free website hit counter

அம்பிகை அம்மையாரும் தமிழர் போராட்டக் களமும்! (புருஜோத்தமன் தங்கமயில்)

பதிவுகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இலங்கையில் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல் குற்றங்கள் தொடர்பில், சர்வதேச குற்றவியல் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்; அதற்கு உதவும் வகையில் சர்வதேச பக்கச்சார்பற்ற சுயாதீன பொறிமுறை (International, Impartial and Independent Mechanism- IIIM) உருவாக்கப்பட வேண்டும்; இலங்கை விடயத்தில் ஐக்கிய நாடுகள் சிறப்பு அறிக்கையாளர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும்; வடக்கு - கிழக்கில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் ஆகிய நான்கு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, அம்பிகை என்கிற அம்மையார், பிரித்தானியாவில் முன்னெடுத்து வந்த உண்ணாவிரதப் போராட்டம், 17 நாட்களின் பின்னர் கடந்த திங்கட்கிழமை (15) முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், எதிர்வரும் வாரம் இலங்கை தொடர்பிலான புதிய உத்தேச தீர்மானமொன்று கொண்டுவரப்பட இருக்கின்றது. அதில், சர்வதேச பக்கச்சார்பற்ற சுயாதீன பொறிமுறையை (IIIM) உருவாக்குவது தொடர்பிலான விடயம், முழுமையாக உள்ளடக்கப்பட்டு இருப்பதாக பிரித்தானியா அரசாங்கம் அம்பிகை அம்மையாருக்கு வழங்கிய உறுதி மொழிகளை அடுத்தே, போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதாக, போராட்டத்தின் இறுதியில் அறிவிக்கப்பட்டது.

அம்பிகை அம்மையார் போராட்டத்தை ஆரம்பிக்கும் போது, “என்னுடைய நான்கு அம்சக் கோரிக்கைகளில் ஒன்றையேனும் முழுமையாக நிறைவேற்றினால், போராட்டத்தை நிறைவு செய்வேன்” என்று கூறியிருந்தார். அதன் பிரகாரம், “போராட்டத்தின் ஒரு கோரிக்கை முழுமையாக நிறைவேற்றப்பட்டு இருக்கின்றது. ஆகவே, போராட்டத்தை வெற்றியாகக் கொள்ள வேண்டும்” என்று அம்பிகை அம்மையாருக்கு ஆதரவளித்த சில தரப்புகளும் ஆதரவு ஊடகங்களும் தெரிவிக்கின்றன.

அதேநேரம், அம்பிகை அம்மையாரின் போராட்டத்துக்கு ஆதரவளித்த இன்னும் சில தரப்புகளோ, போராட்டம் முடித்து வைக்கப்பட்ட முறை, இறுதியில் அம்பிகை அம்மையார் வெளியிட்ட கருத்துகள் தொடர்பில் பாரிய விமர்சனங்களை முன்வைக்கின்றன. ஒரு சில கட்சிகள், அம்பிகை அம்மையாரைத் துரோகி என்றும் அடையாளப்படுத்துகின்றன.

இலங்கை தொடர்பிலான புதிய தீர்மானத்தின் இறுதி வடிவம், கடந்த வெள்ளிக்கிழமை (12) இறுதி செய்யப்பட்டது. அதன் பிரதிகள் மனித உரிமைகள் பேரவையின் அங்கத்துவ நாடுகள், மனித உரிமை அமைப்புகளுக்கு இடையில், பிரித்தானியாவால் பகிரப்பட்டு இருக்கின்றன. புதிய தீர்மானத்தின் ஆரம்ப வரைபுக்கும் இறுதி வரைபுக்கும் இடையில், ஒரு சில முன்னேற்றங்கள் காணப்படுகின்றன. ஆரம்ப வரைபில் பாதிக்கப்பட்டவர்கள் என்ற விடயம் காணப்பட்ட போதிலும், அதில் தமிழ் மக்கள் என்கிற அடையாளப்படுத்தல் இருக்கவில்லை. இறுதி வடிவத்தில், அது இடம்பெற்றிருக்கின்றது.

அத்தோடு, இலங்கையில் இடம்பெற்ற தீவிர மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தரவுகள், ஆதாரங்களைத் திரட்டுதல், பாதுகாத்துச் சேமித்தல் என்கிற விடயம் உள்வாங்கப்பட்டு இருக்கின்றது. அதைச் சர்வதேச பக்கச்சார்பற்ற சுயாதீனப் பொறிமுறையின் (IIIM) பருமட்டான வடிவமாகப் பார்க்க முடியும். இதைத்தான் அம்பிகை அம்மையாரின் போராட்டம் வெற்றி என்று அடையாளப்படுத்தும் தரப்பினரும், அதனை எதிர்க்கும் தரப்பினரும் கையிலெடுத்து விவாதிக்கின்றன.

தமிழ் மக்களின் நீதிக் கோரிக்கைகளுக்கான போராட்டக் களத்தின் வரலாறு நீண்டது; பெரும் அர்ப்பணிப்புகளால் நிறைந்தது. ஆனால், முள்ளிவாய்க்காலுக்குப் பின்னரான கடந்த 12 ஆண்டுகளில், தமிழ் மக்களின் நீதிக் கோரிக்கைகளுக்கான களம் என்பது, அதிக தருணங்களில் தூரநோக்கற்ற, குறுகிய சிந்தனைகளால் நிறைக்கப்படுகின்றது.

படுமோசமாகப் பாதிக்கப்பட்டு இருக்கின்ற ஒரு சனக்கூட்டமாக இருக்கின்ற ஈழத் தமிழர்கள், அதிலிருந்து மீள்வது தொடர்பில், அர்த்தபூர்வமான ஒருங்கிணைந்த செயற்பாடுகளைப் பெரும்பாலும் முன்னெடுக்கவில்லை. மாறாக, தங்களுக்கு இடையிலான போட்டி, பொறமை, தனிப்பட்ட அரசியல் நலன், சுய தம்பட்டப் பேருவகை, பிலாக்கண (ஒப்பாரி) மனநிலையால் கோட்டை விட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதுதான், தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் உள்ள யதார்த்தம்.

அதிக நேரங்களில், தாயகத்திலுள்ள மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்காத ‘முந்திரிக்கொட்டை’த் தனமான செயற்பாடுகளை, போராட்டங்கள் என்கிற பெயரில் ‘ஏட்டிக்குப் போட்டி’யாக புலம்பெயர் தரப்புகள் செய்வதும் உண்டு. அதுபோல, போராட்டத்தின் பெரிய வெற்றிகளாக, உப்புச்சப்பற்ற விடயங்களைத் தூக்கி வைத்துக் கொண்டு விவாதிப்பதும் உண்டு.

அம்பிகை அம்மையார், பிரித்தானியாவில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த போது, அவருக்கு ஆதரவு தெரிவித்து, யாழ்ப்பாணத்திலும் சுழற்சி முறை உண்ணாவிரதப் போராட்டமொன்று, பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டது. ஆனால், அந்தப் போராட்டத்தை நோக்கி மக்கள் திரளவில்லை. அந்தப் போராட்டத்தில், ஒருசில அரசியல்வாதிகளும் சிவில் அமைப்பினரும், சில மணித்தியாலங்கள் மாத்திரமே பங்கெடுத்தார்கள். சுழற்சி முறைப் போராட்டமொன்றில் உட்காருவதற்காக, மாணவர்கள் ஆட்களை தேட வேண்டி வந்ததது. ஏன் இவ்வாறான நிலைகள் ஏற்படுகின்றன?

இதற்கான காரணங்கள் என்ன என்றெல்லாம், யாரும் யோசிப்பதற்குக் கூட தயாராக இல்லை என்பதுதான், பெரிய பிரச்சினையாகும். அது, போராட்டம் என்கிற அர்ப்பணிப்பு நிறைந்த களத்தைத் தமிழ் மக்களிடம் இருந்து, இன்னும் இன்னும் அந்நியப்படுத்திவிடுமோ என்கிற அச்சத்தை ஏற்படுகின்றது.

அண்மையில்தான், ‘பொத்துவிலில் இருந்து பொலிகண்டி’ வரையிலான போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டார்கள். ஆனால், அந்தப் போராட்டம் நிறைவடைந்து, சில நாள்களுக்குள்ளேயே ஆரம்பித்த இன்னொரு நீதி கோரும் போராட்டத்தில் மக்கள் பங்களிக்கவில்லை.

இந்த இடத்தில்தான், தூரநோக்குள்ள சிந்தனையும், திட்டமிட்ட நகர்வும், சூழலைச் சரியாகக் கையாளும் திறனும், இராஜதந்திர சமயோசிதமும் அவசியமாகின்றது. ஆனால், அம்பிகை அம்மையாரின் போராட்டம் முதல் அதிக போராட்டங்கள் தனிப்பட்ட நபர்களின், கட்சிகளின், அமைப்புகளின் சடுதியான அறிவிப்புகளோடு ஆரம்பிக்கின்றன. ஆரம்பித்த வேகத்தில் முடிந்தும் போகின்றன. இத்தகைய போராட்டங்கள் ஏற்படுத்தும் தாக்கம் என்ன, அதனால் விளையும் பயன் என்ன என்பது பற்றியெல்லாம், யாருக்கும் எந்தக் கவலையும் இல்லை.

தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளின் ‘போர் வெடிக்கும்’ அறைகூவல்களும் புலம்பெயர் தேசங்களில் முன்னெடுக்கப்படும் புலிக்கொடி ஏந்திய வாகனப் பேரணிகள் போன்றவற்றால் உண்மையில், யாருக்கும் எந்தப் பயனும் இல்லை. மாவை சேனாதிராஜாவோ, சுமந்திரனோ, கஜேந்திரகுமாரோ அல்லது வேறு யாரோ, “போர் வெடிக்கும்” என்று அறைகூவல் விடுத்தால், மக்கள் அதை ஒரு பொருட்டாகவே கருத மாட்டார்கள்.

அதுபோலத்தான், சூழல்களைப் புரிந்து கொள்ளாமல், புலம்பெயர் தேசங்களில் முன்னெடுக்கப்படும் புலிக்கொடி ஏந்திய போராட்டங்களையும் தாயக மக்கள் தங்களோடு இணைத்துப் பார்க்கும் அளவுக்கான நிலை தற்போது இல்லை. விடுதலைப் புலிகளை, தமிழ் மக்கள் தங்களின் ஒரு பகுதியாகவே பார்க்கிறார்கள். ஆனால், முள்ளிவாய்க்காலுக்குப் பின்னரான அரசியல் - இராஜதந்திரக் களம் மாறியிருக்கின்றது. அந்தக் களத்துக்கு ஏற்ற மாதிரியான போராட்ட வடிவங்களுக்குச் செல்ல வேண்டும் என்பதே தாயக மக்களின் எதிர்பார்ப்பு. அதற்கு, புலிக்கொடி ஏந்திய போராட்டங்கள் என்றைக்கும் வழிசெய்யாது. போராட்டங்கள் உணர்வுபூர்வமானவை என்பது ஏற்புடையவைதான். ஆனால், சரியான நோக்கு இல்லாமல் உணர்வுபூர்வமான விடயங்கள் மாத்திரம் மேலேழும் போது, அவை விரைவிலேயே காணாமல் ஆக்கப்பட்டுவிடும். அப்போது, பிலாக்கணம் வைக்க வேண்டியிருக்கும்.

தாயகமோ, புலம்பெயர் தேசமோ ஈழத் தமிழ்த் தரப்புகள் தமது நீதிக் கோரிக்கைப் போராட்டங்களை சரியான புரிதலுள்ள புள்ளியில் முதலில் இணைக்க வேண்டும். சுயநல நோக்குக்காகவும், தனிப்பட்ட அரசியல் குறுநலன்களுக்காகவும் போராட்டங்களை ஆக்கிரமிக்கும் தரப்புகளை அடையாளம் கண்டு விலக்க வேண்டும். அதன் மூலம்தான், போராட்டக் களங்களை சீராகப் பேண முடியும். அதுதான், நீண்ட காலப்போக்கில் மக்களை போராட்டங்களோடு ஒன்றிணைத்து வைத்திருக்கும். அதனைச் செய்யாதுவிட்டால், இரண்டொரு நாள் அரங்காற்றுகைகளைத் தவிர போராட்டங்களால் எதுவும் நிகழ்த்தப்பட முடியாமல் போகும்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction