free website hit counter

வெடிக்காத வேடிக்கை : ஒரு குட்டி ஸ்டோரி

கதைகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

வெகு நாட்களாக திட்டமிட்ட புளியந்தீவானுக்கு பொங்கல் பூசைப்பயணம் உறுதிசெய்யப்பட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை தாய், தந்தை மற்றும் மகள் புறப்பட்டோம்.

நாளந்த செய்திகளில் தொடர்ந்து ஒலிக்கும் நாட்டின் அசாதாரண சூழ்நிலைகளை அறிந்தபடியே சொந்த வாகனத்தில் சென்றோம். அங்கங்கே சோதனைகளும் நாட்டிற்கே வந்த சோதனையாக மனவருத்தமாக இருந்தாலும் அலைக்கடலை பார்த்தவாறு அமர்ந்திருக்கும் அனலைத்தீவு புளியந்த்தீவானிடம் பிராத்தித்தால் மனம் இறங்குவார் என நம்பினோம்.

சாலையோர ராணுவச்சோதனைகள் மறைந்து புதையத்தொடங்கியிருக்கும் நினைவுகளை கட்டியிழுத்துவந்து கண்முன்னே காட்சியப்படுத்தியது, இருந்தாலும் இதுவும் கடந்து போகுன் என ஜெட்டியை வாகனத்தை ஒட்டிநிறுத்தினார் அப்பா.

7.15 மணியளவில் புறப்பட்ட படகு அனலைத்தீவை அடைந்தது. பொங்கல் படையல் பூசை இனிதே நிறைவடைந்தது, உச்சி வெயில் உற்சவம் எடுத்து ஆடிக்கொண்டிருந்தது. ஒரு வழியாக படகுப்பயணம் கடந்து வண்டிப்பயணம் வந்தது.

நடுக்கடல் பாலம் வழியாக சற்றே காற்று வாங்கிய ஆறுதலிலும் செய்தி கேட்பதற்காக வானொலியை அவசரமாக நுணுக்கினேன், இந்நேரம் செய்தி ஒன்றும் இல்லை என்றார் அப்பா. இருந்தாலும் ஏ.ஆர்.ஆரின் 'வெள்ளைப்பூக்கள் உலகம் எங்கும் மலரவே' என்றதும் விட்டுவிட்டேன். ஜன்னல் வழியாக வெளிக்கொண்ட பிரதேசங்களும் அதில் ஐது ஐதாக தென்பட்ட பனைமரங்கள் முடிக்கப்பட்ட ஒரு கதையினை மீண்டும் தொடக்கிவிட்ட வெளிப்பாட்டை காட்டின.

பிழைப்பிற்காகவும் பாதுகாப்பிற்காகவும் அடங்காத நாடோடிகளாக எங்கெங்கோ போய் வாழ்ந்தாலும் இறுதியில் இரு கைகளையும் அகல விரித்து அரவணைக்க காத்திருப்பது பிறந்த தாய் மண்தான் அப்படி வந்து அணைந்துகொண்ட மக்களில் நாமும் அடங்குவோம்.

யாழ் மாநகரத்தை அண்மித்த வேளையில் வாகனங்கள் வரிசையாக நிற்பதை அவதானித்தோம். அங்கே ராணுவம் சோதனையை தொடங்கியது, இங்கே பாட்டு முடிவடைந்தது. கண்ணில் ஒரு பயத்துடன் மறித்த ராணுவச்சிப்பாய் சகோதர மொழியில் எமது அடையாள அட்டைகளை காண்பிக்க சொன்னார்.

எம் மூவரின் அடையாள அட்டைகளை வாங்கி பார்க்க ஆயத்தம் என எண்ணினோம். ஆனால் தந்தையின் அட்டையை மட்டும் பார்த்துவிட்டு போகச்சொல்லிவிட்டார் அந்த 'சிப்பாய்'

யாழ்ப்பாணம் பூர்வீகமானாலும் பலப்பிரதேசங்களாக உள்ளூர் வெளியூர் என பிரவாகித்து வசிப்பிடமாக்கிக்கொண்ட எமது அடையாள அட்டைகள் தனித்தனி விலாசங்களில் எடுக்கப்பட்டவை! அதுவும் சகோதர மொழி ஆழும் பிரதேசங்கள்.

அண்மையில் நாட்டை உலுக்கிய வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்த பிரதேசங்களை அண்மித்த வசிப்பிடங்கள் அவை. சிப்பாய் கூட அப்படி இணைத்து யோசித்திருக்கமாட்டார். ஆனால் எமது எண்ணோட்டங்களோ எதிர்மறையாக இப்படி யோசிக்கவைத்து வேடிக்கை பார்த்தது.

எங்கே! நீங்கள் அவ்வூர்களை சேர்ந்தவர்களே இங்கே வந்து என்ன செய்யப்பார்க்கிறீர்கள்?! அதுவும் இந்த வாகனத்தில்?! என எங்களது அடையாள அட்டைகளை அவதானிக்கும் அந்த சிப்பாய் கேள்வி எழுப்பினால்? என மூவரும் கதைத்துக்கொண்டோம்!

அணைத்திருந்த வானொலியை மீண்டும் அமுக்கினேன் சோதனைச்சாவடி தாண்டி ஒலித்தது " விடுதலையா இந்த வாழ்க்கை"

*2019ஆம் ஆண்டு இதே நாளில் (ஏப்ரல் 21) நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை அடுத்து சில வாரங்களின் பின் கிடைத்த அனுபவத்தினை கதையாக எழுதிவைத்தது அன்று. இன்று மீள் நினைவுகூரும் வகையில் எழுதி முடித்திருக்கிறேன் இங்கு.

 

-4தமிழ்மீடியாவிற்காக: ஜெகா

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction