free website hit counter

அவளும் அவளும் – பகுதி 10

கதைகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ராசம் மெல்ல அனுங்கிக் கொண்டிருந்தாள்.
தலைவாசல் அறைக்குள்ளிருந்து கேட்ட அவள் அனுங்கலில் “வேம்பி..!”

அதை முகுந்தன் கேட்டனில்லை. எனக்கு மட்டுமே கேட்டது. ஏனென்றால் என் பிறப்பு முதலான பந்தத்தின் குரல் அது. அவளுக்கும் எனக்குமான அந்தரங்கத்தின் அனுபவம். ஆனால் அது இப்போது அந்தத் தலைவாசல் அறைக்குள் சிறைப்பட்டுக்கிடக்கிறது.

“என்ன மரத்துப் போய் நிக்கிறாய்..? “ கேட்டது செல்லத்துரை மாஸ்டர். மரமாய் செயலற்று நின்றவன் முகுந்தன்.
முகுந்தன் மட்டுமா செயலற்று நிற்கின்றான் ? வேணியும், நானும், பிறவுணியும் கூட, இராசம் ஒடிந்து போன நாளிலிருந்து இயக்கமற்று, வெறுமை கவ்வி நிற்கின்றோம்.

உச்சமாக ஒலிக்கும் ராசத்தின் குரல் அதிர்வில் எங்கள் அசைவுகளும், உணர்வுகளும் ஒட்டி இருந்தன என்பது, அவள் பேச்சற்றுப் போன இந்த நாட்களில் நன்றாகவே தெரிகிறது.தலைவாசலில், பெரிய வீட்டு வாசலில், பின்வளவில், என எல்லா இடங்களிலும் ஆணை பிறப்பிக்கும் அரசியின் கம்பீரத்துடன் கேட்டுக் கொண்டிருக்கும் அந்தக் குரல் அடங்கி, அனுங்கலாக மாறியிருப்பதை, அவதானமாகப் பார்த்து நின்ற பிறவுணி, ஏமாற்றத்துடன் தலையைத் தொங்கப் போட்டபடி என்னடியில் வந்து சுருண்டு கொண்டது. சற்று நேரத்தில் முகுந்தனும், செல்லத்துரை மாஸ்டரும் வெளியே தலைவாசல் குந்தில் எதிரெதிராக இருந்து கொண்டார்கள்.

“ என்ன யோசிக்கிற…?”
நீண்ட நேரமாக தலைகவிழ்ந்திருந்த முகுந்தனின் அமைதியை ஆழம் பார்த்து விட முயன்றபடி இருந்தார் செல்லத்துரை மாஸ்டர்.
அமைதியைக் கலைக்காமலே தலையசைப்பில் இல்லை என்பதாகப் பதில் சொன்ன முகுந்தனின் தலை இன்னமும் நிமிரவேயில்லை.

“கவலைப்படுறாய் போல…. உனக்கு அம்மாவென்டா, எனக்கு அக்கா. அவவை இப்பிடி பேச்சு மூச்சில்லாமல் எனக்கும் பார்க்க ஏலாமத்தான் இருக்கு…. எல்லாம் காலம்ம்….ஆரென்ன செய்யிறது…?

முகுந்தனின் கைபேசி “காதலே..காதலே …” பாட, திரையில் தோன்றினாள் முகுந்தனின் சாரு.

தொலைபேசியை எடுத்துக் காதிலணைந்த முகுந்தனின் கண்ணகள் கலங்கியிருப்பதை கண்டுகொண்டார் செல்லத்துரை மாஸ்டர்.

“ஓ..சொல்லு…”

முகுந்தன் பேசத் தொடங்க, செல்லத்துரை மாஸ்டர் பக்கமாக நடந்து விலகினார். அவர் விலகிய பக்கத்திலிருந்து சிகரட்டின் வாசனை வீசியது.
சிகரட்டை வாயில் செருகிப் புகையிழுத்தால், புதிய சிந்தனைகள் தோன்றுவதாகச் செல்லத்துரை மாஸ்டர் நம்பினார்.
சிகரட்டினுடனான பந்தம் சில நிமிடங்களில் முடிந்து போக, கட்டையை காலின் கீழ் போட்டு நசுக்கிவிட்டு, முகுந்தனிடம் திரும்பினார்.

அவன் இப்போதும் பேசியபடியே இருந்தான்.

“என்னவாம்…?” இடைமறித்துச் சன்னமான குரலிலும், சைகையிலும் கேட்டார்.

“வேலையிடத்தில இரெண்டு கிழமைக்கு கூட்டிக் கேட்கச் சொல்லிறாள்..”

“கேக்கிறதுதானே…? பிள்ளை சொல்லுறது நல்லதான் எனக்குப்படுகுது….”

“அது … மாமா..” முகுந்தன் தனக்குப் பதில் சொல்வதாக மாஸ்டர் நினைத்தார். அது சாருவுக்கான பதில்.

“மாமாவோட கதைக்கிறியே..?”

அவள் சம்மதித்திருக்கின்றாள் என்பது செல்லத்துரை மாஸ்டரிடம் கைமாறிய செல்பேசி காட்டியது.

“ஓ…பிள்ளை. எப்பிடிச் சுகமாயிருக்கிறியளே…” காதில் சொருகிய செல்பேசியில் கதைகளை ஒட்டத் தொடங்கிய செல்லத்துரை மாஸ்டர் மறுபடியும் விலகிச் சென்றார்.

கிளிகளின் கீச்சொலியில் கவனம் திரும்பிய முகுந்தன். காய்த்திருந்த மாமரங்களின் கிளைகளில் பார்வையைப் படரவிட்டு, பச்சை இலைகளுக்குள் பச்சைப் பறவைகளைத் தேடும் அந்த இயற்கைப் புதிர் ஆவலைத் தூண்டியிருக்க வேண்டும்.

மறந்துபோன ஒன்று நினைவுக்கு வந்த மகிழ்ச்சியின் கோடுகளில் முகம் மாற, கிளிகளைத் தேடத் தொடங்கினான். கிளிகள் எவ்வளவு கெட்டிதனம் மிக்கவை. பச்சையாகவே வெளித்தெரியும் பழுத்த மாம்பழங்களை எவ்வாறு அடையாளங் கண்டு கொள்கின்றன.

இப்போது முகுந்தனின் நினைவை முன்பு சாப்பிட்ட ‘கிளிக்கோந்தல்’ மாம்பழங்கள் நிறைத்திருக்க வேண்டும். அவன் கண்கள் மரத்தில் மேய்ந்தன.
செல்லத்துரை மாஸ்டர் காதுகளில் சாருவையும், பார்வையில் முகுந்தனையும் வைத்திருந்தார்.புதிர் போட்டியில் வென்றுவிட்ட மகிழ்ச்சி முகுந்தனின் முகத்தில். பச்சை இலைகளோடு இணைந்திருந்த இருகிளிகள் மாம்பழத்தை மாறி மாறிக் கோந்திக் கொண்டிருந்தன.

ராசம் கிளிக்கோந்தல் மாம்பழங்களை கவனமாகச் சேகரித்து, முகுந்தனுக்கு வெட்டிக் கொடுப்பாள். பழமும் காயுமல்லாத கிளிக் கோந்தல்களின் சுவையில் முகுந்தன் கிறுங்கிப் போவான்.

“கிளிகளுக்கு எப்பிடித் தெரியும் இது நல்ல பழமென்டு…?” சின்ன வயதில் தாயிடம் கேட்டிருக்கின்றான்.

“கிளிகள் கெட்டிக்காரர். எங்களுக்குத் தெரியாததெல்லாம் அவைக்குத் தெரியும். மிருகங்களுக்கும், பறவைகளுக்கும், மரங்களுக்கும் அறிவில்லை என்டுதான் நாம நினைக்கிறம். ஆனா அவை செய்யிற பல விசயங்கள எங்களால செய்ய ஏலாது..” தாயின் பதில்கள் அவன் நினைவுக்கு வந்திருக்க வேண்டும்.

சின்ன வயதில் கேள்விகளால் தாயைத் துளைத்தெடுப்பான் முகுந்தன். வசந்தன் அப்படியல்ல. அவன் தகப்பனைப் போல என்றும், முகுந்தன் தாயைப் போல என்றும் தான் எல்லோரும் சொல்வதுமுண்டு.

“அம்மா! இந்த பிறவுணி ஏன் சும்மா சும்மா குலைக்குது..?” குட்டியாக அது வீட்டிற்கு வந்த ஒருநாள் மாலையில் தாயிடம் கேட்டான்.

“ எங்கட கண்ணுக்கும், புத்திக்கும் தெரியாத கனவிசயங்கள், மிருகங்களுக்குத் தெரியும். அதனாலதான் அவைய வீட்டில வளக்கிறம்..”
அம்மா சொன்னது சரிதான் என பள்ளிக் கூடத்தில் நடந்த சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் போது வந்த ‘பொலிஸ்நாய்’ செய்த சாகசங்களைப் பார்த்து மனதில் நியாயப்படுத்திக் கொண்டான். அம்மா கெட்டிக்காறி. அம்மாவுக்கு எல்லாம் தெரிஞ்சிருக்கு என்ற மகிழ்ச்சியை அன்றைய மாலையில் இதே முற்றத்தில் வைத்துத் தாயிடம் சொல்லி மகிழ்ந்திருக்கின்றான்.

“என்ர செல்லமும் கெட்டிக்காரன்தான் ..” எனக் கன்னங்கிள்ளித் தன் வாயில் உச்சி மகிழ்ந்த தாயின் முகம் நினைவுக்கு வர, தலைவாசல் அறைக்குள் சென்றவன் சிறிது நேரத்தில் திரும்பி வந்தான்.

செல்லத்துரை மாஸ்டர் இன்னமும் சாருவுடன் பேசிக் கொண்டிருந்தார்.
ஒரு கையில் செல்பேசியும் பேச்சுமாக இருந்த அவரது மறுகையில் சல்லிக் கல்லொன்று. இலேசாக உடலைச் சாய்த்து, இலக்குப் பார்த்து, மாமரத்துக்கு எறிந்தார். மாமரத்திலிருந்த கிளிகள் எழுந்து பறந்தன. மரத்திலிருந்து ‘ கிளிக் கோந்தல்’ பழம் ஒன்று விழுந்தது.

மாஸ்டரின் முகத்தில் குறி தப்பாமல் இலக்கை விழுத்திவிட்ட  திருப்தி.

“ சரி பிள்ளை …நான் குடுக்கிறன் நீ அவனிட்ட கத..” என்றபடி முகுந்தனிடம் கைபேசியை நீட்டிவிட்டு, நகர்ந்தார்.

“ மாமா சொல்லிற யோசனை நல்லதுதான்…எதுக்கும் வேலயிடத்துக்கு ஒருக்கா நீங்க அடிச்சுக் கேட்டுப்பாருங்களன்….” எனக் காதுகளில் ஒதியவளிடம் “ சரி.. பார்ப்பம்..” எனச் சொல்லி நிறுத்தப் போகையில்

“சுவிஸன் என்னசெய்யிறான்..?”

“இருக்கிறான். சிலவேளையில தேடிறான்..நான் வேலைக்குப் போயிருக்கிறார் அப்பா என்டு சொல்லிச் சமாளிக்கிறன்…இப்ப நித்திரை. நாளைக்கு போனில காட்டிறன். இப்ப நான் வேலைக்கு வெளிக்கிடோனும்…நீங்க கதையுங்கோ என்ன …? ” உரையாடலை அவசரமாக முடித்துக் கொண்டாள் சாரு.

“ சுவிஸன்.. பிள்ளையின்ர பெயரோ..? “ அவன் தலையை ஆட்டினான்.

“சுவிசில பிறந்தபடியால சுவிஸன்…நல்லாயிருக்கு..” ரசிப்பது போல் முறுவலித்தார்.

“நல்ல வேளை நீங்க சுவிசுக்குப் போனது…”

“ஏன்..?”

“இல்ல ஜேர்மனுக்குப் போயிருந்தா.. என்ன பெயர் வைச்சிருப்பீங்க என்டு யோசிச்சன்..”

அவர் கேலிசெய்கின்றார் என்பது அவனுக்குப் புரிந்தது.

“ அது அம்மாவின்ர விருப்பம். அவ வைச்ச பெயர்..”

“ஓ.. அக்கா பிள்ளைப் பெறுநேரம் அங்க வந்திருந்தவா என்ன..?”

கவனமாகக் கதையை திரும்பினார் செல்லத்துரை மாஸ்டர்.

“மனுசி என்னவாம்…?”

“வேலையிடத்தில இன்னும் இரண்டு கிழமை லீவு கேட்டுப் பாக்கட்டாம்…”

“அது நல்லதுதானே…”

“ இல்லை. அது அவ்வளவு நல்லதில்லை…”

“ ஏன்..? அம்மாவுக்குச் சுகமில்லையென்டு கேட்கேலாதே…”

“அப்பிடிச் சொல்லித்தான் லீவு எடுத்தனான். ஆனா அதையே சொல்லி நீட்டிக்கிறது நல்லதில்லை. அங்க வேலைதான் முக்கியம். அதுவும் இப்ப இருக்கிற காலத்தில வேல சரியான முக்கியம்…”

“அவங்களும் மனுசர்தானே..? சொன்ன விளங்காதே..?”

“அங்க செத்த வீட்டுக்கே ஒரு நாள் மிஞ்சிப்போன இரண்டுநாள்தான் லீவு எடுப்பாங்கள். என்ர பெரியவன் தன்ர தகப்பன்ர செத்த வீட்டுக்கு மூன்டு மணித்தியாலம்தான் லீவு எடுத்தவன் என்டாப் பாருங்கோவன்..”

“அதுதான் அந்த நாடு காசுக்காற நாடா இருக்கு…” மாஸ்டர் தீர்மானித்தார்.

“உண்மைதான் அது காசுக்காற நாடுதான். அங்க காசில்லையென்டா எதுவுமில்லை…”

“தம்பி இப்ப இங்கயும்தான். காசில்லையென்டா எதுவுமில்லை….இது காலப் பொதுமை”

எந்த முடிவுக்கும் வரமுடியாத முகுந்தனின் தவிப்பு அவன் பதற்றதில் தெரிந்தது.

கையில் எடுத்து வந்த ‘கிளிக்கோந்தல்’ மாங்காயை அவன் கையில் கொடுத்தார்.

“உனக்குப் பிடிக்குமல்லோ..?”

இரசிப்புக்கும் சிரிப்புக்குமிடையில் தவித்தான்.

“வெறென்னவாம் மனுசி…” ஏதோ ஒன்று அடிபோட்டார் மாஸ்டர்.

“ மாமாவிட்டை கதையுங்கோ என்டுதான் சொன்னவள்.. எனக்குத் தெரியேல்ல..”

“அவள் நல்ல கெட்டிக்காரி. டக்கென்ன பிடிச்சுப்போடிறாள்….”

முகுந்தன் அவர் முகத்திலும் கதையிலும் மறைந்திருப்பதைக் காண முயன்றான்.

“ என்னென்டு.. சொல்லுங்கோவன்…?”

“சொல்லிறன்.. “

படுத்திருந்த பிறவுணி எழுந்து ஆவேசமாகக் குரைத்தது. செல்லத்துரை மாஸ்டர் அதனை அதட்டினார். அது வெறுப்புடன் நகர்ந்தது.
“என்ன சொல்லுங்கோவன்…?”

செல்லத்துரை மாஸ்டர் மோட்டசைக்கிளைத் திருப்பி நிறுத்தி உதைத்தபடியே,
“நீ முதல்ல லீவ கேட்டுப்பார். நான் நாளைக்கு வந்து சொல்லிறன்….” சொன்னவர் புறப்பட்டார்.

அவர் போகவும், பிறவுணி வந்தது. கூடவே வேணியும் வந்தாள்.


-தொடரும்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction