ஐக்கிய அரபி அமீரக முதன்மை நகரமான துபாயில், பிரம்மாண்டமான ‘எக்ஸ்போ 2020’
நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. உலகெங்கிலும் இருந்து முன்னணி கலைஞர்கள் துபாயில் நிகழ்ச்சிகளை நடத்தி வாருகிறார்கள். இந்தியாவில் இருந்தும் பல முன்னணி கலைஞர்கள் துபாயில் நிகழ்ச்சி நடத்தி வரும் நிலையில், பெண் இசைக்கலைஞர்களை கொண்டு ‘ஃபிர்டோஸ் ஸ்டுடியோ’ என்ற இசை குழுவை நடத்தி வருகிறார் ஏ.ஆர்.ரஹ்மான். இந்த குழுவோடு சேர்ந்து நிகழ்ச்சி நடத்தினார். இதற்காக துபாயில் தனக்கென்று தனியே ஸ்டுடியோ ஒன்றை ரஹ்மான உருவாக்கியிருக்கிறார். நேற்று துபாய் எக்ஸ்போவில் இளையராஜாவும் நிகழ்ச்சி நடத்தினார். சுமார் 2 லட்சம் பேர் கண்டுகளித்துகொண்டிருக்கும் இந்த நிகழ்வுக்கு உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து சுற்றுலா பயணிக்கள் குவிந்துள்ளனர்.
இந்நிலையில், துபாயில் இருக்கும் இளையராஜா தனது லைவ் இசை நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு ஏ.ஆர் ரஹ்மானின் ஃபிர்டோஸ் ஸ்டுடியோவுக்கு சென்றிருக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ஏ.ஆர் ரஹ்மான் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். ‘ஃபிர்டோஸ் ஸ்டுடியோவுக்கு மேஸ்ட்ரோவை வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறேன். ஃபிர்டோஸ் ஸ்டுடியோவிற்காக விரைவில் அவர் இசையமைப்பார் என எதிர்ப்பார்த்து இருக்கிறோம்’ என்று அந்தப் புகைப்படப் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார். இதை பார்த்த சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் ஏ.ஆர் ரஹ்மானும், இளையராஜாவும் சேர்ந்து பணியாற்றினால் சிறப்பாக இருக்கும் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். அதிலும் இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா, நடிகை சர்தா ஸ்ரீநாத், பாடகி ப்ரியங்கா உள்ளிட்டோர் ரஹ்மானின் பதிவில் கமெண்ட் செய்திருக்கிறார்கள்.