வங்காளதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அந்நாட்டுடன் ஒருநாள், டெஸ்ட் தொடரை விளையாடி வருகிறது.
இதில், முதலில் ஆடிய வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 227 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து, முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா 314 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனை தொடந்து 2-வது இன்னிங்சை தொடங்கிய வங்காளதேசம் 231 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. வங்காளதேசத்தின் லிண்டன் தாஸ் அதிகபட்சமாக 73 ரன்கள் குவித்தார்.
இந்திய அணி தரப்பில் அக்சர் பட்டேல் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து, 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியுள்ளது. சுக்மன் கில், கேஎல் ராகுல் துவக்க வீரர்களாக களமிறங்கினர். ஆனால், இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. 2 ரன்கள் எடுத்திருந்த கேஎல் ராகுல், ஷகீப் வீசிய பந்தில் கேட்ச் மூலம் அவுட் ஆனார்.
அடுத்து வந்த புஜாரா 7 ரன்னில் ஸ்டெப்ம்பிங் முறையில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். இதனால், 12 ரன்னில் 2 விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாறியது. அடுத்து அக்சர் பட்டேல் களமிறங்கினார். அதேவேளை, 7 ரன்கள் எடுத்திருந்த துவக்க வீரர் சுக்மன் கில்லும் ஸ்டெம்பிங் முறையில் அவுட் ஆனார். இதனால், 29 ரன்கள் எடுத்திருந்த இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்தது தடுமாறியது. அடுத்து வந்த விராட் கோலி 1 ரன் எடுத்த நிலையில் முகைதி ஹசன் மிர்சா பந்து வீச்சில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.
இதனால், இந்திய அணி 37 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது. இதனையடுத்து, ஜெயதேவ் உனாத்கட் களமிறங்கினார். அவருடன் ஜோடி சேர்ந்த அக்சர் பட்டேல் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
3-ம் நாளான நேற்றைய ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 45 ரன்களை சேர்ந்த்திருந்தது. வெற்றிக்கு 100 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கைவசம் 6 விக்கெட்டுகளுடன் இந்திய அணி இன்று களம் இறங்கியது. ஆனால் இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி அளிக்கும் வகையில் அக்சர் படேல் 34 ரன்னிலும், உனத்கட் 13 ரன்னிலும், அடுத்து வந்த ரிஷப் பண்ட் 9 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து அதிர்ச்சி அளித்தனர்.
இதனால் இந்திய அணி 74 ரன்னுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்நிலையில் 8வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஸ்ரேயஸ் அய்யர் , அஷ்வின் இணை நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். வங்கதேச அணியின் வெற்றிக்கு இன்னும் 3 விக்கெட்டுகளே தேவப்படும் நிலையில் ஆட்டம் பரபரப்பான நிலையை எட்டியது. ஆனால் இந்த இணை மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டதோடு அணியை சரிவில் இருந்து மீட்டனர். அதிரடியாக ஆடிய அஷ்வின் 4 பவுண்டரி மற்றும் 1 சிக்சருடன் 42 ரன்கள் குவித்தார். மற்றொரு பேட்ஸ்மேன் ஸ்ரேயஸ் அய்யர் 29 ரன்கள் சேர்த்தார்.
இதன் மூலம் இந்திய அணி 47 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் சேர்த்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்த இந்திய அணி டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி பதிலடி கொடுத்துள்ளது.