அரசாங்கத்துடன் இரகசிய ஒப்பந்தம் எதுவும் கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், வரவு செலவுத் திட்டதை ஆதரிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் எதிர்வரும் 21ம் திகதி முடிவு செய்யப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அக்குறனை பகுதியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,
“இந்த வரவு செலவுத் திட்டம் குறித்து நாங்கள் திருப்தியடையவில்லை. இந்நிலையில், வரவு செலவுத் திட்டத்தை ஆதரிப்பதா இல்லையா என்பது குறித்து 21ம் திகதி கட்சி மத்திய குழு கூடி முடிவெடுக்கும்.
நான் அண்மையில் நாடாளுமன்றத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்து பேசியிருந்த நிலையில், அரசாங்கத்துடன் எமக்கு ஒப்பந்தம் இருப்பதாக சிலர் கருதுகின்றனர். அரசாங்கத்துடன் எங்களுக்கு அத்தகைய ஒப்பந்தம் எதுவும் இல்லை.
மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த ஒன்பது வருடங்களில் நான் அந்த அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டேன். அந்த நேரத்தில் ஜனாதிபதி ராஜபக்சவும் நானும் வடக்கு, கிழக்கை அபிவிருத்தி செய்வதற்கும் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கும் பல பணிகளை செய்தோம்.
நாட்டுக்காக உழைத்த சிறந்த தலைவர் என்பதை அவர் நிரூபித்துள்ளார். ஆனால் தற்போதைய அரசு கடந்த இரண்டு ஆண்டுகளாக எதையும் செய்யவில்லை. பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து நாடு பின்னோக்கிச் செல்வதுதான் நடந்துள்ளது” என்று அவர் மேலும் கூறினார்.