free website hit counter

அவளும் அவளும் – பகுதி 9

கதைகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

முற்றத்திலும், வளவிலும் பரவிக் கிடந்த சூரியக் கதிர்கள் எழுந்து, வேலியை நிறைத்து வரிசையாக நின்ற முட்கிழுவைகளுடன் சமராடிப் பின் சல்லாபிக்கத் தொடங்கின.

வரிசையில் அடுக்கிய ஓலைகளை நீண்ட ஒரு மட்டையால் அழுத்தி, ஒருவனிடம் பிடிக்கக் கொடுத்தபின் குத்தூசியில் கயிறைக் கோர்த்து, வேகமாக அடுக்கிய ஓலையில் குத்த்த தொடங்கினான் நல்லான். ஓலையின் அடுக்குகளை ஈட்டிபோல் குத்தித் துளைத்தவாறு எதிர் பக்கத்திற்கு கயிற்றின் முனையை எடுத்துச் சென்றது. எதிர்பக்கத்தில் நின்றவன் ஒலையைக் குத்திக் கிழித்துவரும் ஊசி தன்னில் குத்திவிடாதவாறு நெளிந்தும் விலகியும் நின்று கொண்டு, ஊசிமுனைக் கயிற்றினைத் தளர்த்தியதும் “ ஆ..” என சத்தச் சமிக்ஞை கொடுத்துக் கொண்டிருந்தான்.

குரல்கேட்டதும் வெற்று ஊசியை, விரைவாக இழுத்து, ஒலையின் மறைப்பின் பின்னே நிற்கும் கதியால் மரத்தின் கனத்தினை மனதில் கணக்குப் பண்ணியவாறு மறுவளத்தில் குத்தினான். “சரக்.. சரக்” என ஓலைகளை ஊசிகுத்தி எழுப்பும் சத்தம் ஒருவித லயத்துடன் ஒலித்தது.

பனையோலையின் மடிப்புக்களுக்குள் இருபுறமும் பயணப்பட்ட குத்தூசியில், கயிற்றின் மறுமுனையை அனுப்ப, மறுபடியும் “ஆ..”. ஊசியை இலாவகமாக இழுத்து, வாயில் கவ்விக்கொண்டு, அடுக்கிய ஓலைகளை இறுக்கிக் கொடுக்க, எதிர்பக்கத்தில் நிற்பவன் இறுக்கமாகக் கட்டிக் கொண்டான்.

களத்தில் வில்லாடும் வீரர் போல் வேகமாக இயங்கிய, நல்லானின் நிரைப்படுத்தலில், தலைமுழுகித் கொண்டைமுடித்த குமரிகளென நின்றிருந்த முட்கிழுவைகள் மென் பச்சைத்தாவணி போட்டது போல் பனையோலைகளைப் போர்திக் கொண்டன.

பனையோலை வேலி பார்ப்பதற்கு, அழககாக் கட்டப்பட்ட கோட்டையொன்றின் அரண்போல, எழுந்து நீண்டது. அந்த அரண் காக்கும் கோட்டை இளவரசியின் கண்ணீரில் கரைந்து போன காவலர்கள், என்னைக் கருத்தாகப் பாதுகாத்துக் கொண்டார்கள். இப்போது ராசத்தின் காதலில் சற்றுக் கர்வம் கொண்டேன் நான்.
“தேத்தண்ணியக் குடிச்சிட்டுப் போங்கோவன்..” தகரக்குவளைகளும், தேத்தண்ணிப் பாத்திரத்துடனும் முற்றத்திற்கு வந்த கமலம் குரல் கொடுத்தாள்.

“நல்லான்…! தேத்தண்ணி வந்திட்டுது..” சின்னத்தம்பி மறு அழைப்புக் குரல் கொடுத்தார்.

சின்னதம்பி திண்ணைக் குந்தில் இருந்து கொண்டார். மற்றவர்கள் முற்றத்தில் குந்திக் கொண்டார்கள்.

குந்தி இருந்தவர்கள் கைகளில் தகரப் பேணிகளையும், பனங்கட்டித் துண்டங்களையும் கொடுத்த பின், குவளைகளில் தேநீரை வார்த்தாள் கமலம்,
வாயில் படாதவாறு முக்குப் பேணியொன்றிலிருந்து தேநீரைப் பருகிய சின்னத்தம்பி, பனங்கட்டியின் இனிப்போடு சுவைத்துக் கொண்டார்.

“பெம்பிளப் பிள்ளைக்குச் சீதனமாக் குடுகிற காணிக்க, வேம்பு கண்டிப்பா வளக்கோனுமென்டு எங்கட அப்பு அடிக்கடி சொல்லிறவர். ஆனா நான் இந்த வேம்ப நடேல்ல… இது எப்ப முளைச்சதென்டும் எனக்குத் தெரியேல்ல. ஆனாப் பிள்ளை எப்பிடியோ கண்டிட்டாள்…”

வேலியின் முட்கிழுவை வரிசையிலிருந்து விலகி நின்ற என்னைப் பாரத்தவாறு சின்னத்தம்பி கூறினார்.

“வீட்டு வாசல்ல வேம்பு நிக்கிறது நல்லதாக்கும். வளரேக்கை குளுமையா இருக்கும். காவலாகவும் இருக்கும்…” குந்தியிருந்த தொழிலாளியில் ஒருவன் சொன்னான்.
“ஓ.. மெய்தான். ஆனா இது பெரிசா வளரேக்க, வேலிய விலத்தி அடைக்க வேண்டிவரும்….” வேலியின் அழகுமீதான அக்கறையோடு நல்லான் சொன்னான்.
“பிடுங்கி நடலாம்தான்.. ஆனா பிள்ளை ஏங்கிப் போயிருவாள். சின்னப்பிள்ளை, அவளுக்கு இந்த விசயமெல்லாம் விளங்குமே. அது அப்படியே வளரட்டும்…” பிள்ளை மீதான அக்கறையினைத் தீர்மானமாக முடித்தார் சின்னத்தம்பி.

அது சரிதான் என்பது போல தலையாட்டின கமலம், “ நல்லான் ! வேலமுடிஞ்சு போக முன்னம், வளவுக்க பிலாவில பிஞ்சு பிடிச்சிருக்கு. துண்டு கட்டி விடோனும்..” நினைவுறுத்தினாள் கமலம்.

சின்னத்தம்பியின் பார்வை இன்னும் என் மீதே இருந்தது. அவரது மனதுக்குள் ஏதேதோ எண்ணங்கள் ஒடியிருக்க வேண்டும்.

“ பிள்ளைக்குக் காவலா அம்மாளாச்சியே வேம்பா வந்து நிக்கிறா போல…” ராசத்தின் மீதான அவரது பாசம் வேம்பில் வெளிப்படுவதை கமலம் கவனித்தாள்.

“சரி.. பின்ன , பொங்கிப் படைக்க வேண்டியதுதான்…” கமலம் கூறியது சின்னதம்பிக்கு உறுத்தியிருக்க வேண்டும்.

“ ஏன் பாக்கியப் பெரியம்மாவின்ர வளவுக்குள்ள இருக்கிற பூவரச மரத்துக்குத்தானே வருஷப் பொங்கல் வைக்கிறவ. அந்த மரத்தத்தானே நாச்சிமார் என்டும் தங்கட குல தெய்வம் என்டும் கும்பிடிறவை…” சின்னதம்பி சொன்னதை நல்லானும் மற்றவர்களும் தலையாட்டி ஆமோத்தித்தார்கள்.

“ இப்ப நானென்ன வேண்டாமென்டே சொன்னனப்பா. வேணுமென்டா நாங்களும் வேம்புக்குப் பொங்கிப் படைக்கலாமென்டுதானே சொன்னனான்..” சிறு சலிப்பை பதிலாக்கியவாறு, சின்னதம்பியின் மூக்குப் பேணியை வேண்டிக்கொண்டு, குசினிப்பக்கம் திரும்பி நடந்தாள் கமலம்.

மற்றவர்கள் தங்கள் பேணிகளை, மாமரத்தின் கீழிருந்த வாளி நீரில் கழுவித் திண்ணையில் வைக்கச் செல்லாச்சி வந்து எடுத்துச் சென்றாள்.
அவர்கள் பேசிக் கொண்டது முழுமையாக எனக்கு விளங்கவில்லை என்றாலும், என்னை பக்தியாகப் பார்க்கிறார்கள் என்பது மட்டும் புரிந்தது. ராசமும் அப்படித்தான் பார்க்கிறாளா…?

எனக்கு பக்கத்தில் ஒரு நேரிய தடியை ஊன்றிய சின்னத்மபியர் அதனோ என்னை கயிற்றால் பிணைத்திருந்தார். தத்தை நடை மாறித் தனியாக நடகத் தொடங்கிவிட்ட ராசம், விரும்பும் வேளைகளிலெல்லாம் கிட்ட வந்து என்னைக் கட்டியணைத்துக் கொள்வது போல் கைகளால் சுற்றிக் கொள்ளும் போது, கூடவே அந்தப் பக்கத்துணையும் அதற்குள் அகப்பட்டுக் கொள்ளும்.

திடீரென இரண்டொரு நாட்கள் ராசம் வெளியே வரவில்லை. பெரிய வீட்டுக்குள்தான் அவள் இருக்க வேண்டும். எந்நேரமும் மகளைக் கையில் தாங்கும் சின்னத்தம்பி கூட பெரிய வீட்டு வாசலோடு நின்று கொண்டார்.

“என்னப்பா கனக்கப் போட்டிருக்கே…? “ கவலையோடு கேட்டார் சின்னத்தம்பி.

“ம்.. முகத்தில பெரிசா இல்ல. உடம்பில கொஞ்சம் போட்டிருக்கு..”

சின்னதம்பி நீட்டிய வேப்பிலைகளை வேண்டிய கமலம் கேட்டாள்“ முத்தத்தில நிக்கிற சின்னமரத்திலையே பிடுங்கினியள்...?” .
ஓமெனத் தலையசைத்த அவரிடம், “ அதில ஒடிக்காதையுங்கோ. பின்வளவில நிக்கிற பெரிய வேம்பில நாலைஞ்சு கொப்பு முறிச்சிட்டு வாங்கோ.. வாசலுக்குக் கட்ட வேணும் என்று சொல்லி அனுப்பினாள்.

“ பிள்ளைக்கு சின்னமுத்துப் போட்டிருக்கு.. மிளாகாத்தூள் இடிக்கிறத, ஒரு இரண்டு கிழமைக்குப் பிறகு செய்வம். நீ மாட்டுக் கொட்டிலடிய துப்பரவாக்கிப் போட்டுப் போ… “ திண்ணைப் பக்கமாக நின்ற செல்லாச்சியிடம், சொன்னாள்.

சரியெனத் தலையசைத்த செல்லாச்சி, “ நல்ல; தண்ணிச் சாப்பாடாக் குடுங்கோ…” எனத் தன்பங்கிற்குப் பத்தியம் சொல்லியபடி கிளம்பினாள்.

ராசத்தை வெளியே காண முடியாத அந்த நாட்களில், கமலம் காலையிலே தலைமுழுகிய பின்னர் தான் தன் கடமைகளைசெய்ய தொடங்கினாள். சின்னதம்பி வீட்டிற்குள் செல்வதேயில்லை. வீட்டிற்கு யார் வந்தாலும், பெரும்பாலும் வெளிப்படலையில் வைத்தே பேசித் திருப்பினார்.

“பின்னேரங்களில விளக்கு வைச்சிட்டு மாரியம்மன் தாலாட்டு பாடிக்கோனுமாம்..என்டு பெரியாச்சி சொன்னவா..” என சின்னதம்பியர் ஒப்புவித்த பின்னாளில், மங்கிய மாலைகளில், பெரிய வீட்டினுள்ளிருந்து வெளிக் கசியும் விளக்கின் ஒளியோடு, “ எங்கள்குல தேவியரே ஈஸ்வரியே கண்பாரும், ஏழைக் கிரங்காமல் இப்படியே நீயிருந்தால் வாழ்வதுதான் எக்காலம்…” எனக் கமலத்தின் குரல் தாலாட்டியது.

ஒரு வாரத்தின் பின்னால் ராசத்தை வெள்ளைத்துணியால் மூடி, வெளிக் கொணர்ந்த கமலம் கிணற்றடிக்கு கூட்டிச் சென்று நீர்வாரத்தாள். வழிந்தோடி நீரில் பாலும், மஞ்சளும் கலந்திருந்தன.

அதன் பின்னும் இரண்டொரு நாட்கள் ராசம் வெளியே வரவில்லை. முழுதாக இரண்டு கிழமைகள் ஓடி மறைந்தபின் தலைவாசற் திண்ணைக்கு வந்தாள் ராசம்.
அவள் சற்றுக் கறுத்திருந்தது போல் தெரிந்தாள். ஆங்காங்கே சில பொட்டுக்கள் போன்ற தழும்புகள், முகத்திலும், கைகளிலும் தெரிந்தன. ராசம் கைகளால் அவற்றைச் சொரிந்து கொள்ள முயன்ற போது, தாய் அதனைத் தடுத்து, “நகம் படக் கூடாது பிள்ளை..” எனத் தடுத்தாள்.

“கடிக்குதம்மா..” எரிச்சலை வெளிப்படுத்தியவாறிருந்தவளின் கண்கள் என்னைக் கவனித்திருக்க வேண்டும். எழுந்து நேராக என்னருகில் வந்தாள். என்னில் கட்டியிருந்த மஞ்சள் துணியொன்றினைக் கழற்றி எறிந்தாள். இப்போது அவள் கண்களிலும் எரிச்சல் தெரிந்தது.

ராசம் வெளியே வராது விட்ட மூன்றாம் நாளில், கிணற்றடியில் குளித்த பின் ஈரத்துணியோடு வந்த சின்னத்தம்பி மஞ்சள் நீரில் சிறு வெள்ளைத் துணியொன்றை முக்கியெடுக்க அது மஞ்சள் துணியாகியது. அதன் நடுவே ஒரு குத்திக் காசை வைத்து இறுகச் சுற்றி முடிச்சுப் போட்டார். அதன் பின் கைகளிரண்டிலும் அதனை எடுத்து, தன் தலைக்கு மேல் வைத்து, அம்மாளாச்சி எனக் கும்பிட்டபடி அருகே வந்து, என்னைச் சுற்றி அதனைக் கட்டியிருந்தார். ராசம் அதனைக் கழற்றி எறிவதைக் கண்ட கமலம், “அம்மாளாச்சி ..” எனத் துடித்தபடி ஒடிவந்தாள்.

“ அம்மா.. அது அம்மாளாச்சிம்மா….” என அரற்றியபடியே வந்தவள், கீழே கிடந்த மஞ்சள் துணியை பயத்துடன் எடுத்துக் கண்களில் ஒத்திக் கொண்டாள். கமலத்தின் பதற்றமும், பயமும், ராசத்திடம் அழுகையாக வெடித்தது. அழுகையோடு அவள் " வேம்பி..ம்மா !" என வெடித்தாள்.

நெற்றியில் விபூதியும் பொட்டும், வேட்டியுமாக முற்றத்திற்கு வந்த சின்னத்தம்பியிடம், மாறாத பதற்றத்துடன் ஒடிய கமலம், “ இஞ்ச பாருங்கப்பா, இந்தப் பிள்ளைய ..” அவள் குரலின் தழுதழுப்பில் பயம் தெரிந்தது. கையில் அவர்கட்டிய மஞ்சள் துணி இருந்தது.

கையிலிருந்த கோவில் அர்ச்சனைத்தட்டை அவளிடம் நீட்டிய சின்னதம்பி, மஞ்சள்துணியை வாங்கிக் கண்ணில் ஒற்றிவிட்டு அர்ச்சனைத் தட்டினுள் வைத்தார்.
மெல்லக் குனிந்து, என்னைக் கட்டிபிடித்தபடி அழத் தொடங்யிருந்த ராசத்தை ஆதரவாக அணைத்துக் கொள்ள, “அப்பா.. வேம்பிப்பா….!” அழுகையின் மத்தியில் அவள் வாயிலிருந்து வார்த்தைகள் தூண்டாடி விழுந்தன.

தயங்கித் தயங்கி அவள் முகத்தை மெதுவாக வருடிக் கொண்டே “சரிம்மா..சரி..” எனச் சமாதானம் செய்தபடி அவளைத் தூக்கிக் கொண்டார்.
“இதென்னப்பா இந்தப் பிள்ளைக்கு என்ன பிடிச்சிருக்கு…?” என்றபடி குழம்பி நின்ற கமலத்தின் கைகளில் இருந்த அர்ச்சனைத் தட்டிலிருந்து, விபூதியை எடுத்து ராசத்திற்குப் பூசி விட்டு, “ கனக்க யோசிக்காமல், அர்ச்சனைத்தட்ட வீட்டுக்குள்ள வைச்சிட்டு வாரும்..” என சமாதானம் செய்தார்.

கண்களில் வெருட்சியும், முகத்தில் பயம் கலந்த கவலையும் படர பெரிய வீட்டிற்குள் சென்றாள் கமலம்.

சின்னதம்பியின் கழுத்தைக் கட்டிக் கொண்டு, சாய்ந்திருந்தாள் ராசம். அவளது முதுகை ஆதரவாகத் தடவிக் கொண்டிருந்தார் சின்னத்தம்பி.

ராசம் மெல்ல அனுங்கிக் கொண்டிருந்தாள். அவள் அனுங்கலில் கேட்டது

“வேம்பி…!”

- தொடரும்

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction