அமேசான் ஓடிடி தளத்த்கில் ஜூன் 4ஆம் தேதி ‘தி ஃபேமிலி மேன் 2’ இணையத் தொடர் வெளியாகிறது.
மனோஜ் பாஜ்பாய், சமந்தா நடித்துள்ள அந்தத் தொடருக்கு தமிழகத்திலும் புலம்பெயர் தமிழர்களிடமும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஈழத்தமிழர் இன விடுதலைக்காக ஆயுதமேந்திப் போராடிய விடுதலைப் புலிகள் இயக்கத்தை, தீவிரவாதிகளாக சித்தரிக்கும் விதமாக சமந்தாவின் கதாபாத்திரம் அமைக்கப்பட்டிருந்தாக ட்ரைலரைப் பார்த்து நெட்டிசன்கள் கொதித்தனர். இலங்கையில் தமிழர்கள் லட்சக் கணக்கில இனப்படுகொலை செய்யப்பட்டது குறித்து எதுவும் தெரிந்தும் தெரியாமலும் விடுதலைப்புலிகளை தீவிரவாதிகளாக சித்தரித்தும் வட இந்தியர்கள் இந்தத் தொடரை பொறுப்பின்றி எடுத்துள்ளதாக கடும் எதிர்ப்பு கிளம்பியது.
பிரச்சனையின் உச்சமாக தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இந்தத் தொடரை தடை செய்ய வேண்டும் எனக் கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். ஆனால் மத்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அமேசான் நிறுவனம் திட்டமிட்டபடி ஜூன் 4-ஆம் தேதி அந்த இணையத் தொடர் வெளியாவது உறுதியாகிவிட்டது. தமிழர்களை நாங்கள் தவறாக சித்தரிக்கவில்லை என்று அமேசான் தரப்பில் மத்திய அரசுக்கு விளக்கம் அளித்ததாக தெரியவருகிறது.
இந்த விவகாரத்தில் சென்னையில் பிறந்து, வளர்ந்து, தமிழ் சினிமா மூலம் பிரபலமான நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்டு ஆந்திராவில் செட்டிலாகிவிட்டார். அவர் மீது தற்போது ரசிகர்களும் நெட்டிசன்களும் கோபமாக இருப்பதை சமந்தாவை நோக்கி எழுப்பியிருக்கும் கேள்விகளே சாட்சியாக உள்ளன. ‘தமிழர்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட ஒரு படத்தில் சமந்தா நீங்கள் எப்படி நடிக்க சம்மதித்தீர்கள்?’ என்று கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால் சமந்தாவும் இதுவரை இந்த சர்ச்சை குறித்தோ, ரசிகர்களின் கேள்விகளுக்கோ பதில் அளிக்கவில்லை. பலர் கேள்வி கேட்டும் அமைதியாக இருக்கிறார்.
தற்போது, தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக காத்துவாக்குல ரெண்டு காதல் உட்பட சில படங்களில் நடித்து வருகிறார். இந்த இணையத் தொடர் விஷயத்தில் ஏதாவது பேசினால் வம்பில் சிக்கிக்கொண்டு தன்னுடைய சினிமா எதிர்காலம் பாதிக்கப்படுமோ என சமந்தா அஞ்சுவதாக அவருடைய சென்னை வட்டாரத்தில் கூறுகின்றனர். இதைவிட முக்கியமான தகவலையும் சமந்தா நட்பு வட்டத்தினர் நம்மிடம் பகிர்ந்துகொண்டனர். சமந்தாவின் கணவர் நாகசைதன்யா தரப்பில் ‘இந்த விஷயத்தில் நீ இதுவரை எதுவும் பேசாமல் இருப்பது உனது சொந்த மாநிலத்தில் உனது பெயர் கெடுவதற்கு ஏதுவாகும். அதனால் நீ நடித்துள்ள கதாபாத்திரம் எத்தகையது என்பதை தொடர் வெளியாகும் வரை காத்திருக்காமல் ஒரு வீடியோ பதிவு போட்டு கூறுவிடு’ என அறிவுரை கூறியிருக்கிறார். ஆனால் சமந்தா அதையும் ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை. ‘என்னை கேள்வி கேட்பவர்கள் இணையத் தொடரைப் பார்த்துவிட்டு ஒரு முடிவுக்கு வரட்டும். அதன்பின் நான் வீடியோ போடுகிறேன்’ என்று கணவரிடம் கட் அண்ட் ரைட்டாகச் சொல்லி விட்டாராம் சமந்தா. தொடருக்கான விளம்பரமாக இந்த சர்ச்சை அமைந்துவிட்டதில் அமேசான் நிறுவனத்தின் இந்தியக் குழு மகிழ்ச்சியில் உள்ளது.