free website hit counter

ஜெனீவா பிரேரணை; கடலில் தத்தளிப்பவனுக்கான ஒரு மரக்கட்டை! (புருஜோத்தமன் தங்கமயில்)

பதிவுகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான புதிய பிரேரணை கடந்த செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது. இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் பேரவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட பிரேரணைகளை ராஜபக்ஷ அரசாங்கம் முற்றாக நிராகரித்திருந்த நிலையில், புதிய பிரேரணையை எப்படியாவது தோற்கடித்துவிட வேண்டும் என்று தீவிர முயற்சிகளில் இறுதி நேரம் வரையில் ஈடுபட்டது. ஆனாலும், 46/1 என அடையாளப்படுத்தப்படும் புதிய பிரேரணை 11 மேலதிக வாக்குகளினால் நிறைவேறியிருக்கின்றது. 

மனித உரிமை பேரவையில் அங்கத்துவம் பெற்றுள்ள 47 நாடுகளில், இலங்கை தொடர்பான பிரேரணையைக் கொண்டு வந்த பிரித்தானியா, ஜேர்மனி உள்ளிட்ட 22 நாடுகள் பிரேணைக்கு ஆதரவாக வாக்களித்தன; சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் உள்ளிட்ட 11 நாடுகள் எதிராக வாக்களித்தன; இந்தியா, நேபாளம், ஐப்பான் உள்ளிட்ட 14 நாடுகள் வாக்களிப்பை புறக்கணித்தன.

புதிய பிரேரணைக்கான வாக்கெடுப்பில் அங்கத்துவ நாடுகள் எடுத்த நிலைப்பாடுகள், இலங்கை தொடர்பில் சர்வதேச நாடுகள் எவ்வாறான நிலைப்பாட்டோடு இருக்கின்றன என்பதற்கான ஒரு பருமட்டான சான்றாகும். அதாவது இன்றைய உலக ஒழுங்கில் இலங்கையை சர்வதேச நாடுகள் எவ்வாறு கையாள நினைக்கின்றன அல்லது நோக்குகின்றன என்பதற்கான சாட்சியாகும். எந்தவொரு தருணத்திலும் இலங்கைக்கு எதிரானது என்று கருதப்படும் எந்தவொரு தீர்மானத்தையும் சீனாவும், ரஷ்யாவும் ஆதரிக்காது என்பது மீண்டும் நிரூபணமாகியிருக்கின்றது. அந்த இரு நாடுகளும் பாதுகாப்புச் சபையில் வீற்றோ அதிகாரத்தோடு இருப்பவை.

பாதிக்கப்பட்ட தரப்பாக இலங்கை விவகாரத்தை பாதுகாப்புச் சபைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்கிற தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு நியாயமானது. ஆனால், பாதுகாப்புச் சபையில் இலங்கையை நிறுத்தி தாண்டிப்பதற்கான ஏற்பாடுகளை செய்வது என்பது, தற்போதைய உலக ஒழுங்கில் சாத்தியமா என்பது அடிப்படைக் கேள்வியாகும். அந்தக் கேள்விக்கான பதிலை, புதிய பிரேரணைக்கான வாக்களிப்பு விபரங்களே பதிலாகத் தருகின்றன.

புதிய பிரேரணை இலங்கையை ஒரு கண்காணிப்புக் கட்டத்துக்குள் வைத்திருப்பதைத் தாண்டி பாரிய நெருக்கடிகள் எதனையும் வழங்கவில்லை என்பது வெளிப்படையானது. தொடர்ச்சியாக பொறுப்புக் கூறலை நிராகரித்துவரும் நாடாகவும், ஜனநாயக விரோதச் செயற்பாடுகள் கட்டவிழும் நாடாகவும் இருக்கின்ற இலங்கை சர்வதேச தலையீடுகளுடன் கண்காணிக்கப்பட வேண்டிய அவசியம் என்பது தவிர்க்க முடியாதது. அதன்போக்கில், புதிய பிரேரணையை முக்கியமானது.

புதிய பிரேரணைக்கு எதிரான நிலைப்பாடுகளை உள்நாட்டிலயே அரசாங்கத்தோடு இணைத்து பல தரப்புக்களும் முன்னெடுத்தன. அதில், அரசாங்கத்தின் ஆதரவில் இயங்கும் துணைக்குழுக்கள், கட்சிகள், ஊடகங்கள் முக்கியமானவை. அதுபோல, தமிழ்த் தேசியம் பேசும் கட்சிகள், அமைப்புக்கள் சிலவும், புத்திஜீவிகள் சிலரும் புதிய பிரேரணைக்கு எதிரான நிலைப்பாடுகளை எடுத்து களமாடினார்கள்.

நல்லூர் ஆலய வீதியில் அத்துமீறி பந்தல் அமைத்து கூலிக்கு ஆட்களை அமர்த்தி புதிய பிரேரணைக்கு எதிராக போராட்டம் நடத்துவதாக ஒரு நபர் கேலிக்கூத்தாடிக் கொண்டிருந்தார். அவர், தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளையும், நீதிக் கோரிக்கைகளையும் கேலிப்பொருளாக்கி சித்தரித்து தன்னுடைய எஜமானர்களுக்காக வாலாட்டினார். அவருக்கு எந்த வகையிலும், தாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்கிற தோரணையில், ஒரு சில தமிழ்த் தேசியக் கட்சிகளும், அமைப்புக்களும் புதிய பிரேரணையை ஆதரிக்கும் நிலைப்பாட்டை எடுத்தவர்களை நோக்கி ‘துரோகி’ப் பட்டங்களை ஊடக மாநாடுகளை நடத்தி வழங்கிக் கொண்டிந்தார்கள்.

இந்தத் துரோகிப் பட்டங்களை வழங்கும் குழுதான், இலங்கை பாதுகாப்புச் சபையில் நிறுத்தப்பட வேண்டும், அதற்கான சர்வதேச சூழல் காணப்படுகின்றது என்று தொடர்ச்சியாக வாதிடுகின்றது. அத்தோடு, சீனாவோடும், ரஷ்யாவோடும் பேசி இலங்கைக்கு எதிரான நிலைப்பாடுகளை எடுக்க வைக்க முடியும் என்றும் சொல்கின்றது. ஆனால், அதற்கான வழி வரைபடம் குறித்தோ, செயற்திட்டங்கள் குறித்தோ எந்தவித அர்த்தபூர்வமான விவாதங்களையும் நடத்துவதில்லை. ஒருசில குறுநல நோக்கர்கள், தமிழ் மக்களின் நீதிக் கோரிக்கை எனும் அர்ப்பணிப்புள்ள விடயத்தை, பரீட்சார்த்த முயற்சிகளுக்குப் பயன்படுத்த எத்தனிக்கின்றனர். அவர்களுக்கு தங்களின் தனிப்பட்ட நலன்கள் தாண்டிய எந்த சிந்தனையும் இல்லை. சீனாவையும், ரஷ்யாவையும் வளைக்கலாம், பாதுகாப்புச் சபையில் நிறுத்தலாம், அப்படி இல்லாவிட்டாலும் சீனாவினதும் ரஷ்யாவினதும் அறத்தினை கேள்விக்குள்ளாக்கலாம் என்று மாய்மாலம் காட்டுகின்றார்கள்.

சிலருக்கு ஒலிவாங்கிகளைக் கண்டால் நேர காலம் தெரியாது, சம்பந்தம் சம்பந்தமில்லாமல் பேசுவார்கள். அதுபோலத்தான் இந்தக் குறுநலக் கூட்டம் மக்களை மடையர்கள் என்கிற நோக்கில் போலிக் கற்பிதங்களை உருவாக்கி, அதில் குளிர்காய நினைக்கிறார்கள். பல நேரங்களில் இவர்களுக்கும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவின் அரசியல் இராஜதந்திர நோக்குக்கும் பெரிய வித்தியாசங்கள் இருப்பதில்லை.

இலங்கை தொடர்பிலான புதிய பிரேரணை நிறைவேறிய அன்று, தினேஷ் குணவர்த்தன ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு ஆதரவாக 25 நாடுகள் இருந்ததாக அறிவித்து, அந்த நாடுகளுக்கு நன்றியும் தெரிவித்தார். அதாவது, பிரேரணைக்கு எதிராக வாக்களித்த 11 நாடுகளும், வாக்களிப்பை புறக்கணித்த 14 நாடுகளும் இலங்கைக்கு ஆதரவளித்ததாக அவர் அர்த்தப்படுத்தியிருந்தார். அதன் பிரகாரம், பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளின் எண்ணிக்கை அறுதிப் பெரும்பான்மையைத் தாண்டியிருக்கவில்லை என்று வாதிட்டார்.

தினேஷ் குணவர்த்தனவின் வாதத்தின் படி நோக்கினால், கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் இலங்கையின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை சுமார் 160 இலட்சம். அதில், கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களித்தவர்கள் சுமார் 70 இலட்சம். கோட்டாவுக்கு வாக்களிக்காதோர் 90 இலட்சம். ஆகவே, கோட்டா ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றதாக கொள்ள முடியாது. ஏனெனில், அவர் மொத்த வாக்களார் எண்ணிக்கையில் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றிருக்கவில்லை.

தினேஷ் குணவர்த்தனவின் சமன்பாடுகள் போலத்தான், தமிழ்த் தேசியப் பரப்பிலுள்ள துரோகி பட்டங்களை வழங்கும் குழுவும், அந்தக் குழுவின் புத்திஜீவி அணியினரும் சமன்பாடுகளைப் போடுகின்றனர். அந்தச் சமன்பாடுகளில் அபத்தம் என்கிற ஒன்றைத்தவிர வேறு எதுவும் இருப்பதில்லை. அந்தச் சமன்பாடுகளின் நோக்கம் என்பது, அதீத உணர்ச்சிவசப்படுத்தல்களின் வழியாக மக்களை சிந்திக்க விடாது தடுப்பதாகும். அதன் வழியாக தாங்கள் அரசியல் ஆதாயங்களை அடைய முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

நடிகர் வடிவேலு நடித்த நகைச்சுவைக் காட்சியொன்றில், ‘வெள்ளையாக இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்’ என்றொரு கற்பிதம் முன்வைக்கப்பட்டு, வடிவேலு தாக்கப்படுவார். அதுபோலத்தான், இந்த துரோகிப் பட்டங்களை வழங்கும் குழுவும், அவர்களின் புத்திஜீவி அணியும் தமிழ் மக்களை நோக்கி பொய்யான கற்பிதங்களை விதைக்கிறார்கள். அதனை கேள்விக்கு உட்படுத்தினால், அவர்களினால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. கேள்விகளுக்கு பதிலும் அளிப்பதில்லை. கேள்விகளை அல்லது விமர்சனங்களை தனிப்பட்ட ரீதியாக திரிபுபடுத்தி தங்களை காப்பாற்றிக் கொள்ளும் நாடகங்களை அரங்கேற்றுவார்கள்.

தமிழ் மக்கள் எந்தவொரு தருணத்திலும் கேள்விகளுக்கு அப்பாலான ஒன்றை நோக்கி திரள வேண்டியதில்லை. அது, எவ்வளவு அர்ப்பணிப்புக்களை விதைத்த களமாக இருந்தாலும் கூட. ஏனெனில், தமிழ் மக்களின் இழப்புக்கள் பாரதூரமானவை. அப்படியான நிலையில், அடுத்த கட்டம் நோக்கி வைக்கப்படுகின்ற ஒவ்வொரு அடியும் கவனமாக வைக்கப்பட வேண்டியது. குறிப்பாக, பிராந்திய மற்றும் உலக ஒழுங்குகளை மிகக் கவனமாக உள்வாங்கி அதன் சாதக பாதகங்களைப் புரிந்து கொண்டு வைக்கப்பட வேண்டியது. அதனைவிடுத்து, கேள்விகள், விவாதங்களுக்கு அப்பாலான பயணம் என்பது படுபயங்கரமானது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள புதிய பிரேரணையை தமிழ் மக்கள் பாரிய வெற்றியாக கொள்ள வேண்டியதில்லை. அது, விரைவான தீர்வுகள் எதனையும் தந்துவிடவும் போவதில்லை. ஆனால், அதனை சர்வதேசத்தின் முன்னாலுள்ள ஒரு கருவியாக கருத முடியும். அதாவது, நடுக்கடலில் வீழ்ந்து தத்தளிக்கும் ஒருவன், ஒரு மரக்கட்டையைப் பிடித்துக் கொண்டு நீந்துவதற்கு ஒப்பானது. அவன், படகு வரும் வரையில் தன்னை மரக்கட்டையின் உதவியுடன் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். புதிய பிரேரணை கடலில் வீழ்ந்துவிட்டவனுக்கான மரக்கட்டைதான். அதனை கைவிடச் சொல்லி யாரும் கோர முடியாது. அப்படிக் கோரினால், கடலில் மூழ்கி மரணிக்கும் அந்த மனிதனுக்கான பொறுப்பை அவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction