free website hit counter

அவளும் அவளும் – பகுதி 11

கதைகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பிறவுணியுடன் வந்த வேணி, முகுந்தனிடம், தலையசைப்பையும், சிரிப்பினையும், சிக்கனம் காட்டி, ராசத்தின் பக்கமாகச் சென்றாள்.

சாரு மாமாவோடு என்ன பேசியிருப்பாள் என யோசிப்பது போல் முகுந்தன் தலை கவிழ்ந்திருந்தான்.

அவன் கைகளில் சிக்கியிருந்த இலை, சிறு துண்டுகளாகச் சிதறிக்கொண்டிருந்தன. ராசம் கண்டிருந்தாள் ஏசுவாள். ராசத்திற்கு இப்படி இலைகளை சிறுதுகள்களாகக் கிள்ளிப்போடுவது பிடிக்காது. இது முகுந்தனின் தகப்பனது பழக்கம். தங்கராசு இப்படிக் கிள்ளிப் போடும் போதெல்லாம் “இதென்ன சின்னபிள்ளை மாதிரி கஞ்சல் போட்டுக் கொண்டு…” என ராசம் அவனைச் செல்லமாகக் கடிந்து கொள்வாள்.

ராசம் எதிலும் தூய்மையாக இருக்க விரும்புவள். அவளது சொல்லிலும் செயலிலும் அது நிறைந்தேயிருக்கும். அதனால் அவளது சூழல்; தூய்மையிலும், நம்பிக்கையிலும் மிகுந்திருந்தது.

ராசத்திடமிருந்து தலைவாசல் பக்கம் வந்த வேணி, “அண்ணா! நான் ஒரு விசயம் சொல்லலாமே…?” முகுந்தனிடம் அனுமதி கேட்டாள். அவள் குரலில் இலேசான தயக்கம் தெரிந்தது.

முகுந்தன் தலைநிமிர்ந்து அவளைப் பார்த்தான். அந்தப் பார்வையில் தெரிந்த அனுமதியில் வேணி பேசினாள்.

“அம்மாவ இங்க தலைவாசல்ல கொண்டு வந்து வளர்த்துவமே…?”

முகுந்தன் எதுவுமே சொல்லாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“ அறைக்குள் இருக்கிறத விட அம்மாவுக்கு இங்க இருக்கிறது சரியான விருப்பம். இங்க வளத்தினமென்டா அவவுக்கு இந்தச் சத்தங்கள் எல்லாம் கேட்கும்…அவ எழும்பியிருவா..” நம்பிகைகளை வார்த்தையாக்கினாள்.

முகுந்தனின் அகத்திலும் முகத்திலும் ஆச்சரியம் தெறித்தது. அவனும் அதையே நினைத்திருக்க வேண்டும் என்பது அதில் தெரிந்தது.

செல்லதுரை மாஸ்டரின் மோட்டர் சைக்கிள் சத்தம் கேட்டது. அவர் திரும்பி வருகிறார் என்பதை ஊகித்துக் கொண்ட வேணி, “அவருக்கு இப்ப ஒன்டும் சொல்லாதையுங்கோ..” அவசரமாகச் சொல்லியபடி பின்புறம் நகர்ந்தாள். பிறவுணியும் அவளைத் தொடர்ந்தது.

திரும்பி வந்த செல்லத்துரை மாஸ்டர், மோட்டர் சைக்கிளை இயங்கு நிலையிலேயே நிறுத்திவிட்டு, இறங்கினார்.

“இந்தப் பைய இதில விட்டிட்டுப் போயிற்றன் போல…” என்றபடி வந்தவர், தலைவாசலில் தேடினார். அவர் பையை மட்டும் தேடவில்லை என்பது கண்களின் சுழற்சியில் தெரிந்தது.பையைக் காணவில்லை. பின் வளவில் வேணி குப்பை கூட்டும் சத்தம் கேட்டது.

“ஆரு செல்லாச்சியின்ர பெட்டையோ..?” பின் வளவில் நிறபது வேணி என்பதைத் தெரிந்து கொண்டு கேட்டார். முகுந்தன் தலைசைத்தான்.

“கவனம்.. அக்கா கண்டபாட்டுக்கு இடம் குடுத்திட்டா…” மெதுவாகக் கவனப்படுத்தி விட்டுக் கிளம்பினார். அவரது மீள் வருகையின் நோக்கம் பை அல்ல என்பது முகுந்தனுக்குப் புரிந்தது.

அவரது மோட்டார் சைக்கிளின் சத்தம் கூடிக் குறைந்ததில், அவர் திரும்பி விட்டார் என்பதை உறுதி செய்து கொண்ட வேணி மீண்டும் திரும்பினாள்.

“போய்றாரோ…?” கேள்வியை முகுந்தனிடமும், பார்வையை வீதியின் பக்கமாகவும் வைத்து, செல்லத்துரை மாஸ்டர் சென்றதை உறுதி செய்து கொண்ட மீண்டும் பேசத் தொடங்கினாள்.

“ நான் இப்பிடிச் சொல்லுறன் என்டு, வித்தியாசமா விளங்கிக் கொள்ளாதையுங்கோ…. அவருக்கு எங்களப் பிடிக்காது..”

“விளங்குது…ஆனா.. எனென்டுதான் விளங்கேல்ல..”

“ அது அப்படித்தான்…” வேணி சொன்ன பதில் செல்லத்துரை மாஸ்டருக்கு மட்மல்ல. விளங்கியும் விளங்காமல் நிற்கும் முகுந்தனுக்குமானதுதான்.

“இப்ப அதில்ல பிரச்சினை.. அம்மாவ அறையில இருந்து வெளியில கொண்டு வந்தா நல்லதென்டு நினைக்கிறன்….” முன்பு சொல்ல வந்து இடையில் விட்டதை மீண்டும் சொல்லித் தொடர்ந்தாள் வேணி.

“நானும் இதை நினைச்சனான். ஆனா என்ன சொல்லுவினமோ தெரியாதென்டு இருந்திட்டன்...”

“நீங்க அப்பிடிச் சொல்லேதண்ண. அவ உங்கட அம்மா. நீங்கதான் மற்றவைக்குச் சொல்ல வேணும்...” அவன் சம்மதிப்பானோ என்ற எண்ணத்தில் சந்தேகத்துடன் தொடங்கிய வேணி, முகத்தில் சந்தோஷ ரேகைகள் படர சற்றுச் சத்தமாகவே சொன்னாள். பின் தன் குரலின் உயர்வு கண்டு நாக்கைக் கடித்துக் கொண்டாள்.

“ஆனா அதுதான் உண்மை. முதல்ல இங்கயிருக்கேக்க அம்மா எல்லாத்தையும் யோசிச்சா. அம்மா சொன்னாச் சரியாத்தான் இருக்குமென்டு செய்தம். சரியாகவும் இருந்திச்சு. இப்ப அத சாரு செய்யிறாள்…” தன் பொறுப்பினை சாருவின் பக்கம் சாய்த்த முகுந்தனைப் பரிதாபமாகப் பார்த்த்தாள் வேணி.

“எனக்கும் இரவில அறைக்க படுக்கேலாமல் கிடக்குது. இங்க மாத்தினா நல்லம்தான்…” தன் நிலை விவரித்தான் முகுந்தன்.
அவர்கள் இருவரும் நினைப்பது நடந்துவிட்டால், அவர்களை விடவும் நான்தான் மகிழ்வேன். ஏனென்றால் அறைக்குள் சிறைப்பட்டுக் கிடக்கும் ராசம், என் பார்வைக்குள் வந்துவிடுவாள். காற்றின் வழி அவள் காதோரம் பேசலாம் என என்னுள் எண்ணிக் கொண்டேன். எங்கிருந்தோ வந்த மென் காற்றில் இலைகள் சலசலத்து ஆமோதித்தன.

“ வேப்ப மரக் காத்து அம்மாவுக்கும் நல்ல சுவாத்தியமாத்தான் இருக்கும்…”

“ அப்ப இங்க கொன்டு வருவமே…?” தயங்காமல் கேட்டாள் வேணி.

தயக்கத்துடன் தலையாட்டிச் சம்மதித்தாலும், வேணியின் வேகமும், அவன் சுவிஸில் மூதாளர் இல்லத்தில் பார்க்கும் வேலையின் அனுபவங்களும் இணைந்து கொள்ள, தலைவாசல் அறைக்குள்ளிருந்து, ராசம் வெளியே வரும் வேலைகள் ஆரம்பித்தன.

பெரிய வீட்டின் திண்ணையிலிருந்த பலகைக்கட்டிலுக்கு ராசத்தை கவனமாக மாற்றி முதலில் வெளியே கொண்டு வந்தார்கள். திண்ணைச் சுவருக்குப் பக்கமாக அதனை வைத்துவிட்டு, அறைக்குள்ளிருந்து பெரிய கட்டிலை வெளியே எடுத்துப் பொருத்த முயன்று கொண்டிருந்தார்கள்.

பலகைக் கட்டிலில் வானம் பார்க்க சலனமின்றிக் கிடந்தாள் ராசம். பார்ப்பதற்கான விருப்பம் பரிதாபமாக மாறியது. என்ன வாழ்க்கையிது..?
“எப்பிடியிருந்த மனுசி ..?”

ராசத்தை வருத்தம் பார்க்க வந்தவர்கள், திரும்பிப் போகையில் அப்படித்தான் சொல்லிக் கொண்டு போனார்கள். அதன் முழு வடிவமாகக் கிடந்தாள் ராசம்.
ஒரு மாதத்திற்குள்ளாக ஒட்டி உலர்ந்து எலும்பும் தோலுமாகப் போய்விட்ட ராசம் எப்பேர்பட்ட அழகியாக இருந்தாள் தெரியுமா…?

சின்னத்தம்பியர் தன்னுடைய மகளை, தான் கும்பிடும் அம்மாளாச்சியின் வடிவாகப் பார்த்தார். ஆனால் தங்கராசா ராசத்தை கல்யாணம் செய்திருந்த நாட்களின் மாலையொன்றில், இதே முற்றத்தில் வைத்து “ நீர் இந்தி நடிகை வைஜந்திமாலா போல இருக்கின்றீர் எனக் காதல் செய்திருந்தான்.

“ அம்மா நீங்க சின்னனில ஜோதிகா மாதிரி இருந்திருக்கிறியள் “ என்று ராசத்தின் இளவயதுப் போட்டோவைப் பார்த்த முகுந்தன் ஒருநாள் சொல்ல, “ போடா..போ.. “ என வெட்கப்பட்டுப் பேசினாள் ராசம்.

ராசத்தின் கல்யாண வீட்டிற்கு வந்தவர்கள் எல்லோரது வாய்களும் பலகாரங்களை மட்டும் மெல்லவில்லை. “பெம்பிளை நல்ல வடிவு” என வார்த்தைகளையும் மென்றன என்பது எனக்கு மட்டுமல்ல, என் பக்கத்தில் நிற்கும் கல்யாணமுருக்குக்கும் தெரியும். கேட்டுப்பாருங்கள் கதைகதையாகச் சொல்லும்.

ஓ..! கல்யாண முருக்கு யாரென்று உங்களுக்குத் தெரியாதல்லவா?

ராசத்தின் கல்யாண ஏற்பாடுகள் களைகட்டத் தொடங்கியிருந்தன. ராசத்தின் தாய் மாமன் மகன் தங்கராசுதான் மாப்பிள்ளை.

“யோகராசா புதுத் தொட்டில் செய்தெல்லே மருமகளுக்கு கூறைபோட்டவன்..” எனப் பெருமையும், “தங்கம் பெட்டைய எண்ணை தடவித் தடவி வளர்த்து, சின்னதம்பியின்ர சொத்த சீதனமா வளைச்சுப் போட்டாள்…” எனப் புறக்கணியும் பேசியது ஊர்வாய்.

நாலு நாள் கொண்டாட்டம், நாலு கூட்டம் மேளம், சொக்கட்டான் பந்தல் என, ஒரு வாரத்துக்கும் மேலாக, இந்த முற்றத்தில ஊரே கூடியிருந்து, கொண்டாடி மகிழ்ந்த கலியாணவீடு அது. கொண்டாட்டமென்டா அதுதான் கொண்டாட்டம். அதைப்பற்றி அதிகம் பேசினா கல்யாண முருக்கின் கதைய மறந்திருவன்…

கல்யாணம் முற்றாகி. பொன்னுருக்கலின் போது பந்தல் கால் போட்ட அன்று, ராசம் மீண்டும் அடம்பிடித்தாள்.

பந்தல் காலுக்கு முள்முருக்கம் கதியால்தான் எல்லோரும் நடுவார்கள். ஆனால் சின்னதம்பி, எங்கிருந்தோ கல்யாண முருக்கு கொண்டு வந்திருந்தார்.
பச்சை இலைகளில், நரம்புப் பகுதிகள் மட்டும் மஞ்சள் கோடுகளாகத் தெரிந்தன. பார்ப்பதற்கு அழகான குரோட்டன் செடிபோல இருந்தது.

பெரிய வீட்டு வாசலில் பந்தல்கால் போடுவதுதான் வழக்கம். அதற்கான ஏற்பாடுகள் நடந்த போது சலசலப்பு.

“என்னவாம்..?”

“சின்னதம்பி பெட்டைக்கு சரியான செல்லம் குடுத்திட்டுது. பந்தல்கால, தலைவாசலுக்கு முன்னால நிக்கிற வேம்புக்குப் பக்கத்திலதான் போட வேணுமென்டு அடம் பிடிக்கிறாளாம்…” திண்ணைக் குந்தில் இருந்தபடி வக்கணை பேசினார்கள் இரு பெண்கள்.

ராசத்தின் அடம்பிடித்தலுக்குள் மறைந்திருக்கும், அன்பும் விருப்பமும், அவர்கள் அறியாதது. ஆனால் நானறிவேன். அவளுக்குப் பக்கத்தில் ஒரு துணை வரும்போது, என்னருகிலும் ஒரு புதுத்துணையினைச் சேர்க்க விரும்பும் பேரன்பு அது.

இறுதியில் அவள் விருப்பத்தின்படி, எனக்குப் பக்கத்தில் பந்தல் காலாக ஊன்றப்பட்ட கல்யாண முருக்கு, இப்போது மரமாக நிற்கிறது. அதன் கிளைகள் பல்வேறு கல்யாணவீடுகளில் அரசாணி மரமாக நின்றிருக்கின்றன.

முகுந்தனும், வேணியும், தலைவாசலில் கட்டிலைப் பூட்டித் தயார் செய்ததுவிட்டார்கள். வேணி படுக்கையினை ஒழுங்கமைத்தாள். முகுந்தன் தாயைக் கவனமாகத் தூக்கி வளர்த்தினான். ராசத்தை இடம்மாற்றியது பிறவுணிக்கும் பிடித்திருக்க வேண்டும். அது வாலை ஆட்டியபடி அங்குமிங்குமாக நடந்தது.

தலைவாசலில் வளர்த்தப்பட்ட ராசம் என்னையே பார்ப்பது போல் இருந்தது. ஆனால் அவள் கண்கள் என்னைப் பார்க்கவில்லை, இறுக மூடியிருந்தன.
தலைவாசல் குந்தில் குந்தியிருந்தவாறே தாயைப் பார்த்துக் கொண்டிருந்த முகுந்தனுக்கு ஏதோ ஒன்று உறைத்திருக்க வேண்டும்.

“ இதெல்லாம் சரிதான். ஆனா அம்மாவின் உடுபிடவை மாத்திறதெல்லாம் இங்க வெளியால கஷ்டமெல்லோ…?” என்று கேட்டவனைப் பார்த்த வேணி, ‘அதெல்லாம் நான் பார்த்துக் கொள்ளிறன் ‘ என்பது போல கையசைப்பில் பதில் சொன்னாள். அவன் அமைதியானான்.

எல்லா வேலைகளையும் முடித்தபின் முகுந்தனின் முன்னால் வந்த வேணியின் முகத்தில் திருப்தி. தான் நினைத்தது போல ராசத்தை வெளியில் கொண்டு வந்து விட்டது மட்டுமல்ல, செல்லத்துரை மாஸ்டர் திரும்பவும் வருவதற்குள் செய்துவிட்ட நிறைவும் சேர்ந்திருந்தது. அவர் நின்றிருந்தால் இது நடந்திருக்காது என்பது நன்றாக வேணிக்குத் தெரியும்.

பொழுது சாய மாலை மங்கத் தொடங்கியது.

“காலையில நேர்ஸ் வருவா. அதுக்குள்ள நான் வந்திடிறன்.. “ என்று சொன்ன வேணி புறப்படத் தயரானாள். அப்போதுதான் முகுந்தன் கேட்டான்..

“ உங்கட அப்பா எங்க…?”

அவன் கேட்ட வேணியின் அப்பா வேலன் இல்லை. தாய் செல்லாச்சிதான். ஆனால் அப்பா..?

வீரைய்யா..!

- தொடரும்

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula