படத்திற்கு மிகப்பலம். இப்படத்திற்கு கிடைத்த இரு விருதுகளும் மிகப்பொருத்தமானவையே.
- 4தமிழ்மீடியாவுக்காக லொகார்னோவிலிருந்து ஸாரா
