free website hit counter

ஜெனீவா அரங்காற்றுகையும் முகத்தில் அறையும் உண்மையும்! (புருஜோத்தமன் தங்கமயில்)

பதிவுகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர்களை முன்னிறுத்தி தமிழ்த் தேசிய அரசியல் களம் ‘ஜெனீவா அரங்கினை’ ஒவ்வொரு வருடமும் திறக்கும். அந்த அரங்கு குறைந்தது இரண்டு மாதங்களாவது பல்வேறு அரங்காற்றுகைகளோடு நிறைந்திருக்கும். தொடர்ச்சியாக பலிவாங்கப்படும் ஒரு சமூகமாக தமிழ் மக்கள் நீதிக் கோரிக்கைகளோடு சர்வதேசத்தை நாடுவது ஒன்றும் தவறில்லை. அதுவும், ஈழத் தமிழர்களின் விவகாரம் மற்றும் சர்வதேச ஊடாடல் என்பது பெரும்பாலும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்குள் சுருக்கப்பட்ட நிலையில், ஜெனீவா அரங்கு மேலெழுவது இயல்பானதுதான். 

ஒவ்வொரு வருடமும் இராஜதந்திரிகளுடனான சந்திப்புக்கள் என்ற புள்ளியில் திறக்கும் ஜெனீவா அரங்கு, அரசியல் கட்சிகளின் சந்திப்புக்கள், ஏட்டிக்குப் போட்டியான அறிக்கைகள், துரோகி பட்டம் சூட்டுதல்கள் என்ற அளவோடு மேலெழும். தாயகத்தில் மோதிக் கொண்டவர்கள், ஜெனீவாவுக்கு படையெடுத்துச் சென்று அங்கும் ஒருவரையொருவர் வசைபாடி ஓய்வார்கள். (கொரோனா கட்டுப்பாடுகளினால் ஜெனீவாவுக்கான பறத்தல் இந்த வருடம் மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றது.) மற்றொரு பக்கத்தில் கருத்துருவாக்கிகள், புலமையாளர்கள் என்று தங்களை முன்னிறுத்தும் தரப்பு, ஜெனீவா அரங்கினை தங்களது மோதாவித்தனங்களை காட்டுவதற்கான களமாக பெரும்பாலும் முன்னிறுத்திக் கொள்கின்றது. ஊடகங்களின் நிலை என்பது இந்த இரண்டு தரப்புக்களின் பேட்டிகள், அறிக்கைகளினால் இடங்களினை நிரம்புவது என்கிற அளவுக்குள் சுருங்கிவிடுகின்றது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையினால் இலங்கை விடயத்தில் எவ்வாறான தலையீடுகளைச் செய்ய முடியும் என்பது தொடர்பில் அரசியல்வாதிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் நல்ல தெளிவு உண்டு. குறிப்பாக, ஒரு நாட்டின் மீதான கண்காணிப்பு என்கிற அளவினைத் தாண்டிய தலையீடுகளினை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையினால் செய்ய முடியாது என்பதுதான் அந்த முகத்தில் அறையும் உண்மை. ஆனால், அந்தக் கண்காணிப்பு என்கிற விடயம், சம்பந்தப்பட்ட நாட்டுக்கு குறிப்பிட்டளவான அழுத்தம் என்பதையும் மறுக்க முடியாது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் தனக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்படக் கூடாது என்று இலங்கை அங்கலாய்ப்பதும் அதன் போக்கில்தான். அதனை விடுத்து, இலங்கையை பாரியளவில் தண்டிப்பதற்கான வாய்ப்புக்கள் அங்கு இல்லை.

அதுபோல, இலங்கை மீதான சர்வதேச விசாரணை மற்றும் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துதல் என்கிற விடயங்களுக்கான சாத்தியப்பாடுகள் எப்படிப்பட்டது என்றால், அது கிட்டத்தட்ட பூச்சியத்துக்கு அண்மித்தது. ஏனெனில், தற்போது வரையில் இலங்கை உரோம் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டிருக்கவில்லை. அதனால், சர்வதேச விசாரணைகளுக்கான வாய்ப்புக்கள் இல்லை. பாதுகாப்புச் சபையூடாக சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாணையொன்றுக்கு இலங்கையை பாரப்படுத்தல் என்பது ஐ.நா.வின் வீற்றோ அதிகார நாடுகளான அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், ரஷ்யா, சீனா ஆகியவற்றின் கைகளில்தான் தங்கியிருக்கின்றது. பாதுகாப்புச் சபைக்குள் வரும் ஒரு விடயம், இந்த நாடுகளில் ஒன்று நிராகரித்தாலேயே, இரத்தாகிவிடும்.

மியன்மாரில் அண்மையில் இராணுவத்தினால் ஆட்சிக் கவிழ்ப்பு நிகழ்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆங் சான் சூசி உள்ளிட்ட ஜனநாயகத் தலைவர்கள், முக்கியஸ்தர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்கள். இராணுவச் சதிப்புரட்சிக்கு எதிராக மியன்மார் மக்கள் வீதிக்கு இறங்கினார்கள். பெரும் போராட்டங்களை முன்னெடுக்கின்றார்கள். எழுச்சி பெறும் போராட்டங்களினால் நெருக்கடிகளைச் சந்திக்கும் இராணுவம், போராட்டங்களை ஆயுத முனையில் அடக்க நினைக்கின்றது. இதுவரையில், பல போராட்டக்காரர்கள் பொலிஸாரினதும் இராணுவத்தினதும் துப்பாக்கிச் சூட்டினால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இந்த விடயம் ஐ.நா. பாதுகாப்புச் சபைக்கு கடந்த வாரத்தில் வந்தது. ஆனால், மியன்மாரில் நடப்பது உள்நாட்டு விவகாரம், அதில் தலையீடுகள் தேவையில்லை என்ற அளவில் சீனா தன்னுடைய நிலைப்பாட்டினை வெளிப்படுத்திய அளவிலேயே, பாதுகாப்புச் சபை மியன்மார் விடயத்தினை அப்படியே கைவிட்டிருக்கின்றது. சிரியாவில் ஆயுத மோதல்கள் நீடித்த காலத்தில் பாதுகாப்புச் சபையில் தொடர்ச்சியாக சிரியாவுக்கு எதிராக தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், அங்கு ரஷ்யா அந்தத் தீர்மானங்களுக்கு எதிராக தொடர்ச்சியாக வீற்றோ அதிகாரத்தை பயன்படுத்தி வந்தது. ஏன், 2009ஆம் ஆண்டு இலங்கையின் இறுதிப் போர் வலுப்பெற்றிருந்த தருணத்திலும் பாதுகாப்புச் சபையில் இலங்கை விவகாரம் வந்தது. ஆனால், அது ஒரு தீர்மானமாக மாறுவதற்கு முன்னரேயே, இலங்கைக்கு ஆதரவாக செயற்பட்ட நாடுகளின் அழுத்தத்தால் விடயம் கைவிடப்பட்டது. இதுதான், பாதுகாப்புச் சபைக்குள் இருக்கும் நிலை.

பாதுகாப்புச் சபையிலுள்ள அனைத்து நாடுகளும் ஒன்றாக இணைந்து தீர்மானத்தை அங்கீகரிக்கும் அளவுக்கு இலங்கை ஒன்றும் கேந்திர முக்கியத்துவமற்ற பிராந்தியத்திலுள்ள நாடு அல்ல. இந்து சமுத்திரத்தில் இந்தியா என்கிற பிராந்திய வல்லரசை கண்காணிக்கும் தூரத்தில் இருக்கின்றது. இலங்கை போன்றதொரு தீவு அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும், இந்தியாவுக்கும் தேவையாக இருக்கின்ற நிலையில், இந்த நாடுகள் ஒவ்வொன்றும் தன்னுடைய நலனை முன்னிறுத்தி இலங்கை விவகாரத்தைக் கையாளும். அதுதான், இலங்கை சுதந்திரம் பெற்ற நாள் முதல் நடந்து வந்திருக்கின்றது. எதுவித இயற்கை வளங்களும் இல்லாத, பிராந்திய முக்கியத்துவம் இல்லாத ஆபிரிக்காவிலுள்ள சில நாடுகள் போலில்லை இலங்கை. ஆபிரிக்காவிலேயே இப்போது பல நாடுகளை சீனா உள்ளிட்ட வல்லரசுகள் அபகரிக்கத் தொடங்கிவிட்டன. பில்லியன் கோடி டொலர்களில் இலங்கையில் முதலிட்டிருக்கிற சீனா, இலங்கையை தன்னுடைய ஒரு மாகாணமாக கருதும் நிலையே இப்போது இருக்கின்றது.

அப்படிப்பட்ட நிலையில், இலங்கையை பாதுகாப்புச் சபைக்கு கொண்டு செல்வது என்பது ஒரு அபத்தமான வாதம். அதனை ஒரு பரீட்சார்த்த முயற்சியாக முன்னெடுக்க முனையும் தரப்புக்கள், அதன் மூலம் வல்லரசு நாடுகளின் தார்மீகத்தை கேள்விக்குள்ளாக்கலாம் என்கின்றன. வல்லரசு நாடுகளிடம் எப்போது தார்மீகம் இருந்திருக்கின்றன? அவை, தங்களது நலன்கள் சார்ந்துதான் எப்போதும் செயற்பட்டிருக்கின்றன. இந்த இடத்தில்தான், இராஜதந்திர ஊடாட்டங்களின் ஊடாக வெற்றியை நோக்கிய பயணம் முக்கியத்துவம் பெறுகின்றது. அதனைவிடுத்து, முட்டுச் சந்துகளில் முட்டிக்கொண்டு இருப்பதல்ல இராஜதந்திரம், புலமை.

தேர்தல் அரசியலுக்குள் தமிழ்த் தேசிய அரசியல் சுருக்கப்பட்டிருக்கின்ற நிலையில், அரசியல் கட்சிகள், சிவில் சமூக இயக்கங்கள், கருத்துருவாக்கிகள், புலமையாளர்கள் என்று அனைத்துத் தரப்புக்களும் ஊடகக் கவனம் பெறத் துடிக்கும் அரசியல்வாதியைப் போல செயற்படவே விரும்புகின்றன. ஜெனீவா அரங்கு திறக்கின்ற ஒவ்வொரு வருடமும் கட்சிகளின் சந்திப்புக்கள், மக்கள் சந்திப்புக்கள், மாநாடுகள், ஊடக சந்திப்புக்கள், அறிக்கைகள், கட்டுரைகள் என்று எல்லா இடங்களிலும் மக்களின் உணர்வினைத் தூண்டி அதில் குளிர்காயும் அளவுக்கான பிரயோகங்களே அதிகளவில் வெளிப்படுத்தப்படுகின்றன. அதன்போக்கில்தான், சர்வதேச விசாரணை, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் என்கிற விடயங்கள் பேசப்படுகின்றன. ஆனால், அவற்றுக்கான வழி வரைபடம் பற்றி யாரும் பேசுவதில்லை. அப்படிப் பேசினால், முட்டுச் சந்துக்குள் சென்று சேர வேண்டியிருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். அப்படியான நிலையில்தான், கவர்ச்சியான வார்த்தைகளினூடு மக்களை குழப்ப நினைக்கிறார்கள். அந்தக் குழப்பத்தினூடு தங்களை பெரிய மேதைகளாக கட்டமைக்க நினைக்கிறார்கள். அதாவது, அவர்கள் குட்டையைக் குழப்பி மீன்பிடிக்கும் வித்தைக்காரர்கள். அவர்களுக்கு மக்களைப் பற்றியெல்லாம் எந்தவித அக்கறையும் இல்லை. மக்கள் அதள பாதாளத்துக்குள் தொடர்ச்சியாக விழுந்து கொண்டிருக்க வேண்டும், தாங்கள் மாத்திரம் சமூகத்தில் முன்நிலையில் நிற்க வேண்டும் என்கிற குறுநல நோக்காகும்.

இந்த இடத்தில்தான், மக்கள் தாங்கள் எந்த இடத்தில் இருக்கின்றோம் என்பதனையும், தங்களை முன்னிறுத்தியும், தங்களைச் சுற்றியும் பின்னப்படுகின்ற சதிவலைகளை கவனமாக அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். இல்லையென்றால், தொடர்ச்சியாக தமிழ் மக்களை யோசிக்க விடாது பரிசோதனை எலிகளாக முன்னிறுத்தும் கூட்டம் நிலைபெறும். அநீதிகளுக்கு எதிராக நீதிக் கோரிக்கைகளோடு எழுவது என்பது அடிப்படையானது, அதனை தமிழ் மக்கள் என்றைக்கும் கைவிட்டுவிடக் கூடாது. ஆனால், அதனை உலக ஒழுங்கில் நிகழும் இராஜதந்திர ஆட்டங்களுக்கு ஈடுகொடுத்து ஆடி பெற்றுக்கொள்ள வேண்டும். அது ஒரே இரவில், ஒரு போராட்டத்தினால், அல்லது ஒற்றை மனிதரினால் நிகழ்ந்து விடாது. அது, தெளிவான சிந்தனைகளோடும் போலிகளை அடையாளம் கண்டுகொள்வதோடும் இலக்கினை அடையும் வழிகளை தெளிவாக வரையறுப்பதினூடாகவும் அடைய வேண்டியது. அதனை மறந்துவிட்டால், சூனிய வெளிகளைத் தவிர எதனையும் அடைய முடியாது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction