free website hit counter

லொகார்னோ திரைப்படவிழா தவறவிடாத காருண்யம் !

திரைப்படவிழாக்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

 லொகார்னோ திரைப்பட விழாவின்  79வது (2026) பதிப்பு, கடும் வெப்ப காலநிலையின் மத்தியிலும், மிக அமைதியாகத் தொடங்கியது. சம்பிரதாய பூர்வமான அறிமுகங்களுடன், 05.08.2026 புதன்கிழமை மாலை உத்தியோக பூர்வமாக ஆரம்பமான விழாவின் முதன் நாளில் பியாற்சாகிரான்டே பெருமுற்ற திரைமேடையில்,  உலகத் திரைப்பட உலகின் முக்கியமான ஆளுமைகளில் ஒருவரான இசபெல்லா ரொசெல்லினி(Isabella Rossellini) அவர்களுக்கு Excellence Award வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

பல தசாப்தங்களாக நடிகை, இயக்குநர், எழுத்தாளர் மற்றும் முன்னணி மாடலாகப் பல்வேறு துறைகளில் ஆற்றிய சிறப்பான பங்களிப்பிற்காக இந்த உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது. 

1952 ஆம் ஆண்டு பிறந்த இசபெல்லா ரொசெல்லினி, புகழ்பெற்ற இத்தாலிய திரைப்பட இயக்குநர் Roberto Rossellini மற்றும் ஸ்வீடிஷ் ஹாலிவுட் நடிகை Ingrid Bergman ஆகியோரின் மகளாவார். திரைப்படப் பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்திருந்தாலும், தனது தனித்துவமான நடிப்பு, கலை உணர்வு மற்றும் படைப்பாற்றலால் உலக சினிமாவில் தனக்கென ஒரு உயரிய இடத்தை உருவாக்கியுள்ளார்.

மாடலாக தனது கலைப் பயணத்தைத் தொடங்கிய அவர், 1986 ஆம் ஆண்டு David Lynch இயக்கிய Blue Velvet திரைப்படத்தில் ‘Dorothy Vallens’ கதாபாத்திரத்தின் மூலம் உலகளாவிய கவனத்தை ஈர்த்தார். அதன்பின் Robert Zemeckis, David O. Russell, Taylor Hackford, Marjane Satrapi, Guy Maddin, Taviani சகோதரர்கள், Alice Rohrwacher உள்ளிட்ட பல முன்னணி இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றினார்.

சமீப காலங்களில் La Chimera (2023) மற்றும் Conclave (2024) போன்ற திரைப்படங்களில் அவரது நடிப்பு பெரும் பாராட்டைப் பெற்றது. குறிப்பாக Conclave திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான அகாடமி (Oscar) விருதிற்கான பரிந்துரையையும் பெற்றார். மேலும், Green Porno போன்ற புதுமையான குறும்படத் தொடர்களின் மூலம் இயற்கை, உயிரியல் மற்றும் கலை ஆகியவற்றை இணைத்த படைப்பாளராகவும் அவர் அறியப்படுகிறார்.

லொகார்னோ திரைப்பட விழா நிர்வாகம், இசபெல்லா ரொசெல்லினியை “ஹாலிவுட்டின் தொழில்நுட்பத் திறமையையும் ஐரோப்பிய கலைத் துணிச்சலையும் ஒருங்கிணைத்து, திரைப்படம், தொலைக்காட்சி மற்றும் ஃபேஷன் உலகில் அழியாத தடம் பதித்த சமகால திரைப்படத்தின் உண்மையான அடையாளம்” என்று பாராட்டியுள்ளது.

இந்த விருது, அவரது நீண்டகால கலைச் சாதனைகளுக்கான அங்கீகாரமாக மட்டுமல்லாமல், உலகத் திரைப்பட வரலாற்றில் அவர் ஏற்படுத்திய நிலையான தாக்கத்திற்கும் வழங்கப்பட்ட மரியாதையாகக் கருதப்படுகிறது.
மேடையில் விருதினைப் பெறுக்கொண்ட ரொசெல்லினி " பல வருடங்களின் முன் தன் தந்தை விருது பெற்ற அதே மேடையில் தான் விருதுபெறுவது மகிழ்ச்சி தருகிறது "எனக் குறிப்பிட்டார்.

பியாற்சா கிரான்டே பெருமுற்றத்தில் முதலாவதாகக் காட்சிப்படுத்தப்படம், இயக்குனர் ஃபானி லியாடார்ட், ஜெரெமி ட்ரூய் (Fanny Liatard, Jérémy Trouilh) இயக்கத்தில், France, Belgium, Sweden கூட்டுத் தயாரிப்பாக  வெளிவந்துள்ள Les Yeux Verts படத்தின் முதல் திரையிடலாகும். ஆனால் நாம் அதற்கு முன்னதாக பத்திரிகையாளர் காட்சியில் பார்த்த படம், ஒரு இந்தியப்படமாகும்.

பத்மஸ்ரீ விருது பெற்ற, புகழ்பெற்ற பஞ்சாபி புனைகதை எழுத்தாளரான அஜித் கவுர், அவர்களின் மூன்று கதைகளை, மிக நுடபமாகப் பொருத்தி, இயக்குனர் குர்வீந்தர் சிங் (Gurvinder Singh) நெறியாள்கையில் வந்திருக்கும் படம் ரெஹ்மத் (Rehmat).

லொகார்னோவின் முக்கியப் போட்டிப் பிரிவில் திரையிடப்படும்  இந்தப் புதிய படைப்பு, வழக்கமான பஞ்சாபிப் படங்களின் பாணியிலிருந்து வேறுபட்டு, சிறந்த திரைப்படங்களுக்குரிய பண்புகளையும், மனிதநேயத்தையும் திரையில் விரிக்கிறது.கொண்டுள்ளது. அஜீத் கவுரின் கதைகளிலிருந்து தழுவி எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தின் உயிர்ப்பு எதுவென்றால், காருண்யம் அல்லது கருணை எனலாம்.

பஞ்சாபின் அரசியல் வரலாற்றின் பாரத்தை, மனக்கசப்புக்கு பதிலாக  ஒரு திறந்த மனப்பான்மையுடன் பார்க்கும் கண்ணோட்டத்தின் வழியாகக் கருத்தில் கொள்ளலாம் எனும் சிந்தனையை பார்வையாளர்களிடம் தொற்ற வைக்கிறது.

'ரெஹ்மத்' படத்தின் ஆரம்பக் காட்சிகளில் மௌனமாகவும், மர்மமாகவும். பதற்றமாகவும் இருக்கும் சூழலை, அமைதியான திரைமொழியினூடு விழிவழியாகப் பார்வையாளனை உள் நுழைத்துவிடுகின்றார் இயக்குனர். அதன் பின் அந்தக் கதை மாந்தர்கள் நகரும் பாதைகளில் நாமும் பயணிக்கின்றோம்.

அதற்கான திரை அனுபமொழியினை கேமரா பதிவு செய்யும் போது, பஞ்சாப்பின்  பேரழிவுகளை, மனப்பிறழ்வுகளை, பயத்தினை,  பொய்க் கதைகள்  கட்டவிழ்த்துவிட்ட துயரினை எலலாம் கடந்து, 'ரெஹ்மத்' மனிதர்கள் மத்தியில் மெல்லிணக்கத்தை மெல்ல மெல்ல ஏற்படுத்துகின்றது. இரக்கமும், மனிதநேயமும், மகத்தான சுதந்திரத்தின் அடையாளம் என்பதைச் சொல்லி நிறைவுபெறுகிறது.

'ரெஹ்மத்' பார்த்து முடிக்கையில், அஜித் கவுரின் அத்தனை கதைகளையும் படித்துவிடவேண்டும் எனும் ஆசையினைத் தோற்றுவிக்கின்றார் இயக்குனர் குர்வீந்தர் சிங். அதற்குத் துணையாகத் திரையில் வாழ்கின்றார்கள் கலைஞர்கள். 'ரெஹ்மத்' காண்பிக்கும் காருண்யம் காலத்தின் தேவை எனலாம்.

அடுத்த ஆண்டில் 80வது ஆண்டினை எட்டவுள்ள லோகார்னோ சர்வதேச திரைப்படவிழாக்குழுவின் தொடரும்  தனித்துவத் தேர்வுக்கு சான்றாக அமைகிறது 'ரெஹ்மத்' 

- 4தமிழ்மீடியாவிற்காக: லொகார்னோவிலிருந்து மலைநாடான்.

-படங்கள் நன்றி: Locarno Film Festival / Ti-Press

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula