லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட், இன்று (03) நள்ளிரவு முதல் உள்நாட்டு எல்பி எரிவாயு சிலிண்டர்களின் விலைகளில் திருத்தம் செய்வதாக அறிவித்துள்ளது.
அதன்படி, 12.5 கிலோ சிலிண்டரின் விலை ரூ. 300 குறைக்கப்பட்டு ரூ. 4,465 ஆகவும், 05 கிலோ சிலிண்டரின் விலை ரூ. 118 குறைக்கப்பட்டு ரூ. 1,792 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், 2.3 கிலோ சிலிண்டரின் விலை ரூ. 55 குறைக்கப்பட்டு, புதிய விலையாக ரூ. 835 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச எல்பி எரிவாயு விலைகளில் ஏற்பட்டுள்ள சரிவுக்கு இணங்க, அதன் பலனை நேரடியாக நுகர்வோருக்கு வழங்குவதற்காக, தனது உள்நாட்டு எல்பி எரிவாயு சிலிண்டர்களின் விலையைக் குறைக்க முடிவு செய்துள்ளதாக லிட்ரோ கேஸ் லங்கா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சர்வதேச சந்தையில் சவால்கள் இருந்தபோதிலும், திறமையான மற்றும் வலுவான நிர்வாகத்தின் மூலம் இலங்கை நுகர்வோரைப் பாதுகாப்பதில் உறுதியாக இருப்பதாகவும், சர்வதேச சந்தையிலிருந்து பெறப்படும் எந்தவொரு பலன்களும் நேரடியாகத் தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுவதை உறுதி செய்வதாகவும் லிட்ரோ கேஸ் லங்கா கூறுகிறது.
நுகர்வோர் நம்பிக்கை மற்றும் சேவைத் தரத்தில் வலுவான கவனம் செலுத்தி, தீவு முழுவதும் எல்பி எரிவாயுவை நியாயமான மற்றும் மலிவு விலையில் தடையின்றி வழங்குவதில் நிறுவனம் உறுதியாக உள்ளது என்று மேலும் தெரிவித்துள்ளது.
