முதல்வர் விஜய்க்கு எதிரான தேர்தல் வழக்கில் விஜய் தரப்பு பதில் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று (ஆக. 28) விசாரிக்கவுள்ளது.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் விஜய் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதற்கு எதிராக திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர், வாக்காளர்கள் தினேஷ், லட்சுமி நரசிம்மன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.
இதேபோல், திருச்சி கிழக்கு தொகுதியிலும் விஜய் பெற்றதற்கு எதிராக திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜும், வில்லிவாக்கம் தொகுதியில் வெற்றி பெற்ற அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக திமுக வேட்பாளர் கார்த்திக் மோகன் மற்றும் சிவராஜ் ஆகியோரும் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
இருப்பினும், தங்கள் மீதான குற்றச்சாட்டுகள் தவறானவை என்றும், ஆதாரங்கள் ஏதுமில்லை என்றும் தங்கள் மீதான தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரி, வியாழக்கிழமையில் (ஆக. 27) சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜய் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில், தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரி முதல்வர் விஜய் தாக்கல் செய்த பதில் மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் இன்று (ஆக. 28) விசாரிக்கவுள்ளது.
