free website hit counter

போரின் சாம்பலில் இருந்து எழும் ஒரு குரல் — ‘Congo Boy’

திரைப்படவிழாக்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் தலைநகரான பாங்குயியைப் பின்னணியாகக் கொண்டு இயக்குனர் Rafiki Fariala-வின் நெறியாள்கையில் உருவாகியிருக்கும் ‘Congo Boy’ திரைப்படம்; போர், அகதித்தனம், வறுமை, குடும்பப் பொறுப்பு ஆகியவற்றின் நடுவே இசையைக் கனவாகக் கொண்டிருக்கும் 17 வயது இளைஞன் ஒருவனின் கதையைச் சொல்கிறது.

2026 கான் திரைப்பட விழாவின் Un Certain Regard பிரிவில் வெளியாகி, படத்தின்  கதாநாயகன் Bradley Fiomona Dembeassetக்கு சிறந்த நடிகர் விருதையும் பெற்றுத் தந்த படம். லோகார்னோ சர்வதேசதிரைப்படவிழாவின் 79வது பதிப்பில், பியாற்சாகிரான்டே பெருமுற்றத்தில் திரையிடப்பெற்றது. பியாற்சா கிரான்டே பெருநதிரையில் காணவேண்டும் எனக் காத்திருந்து பார்த்தோம்.

போர், போரியல் அகதி வாழ்வு, என்பதெல்லாம் நமக்குப் புதிதான அனுபவமல்ல. Congo Boy வெறுமனே இன்னொரு “போரில் சிக்கிய இளைஞனின் கதை” அல்ல. அதன் தனித்தன்மை, போரின் கதையை இசையின் வழியாக சொல்ல முயல்வதில் இருக்கிறது. கதையின் நாயகனான றொபேட் பேச முடியாத பல உணர்வுகளைப் பாடல்களாக வெளிப்படுத்துகிறான். துப்பாக்கிச் சத்தங்களுக்கும் இசைக்கும் இடையே படம் தொடர்ந்து ஒரு முரண்பாட்டை உருவாக்குகிறது. ஒரு புறம் நகரத்தைச் சூழ்ந்திருக்கும் வன்முறை; இன்னொரு புறம் அந்த வன்முறையின் நடுவிலும் வாழ்வதற்கான மனிதனின் துடிப்பு.

படத்தின் தொடக்கத்திலேயே இசையும் வன்முறையும் நேருக்கு நேர் சந்திக்கின்றன. இரவு விடுதிக்குள் துப்பாக்கிச் சூடு நிகழும் தருணத்திலும் இசை முற்றிலுமாக அழிந்துவிடவில்லை. மாறாக, அதே குழப்பத்தின் நடுவிலேயே றொபேட் மேடையேறுகிறான். அந்தக் காட்சி, இயக்குநர் சொல்ல விரும்பும் முழுக் கதைக்கான ஒரு சிறிய அறிமுகமாகவே அமைகிறது . கதையின் நிறைவு,  போர் மனிதனை மௌனமாக்க முயன்றாலும், கலை அவனுக்கு மீண்டும் குரல் கொடுக்கிறது.

இப்படத்தின் மிகப்பெரிய பலம் அதன் சுயசரிதைத் தன்மை. இயக்குனர் Rafiki Fariala, காங்கோ அகதியாக மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் வளர்ந்தவர். அவரது பெற்றோர் சிறையில் இருந்த காலத்தில், தன்னுடைய நான்கு இளைய சகோதர, சகோதரிகளுடன் தனியாக வாழ வேண்டிய சூழலை எதிர்கொண்டதாகவும், அந்த அனுபவங்களை றொபேட் Robert என்ற கற்பனைப் பாத்திரத்தின் வழியாகத் திரைப்படமாகியுள்ளார். இதனால் படத்தின் வலி, வறுமை, அச்சம் ஆகியவை வெறும் திரைக்கதைச் சம்பவங்களாகத் தோன்றாமல், வாழ்ந்து அறிந்த அனுபவங்களின் நெருக்கத்தைப் பெறுகின்றன.

குறிப்பாக நாயகன் றொபேட்டாக நடித்த, Bradley Fiomona Dembeasset-ன் நடிப்பு அத்தனை சிறப்பு. றொபேட் அதிகமாகப் பேசுவதில்லை; அவனது முகமே அவனுடைய மொழியாகிறது. தந்தையின் முன் அவன் காட்டும் அடக்கம், வன்முறையின் போது தெரியும் பயம், மேடையில் பாடும்போது வெளிப்படும் தன்னம்பிக்கை எனும் மாறுபட்ட இந்த மனநிலைகளை Dembeasset மிக இயல்பாக வெளிப்படுத்துகிறார். அதனால்தான் கான் விழாவின் சிறந்த நடிகர் விருது இந்த நடிப்புக்கு கிடைத்தது என்பது புரிகிறது.

படத்தின் மற்றொரு சிறப்பம்சம் ஒளிப்பதிவு. Adrien Lallau-வின் கேமரா பாங்குயியின் பகல் நேரக் காட்சிகளை வண்ணமயமாகவும், இரவுக் காட்சிகளை ஒளி நிழல் முரண்பாடுகளுடனும், துப்பாக்கிதாரிகள் தோன்றுகையில் அச்சத்துடனும் பதிவு செய்கிறது.ஆயினும் போர் சூழ்ந்த நகரம் என்ற ஒரே பரிமாணத்துக்குள் சிக்காமல், அந்நகரத்தின் வாழ்வையும், மக்களின் உறவுகளையும், கொண்டாட்டங்களையும் படம் காண்பிக்கிறது.

இந்தக் கதையும் நாயகனும் எமக்கு மிக நெருக்கமானதே. வறுமை மற்றும் போருக்கு மத்தியில் கனவைத் துரத்தும் இளைஞன் கதை, உலக சினிமாவில் ஏற்கெனவே பலமுறை சொல்லப்பட்ட  ஒன்றுதான். ஆனாலும்,  Congo Boy மனதில் நிற்பதற்குக் காரணம் அதன் நம்பிக்கை. போர் முடிவடைகிறதா என்பது மட்டுமே இப்படத்தின் கேள்வியல்ல; போருக்குப் பிறகும் மனிதன் தனது கனவைத் தக்கவைத்துக்கொள்ள முடியுமா என்பதே அதன் ஆழமான கேள்வி.

Rafiki Fariala, தன் முதல் முழுநீள புனைகதைப் படைப்பிலேயே, அகதித்தனம் மற்றும் போரைப் பற்றிய ஒரு அரசியல் உரையை மட்டுமல்லாமல், “வாழ வேண்டும் என்ற ஆசையே ஒரு எதிர்ப்புச் செயல்” என்ற மனிதநேயக் கருத்தையும் முன்வைக்கிறார். துப்பாக்கிகளின் சத்தத்துக்கிடையே ஒரு சிறுவன் பாடுகிறான். அந்தப் பாடல் வெறும் இசை அல்ல, அவன் இருப்பதற்கான அறிவிப்பு.  “கனவுகளைப் பறித்துவிடும் அளவுக்கு போர் கொடூரமானதாக இருக்கலாம்; ஆனால் ஒரு மனிதனின் கனவு, அவனுடைய குரலாக மாறிவிட்டால் அதை அடக்குவது அவ்வளவு எளிதல்ல.” என்பதை உணர்பூர்மாக, லொகார்னோ பெருமுற்றத்தில் திரண்டிருந்த பார்வையாளர்கள் தங்களின் நீண்ட கரவொலியால், வெளிப்படுத்தினார்கள். பெருமுற்றத்தில் பார்வையாளர்களுக்கு மத்திய்ல் இருந்து, தம் படைப்பினைப் பார்த்து மகிழ்ந்த இயக்குனரும், நாயகனும், அந்தக் கரவொலிக்குள் சிக்கிச் சிறைப்பட்டிருந்து மகிழ்ந்தார்கள்.

- 4தமிழ்மீடியாவிற்காக : லொகார்னோவிலிருந்து  மலைநாடான்.

படங்கள் : நன்றி Locarno Film Festival / Ti-Press

 

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula